விஜய் டிவி-யில் `பிக் பாஸ்’ என்னும் நிகழ்ச்சி நடந்துவருகிறது. ஐந்து சீசன்களைக் கடந்து, தற்போது 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கல்மஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் விக்ரமன் என்னும் போட்டியாளரை ஆதரித்து அனைவரும் வாக்களிக்க வேண்டுமென சில அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறிவருகின்றனர். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு கேட்க, சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கிறது.

யார் இந்த விக்ரமன்?
விக்ரமன் திரைப்படக் கலைஞராக, தொகுப்பாளராக இருந்தார். சில தொடர்களில் நடித்திருக்கிறார். பின்பு, சில பிரபல ஊடகங்களின் செய்திப் பிரிவிலும் தொகுப்பாளராக இருந்தவர். அவர், 2020-ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். பிறகு அந்தக் கட்சியில் அறியப்படும் முக்கியமான பேச்சாளராக வலம்வந்தவர். இந்த நிலையில்தான், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவரும் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்தச் சூழலில், `பிக் பாஸ்’ நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. போட்டியின் இறுதியில் மக்கள் அனைவரும் தாங்கள் யார் வெல்ல வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அவருக்கு வாக்களிக்க வேண்டும். இந்த நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விக்ரமனுக்கு வாக்களியுங்கள் என தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்தார். அதில், ``தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். `பிக் பாஸ்’ தேர்வுக்கான போட்டியில் விக்ரமனுக்கு வாக்களிப்போம்” என குறிப்பிட்டிருந்தார்.
இது பெரும் விவாதமானது. இது தொடர்பாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், நடிகையுமான வனிதா விஜயகுமாரும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் பலரும், `இது எப்படி ஆரோக்கியமான போட்டி ஆகும்?’, `விக்ரமன் வெற்றிக்குத் தகுதியான நபர்தான். ஆனால், திருமா வாக்கு கேட்டதன் மூலம், அவர் நியாயமாக விளையாடி, சமூக கருத்துகள் பேசி பெறும் வெற்றியில் கட்சி சாயம் பூசப்படும் நிலை ஏற்படுகிறது’, `விக்ரமன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருக்கும் ஒரு காரணத்துக்காக, அக்கட்சியின் தலைவர் ஓட்டு போடச் சொல்கிறாரா?’, `எப்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இதைச் செய்ய முடிந்தது?’ போன்ற பதிவுகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகிறார்கள்.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அளூர் ஷா நவாஸ், "நாடாளுமன்ற உறுப்பினரான ஒருவர் `பிக்பாஸ்’, போட்டியாளருக்கு வாக்கு கேட்கக் கூடாது என்று வரைமுறை இருக்கிறதா... விசிக தலைவர் எதைப் பேசினாலும் சர்ச்சை செய்யவேண்டுமென உள்நோக்கத்துடன் பேசுகிறார்கள். ஓர் அரசியல் கட்சித் தலைவர் எப்படி ஒரு நிகழ்ச்சி பற்றி கருத்து சொல்லலாம் எனக் கேள்வி எழுப்பினால், அதை நடத்துவது ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்பதைப் பார்க்க தவற வேண்டாம் என்பதே எங்களின் கருத்து.

