
- தலைவர், உறுப்பினர் பதவிக்கு போட்டாபோட்டி...
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 2019, ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட அறங்காவலர்குழுவின் பதவிக்காலம் 2021, ஜூன் 21-ம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. ‘அக்கட’ பூமியான ஆந்திராவின் தேர்தல் அரசியலுக்குச் சற்றும் குறைவில்லாமல் நடக்கும் அறங்காவலர்குழுத் தேர்வுக்கான போட்டியில் அதிகாரப் பின்னணி, சமூகப் பின்னணி, பணபலம் இருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. என்னதான் நடக்கிறது திருப்பதியில்?

நாட்டிலேயே மிகப்பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக்கொண்டது ஆந்திராவின் திருமலை - திருப்பதி தேவஸ்தானம். ஏழுமலையானின் இந்தக் கோயிலை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்படும் அறங்காவலர்குழு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கலைக்கப்பட்டு தலைவரும், உறுப்பினர்களும் புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள். இந்தநிலையில, கடந்த 2019, ஜூன் மாதம் அறங்காவலர்குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட ஒய்.வி.சுப்பா ரெட்டியின் பதவிக்காலம் ஜூன் 21-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுப்பா ரெட்டியே அந்தப் பதவியில் நீடிக்கப்போகிறார் என்று சுழன்றடிக்கும் தகவல் ஆந்திர அரசியலைப் பரபரப்பாக்கியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் உள்விவரங்களை அறிந்த சிலர், இந்த அரசியல் குறித்து நம்மிடம் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்...
“சுப்பா ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சித்தப்பா முறை. அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் எனச் செல்வாக்குமிக்க நபராகவும் வலம்வருகிறார். இதனால், சுப்பா ரெட்டியே அறங்காவலர்குழுத் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று நினைக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இந்தநிலையில்தான், ஜூன் 23-ம் தேதி மாலை புதிய அரசாணை ஒன்றை ஆந்திர அரசு வெளியிட்டது. அதில், ‘தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர்குழு நியமிக்கப்படும்வரை, அதன் நிர்வாகப் பொறுப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. சிறப்புக்குழுவின் தலைவராக, செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டியும், ஒருங்கிணைப்பாளராகக் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டியும் செயல்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இருவரும் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், கொரோனா விதிமுறைகளைக் காரணம் காட்டி புதிய அறங்காவலர்குழுவை அமைக்க ஆறு மாத அவகாசம் வழங்கியிருக்கிறது ஆந்திர அரசு. இவ்வளவு கால இடைவெளி எதற்கு என்பதுதான் பலரது கேள்வியே. ஏனெனில், முன்னாள் தலைவரான சுப்பா ரெட்டி மட்டுமன்றி, தற்போது சிறப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தர்மா ரெட்டியும் ஜெகனின் உறவினர்தான். சுப்பா ரெட்டிக்கு மீண்டும் அறங்காவலர்குழுத் தலைவர் பதவி வழங்கப்படவில்லையென்றால், அவரை ராஜ்ய சபா உறுப்பினர் அல்லது சட்ட மேலவை (எம்.எல்.சி) உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெறச் செய்து, அமைச்சர் பதவி அளிக்கவும் திட்டம் வைத்திருக்கிறார் ஜெகன். இதனால், அறங்காவலர்குழுத் தலைவர் பதவியைப் பிடிக்க ஆளுங்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் தீவிரமாக லாபி செய்துவருகிறார்கள்.

நெல்லூர் முன்னாள் எம்.பி மேகபதி ராஜமோகன் ரெட்டி, திருப்பதி சிட்டிங் எம்.எல்.ஏ கருணாகர் ரெட்டி ஆகியோர் இந்த ரேஸில் முன்னணியில் இருக்கிறார்கள். மேகபதி ராஜமோகன் ரெட்டியின் மகன் கௌதம் ரெட்டி, ஆந்திராவின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர். மகனின் சிபாரிசு மூலமாக ராஜமோகன் ரெட்டி பதவிக்குக் காய்நகர்த்துகிறார். கருணாகர் ரெட்டி ஏற்கெனவே அறங்காவலர்குழுத் தலைவர் பதவியில் இருந்தவர்; தேவஸ்தானத்தின் உள் அரசியல் அனைத்தும் அறிந்தவர். அந்த வகையில் இவரும் தலைவர் பதவியைப் பிடிக்க முதல்வர் அலுவலகம் வரை முட்டிமோதுகிறார். இவர்களைத் தவிர, ஜெகனின் குடும்பத்துக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரும் அறங்காவலர்குழுத் தலைவர் பதவியைப் பிடிக்க குடும்ப உறவுகள் மூலம் தூதுவிட்டிருக்கிறார்” என்றவர்கள், இந்த நியமனத்தில் நிலவும் பாரபட்சம் பற்றியும் சொன்னார்கள்.
“நாட்டிலேயே மிகப்பெரிய தேவஸ்தானமான திருப்பதி கோயில் நிர்வாகத்தால் இலவச அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ, கல்வி, சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நாடு முழுவதும் ஏராளமான சொத்துகள், நாட்டிலேயே அதிக வருவாய் கிடைக்கும் கோயில் எனப் பொருளாதாரரீதியாகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது திருப்பதி தேவஸ்தானம். எனவே, அறங்காவலர்குழுத் தலைவர் பதவிக்கு அரசியல் விருப்பு வெறுப்பு இல்லாத... ஏன் அரசியல் பின்னணியே இல்லாத, நேர்மையான நபரே நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான், நிர்வாகத்தைத் திறமையாகவும் ஊழல் இல்லாமலும் நடத்த முடியும். ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே அது நடப்பதில்லை. தற்போது ஜெகன் மோகனின் ஆட்சியிலும், அவர் சார்ந்துள்ள ரெட்டி சமூகத்தினர் மட்டுமே தலைவர் பதவியில் அமர முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

அதேபோல அறங்காவலர்குழு உறுப்பினர் நியமனங்களில் தெலங்கானா, தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நான்கு உறுப்பினர்களைக் கேட்டுப் பெற்றனர். தற்போதைய தி.மு.க அரசு ‘இது ஆன்மிகம் சார்ந்த விஷயம்’ என்று மெளனமாக இருந்துவிடாமல், கூடுதலாக உறுப்பினர் பதவிகளைக் கேட்டுப் பெற வேண்டும். ஏனெனில், இவர்கள் மூலமாகத்தான் திருப்பதிக்கு வரும் தமிழக பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும்” என்றார்கள் விரிவாக!
எல்லாம் அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்!