அரசியல்
அலசல்
Published:Updated:

மூணு பிள்ளைகளோட நடுத்தெருவுல நிக்கிறேன்...

சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுரேஷ்

அரசு மருத்துவமனையில் தாய் மர்ம மரணம்... தவறான சிகிச்சை காரணமா?

“ராவும் பகலுமா `அம்மா எங்கே எங்கே?’ன்னு தேடுதுங்க பிள்ளைங்க... நடந்த கொடுமையை எங்களாலேயே மறக்க முடியலை. வெவரம் தெரியாத பச்சைப்புள்ளைங்ககிட்டே அம்மா இனி வர மாட்டானு எப்புடிச் சொல்றது... என் மூணு குழந்தைகளையும் எப்புடி வளர்த்து, கரைசேர்க்கப்போறேன்னு தெரியலை சார்’’ என்று பச்சிளம் குழந்தையைக் கையிலேந்தி கண்ணீர் வடிக்கிறார் மதுரையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ். தந்தையின் வேதனை அறியாத பிள்ளைகளின் முகத்தில் அம்மாவைத் தேடும் எதிர்பார்ப்பு. என்ன நடந்தது என்று விசாரித்தோம்...

தேனி மாவட்டம், சித்தார்பட்டியைச் சேர்ந்த சுரேஷ், கண்டமனூரைச் சேர்ந்த கனிமொழியை 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார். இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தனர். ஆறு மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாக ஓர் ஆண் குழந்தையையும் சிசேரியன் மூலம் பெற்றெடுத்த கனிமொழி, கருத்தடை ஆபரேஷனும் செய்துகொண்டார். சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகவேண்டிய நாளில் திடீரென கனிமொழி மரணமடைந்ததால் மொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது. “ஆரோக்கியமாக இருந்த கனிமொழி மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் உயிரிழந்தார்” என்று சுரேஷின் குடும்பம் தற்போது நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.

மூணு பிள்ளைகளோட நடுத்தெருவுல நிக்கிறேன்...

சித்தார்பட்டியில் அருந்ததியர் சமூகத்தினருக்கு அரசு கட்டிக்கொடுத்த சிறிய வீட்டில், தன் பெற்றோர், மூன்று குழந்தைகளுடன் வசித்துவரும் சுரேஷிடம் பேசினோம். “கனிமொழிக்கும் எனக்கும் கல்யாணமாகி பத்து வருஷமாகுது. இந்த வீட்டுலதான் அப்பா, அம்மாவோட சேர்ந்து வாழ்ந்துகிட்டிருந்தோம். 2018-ல மூத்த மகன் பிறந்தான். 2020-ல எங்களுக்கு ரெண்டாவது பெண் குழந்தை பொறந்தப்போவே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணச்சொல்லிக் கேட்டோம். அப்போ கொரோனா காலம்கிறதால டாக்டருங்க முடியாதுன்னுட்டாங்க. மூணாவது பிரசவத்துக்காக தேனி கவர்மென்ட் ஆஸ்பத்திரியில கனிமொழியைச் சேர்த்தோம். கடந்த ஜூன் 8-ம் தேதி ராத்திரியே எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துச்சு.

மூணு பிள்ளைகளோட நடுத்தெருவுல நிக்கிறேன்...

தாயும் பிள்ளையும் நல்லாத்தான் இருந்தாங்க. அப்படியே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனும் செஞ்சாங்க. காலைலயும் சாயங்காலமும் நர்ஸுங்க அவளுக்கு ஊசி போட்டு நல்லா பாத்துக்கிட்டாங்க. ஜூன் 15-ம் தேதி தையல் பிரிச்சதும் மறுநாளே டிஸ்சார்ஜ் செஞ்சுடுவோம்னு டாக்டருங்க சொன்னாங்க. வீட்டுக்குத் திரும்பப் போறோம்கிற ஆர்வத்துல கனிமொழி இருந்தா. ஆனா, மறுநாள் பயிற்சி டாக்டர் ஒருத்தர் கனிமொழி கையில ஒரு ஊசி போட்டுருக்காங்க. எப்பவும் ஊசி போட வர்ற நர்ஸ் செக்கப்பெல்லாம் பண்ணிட்டுத்தான் போடுவாங்க. ஆனா, இந்த டாக்டர் அந்த மாதிரி எதையும் செய்யலை. ஊசிபோட்ட கொஞ்ச நேரத்துல வலிக்குதுன்னு சொல்லிட்டு அடிவயித்தைப் புடிச்ச கனிமொழி அப்படியே குப்புற விழுந்துட்டா. கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி வயிறு பெருசா வீங்கி, காய்ச்சலும் அதிகமாகிடுச்சு. மூச்சுவிடவே சிரமப்பட்டிருக்கா. என்ன பிரச்னைனு எங்ககிட்ட எதையுமே சொல்லாம மறுபடியும் ஒரு ஆபரேஷன் பண்ணணும்னாங்க. ஆனா, அவளைப் பொணமாத்தான் திருப்பித் தந்தாங்க. இப்போ மூணு பிள்ளைகளோட நடுத்தெருவுல நிக்கிறேன்...” என்று பேச முடியாமல் அழுதார்.

