Published:Updated:

`மார்கழி மாசம்'னு எங்கயும் வீடுகூட தரமாட்றாங்க!' - கலங்கும் அரிவாக்குளம் மக்கள்... கவனிக்குமா அரசு?

வீடிழந்து பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் மக்கள்
News
வீடிழந்து பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் மக்கள்

எஞ்சியிருக்கும் மற்ற பிளாக் கட்டடங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதால், பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை காலிசெய்துவிட்டு சாலைகளிலும், திறந்தவெளிகளிலும் தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.

`சமீபத்தில் அரும்பாக்கம், ஆயிரம்விளக்கு, கொளத்தூர் என அரசால் ஆக்கிரமிப்பு வீடுகளாக குறிக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்கள் இடித்து அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளாக குடிசை மாற்றுவாரிய கட்டடங்களில் வீடுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதேபோல் தான், 1997-ம் ஆண்டும் திருவொற்றியூர் குமரப்பிள்ளை நகர் ரயில்வேகேட் அருகே தங்கியிருந்த மக்களின் குடிசை வீடுகள் இடிக்கப்பட்டு, அங்கிருந்த மக்களுக்கு அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. தற்போது இருபத்துநான்கு ஆண்டுகளே கடந்திருக்கும்சூழலில், வாரியத்தின் வீட்டையும் இழந்து, முன்பிருந்த குடிசைக்கூட இல்லாதநிலையில் வீதிகளில் பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர்'

இடிந்து விழுந்த 24 வீடுகள்
இடிந்து விழுந்த 24 வீடுகள்

இடிந்து விழுந்த 24 வீடுகள்:

சென்னை, திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் `நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' சார்பில் கட்டப்பட்ட 336 வீடுகள் அடங்கிய குடியிருப்பு உள்ளது. நான்கு பிளாக்குகளாக உள்ள இந்த குடியிருப்பின் `D' பிளாக் கட்டடம், கடந்த டிசம்பர் 27-ம் தேதி காலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 28 வீடுகள் தரைமட்டமாகின. மக்கள் தங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உடைமைகளை மட்டும் இழந்து, உயிரைக் காத்துக்கொண்டனர். வீடிழந்த 28 குடும்பத்தினருக்கும் அரசுசார்பில் 1 லட்சம் நிவரணம் கொடுக்கப்பட்டது. அவர்கள் மண்டபங்களிலும், சத்திரங்களிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், எஞ்சியிருக்கும் மற்ற பிளாக் கட்டிடங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதால், பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை காலிசெய்துவிட்டு சாலைகளிலும், திறந்தவெளிகளிலும் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். அவர்களை சந்தித்தோம்.

இரவில் திறந்தவெளியில் தங்கியிருக்கும் மக்கள்
இரவில் திறந்தவெளியில் தங்கியிருக்கும் மக்கள்

``1997-ல இந்த இடத்துக்கு வந்தோம். அதுஒரு பெரிய போராட்டக் கதை. அதுக்குமுன்னாடி குமரப்பிள்ளை நகர் ரயில்வே கேட் கிட்ட குடிசைபோட்டு தங்கிட்டுஇருந்தோம். ரயில்வே பாதை அகலப்படுத்தப்போறோம்னு சொல்லி எங்களையெல்லாம் அடிச்சி வெளியேத்திட்டாங்க. நாங்களும் மாற்றுஇடம் வேணும்னு தொடர்ச்சியா போராடுனோம். எங்க வீட்டு ஆம்பளைங்களையெல்லாம் அரெஸ்ட் பண்ணி 15 நாள் ரிமாண்ட்லாம் பண்ணாங்க. கோர்ட்டுக்கும் போனோம். அப்புறம் ஒருவழியா எங்களோட தொடர்ச்சியான போராட்டத்துனால, அரசாங்கம் இந்த அரிவாக்குளம் பகுதியில குடியிருப்பு கட்டிதந்துச்சு! நாங்க ஒரு 105 குடும்பங்கள் இங்க வந்தோம்.

