திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

சிந்தனை விருந்து! - கதவைத் திறக்க முடிந்ததா?

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

தென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்

`எல்லாம் என்னால்தான் நடக்கிறது!’ என்று மனிதன் நினைத்துக்கொண்டிருக்கிறான்.

ஆனால், அவன் இல்லாமலே எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மையைப் புரிந்து கொள்வதுதான் ஆன்மிகம்.

ஒரு மனநோய் மருத்துவமனை. ஏராளமானவர்கள் அங்கு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்கள். எட்டுப் பேர் மட்டும் அவர்களின் மத்தியில் கொஞ்சம் தெளிந்தவர்களாகத் தெரிந்தார்கள். ஆனாலும் முற்றிலும் குணமாகவில்லை!

தலைமை மருத்துவர் யோசித்தார். அந்த எட்டுப் பேருக்கும் ஒரு சோதனை வைப்போம்... அதில் தேறியவர்களை மட்டும் வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று முடிவு செய்தார்.

என்ன சோதனை தெரியுமா?

சிறந்த ஓவியர் ஒருவரை அங்கே வரவழைத்தார். மருத்துவமனையின் நீண்ட சுவர் ஒன்றைக் காட்டி, ``இதில் பெயின்ட்டால் அழகான கதவு மாதிரி வரைய வேண்டும். பார்த்தால் நிஜக் கதவு மாதிரியே தெரிய வேண்டும். வரையுங்கள்’’ என்றார்.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து

அவரும் அப்படியே வரைந்து வண்ணம் பூசிக் கொடுத்தார். மறுநாள் அந்த எட்டு மன நோயாளிகளையும் அங்கே அழைத்து வந்தார். ‘‘நண்பர்களே! அந்தக் கதவைத் திறந்து காட்டுங்கள், பார்க்கலாம்’’ என்றார். ஏழு பேர் அதன் மீது முட்டி மோதி, அதைத் திறக்க முயற்சி செய்தார்கள். ஒருவர் மட்டும் சிரித்துக்கொண்டே ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார். ‘இவர் பரவாயில்லை!’ என்று நினைத்த டாக்டர் அவரிடம் போனார்.

‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

‘‘பாவம்... அவர்கள் அநாவசியமாக அங்கே முட்டிமோதிக் கொண்டு கிடக்கிறார்கள்!’’

‘‘ஏன்... அதில் என்ன தவறு?’’

‘‘அவர்களால் அந்தக் கதவைத் திறக்க முடியாது!’’

‘‘ஏன்?’’

‘‘அவர்கள் ஏழு பேரும் முட்டாள்கள்!’’

‘‘இருக்கட்டுமே... அதனால் என்ன? தொடர்ந்து முயற்சி செய்தால் முடியாதா?’’

‘‘நிச்சயமாக முடியாது!’’

‘‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?’’

இந்தக் கேள்விக்கு எட்டாம் ஆசாமி இப்படிப் பதில் சொன்னார்: ‘‘அந்தக் கதவோட சாவி என் கையில் இருக்கும்போது அவர்களால் எப்படி அந்தக் கதவைத் திறக்க முடியும்?’’ - அவர் கையில் இருந்தது டாக்டரின் கார் சாவி.

நண்பர்களே! ஆணவத்துக்குத் தீனி போடாதீர்கள். அது, நமது ஆன்மிகப் பயணத்தின் வேகத்தைக் குறைக்கும்!

(4.12.06 இதழிலிருந்து...)