தொடர்ந்து பேசிய சுரேஷின் தாயார் ராணி, “கனிமொழிக்கு என்ன ஆச்சுன்னு சொல்லாம டாக்டருங்க அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டுருந்தாங்க. அப்போ பெரிய டாக்டருங்க, ஊசிபோட்ட அந்தச் சின்ன டாக்டரைப் பார்த்து, ‘ஒரு உயிரோட விளையாடிட்ட... இந்தப் பக்கமே வராதே’னு சத்தம்போட்டு திட்டுனாரு. `ஐயய்யோ எங்கப் புள்ளைக்குதான் ஏதோ தப்பா ஊசி போட்டுட்டாங்க’ன்னு கதறினோம். வாய் வழியாவும், விலா வழியாவும் டியூப்பெல்லாம் மாட்டுனாங்க. அப்புறம், ஆக்சிஜன் தீர்ந்திடுச்சு, மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்போறோம்னு சொன்னாங்க. ஆனா, அங்கயும் அனுப்பாம 20-ம் தேதி மறுபடியும் ஆபரேஷன் பண்ணினாங்க. 21-ம் தேதி ‘எவ்வளவோ முயற்சி பண்ணினோம் காப்பாத்த முடியலை’னு கைவிரிச்சுட்டாங்க. `என்ன நடந்துச்சுன்னு எங்களுக்குத் தெரியணும்’னு கேட்டதுக்கு, ‘கனிமொழிக்குச் சின்ன வயசுல ஆஸ்துமா இருந்ததால அது அலர்ஜியாகி இப்படி ஆகிடுச்சு’ன்னு புதுசா ஒரு கதை சொன்னாங்க. ரெண்டு பிள்ளை பெத்தவளுக்கு, மூணாவது பிள்ளை பெறும்போது மட்டும் எங்கருந்துய்யா வந்துச்சு ஆஸ்துமா... போலீஸை வெச்சு எங்களை அதட்டி, கையெழுத்து வாங்கி, என் மருமகளை ஆம்புலன்ஸ்ல ஏத்தி அனுப்பிவிட்டுட்டாங்க” என்றார் கண்ணீர் மல்க.

மூணு பிள்ளைகளோட நடுத்தெருவுல நிக்கிறேன்...

இந்தப் பிரச்னையை உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றிருக்கும் மதுரை சமூகநீதி அமைப்பைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் பேசினோம். “கனிமொழியின் மரணத்துக்கு அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவரின் அலட்சியம்தான் காரணம் என்பது இறப்பு அறிக்கையில் உறுதியாகியிருக்கிறது. ஆபரேஷன் செய்த இடம் குணமாவதற்காக பிபேரசில்லின் என்ற ஊசி செலுத்தப்பட்டதால், கனிமொழிக்கு அனாபிலாக்டிக் ஷாக் ஏற்பட்டு மரணம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பவுடர் வடிவத்திலிருக்கும் பிபேரசில்லின் மருந்தை ஸ்டெரில் வாட்டரில் குறிப்பிட்ட அளவு கலந்து, பெரிய ஊசி மூலம் செலுத்த வேண்டும். ஆனால், பயிற்சி மருத்துவர் நேரடியாக அதைக் கனிமொழியின் கையில் செலுத்தியிருக்கிறார். தற்போது எல்லோரும் அவரைக் காப்பாற்றவே பார்க்கிறார்கள். சென்னையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட மாணவி பிரியாவின் மரணத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்தது. அதேபோல கனிமொழி குடும்பத்துக்கும் உரிய நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும்’’ என்றார்.

இது குறித்து தேனி மருத்துவக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரத்திடம் கேட்டேன். “நான் பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது. ஆனாலும் இந்தப் புகார் குறித்து விசாரிக்கிறேன். நீதிமன்றத்திலுள்ள வழக்கு குறித்தும் விசாரிக்கிறேன்’’ என்றார்.

கனிமொழியின் குடும்பத்துக்கு உடனடியாக உதவ அரசு முன்வர வேண்டும். அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்!