பாதிக்கப்பட்ட மாலா
பாதிக்கப்பட்ட மாலா

ஆரம்பத்துல தண்ணி, கரெண்ட வசதி, கால்வாய் பிரச்னை சரி பண்றதுனு எல்லாமே நல்லாதான் இருந்துச்சி. மாத வாடகை 150 ரூபாய்னு சொன்னாங்க, தந்தோம். குடும்ப சூழ்நிலைனால கொஞ்சம்பேரால கொடுக்கமுடியல. அதனாலவோ என்னவோ தெரியல, போகப்போக எந்த பராமரிப்பும் பண்ணாம எங்களையும், வீட்டையும் கண்டுக்காமலே விட்டுட்டாங்க. அதோட விளைவுதான் இப்பஇந்த பில்டிங் இடிஞ்சு விழுந்ததும்!" என்றார் மாலா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அந்த D பிளாக் பில்டிங்கும் எங்க பில்டிங் மாதிரிதான் இருந்துச்சு. ஆனா இப்போ திடீர்னு இடிஞ்சி விழுந்துடுச்சு! அதைநேர்ல பாத்ததுலருந்து எங்க வீட்டுக்குள்ளபோகவே ரொம்ப பயமா இருந்துச்சு. அதனால எங்க பெட்டி படுக்கைகளையெல்லாம் எடுத்துகிட்டு வெளியில வந்துட்டோம். இப்போ குழந்தைங்களோட நடுத்தெருவுல நிக்கிறோம். இப்போ என்ன பண்றது...எங்கப் போறதுனே தெரியல" என்று கண்ணீர்வடித்தார் E பிளாக்கில் வசிக்கும் பவானி.

பாதிக்கப்பட்ட பவானி
பாதிக்கப்பட்ட பவானி

`மார்கழி மாசம்னு வீடுதரமாட்றாங்க!'

வீட்டுவேலை செய்யும் பாத்திமா, ``எனக்கு மூனு பொண்ணுங்க. அவங்களுக்கும் கல்யாணமாகி இப்போ 8 பேரக்குழந்தைங்க இருக்காங்க. எங்களை விடுங்க இந்த குழந்தைங்கள வச்சிகிட்டு இங்க வாழமுடியுமா? கொஞ்சம்பேரு சொந்தக்காராங்க வீட்டுக்கு பொருள்களை எடுத்துகிட்டு போய்டாங்க. யாரும் இல்லாத நாங்க வீடு வாடகைக்குகேட்டு போனா, அவங்க 50 ஆயிரம், 1 லட்சம்னு அட்வான்ஸ் கேக்குறாங்க. அதுவும் இப்போ எங்கவீடுகள்லாம் இடிஞ்சி, நிறையபேர் வீடுகேட்டு அலையுறோம்னு தெரிஞ்சதுனால, வீட்டு ஓனருங்களாம் அட்வான்ஸ், வாடகையே ரொம்ப ஏத்திபுட்டாங்க. தினக்கூலி எங்களால அவ்ளோகாசு கொடுக்கமுடியுமா? காலைலேந்து 50 வீட்டுக்குமேல பாத்திருப்போம், ஒன்னும் கிடைக்காம திரும்ப இங்கயே வந்துட்டோம். இப்ப நாங்க என்ன பண்ணுவோம்... வீடு இல்லாம?" என்றார்.

பாத்திமா
பாத்திமா

``வீடு இடிஞ்சி உயிர்போற சூழ்நிலைல இருந்து நாங்க தப்பிச்சி வந்திருக்கோம். வெளிலபோய் வீடு கேட்டா, மார்கழி மாசம் வீடுகொடுக்க முடியாதுனு சொல்றாங்க. உட்காரத்துக்குகூட இடமில்லனு எங்க கஷ்டத்தசொன்னோம். சாஸ்திரம், சம்பிரதாயத்தலாம் மீறி எப்படி வீடுகொடுக்க முடியும்? அதுலாம் முடியாதுனு விரட்டிவிட்டுடாங்க. மனிதாபிமானமே இல்லாமபோச்சி. எங்களுக்கு ஸ்கூல், காலேஜ் படிக்குற 3 பெண் குழந்தைகங்க இருக்காங்க. அவங்க படிப்பு என்னாகுறது? ரோட்ல, தெருவுல படுக்கவச்சா அவங்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?" என குமுறுகிறார்கள் B பிளாக்கில் வசித்துவந்த தனியார் பள்ளி ஆசிரியர் லஷ்மனன்-இந்திராகாந்தி தம்பதி.