அதேபோல், அரசியல் கட்சியிலிருந்த ஒருத்தர் அதில் பங்கேற்கும்போதே அது அரசியல் ஆகிவிட்டது. பிறகு அதை அரசியலுக்கு அப்பாற்பட்டு எப்படிப் பார்க்க முடியும். அவர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன் கருத்தியலை நிலைநிறுத்த அவர் முயற்சி செய்திருப்பதைப் பாராட்ட வேண்டும். வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பார்த்த மக்களுக்கு நல்ல கருத்து சொல்லும் ஊடகமாக நிகழ்ச்சியை மடைமாற்றம் செய்திருக்கிறார். அப்படி இருக்கும் சூழலில் தலைவர் ஒருவர் தன் கருத்தைச் சொல்லத்தான் செய்வார்.
ஒருவேளை இதில் அரசியல் தலைவர்கள் கருத்து சொல்லக் கூடாது என்கிறீர்களா... அப்படிப் பார்த்தால் ஒரு காலத்தில் திராவிட கருத்துகள் தமிழ் சினிமாக்களில் நுழைந்து பல கருத்துகளை சினிமா வழியாகப் பேசியதைக் கேள்வி கேட்கும் விதமாக இது மாற்றிவிடும். அவர் எந்தக் கருத்தையும் பேசாமல் ஒரு பங்கேற்பாளராக மட்டுமே இருந்திருந்தால், யாரும் அவரை வெளியிலிருந்து ஆதரிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், அவர் தன்னை வெளிப்படுத்திய விதம், பேசிய கருத்துகள்தான் எங்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைப் பெற்றிருக்கிறது" என்றார்.

''அறம் வெல்லும்'' எனக்கூறி விக்ரமனுக்கு திருமாவளவன் ஓட்டு போடச் சொல்வதெல்லாம் மிகையான செயல் எனச் சிலர் விமர்சித்துவருகின்றனர். ஆனால், ஒரு கட்சியின் தலைவராக திருமாவளவன் விக்ரமனுக்கு ஆதரவு தருவதை எப்படிப் பார்ப்பது எனச் சில அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்,
``திருமாவளவன் போன்ற தலைவர் இதை ஏன் கையிலெடுக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. சில சாதிய பின்புலம் கொண்ட கட்சியினர் விக்ரமன் வெல்லக் கூடாது என வெளிப்படையாகப் பதிவுகளைப் போட்டுவந்தனர். ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக விக்ரமன் பேசுவதைச் சகித்துக்கொள்ள முடியாத சிலர் கண்மூடித்தனமாக அவரை எதிர்க்கிறார்கள். எனவே, அப்படியான அழுத்தம் விக்ரமன் மீது திணிக்கப்படுவதால் அவரை ஆதரிக்க களத்தில் இறங்கினார் திருமாவளவன். இது சரியா... தவறா... என்பதைத் தாண்டி, மக்கள் ஒடுக்கப்படும்போது, அங்கு அவர்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன் என்பதே திருமாவளவனின் இந்தச் செயல் விளக்குகிறது.

சமூக வலைதளத்தில் தவறான கருத்து கூறுகிறார் என்பதற்காக, மருத்துவ சங்கம் ஒரு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இல்லை. சமூகவலைதளம்தானே என்று விடுவதில்லை. அதன் சாராம்சம் தவறான ஒரு கருத்தும் பரவக் கூடாது என்பதே. மக்கள் பலர் பார்க்கும் ஒரு தளத்தில் கருத்தியலைப் பேசிய ஒருவன் வெற்றியின் படியில் இருக்கும்போது, அவரைத் தோற்கடிக்க பல சக்திகள் தவறான கருத்தை முன்வைப்பதால், விக்ரமன் ஆதரிக்கப்படுகிறார். மேலும், `பிக் பாஸ்’ வீட்டில் சக போட்டியாளர்கள் தவறான வார்த்தைப் பேசாமல் இருப்பதை உறுதிசெய்தார் விக்ரமன்.

அரசியல் கருத்தை ஒவ்வொரு இடத்திலும் பேசியது, குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது என விக்ரமனின் செயலை அரசியல் தவிர்த்து பார்க்க முடியாது. தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி சமூகத்தில் பின்தங்கியவர்களுக்காகப் பேசினார். அதில் 'மலம் அள்ளும் தொழிலாளர்களின்' வலியைப் பேசியது மிக முக்கியமானது. சமீபத்தில் ''தமிழ்நாடு நாள்'' குறித்து அவர் பேசிய கருத்துகள் என தனக்குக் கிடைத்த மேடையைச் சரியாக பயன்படுத்தியதைப் பாராட்டியே தன் ஆதரவை திருமாவளவன் வெளிப்படுத்தினார்" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இந்த விவகாரத்தில், உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்க மக்களே....