திருட்டு, கொள்ளை, ஆட்கடத்தல்! - நாமக்கல்லை களேபரபடுத்தும் தினுசு தினுசான திருடர்கள்!

ஓவியங்கள்: ஜீவா
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து கொள்ளை, திருட்டு, கடத்தல் சம்பவங்களும், நள்ளிரவு வேளைகளில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள், வீடுகளுக்குள் புகுந்து அரிவாளைக் காட்டி மிரட்டி பெண்களிடமிருந்து நகைகளைப் பறிக்கும் ‘பகீர்’ செயல்களும் நடந்துவருகின்றன. இதனால் கலக்கத்திலிருக்கும் பொதுமக்கள் காவல் நிலையங்களை நோக்கிப் படையெடுக்க, தூக்கம் தொலைத்து திரிகிறார்கள் நாமக்கல் மாவட்டக் காவல்துறையினர். சமீபத்தில் அங்கு நடைபெற்ற சில குற்றச் சம்பவங்கள் இங்கே...

திருட்டு, கொள்ளை, ஆட்கடத்தல்!
நாமக்கல் போதும்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் மனைவி நவீனா. நள்ளிரவில் இவர் தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அவரின் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள், நவீனாவிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துச் சென்றனர். அன்றிரவே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சரவணா நகரில் இதே போன்ற சம்பவம் நடைபெற்றிருக்கிறது. முட்டை வியாபாரியான அருண்குமார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த நபர்கள், தூங்கிக்கொண்டிருந்த அருண்குமாரின் மனைவி லட்சுமியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி இரண்டரை பவுன் செயினைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக `துப்பு’துலக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டும், கொள்ளையர்களைக் காவல்துறையினரால் நெருங்க முடியவில்லை.

‘புதையல்’ திருடன்
பள்ளிபாளையம், வெடியரசம் பாளையத்தைச் சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் ஜெயபிரகாஷின் தந்தை மணி. இவரிடம், போலிச் சாமியாரான ரமேஷ் என்பவர் ‘புதையல்’ ஆசைகாட்டி, ரூபாய் 50 ஆயிரம் பணத்தை வாங்கியிருக்கிறார். அன்று இரவே அவர் வீட்டு காம்பவுண்டுக்குள் மது போதையில் ஏறிக் குதித்த சாமியார் உள்ளிட்ட கும்பல், ஒரு சொம்பை அங்கே குழி தோண்டிப் புதைத்து வைத்திருக்கிறது. மறுநாள் அங்கே வந்த சாமியார் உள்ளிட்டவர்கள், ‘புதையல் இங்குதான் இருக்கு’ என்று முதல்நாள் புதைத்த சொம்பைத் தேடியிருக்கிறார்கள். புதைத்த இடம் மறந்துவிட, ஜெர்க்கான சாமியார், வேறு ஓர் இடத்தில் ஜே.சி.பி-யை வரவழைத்து குழி தோண்ட வைத்திருக்கிறார். அதற்கும் சேர்த்து கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் கறந்துகொண்டார். ‘வீட்டுக்குள் பூஜை பண்ணினால், புதையல் இருக்கும் இடம் விளங்கும்’ என்று நைச்சியமாகத் தூண்டிலை வீசியிருக்கிறார். ஆனால், சந்தேகமடைந்த மணி அதற்கு மறுப்பு தெரிவிக்க, அவரைக் கட்டிப்போட்ட கும்பல், அவரின் மனைவி பழனியம்மாளை மிரட்டி, வீட்டிலிருந்த ரூ.28 லட்சம் பணம், 18 பவுன் நகையை எடுத்துக்கொண்டு ஜூட் விட்டது. பல்வேறு சிரமங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்டவர்களைக் கைதுசெய்திருக்கிறது போலீஸ்.

