அலசல்
அரசியல்
Published:Updated:

“வசமாக மாட்டிக்கொண்டார் தங்கமணி!” - செக் வைக்கும் செந்தில் பாலாஜி

அனல் மின் நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
News
அனல் மின் நிலையம்

அனல் மின் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலக்கரி அளவுக்கும், பதிவேட்டிலுள்ள அளவுக்கும் வித்தியாசம் இருப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்தன

வட சென்னை அனல் மின் நிலையத்தில் மாயமான 2.38 லட்சம் டன் நிலக்கரி விவகாரம் திகுதிகுவெனப் பற்றி எரிகிறது. அங்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கள ஆய்வைத் தொடர்ந்து, நிலக்கரி கொள்முதல் தொடர்புள்ள பழைய ஃபைல்கள் தூசு தட்டப்படுகின்றன. இந்த விவகாரமும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் என்கிறார்கள் துறையின் உள்விவரம் அறிந்தவர்கள்.

அனல் மின் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலக்கரி அளவுக்கும், பதிவேட்டிலுள்ள அளவுக்கும் வித்தியாசம் இருப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆகஸ்ட் 2-ம் தேதி வட சென்னை அனல் மின் நிலையத்தை ஆய்வு செய்ய நான்கு அதிகாரிகள்கொண்ட குழுவை அமைத்தார். ஆகஸ்ட் 4 மற்றும் 9-ம் தேதிகளில் அனல் மின் நிலையத்தை ஆய்வுசெய்த இந்தக் குழு, 2,38,437 மெட்ரிக் டன் நிலக்கரி மாயமானதைக் கண்டுபிடித்துள்ளது. ஆகஸ்ட் 6-ம் தேதி நிலவரப்படி, வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5,65,900 மெட்ரிக் டன் நிலக்கரி இருப்பதாகப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அங்கு உண்மையில் இருப்பது 3,27,463 மெட்ரிக் டன் நிலக்கரி மட்டும்தான் என்கிறது அந்தக் குழுவின் அறிக்கை. மாயமாகியிருக்கும் நிலக்கரியின் மதிப்பு மட்டும் 85 கோடி ரூபாய் என்கிறார்கள் அதிகாரிகள்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடர்ச்சியாக கூறிவரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நம்மிடம், “2012 - 2016 காலகட்டத்தில், நிலக்கரியை இறக்குமதி செய்த வகையில் சுமார் 6,000 கோடி ரூபாயும், அதை எடுத்துச் சென்ற போக்குவரத்து வகையில் 1,200 கோடி ரூபாயும் முறைகேடு நடைபெற்றிருப்பதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டுவந்திருக்கிறோம். இப்படி 7,200 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறையில் 2018-ம் ஆண்டு புகாராகவும் அளித்தோம். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், தங்கமணி இருவருக்கும் தொடர்பு இருக்கிறது.

“வசமாக மாட்டிக்கொண்டார் தங்கமணி!” - செக் வைக்கும் செந்தில் பாலாஜி

இந்த விவகாரத்தில் இரண்டு வழிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஒன்று, ஒரு மெட்ரிக் டன் நிலக்கரிக்கு சந்தை மதிப்பைவிட 15 முதல் 20 டாலர் அதிகம் கொடுத்து இறக்குமதி செய்துவந்தனர். இரண்டு, ஒரு மெட்ரிக் டன் நிலக்கரிக்கு 6,000 கிலோ கலோரி தரம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் 4,500 கிலோ கலோரி தரமிருக்கும் நிலக்கரியை இறக்குமதி செய்திருக்கிறார்கள். இதை சி.ஏ.ஜி அறிக்கையே தெளிவாகக் கூறுகிறது. வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படும்போது, கஸ்டம்ஸில் அந்த நிலக்கரியின் தரத்தைப் பரிசோதிப்பார்கள். அப்போது 4,500 கிலோ கலோரியாக இருந்த அந்த நிலக்கரியின் தரம், அனல் மின் நிலையத்துக்குள் வந்தவுடன் 6,000 கிலோ கலோரியாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது எப்படிச் சாத்தியம்? இப்படித் தரம் குறைந்த நிலக்கரியைக் கொள்முதல் செய்ததால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஜெயராம் வெங்கடேசன்
ஜெயராம் வெங்கடேசன்

அந்த நிலக்கரியின் தரம் குறைவு என்பதால், அதிக அளவு பயன்படுத்தினால் மட்டுமே நமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இப்படி நிலக்கரியை அதிகமாகப் பயன்படுத்தும் விஷயத்தைப் பதிவு செய்யவில்லை. பதிவு செய்தால், `ஏன் தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்தீர்கள்?’ என்கிற கேள்வி எழும். வட சென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி மாயமானது இப்படித்தான் என்று நினைக்கிறேன். எங்களது புகாரைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு முதல் சந்தை மதிப்பைவிடக் கூடுதலான விலையில் கொள்முதல் செய்யும் முறையை அப்போதைய அரசு கைவிட்டது. ஆனால், தரமில்லாத நிலக்கரி கொள்முதல் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இந்த ஊழல் முறையாக விசாரிக்கப்பட வேண்டும்” என்றார்.

தங்கமணி
தங்கமணி

நிலக்கரி கொள்முதல் தொடர்பாகப் பேசியிருக்கும் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி, “கடந்த அ.தி.மு.க ஆட்சியிலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என்று கண்டறியப்பட்டது. செந்தில் பாலாஜி புதிதாக எதையும் கண்டுபிடித்துவிடவில்லை. எனக்கு மடியில் கனமில்லை; அதனால் வழியில் பயமில்லை” என்று சொல்லியிருக்கிறார். தங்கமணியின் பதிலடி குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டோம்...

“முறைகேட்டை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டோம் என்கிறார் தங்கமணி. அப்படியென்றால் அந்த விவரங்களை ஏன் வெளியிடவில்லை... தவறு செய்த அதிகாரிகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன... அதிகாரிகளைக் காப்பாற்றினார்களா அல்லது தாங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அமைதியாக விட்டுவிட்டார்களா? இது மிகப்பெரிய ஊழல். தங்கமணி வசமாக மாட்டிக்கொண்டார். தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களிலும் ஆய்வு நடத்தச் சொல்லியிருக்கிறேன். தவிர, கடந்த பத்தாண்டுகளில் நிலக்கரி கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

நாம் விசாரித்த வகையில், இந்த விவகாரத்தில் சில அதிகாரிகளை மட்டுமே பலிகடா ஆக்கிவிட்டு, அதிகாரத்திலிருந்தவர்கள் தப்பித்துக்கொள்ள முயற்சிகள் நடைபெறுகின்றன என்கிறார்கள். அரசு நேர்மையாக விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிப்படும்.