தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

சிந்தனை விருந்து! - அழையா விருந்தாளிகள்!

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

தென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாக அழகான அந்த வீட்டின் வாசலில் ‘நல்வரவு’ என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு நாள் அந்த வீட்டின் வாசலில் சிலர் நின்றிருந்தார்கள்.

வீட்டுக்காரர் வெளியே வந்தார். யாரோ வழிப்போக்கர்கள் என்பது அவருக்குப் புரிந்தது. என்றாலும், ``உள்ளே வாங்க!’’ என்று அழைத்துச் சென்றார்.

அவர்களை உபசரித்த வீட்டுக் காரர், ‘`நீங்கள்லாம் யார்? எங்கே செல்கிறீர்கள்?’’ என்று விசாரித்தார்.

அவர்களில் ஒருவர் சொன்னார்... ‘`என் பெயர் கோபம்! நான்தான் குடும்பத் தலைவன்!’’ என்றவர், அருகில் இருந்தவர்களை வரிசையாக அறிமுகப்படுத்தினார்.

‘`இவள் என் சகோதரி; பெயர் பிடிவாதம். எப்போதும் என் பக்கத்துலேயேதான் இருப்பாள். என் பின்னாடி நிற்கிறாளே... அது என் மனைவி ‘இம்சை’. என் குரலைக் கேட்டதும் வெளியே வந்து விடுவாள். இதோ நிற்கிறாரே... இவர் என் அண்ணன் அகங்காரம்’’ என்றவர், அருகில் நின்றிருந்த வயதான வரையும் அறிமுகப்படுத்தினார்.

அழையா விருந்தாளிகள்
அழையா விருந்தாளிகள்

‘`இவர் என் தகப்பனார்... இவரோட பெயர் அச்சம்!’’

‘`பிள்ளை குட்டிங்க?’’- வீட்டுக்காரர் கேட்டார்.

சட்டென்று பதில் வந்தது ‘`இரண்டு பொண்ணுங்க... ஒருத்தி - நிந்தனை; வாய்க்குப் பக்கத்திலேயே இருப்பா. இன்னொருத்தி - கோள்சொல்லி; காதுக்கு அருகிலேயே இருப்பா. ஒரே மகன் அவன் பெயர் பொறாமை!’’

‘`மகனுக்குக் கல்யாணம் ஆயிட்டுதா?’’

‘`ஆயிடுச்சி... மருமகள் பேரு சிடுமூஞ்சி. பேத்தியும் இருக்கா... வெறுப்புன்னு கூப்பிடுவோம். எப்பவும் மூக்குக்குப் பக்கத்திலேயே இருப்பாள்!’’

‘`உங்கள் தாயாரைப் பத்தி எதுவும் சொல்லலையே?’’

‘`அவங்க பேரு உதாசீனம்.’’

‘`அதுசரி... இங்கே இருப்பது நீங்கள், உங்க மனைவி அப்பா சகோதரர்கள் மட்டும்தான். உங்க அம்மா, மகன் - மகள், பேத்தியெல்லாம்?’’

``இப்பத்தானே எங்களை உள்ளேவிட்டு இருக்கீங்க... அவங்க எல்லாம் ஒவ்வொருத்தரா உள்ளே வருவாங்க!’’

வீட்டுக்காரர் யோசித்தார். கோபத்துக்கு இப்படி ஒரு பெரிய குடும்பமே இருக்கிறது என்று புரட்சிசாது தவத்திரு தருணசாகர் கூறியிருப்பதை எண்ணிப்பார்த்தார். அப்புறம் என்ன நினைத்தாரோ... வந்திருந்தவர்களை அவசர அவசரமாக அனுப்பி வைத்தவர், வாசலில் இருந்த ‘நல்வரவு’ அறிவிப்பை அழித்துவிட்டு, இப்படி எழுதினார் ‘நாய்கள் ஜாக்கிரதை!'

17/10/2009 இதழிலிருந்து