திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

சிந்தனை விருந்து! - `இன்னும் சீக்கிரமா போகணும்னா...?'

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

தென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்

ஆகாயத்தில் வேகமாகப் பறந்து கொண்டி ருந்தது ஒரு விமானம். இன்னும் வேகமாகப் பயணிக்க நினைத்த பயணி ஒருவன், விமானத்துக் குள்ளேயே கைகளை வீசியபடி நடக்க ஆரம்பித்தான்!

அந்த விமானத்தில் பயணம் செய்த பெரியவர் ஒருவருக்கு, அவன் செயல் வேடிக்கையாகப் பட்டது.

``ஏன் இப்படி?'' என்று விசாரித்தார்.

``நான் கொஞ்சம் சீக்கிரமா என் ஊருக்குப் போகணும்!'' என்றான் அந்தப் பயணி.

``இதற்கு, உனது அவசரம் உபயோகப்படாது!'' என்றார் பெரியவர். உடனே பயணி திகைப்புடன் கேட்டான், ``என்ன சொல்றீங்க?''

``இந்த விமானம்... போக வேண்டிய வேகத்துல போய்கிட்டிருக்கு. உனது செயலால் விமானத்தின் வேகத்தை அதிகப்படுத்த முடியாது!'' என்றார்.

``இப்ப என்ன செய்யறது?'' - பயணி கேட்டான்.

``பேசாம உன் இடத்தில் உட்கார். அதோ, ஏதோ கொடுக்கிறார்கள் பார்... வாங்கிச் சாப்பிடு!'' என்று பெரியவர் சொல்ல, அப்படியே செய்தான் பயணி.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து

பெரியவர் பேச்சைத் தொடர்ந்தார், ``இதோ பாரப்பா... இந்த உலகமும் இப்படித்தான். அதன் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், அதைவிட வேகமாகப் போக வேண்டும் என்று பரபரக்கிறான் மனிதன். இதன் விளைவுதான்... இன்றைய உலகத்தில் இவ்வளவு துன்பங்கள்.''

``அப்படியென்றால்..?'' - பயணி கேட்க, தொடர்ந்து விளக்கினார் பெரியவர், ``அவசரமாகத் தேடி ஓடாதே. ஏனெனில், நீ அடைய வேண்டிய இடம் என்று எதுவுமில்லை. இந்த உலகத்தில் இயல்பாக வாழப் பழகிக்கொள். அப்படி இயல்பாக வாழப்பழகிக் கொண்டால், வாழ்க்கை என்ற பயணம் சுகமாக இருக்கும்!'' - பெரியவர் முடித்தார். சிந்திக்க ஆரம்பித்தான் பயணி. வேடிக்கை கதை ஒன்று அவன் நினைவுக்கு வந்தது...

கையில் இருந்த முகவரி குறித்து விசாரித்தான் ஒருவன். ``இந்த இடத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?''

``நடந்து போனால் நாற்பது நிமிஷம் ஆகும்!''

``இன்னும் கொஞ்சம் சீக்கிரமா போகணும்!''

``சைக்கிளில் போங்க... 20 நிமிஷத்துல போகலாம்!''

``இன்னும் சீக்கிரம் போகணும்னா?''

``காரில் போகலாம்... 10 நிமிஷம்தான் ஆகும்!''

``அதைவிட சீக்கிரமா அங்கு போய்ச் சேரணுமே!''

``அப்படின்னா ஒண்ணு செய்யுங்க! அதோ பாருங்க... ஒரு வெறி நாய்... ஒரு கல்லை எடுத்து அதன் மேல போடுங்க. அது, துரத்த ஆரம்பிக்கும். அஞ்சே நிமிஷத்துல நீங்க அங்கே போய்ச் சேர்ந்துடலாம்!''

- சிரித்தபடியே நினைவிலிருந்து மீண்டான் பயணி. விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. அவன், இறங்கி மெள்ள நடந்தான். பூமியின் வேகத்தை விட, அந்தப் புதிய மனிதனின் வேகம் குறைவாகவே இருந்தது!