கட்டுரைகள்
Published:Updated:

எனக்கு முகவரியில்லை... ஆனா சிலையிருக்கு!

தன் சிலையுடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
தன் சிலையுடன்...

காலி பாட்டில் பொறுக்கி அதுல சம்பாதிச்சு வாழ்றவர்தான். யார் வம்புதும்புக்கும் போகமாட்டார்.

“நான் யாரையும் காயப்படுத்த விரும்பலை. யார் துரோகம் செஞ்சாங்கன்னும் பேர் சொல்ல விரும்பலை. நான் தோல்விகளைத் தழுவிய போது என்னைத் தவறான பாதையில் போகவிடாமல் செய்தது என் மனம்தான். நாம சாதிக்கணும். வைராக்கியமா நம்மை ஒதுக்குன இந்த பூமியில ஜெயிச்சு நிக்கணும்னு நினைச்சது என் மனம்தான்! பைபிளில், ‘நீ தோற்ற இடத்தில் உன்னை ஜெயிக்கப் பண்ணுவேன்னு’ ஒரு இடம் வரும் இல்லையா... நான் தோற்ற இடத்துல இப்ப ஜெயிச்சு சிலையா நிக்கிறேன். இதுதான் எனக்கு நானே சிலை வெச்சுக்கக் காரணம்!”- புன்னகையோடு நம்மிடம் தன் சிலை ரகசியம் பகர்கிறார் நல்லதம்பி.

ஆம். நாம் கும்பிடும் சாமிக்கும், நாம் தலைவணங்கும் சாதனையாளர்களுக்கும் சிலை வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் தனக்குத்தானே சிலை வைத்துக்கொண்ட(அ)சாதாரண மனிதர்தான் இந்த நல்லதம்பி!

நல்லதம்பி
நல்லதம்பி

சேலம் வாழப்பாடியிலிருந்து பேளூர் செல்லும் வழியில் அத்தனூர்பட்டி கிராமத்தில் சாலையோரமாக கம்பீரமாக அமைந்திருக்கிறது 5 அடி உயரமுள்ள நல்லதம்பியின் சிலை. இரு கை கூப்பி வணங்கியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, அந்த வழியில் செல்பவர்களை சில நொடிகள் புருவத்தைச் சுருக்கி அருகில் சென்று பார்க்கவைக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இச்சிலைக்குப் பாதுகாப்பாக சிறிய அளவில் மணிமண்டபமும் பக்கத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அது சரி, ‘யார் இந்த நல்லதம்பி’ என்று கேட்கிறீர்களா?அதே கேள்வியை சிலைக்குப் பக்கத்தில் இருக்கும் டீக்கடையில் கேட்டால் சின்னப் புன்னகையோடு நம்மை எதிர்கொள்கிறார்கள்.

“காலி பாட்டில் பொறுக்கி அதுல சம்பாதிச்சு வாழ்றவர்தான். யார் வம்புதும்புக்கும் போகமாட்டார். ஒரு நாடோடி மாதிரி திரிவார். எங்க ஊருல யாரைக் கேட்டாலும் அவரைத் தெரியும். நல்ல மனுஷன்! தனக்குத்தானே சிலை வெச்சுக்கிட்டதால இப்ப சுத்துப்பட்டு ஊர்களுக்கும் அவர் பெயர் பரிச்சயம்!” என்கிறார்கள்.

ஒரு வழிப்போக்கனைப் போல அத்தனூர்பட்டியில் வாழ்ந்து வரும் அந்த எளிய மனிதர் நல்லதம்பியை நாம் தேடிப்போனால் ஊர் ஊராக நாமும் தேசாந்திரியாய் அலைய வேண்டியிருந்தது. கடைசியில் பேளூர் டாஸ்மாக் அருகே காலி சரக்கு பாட்டில்களைப் பொறுக்கிக் கொண்டிருந்த நல்லதம்பியைச் சந்தித்தோம். அறிமுகப்படுத்தியதும் ஒரு மரத்தடி நிழலில் நம்மை அமர வைத்து உற்சாகமாகப் பேசினார்.

