
தொகுப்பு: சமையற்கலை நிபுணர் சந்திரலேகா ராமமூர்த்தி
மோர்க்குழம்பு தயாரித்து அடுப்பிலிருந்து இறக்கும்போது உப்பு சேர்த்தால் போதுமானது. முன்னதாகவே உப்பைச் சேர்த்தால், மோர்க்குழம்பு நீர்த்துப் போய்விடும், சுவையாகவும் இருக்காது.
பூரி மிருதுவாகவும் நன்கு உப்பலாகவும் வருவதற்கு மாவை சிறிது எண்ணெய் விட்டு நன்கு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். 10 நிமிடங்களுக்கு ஃபிரிட்ஜில் மாவை வைத்திருந்து எடுத்து பூரி செய்தால், பூரி நன்கு உப்பலாகவும், மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் குழம்பு செய்யும்போது, கொழகொழப்புத்தன்மையைத் தவிர்க்க, நறுக்கிய வெண்டைக்காயில் சிறிதளவு மாங்காய்த்தூள் ( ஆம்சூர் பவுடர்) தூவி, சிறிதளவு எண்ணெய்விட்டு வதக்கி, பிறகு சமைக்கலாம். மாங்காய்த்தூள் இல்லாதவர்கள், சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து வதக்கலாம்.
‘மிக்ஸ்டு வெஜிடபிள்’ பொரியல் தயாரிக்கும்போதோ, பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளைத் தனியாக பொரியல் செய்யும்போதோ உப்பு அதிகமாகிவிட்டால், ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவை வாணலியில் வறுத்து, பொரியல் மீது தூவி, ஒரு கிளறு கிளறி இறக்கினால், உப்பு குறைந்துவிடும். சுவையும் நன்றாக இருக்கும்.
கேரட் அல்வா அல்லது வறுத்த கோதுமை மாவு அல்வா செய்யும்போது எந்த அளவு மாவு சேர்க்கிறீர்களோ அதற்கேற்றாற்போல் நெய் சேர்த்து, வறுத்து அதன் பிறகு அதில் பால் அல்லது தண்ணீர் சேர்த்துக் கிளறவும். சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்துச் செய்தால் ஹெல்த்தியாகவும், சுவையாகவும் இருக்கும்.