புதுச்சேரி அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெறுவது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில், ஆளுநர் மாளிகையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. தலைமைச் செயலர் அஸ்வனி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு மற்றும் உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க இன்னும் 15 நாள்கள் மட்டுமே இருப்பதைச் சுட்டிக்காட்டிய கிரண் பேடி, மாணவர் சேர்க்கையை விரைந்து முடிக்குமாறு சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார். அந்த உத்தரவில் `மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சென்டாக் செயல்பட சுகாதாரத்துறை வலியுறுத்த வேண்டும்.
2020-21 சென்டாக் கையேட்டில் குறிப்பிட்டிருப்பதன் அடிப்படையிலேயே அரசு ஒதுக்கீடும், இட ஒதுக்கீடும் இடம்பெற வேண்டும். மேலும், எந்தவித தாமதமுமின்றி டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு சென்டாக் அமைப்பு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும்.
மத்திய அரசிடம் நிலுவையிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெறும் கோப்பு மற்றும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு பெறுவதற்கான கோப்பு ஆகியவற்றுக்கு ஒப்புதல் பெற புதுச்சேரி நிர்வாகம் தொடர்ந்து முயல வேண்டும். மருத்துவப் படிப்புக்காக கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இந்த ஆண்டும் தொடரும். அதேபோல இனிவரும் காலங்களில் அரசு அனுமதி அளித்த பிறகே சென்டாக் அமைப்பு மாணவர்கள் வழிகாட்டிக் கையேட்டைப் பிரசுரிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.