செல்போனுக்கு சார்ஜ் போட்ட ‘கூல்’ திருடன்!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகேயுள்ள காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல். இவர் அதே பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்திவருகிறார். ஹோட்டலுக்கு எதிரே மோகன் என்பவரின் பேக்கரி ஒன்றும் இயங்கிவருகிறது. இந்த இருவரின் கடைகளிலும் அடுத்தடுத்த நாள்களில், மர்ம நபர் ஒருவர் புகுந்து சுமார் ஒரு லட்சம் வரை பணம், ஆதரவற்றோருக்காக வைத்திருந்த உண்டியல் பணம், ஆதார் அட்டைகள் ஆகியவற்றைத் திருடிச் சென்றிருக்கிறார். இது பற்றி குமாரபாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில், ஹோட்டலுக்குள் புகுந்த மர்ம நபர் கல்லாவில் பணத்தைத் திருடிவிட்டு, தன் செல்போனை சார்ஜ் போட்டுச் சென்றதும் தெரியவந்திருக்கிறது. மேலும், மறுநாள் பேக்கரியில் திருடும்போது, அங்கிருந்த ஃபிரிட்ஜைத் திறந்து அதிலிருந்த கூல்டிரிங்ஸ் ஒன்றை எடுத்து குடித்துவிட்டுச் சாவகாசமாகச் செல்வதும் தெரியவந்தது.
இந்த நிலையில், அடுத்த சில நாள்களிலேயே அதே திருடன் ஏற்கெனவே திருடிய பேக்கரியில் மீண்டும் மேற்கூரை வழியாக, உள்ளே இறங்கியிருக்கிறார். அப்போது சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸார் பேக்கரியை நோட்டம்விட, வெளியே போலீஸ் நிற்பது தெரியாமல் திருடிவிட்டு ஜாலியாக வந்தவர் கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறார். அவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அவர் திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த மகுடேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதுவரை குமாரபாளையத்தில் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியதாகவும் ஒரு முறைகூட போலீஸில் சிக்கவில்லை என்றும் ‘கூலாகச்’ சொல்லியிருக்கிறார்.

பால் மணம் மாறாத பால் திருடன்!
குமாரபாளையம் கே.ஓ.என் தியேட்டர் பகுதியில் ஆவின் பால் விற்பனை செய்துவருபவர் சதாசிவம். நள்ளிரவில் முகவர் மற்றும் கடைகளின் முன்பு ஆவின் ஊழியர்கள் இறக்கிவைத்துச் செல்லும் பால் ட்ரேக்குகளில், தனது கணக்கில் மட்டும் வாரம் 10 லிட்டர் பால் ‘மாயமாகி’ விடுவதாக போலீஸாரிடம் புலம்பியிருக்கிறார் சதாசிவம். அந்தப் பகுதி சிசிடிவி கேமராவை ‘உன்னிப்பாக’ கவனித்ததில், நாராயணன் நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்தான் அந்தப் பால் மணம் மாறாத பால் திருடன் என்பது தெரியவந்தது. அவனைப் பிடித்து விசாரித்ததில், ‘வீட்டுத் தேவைக்காகத்தான் பால் பாக்கெட்டுகளைத் திருடினேன்’ என்று பம்மியிருக்கிறான்.
‘பட்ஜெட்’ கடத்தல்காரர்கள்!
குமாரபாளையம் மேட்டுக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசுந்தரம். தனது துணிக்கடையைப் பூட்டிவிட்டு வீடு திரும்பியபோது, அவரை ஐந்து மர்ம நபர்கள் காரில் கடத்தினர். பின்னர், செல்போனில் அவரின் மனைவியைத் தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள், ‘பணம்’ கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். ‘அவ்வளவு கைவசம் இல்லை’ என்று சத்தியசுந்தரத்தின் மனைவி மறுக்க, ‘டெம்போவெல்லாம் வெச்சு கடத்தியிருக்கோம்’ என்கிறரீதியில், `போட்டிருக்கும் நகையைக் கொடுத்து உன் புருஷனை காப்பாத்திக்கோ’ என்று மிரட்டியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் 18 பவுன் நகையைக் கொடுத்து, கணவர் சத்தியசுந்தரத்தை மீட்டிருக்கிறார். அதன் பிறகு, போலீஸில் அளித்த புகாரின் பேரில் க.பரமத்தியைச் சேர்ந்த குமார், ராஜன், சலீம், தீபன் உள்ளிட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
‘தினுசு தினுசா கிளம்புறாய்ங்களே’ என்கிற வடிவேலு டயலாக்தான் நினைவுக்கு வருகிறது!