`அரசாங்கத்தைதான் நம்பியிருக்கோம்'

``உயிர்பயத்துல எங்க ஜனங்கலாம் ரோட்ரோரத்துல குந்திருக்காங்க. ராத்திரி முழுக்க இந்த பனியிலதான் நடுங்கிகிட்டு படுத்துருக்காங்க. எத்தனை நாளுக்குதான் இப்படியே இருக்க முடியும். பொம்பள பிள்ளைங்க குளிக்க, பாத்ரூம்க்குலாம் வெளியில எங்க போகும். எங்கதான் போகமுடியும்? அரசாங்கம் எங்களுக்கு ஏதாச்சும் தீர்வை வழங்கனும்" என்றார் கலைச்செல்வி.

வீடில்லாமல் இரவிலும் குளிரிலும் அல்லல்படும் மக்கள்
வீடில்லாமல் இரவிலும் குளிரிலும் அல்லல்படும் மக்கள்

தொடர்ச்சியாக சந்தித்த பல்வேறு மக்களும், ``அரசாங்கம் இந்த வீட்டையெல்லாம் சரிபண்ணி கொடுக்குறோம்னு சொல்லாம, மொத்தமா இடிச்சிட்டு புதுசா கட்டித்தந்தா நாங்க பயமில்லாம நிம்மதியா இருப்போம். அதுவரைக்கும் எங்களுக்கு ஏதாச்சும் மாற்றுஏற்பாடு பண்ணிகொடுத்தா நால்லாயிருக்கும்" என்றனர்.

வீடில்லாமல் அவதிப்படும் மக்கள்
வீடில்லாமல் அவதிப்படும் மக்கள்

`தனியாருக்கு டெண்டர் கொடுக்காதீங்க'

இந்த சம்பவம் குறித்து சி.பி.எம் மத்தியசென்னை செயலாளர் செல்வாவிடம் பேசினோம். ``சாதாரணமா குடியிருப்புகள்ல விரிசல் ஏற்படும், பெயர்ந்து விழும் அதை பழுதுபார்ப்பாங்க. ஆனால் திருவொற்றியூர்ல ஒட்டுமொத்த பேஸ்மென்ட்டே இடிஞ்சி தரைமட்டமாகியிருக்கு. இதை சாதாரணமா விடமுடியாது. உயிர்பலி ஏற்பட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்? இது 25 வருட பழைய கட்டடம் அதான் இப்படி ஆயிட்டுனு அரசாங்கம் சொல்றாங்க. சென்னையில 90, 100 ஆண்டுகளைக் கடந்தும் உறுதியா நிக்குற அரசு கட்டடங்கள் இன்னும்இருக்கே.

ஆக இந்த கட்டுமானத்துல ஊழல் நடந்திருக்கு! தரம் இல்ல. இதுக்கு முதல்ல அரசாங்கம் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கும் முறைய ஒழிக்கனும், அரசோட பொதுப்பணித்துறை மூலமே கட்டடங்கள்லாம் கட்டப்படனும்!" என்றார்.

சி.பி.எம் மத்தியசென்னை செயலாளர் செல்வா
சி.பி.எம் மத்தியசென்னை செயலாளர் செல்வா

`நம்குடியிருப்பு நம்பொறுப்பு திட்டத்தை கைவிடுங்க'

அதேபோல பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் நகர்ப்புற குடியிருப்பு-நிலவுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின் பேசியபோது, ``ஆரம்ப காலத்துல குடியிருப்புகளோட பராமரிப்பு பொறுப்பை, வாரியமே பாத்துவந்துச்சு. ஆனால், அ.தி.மு.க ஆட்சில கடந்த பத்தாண்டுகளா எந்த பராமரிப்பு பணிகளையும் வாரியம் செய்யல.

