அலசல்
Published:Updated:

அஸ்திவாரம் இல்லாத சுவர்கள்... மனசாட்சி இல்லாத மனிதர்கள்... அலட்சியத்துக்கு பலியான மூன்று உயிர்கள்!

நெல்லை
பிரீமியம் ஸ்டோரி
News
நெல்லை

கொரோனா ஊரடங்கால் ஓராண்டாக மூடப்பட்டிருந்த பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பரிசோதித்து, பராமரிக்க வேண்டும் என்கிற அரசு உத்தரவிட்டிருந்தது.

டிசம்பர் 17-ம் தேதி காலை 11:30 மணி இருக்கும்... தலையில் இடி விழுந்ததுபோல வந்த அந்த துயரச் செய்தியைக் கேட்டு தமிழகமே துடிதுடித்துப்போனது. நெல்லை டவுனில் செயல்பட்டுவரும் சாஃப்டர் (அரசு உதவி பெறும்) மேல்நிலைப் பள்ளியில் காலை 10:50 மணிக்கு இடைவேளைவிட்டபோது, கழிவறைச் சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்கள். காயமடைந்த நான்கு மாணவர்கள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது புன்னகையோடு கையசைத்துவிட்டுப்போன தங்கள் குழந்தைகளை, சில மணி நேரத்திலேயே ரத்தச் சகதியில் பிணமாகப் பார்ப்போம் என்று கனவிலும் நினைத்திராத உறவுகளின் கதறல், மொத்தத் தமிழகத்தையும் கண்ணீரில் மூழ்கச் செய்திருக்கிறது!

அன்பழகன், சதீஷ், விஸ்வரஞ்சன்
அன்பழகன், சதீஷ், விஸ்வரஞ்சன்

‘‘புதுசா கட்டுன பாத்ரூமைப் பூட்டியே வெச்சுருக்காங்க!”

சம்பவம் பற்றித் தகவல் வந்தவுடனேயே அந்தப் பள்ளிக்கு விரைந்தோம். பெற்றோர்கள், சக மாணவர்களின் கதறலால் அந்தப் பகுதியே துயர பூமியாகக் காட்சியளித்தது. பிஞ்சுக் குழந்தைகள் சிலர் என்னவென்று புரியாமல் மலங்க மலங்க விழித்தபடியும், அழுதபடியும் இருந்தார்கள். அதேசமயம், ‘‘சம்பவம் நடந்ததும், இந்த விவகாரம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்று பள்ளி நிர்வாகம் பதறியதே தவிர, இடிபாடுகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க ஆர்வம்காட்டவில்லை’’ என்று குற்றம்சாட்டினார்கள் மாணவர்கள்.

‘‘எங்க பள்ளிக்கூடத்துல கழிவறை இடம் பற்றாக்குறையாத்தான் இருக்குது. புதுசா கட்டுன பாத்ரூமையும் இன்னும் திறக்காம, பூட்டியே வெச்சுருக்காங்க. அதனால, இடைவேளை விட்டதும் முண்டியடிச்சு ஓடினாத்தான் சீக்கிரம் கிளாஸுக்குத் திரும்பி வர முடியும். அன்னிக்கும் அப்படித்தான் ஓடிப்போனோம். கழிவறை வாசலுக்கு முன்னால மறைப்புக்காகச் சுவர் கட்டி வெச்சுருக்காங்க. அந்தச் சுவருக்கு மறுபக்கத்துல கொஞ்சம் பேர் நின்னுக்கிட்டிருந்தாங்க. கொஞ்ச நாளாவே அந்தச் சுவர் ஆடிக்கிட்டிருந்துச்சு. அது திடீர்னு சரிஞ்சு விழுந்ததும், மறுபக்கத்துல இருந்தவங்க உள்ளே சிக்கிக்கிட்டாங்க. 108-க்கு போன் பண்ணி, ஆம்புலன்ஸ் வந்த பின்னாடிதான் ரெண்டு பேரு செத்துப்போனது தெரிஞ்சுது. அஞ்சு பேர் காயத்துல துடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அதுக்குள்ள தீயணைப்புத் துறையும் வந்து எல்லாரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினாங்க. அங்க போயி ஒரு மாணவன் இறந்துட்டான்’’ என்றார்கள் அச்சம் விலகாமல்!

அஸ்திவாரம் இல்லாத சுவர்கள்... மனசாட்சி இல்லாத மனிதர்கள்... அலட்சியத்துக்கு பலியான மூன்று உயிர்கள்!

