அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஒடிசாவில் தொடரும் ரஷ்யர்கள் மரணம்... பின்னணியில் புதின்?!

புதின்
பிரீமியம் ஸ்டோரி
News
புதின்

`நான் அதிபர் புதினுக்கும், ரஷ்ய இறையாண்மைக்கும் எப்போதும் ஆதரவாக இருப்பேன்’’ என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் பவெல்.

ஒடிசா மாநிலத்தில், இரண்டு வாரங்களுக்குள் மூன்று ரஷ்யர்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. என்ன நடந்தது?

ஜனவரி 3 அன்று, வங்கதேசத்திலிருந்து மும்பை செல்லும் கப்பல் ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக ஒடிசாவிலுள்ள பாரதீப் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தது. அதிகாலை 4:30 மணியளவில் அந்தக் கப்பலின் தலைமைப் பொறியாளரான ரஷ்யாவைச் சேர்ந்த மில்யாகோவ் செர்கேய் இறந்துகிடந்தது தெரியவந்தது. 51 வயதான அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என ஒடிசா காவல்துறை தெரிவித்திருக்கிறது. உடற்கூறாய்வுக்கு அவரது உடலையும் அனுப்பிவைத்திருக்கிறது. செர்கேய், 15 நாள்களுக்குள்ளாக ஒடிசாவில் மரணித்த மூன்றாவது ரஷ்யர் என்பதால், ஐரோப்பிய மீடியாக்களின் மொத்த கவனமும் ஒடிசா மாநிலத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது.

பவெல், விளாடிமிர் பிடனோவ்
பவெல், விளாடிமிர் பிடனோவ்

முன்னதாக, டிசம்பர் மாத மத்தியில் பாரம்பர்ய சுற்றுலாவுக்காக ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று பேர் ஒடிசாவிலுள்ள ராயகடா பகுதிக்கு வந்திருந்தனர். அவர்களில் ஒருவரான விளாடிமிர் பிடனோவ் டிசம்பர் 22 அன்று, தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இறந்துகிடந்தார். அதிக அளவில் ஒயின் எடுத்துக்கொண்டதால், மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. பிடனோவ் இறந்த இரண்டாவது நாளில் அவரின் நண்பரான பவெல் ஆன்டோவ், அதே ஹோட்டலின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார். ரஷ்யாவின் முக்கியத் தொழிலதிபரும், விளாடிமிர் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினருமான பவெல் உயிரிழந்த செய்தி பெரும் விவாதமானது.

உக்ரைன் போர் தொடங்கிய சமயத்தில், கீவ் நகர்மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருந்தபோது பவெல் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், ‘இதை பயங்கரவாதம் என்றுதான் அழைக்க வேண்டும்’ என்று பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்த ஸ்டேட்டஸின் ஸ்கிரீன் ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ, பதறியடித்து, ``நான் அதிபர் புதினுக்கும், ரஷ்ய இறையாண்மைக்கும் எப்போதும் ஆதரவாக இருப்பேன்’’ என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் பவெல். ``புதினின் போர் நடவடிக்கைகளை பவெல் விமர்சித்ததால், அவர் கொல்லப்பட்டிருக்கலாம்’’ என்று சில சர்வதேச மீடியாக்கள் சந்தேகங்களைக் கிளப்பின.

ஒடிசாவில் தொடரும் ரஷ்யர்கள் மரணம்... பின்னணியில் புதின்?!

மேலும், மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த பவெலின் உடம்பில் எந்தவொரு ரத்தக்காயமும் இல்லாதது சந்தேகங்களை வலுப்படுத்தியது. ஒடிசா காவல்துறையினரோ, ``பவெலின் உடம்பில் உள்காயங்கள் இருக்கின்றன. சந்தேகப்படும்படி எந்தவொரு விஷயமும் இந்த மரணத்தில் இல்லை’’ என்றனர். கடந்த சில ஆண்டுகளுக்குள்ளாக ரஷ்ய அதிபர் புதினை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விமர்சித்த சுமார் எட்டுப் பேர் உயரமான இடங்களிலிருந்து விழுந்து மரணமடைந் திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

``அஜிமா நிறுவன இயக்குநர் க்ரிகோரி, அவரது வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டிருந்தபோது பால்கனியிலிருந்து விழுந்து உயிரிழந்தார். ரஷ்ய ரியல் எஸ்டேட் அதிபர் டிமிட்ரி, மாஸ்கோ விமான நிறுவனத்தின் தலைவராக இருந்த அனடோலி ஆகியோர் படிக்கட்டுகளிலிருந்து விழுந்து உயிரிழந்தனர். ரஷ்யாவின் தேசிய எண்ணெய் நிறுவனத் தலைவர் ரவில் மகனோவ் (Ravil Maganov), மாடியிலிருக்கும் ஜன்னல் வழியாக விழுந்து உயிரிழந்தார். இவர்கள் அனைவருக்குமே ரஷ்ய அதிபர் புதினுடன் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது’’ என்கின்றன ஐரோப்பிய ஊடகங்கள்.

அந்த வகையில், பவெல் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்திருப்பது சந்தேகங்களைக் கிளப்புகிறது. இந்த மரணங்களின் பின்னணியிலிருக்கும் மர்மங்களை வெளிக்கொண்டுவரவேண்டிய கடமை ஒடிசா காவல்துறைக்கு இருக்கிறது.