நகர்ப்புற குடியிருப்பு - நிலவுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின்
நகர்ப்புற குடியிருப்பு - நிலவுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின்

இப்போ வந்த தி.மு.க அரசும் `நம்குடியிருப்பு நம்பொறுப்பு'னு ஒரு திட்டத்தை அறிவிச்சிருக்கு. இது பராமரிப்பு பொறுப்பிலருந்து அரசாங்கத்தை விலக்கிகிட்டு, முழுமையா மக்கள் தலையிலகட்டுற திட்டம். பராமரிப்புப் பணிகளில்லருந்து அரசாங்கம் விலகுனா இதுபோன்ற விபத்துகள் இன்னும்தான் அதிகரிக்கும். எனவே இந்தமுடிவை தமிழ்நாடு அரசு உடனே கைவிடனும்" என்றார்.

`சென்னையில் மட்டும் 23,000 வீடுகள் இடியும் தருவாயில்'

இந்த சம்பவங்கள், குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனை தொடர்புகொண்டோம்.

``திருவொற்றியூரில் வீடிழந்த மக்களுக்கு நிவாரணம் கொடுத்துவிட்டோம். மற்றவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள்செய்ய முயன்றுவருகிறோம். இப்போது இருக்கக்கூடிய குடியிருப்புகளை ஆய்வுசெய்ய, தலைமைப் பொறியாளர்கள் தலைமையில் 5 குழுக்களை நியமித்து, அனுப்பி வைத்திருக்கிறோம். முதல்கட்டமாக உடனடியாக இடிக்கவேண்டிய, பழுதடைந்த கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. டிசம்பர் 31 இறுதிக்குள் ஆய்வறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டிருக்கிறோம்" என்றார்.

குடியிருப்பு இடிந்த தினத்தன்று சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன்
குடியிருப்பு இடிந்த தினத்தன்று சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன்

மேலும், ``பத்தாண்டுகாளாக அ.தி.மு.க எதுவும் செய்யாததால்தான் இந்த நிலைமை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஒரு குழுவை நியமித்து, பழுதான வீடுகளையெல்லாம் கணக்கெடுத்தோம். அதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 23,000 வீடுகள் வாழத்தகுதியற்ற நிலையில் இருக்கின்றன. இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்றோம். உடனே, கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முதற்கட்டமாக 7,500 வீடுகள் கட்டித்தருவதற்காக ரூ.2,500 கோடி ஒதுக்கியிருக்கிறார்.

ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்
ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்

கூடியவிரைவில் பழைய வீடுகளெல்லாம் இடிக்கப்படும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கே.பி.பார்க்கில் நடந்ததுபோல, தகுதியில்லாத ஆட்களுக்கெல்லாம் நாங்கள் ஒப்பந்தம் வழங்கமாட்டோம். அரசுப்பொறியாளர்கள் மட்டுமல்லாமல், அண்ணா யூனிவர்சிட்டி, ஐஐடி நிபுணர்களின் மூன்றாம் தரப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, தனியாருக்கு நிகராக தரமான குடியிருப்புகளை கட்டித்தருவோம்" எனத்தெரிவித்தார்.

`நம்குடியிருப்பு நம் பொறுப்பு' திட்டம் குறித்து கேட்டபோது, ``மக்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு பொறுப்பு வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இனி கட்டப்படும் வீடுகளுக்கு அரசாங்கம் பாதி பணமும், மக்கள் பாதி பணமும் கொடுக்கவேண்டும். பராமரிப்பு பணியை மக்கள் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு புரியும்" என்றார்.

வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி
வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி

அதைத்தொடர்ந்து பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி,``அரசு குடியிருப்புகள் 193 இடங்களில் இருக்கிறது. அதில், 60 இடங்களில் உள்ள குடியிருப்புகள் இடிந்துவிழும் நிலையில் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் இடிப்பதற்கான அனுமதியை பெற்றிருக்கிறோம். அவற்றை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாட்டை செய்யவிருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.