இந்தக் களேபரத்தில் உயிரிழந்த குழந்தை யார் என்பது தெரியாததால் பதறிய பெற்றோர் பலரும் தங்கள் மகனைப் பரிதவிப்புடன் தேடிக்கொண்டிருந்தார்கள். சில மாணவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டதால், பதைபதைத்த பெற்றோர் பள்ளி வளாகத்தில், “ஐயய்யோ... என் சாமிக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாது” என்று அரற்றியபடி வேதனையுடன் பள்ளி வளாகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

‘‘குலசாமியை பறிகொடுத்துட்டேனே!’’

அன்றைய தினம் மதியம் நெல்லை அரசு மருத்துவமனை பிணவறையில் உயிரிழந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, பெற்றோருக்குத் தகவல் சென்ற நொடியில் அங்கு கதறிக்கொண்டிருந்தவர்கள் பலரும் மண்ணைவாரித் தூற்றிப்போட்டு ஓலமிடத் தொடங்கினார்கள். சிலர் மயக்கமடைந்து விழுந்தார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் விஸ்வரஞ்சனின் தாய் எழில், தந்தை தினகரன் இருவரும் கதறியடியே பிணவறைக்குள் சென்றவர்கள், இறந்தது தங்கள் மகன்தான் என்று தெரிந்ததுமே நிலைகுலைந்துபோனார்கள். அருகிலிருந்த சிலர் அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்த முயன்றனர். இறந்த மாணவனின் தாய் எழில், ‘‘ஐயோ... சைக்கிள்ல ஸ்கூலுக்குப் போறேன்னு சொன்ன பையனை, தனியா அனுப்ப பயந்துக்கிட்டு நானே தினமும் பள்ளிக்கூடத்துல கொண்டுபோய் விட்டுட்டுக் கூட்டிட்டு வந்தேன். காய்ச்சல், தலைவலினுகூட எம்புள்ள படுத்ததில்லையே... ‘சாயங்காலம் சீக்கிரமா வந்து கூட்டிட்டுப் போங்கம்மா’னு காலையில சொன்ன பையனை, இங்க கொண்டுவந்து படுக்கவெச்சுருக்கீங்களே... என் குலசாமியைப் பறிகொடுத்துட்டேனே!’’ என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினார். இன்னொரு பக்கம் விஸ்வரஞ்சனின் தாத்தா வெள்ளைச்சாமி, ‘‘என் பேரனைக் கண்ணுல காட்டுங்கய்யா...’’ என்று அழுதுகொண்டிருந்தார்.

‘‘இன்னிக்கு லீவு போடுதேன்னு சொன்னானே!’’

உயிரிழந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் அன்பழகனின் தாய் மாரியம்மாள். தந்தை கார்த்திக், லாரி டிரைவராக இருக்கிறார். தூத்துக்குடிக்கு லாரி ஓட்டிச் சென்றபோது மகன் இறந்த தகவல் கிடைக்க... அழுதபடி ஓடிவந்தார் கார்த்திக். அன்பழகன் உடலைப் பார்த்த மாரியம்மாவால் தன் மகன் உயிரிழந்ததை நம்ப முடியவில்லை... ‘‘டேய் மூத்தவனே அன்பு... வீடு வீடா இட்லி மாவு வித்து, உன்னைப் படிக்க வெச்சேனே... ‘நான் படிச்சு முடிச்சதும் நல்ல வேலைக்குப் போயி உங்களை ராணி மாதிரி பார்த்துக்குவேன்’னு சொன்னியே தங்கம்... இப்படி உன்னைப் பார்க்கவா என்னை உயிரோட விட்டு வெச்சான் அந்த சாமி?” என்று பெருங்குரலெழுத்து அழுதவர் நம்மைப் பார்த்து, “அவனுக்குக் காய்ச்சலா இருந்துச்சுனு ஒரு வாரமா ஸ்கூலுக்கு அனுப்பலை. இப்ப கொஞ்சம் சரியானதால, நான்தான் ஸ்கூலுக்குப் போகச் சொன்னேன். ‘இன்னிக்கு ஒருநாள் மட்டும் லீவு போடுதேன்’னு எம்புள்ள காலையிலேயே சொன்னான். நான்தான் கேட்கலை... நானே என் புள்ள சாவுக்குக் காரணமாகிட்டேனே...’’ என்று கதறியவரை நம்மால் தேற்ற முடியவில்லை.