“ஆரம்பத்துல தனக்குத் தானே சிலை வெச்சுக்கிட்டதைக் குழப்பமாத்தான் எல்லோரும் பார்த்தாங்க. ஆனா, என் நோக்கம் புரிஞ்சதும் என்னை ஊர்க்காரங்க புரிஞ்சுக்கிட்டாங்க. நான் பெருசா படிக்கல. எல்லோருக்கும் உண்மையா இருப்பேன். யாரையும் எனக்கு ஏமாற்றத் தெரியாது. என்னை ஏமாத்தின வங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கவும், உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தவும்தான் இந்தச் சிலையை அமைச்சிருக்கேன். எனக்கு முகவரி கிடையாது!’’ என்றவரை, நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு அவருக்கு நேர்ந்த சோகக் கதையைச் சுருக்கமாகச் சொல்லவைத்தோம்.

தன் சிலையுடன்...
தன் சிலையுடன்...

“சொந்தபந்தங்களால நிறைய இழந்துட்டேன் தம்பி. பணத்தை இழந்த நான் நம்பிக்கைய இழக்கல. வாழ்ந்து காட்டணும்கிற வெறி என்னைத் துரத்திக்கிட்டே இருந்துச்சு...மும்பைக்கு ஓடிப்போயி மூட்டை தூக்கினேன். கர்நாடகாவுக்குப் போயி குவாரியில் கல் உடைச்சேன்... கேரளால மீன் வித்தேன். கடலுக்கு பாடு பார்க்கவும் கத்துக்கிட்டேன். இவ்வளவு உழைச்சு சேர்த்த பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து சிலை வெச்சுக்கிட்டேன். ஏமாந்த பணத்தைக் கேட்டு கிடைக்காததால பணமும் வேணாம் சொந்தமும் வேணாம் போங்கடான்னு ஒரு தேசாந்திரியா வாழப் பழகிட்டேன்.கடந்த அஞ்சு வருஷமா சுற்று வட்டாரங்கள்ல சைக்கிள்ல காலி கண்ணாடி, பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில்கள் பொறுக்கி அதுல கிடைக்குற சொற்ப வருமானத்தில வாழ்ந்துட்டிருக்கேன். ஆனா நினைத்ததைச் சாதிச்சிட்டேன். அது போதும்!” என்றவர் சிறிய ஆசுவாசத்துக்குப் பிறகு தொடர்ந்தார்.

“இன்னும் சில காலம் இருப்பேன். நான் இறந்த பிறகும் இதோ... `துரோகத்தை எதிர்த்து உழைப்பால் உயர்ந்தவன் சிலை’ என நான் வெச்ச சிலையைப் பார்க்குறவங்க சொல்லுவாங்க இல்லையா..? துறையூர் சிற்பிகிட்ட சொல்லி ஒரு லட்சம் கொடுத்து சிலை செஞ்சு வெச்சிருக்கேன். சும்மா இல்லை தம்பி!” என்று ஷாக் கொடுத்தார்.

‘`நல்லதம்பிக்குப் பெற்றோர், உடன் பிறந்தவங்க, மனைவி, குழந்தைகள் இருக்காங்க. ஆனால், 30 வருஷமா தனிமையில இங்கே வாழ்ந்துட்டிருக்காரு. என்ன வேலை கொடுத்தாலும் செய்வார். கூலி கேட்க மாட்டார். யாரிடமும் பேச மாட்டார்’’ என்கிறார்கள் அத்தனூர்பட்டி மக்கள்.

நாம் விடைபெற்றுக் கிளம்பும்போது சிலையைப் பார்த்தோம். ‘வேடிக்கை மனிதரைப்போலே வீழ்வேன் என நினைத்தாயோ?’ என நல்லதம்பியே பேசுவதைப்போலத் தோன்றியது நமக்கு!