அஸ்திவாரம் இல்லாத சுவர்கள்... மனசாட்சி இல்லாத மனிதர்கள்... அலட்சியத்துக்கு பலியான மூன்று உயிர்கள்!

‘‘கஷ்டப்பட்டு படிக்கவெச்சது இதுக்குத்தானா?’’

பலியான ஆறாம் வகுப்பு மாணவன் சுதீஷ், சுத்தமல்லி அருகேயுள்ள பழவூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன். அவனின் அக்கா, அண்ணன் இருவரும் அருகிலுள்ள பள்ளியில் படிக்கும் நிலையில், சுதீஷை மட்டும் சாஃப்டர் பள்ளியில் சேர்த்திருந்தார்கள். அவரின் தந்தை ராமச்சந்திரன் டெய்லராக இருக்கிறார். தாய் முத்துமாலை, நூறு நாள் வேலைத்திட்டப் பணிக்குச் செல்பவர். சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை சுதீஷின் தலை சிதைந்துபோயிருந்தது. படிக்க வந்த இடத்தில் தனக்கு ஏன் இப்படி நேர்ந்தது என்றுகூடத் தெரியாமல் வலியிலும் வேதனையிலும் கதறியபடி உயிரைவிட்டிருக்கிறது அந்தக் குழந்தை.

பிணவறைக்குள் முதலில் சென்று பார்த்துவிட்டு, ‘என் மகன் இல்லை’ என்று சொன்ன ராமச்சந்திரன், சந்தேகத்துடன் மறுபடியும் உள்ளே சென்று பார்த்துவிட்டு தன் மகன்தான் என்பதை உறுதிசெய்ததும் நெஞ்சைப் பிடித்தபடி தரையில் அமர்ந்துவிட்டார். ‘‘இவன் நல்லா படிப்பான். அதனாலதான் தூரமா இருந்தாலும் பரவாயில்லைனு அந்தப் பள்ளிக்கூடத்துல சேர்த்தேன். நான் ஸ்கூலுக்குப் போறப்பல்லாம் வாத்தியாருங்க, ‘உங்க மகன் நல்லா படிக்கான். இதே மாதிரி படிச்சா நல்லா வருவான்’னு சொல்லுவாங்க. கேட்குறதுக்குப் பெருமையா இருக்கும். அதுக்காகவே அடிக்கடி பள்ளிக்கூடத்துக்குப் போவேன். இனிமே அவனைப் பத்தி யாருட்ட போயி கேட்பேன்’’ என்று வெடித்து அழுதார்.

கைதுசெய்யப்பட பள்ளி நிர்வாகி!

சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு காசோலை வழங்குவதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன், சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் சென்றபோது, அவர்கள் வாங்க மறுத்து போராட்டம் நடத்தினார்கள். சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்திய பிறகே காசோலையையும் உடல்களையும் வாங்கச் சம்மதித்தார்கள்.

ஞானசெல்வி
ஞானசெல்வி
விஷ்ணு
விஷ்ணு

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ‘‘சுவர் இடிந்த சம்பவத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்ட பள்ளித் தாளாளர் சகாய செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞானசெல்வி, கட்டட ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்றார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறுகையில், ‘‘தரமற்ற கட்டுமானமே பள்ளியின் சுவர் இடிந்ததற்குக் காரணம். அஸ்திவாரமே இல்லாமல் சுவர் கட்டப்பட்டதாலேயே அது இடிந்து விழுந்திருக்கிறது. தொடர் விசாரணை நடத்திவருகிறோம். மறு உத்தரவு வரும்வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்த மாணவர்களுக்குத் தரமான முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்களோ, “கொரோனா ஊரடங்கால் ஓராண்டாக மூடப்பட்டிருந்த பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பரிசோதித்து, பராமரிக்க வேண்டும் என்கிற அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல பள்ளிகள் அரசு உத்தரவைக் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. இடிந்து விழுந்த அந்தச் சுவர் ஆடுகிறது என்று ஏற்கெனவே தகவல் தெரிந்தும், கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள் பள்ளி நிர்வாகிகள். அந்த அலட்சியத்தால்தான் இப்போது மூன்று உயிர்கள் அநியாயமாக பலியாகியிருக்கின்றன” என்று கொந்தளித்தார்கள்.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பரிசோதிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக் கிறது. பல்வேறு மாவட்டங்களிலும் உறுதியற்ற பள்ளிக் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக் கிறது. இதையெல்லாம் செய்வதற்கு மூன்று உயிர்கள் பலியாக வேண்டுமா?