மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 36 - திருநெல்வேலி - வளமும் வாய்ப்பும்

திருநெல்வேலி
பிரீமியம் ஸ்டோரி
News
திருநெல்வேலி

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

திருநெல்வேலி என்றவுடன் எல்லோர் நினைவுக்கும் வருவது இருட்டுக்கடை அல்வாதான். “திருநெல்வேலி போறீங்களா... வரும்போது மறக்காம இருட்டுக்கடை அல்வா வாங்கிட்டு வாங்க” என்று கேட்காதவர்கள் தமிழ்நாட்டில் உண்டா... கூடவே உடன்குடி கருப்பட்டி, பத்தமடை பாய், கல்லிடைக்குறிச்சி அப்பளம், அம்மன்புரம் காரச்சேவு எனப் புகழ்பெற்ற விஷயங்களும் இங்கே உண்டு. அதுமட்டுமல்ல, சுதந்திரப் போராட்டம், அரசியல், சினிமா, இலக்கியம், வணிகம் என ஒவ்வொரு துறையிலும் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் இந்த மாவட்டத்தில் ஏராளம். பாரதியார், மாவீரன் பூலித்தேவன், ஒண்டிவீரன், தேவநேயப் பாவணர், வாஞ்சிநாதன், காயிதே மில்லத், வைகோ, வி.ஜி.பன்னீர்தாஸ், விசு, விவேக், பீட்டர் அல்போன்ஸ், செல்வரத்தினம், ஜான் பாண்டியன், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஹரி, விக்ரமன், அருண்பாண்டியன் எனப் பெரிய பட்டியலே உண்டு. 1906-ம் ஆண்டுவாக்கிலேயே, கப்பல் நிறுவனம் தொடங்கி, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்ததும் திருநெல்வேலி மாவட்டத்தில்தான்!

பிரபலங்களைப்போலவே இங்கே வளங்களுக்கும் பஞ்சமில்லை. கனிமவளம், நீர்வளம், நிலவளம், மனிதவளம் என எல்லாமும் இங்கே உண்டு. அவற்றைப் பயன்படுத்தி, கோடிகளில் வருமானம் ஈட்டும் நிறுவனங்களும் அதிகம் உண்டு. கனவு தமிழ்நாடு இயக்கத்தின் ட்ரில்லியன் டாலர் கனவை எட்டுவதில், திருநெல்வேலி முக்கியப் பங்கு வகிக்கும் என்றால் அது மிகையில்லை.

கனவு - 36 - திருநெல்வேலி - வளமும் வாய்ப்பும்

பாரத்நெட் (BharatNet)

உலக நாடுகளை இணைப்பது பாலங்கள் அல்ல. `ஆப்டிகல் ஃபைபர்’ கேபிள்கள்தான் (Optical Fiber Cables). உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள தரவு மையங்களை ஒருங்கிணைக்கும் பணியை இவை செய்கின்றன. கடலுக்கு அடியில் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு, பல்வேறு நாடுகளின் கணினிகள் இந்த ஆப்டிகல் ஃபைபர் கேபிளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இணைய நுகர்வோர் ஆகியோருக்கும், தரவு மையங்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுவதில் இதன் பங்கு மிக அதிகம். ஆகவேதான் 2015-ம் ஆண்டிலேயே மத்திய அரசு `பாரத்நெட்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டம், தமிழ்நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் வழியே மேம்பட்ட அலைவரிசையில் இணைக்க உதவுகிறது. இதற்காகத்தான் `தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்’ (Tamilnadu FiberNet Corportation - TANFINET) உருவாக்கப்பட்டது. சுருக்கமாக `தமிழ்நாடு ஃபைபர்நெட்’ (TANFINET) என்று அழைக்கலாம். இந்தத் திட்டத்தால் சுமார் 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 1 Gbps அலைக்கற்றை வழங்கப்படும். இவை தேவைக்கேற்ப மாற்றத்தக்க வகையில் இருக்கும்.

தமிழ்நெட் (TamilNet)

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சி, மாநகராட்சி, நகரப் பஞ்சாயத்துகளையும் இந்த அதிவேக அலைக்கற்றைக் கண்ணாடி இழை வலையமைப்பைக்கொண்டு இணைத்திட, தமிழ்நெட் திட்டம் உதவுகிறது. இதன் வழியே அரசின் சேவைகளையும், டிஜிட்டல் புரட்சியின் பயன்களையும் நகர்ப்புற மக்கள் எளிதாக அவரவர் வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்வார்கள். மேலும், இந்தத் திட்டம் பாரத்நெட் திட்டத்துடன் இணைக்கப்பட்டு மாநிலத்தில் `ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பு’ உருவாக்கப்படும். இது தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும் விரிவான வலையமைப்பாக இருக்கும்.

இந்தக் கட்டமைப்பால் கிராமப்புற, நகர்ப்புற மக்கள் அனைவரும் அதிவேக, மேம்பட்ட அலைக்கற்றை டிஜிட்டல் சேவைகளைப் பெற்றுக்கொள்வார்கள். இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்போது, ஏராளமான தரவு மையங்களுக்கான தேவையும் அதிகரிக்கும். உள்ளூரில் மட்டுமல்ல, உலக அளவிலும்கூட தரவு மையங்களுக்கான தேவை அதிகரித்தபடியேதான் இருக்கிறது. இந்தத் தேவையை நாம் பயன்படுத்திக்கொண்டால் பல்லாயிரம் கோடி வருமானத்தைப் பெற முடியும்.

Data Centre (தரவு மையம்)

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி, பெரும்பாய்ச்சலைக் கொண்டிருக்கிறது. கொரோனா போன்ற பெருந்தொற்றுகளால் ஏனைய துறைகள் பெரும் நட்டத்தைச் சந்தித்தபோதிலும், இந்தத் துறை மட்டும் அதையே வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிப் போய்க்கொண்டிருக்கிறது.

கனவு - 36 - திருநெல்வேலி - வளமும் வாய்ப்பும்

வங்கி, நிதி, மருத்துவம், கல்வி, உணவு, கனரகப் பொறியியல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல துறைகளில் தகவல் தொழில்நுட்பத்துறையின் தேவை அதிகரித்தும்வருகிறது. `ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (Artificial intelligence), `மெஷின் லேர்னிங்’ (Machine learning), `கிளவுடு கம்ப்யூட்டிங்’ (Cloud computing) எனப் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அவற்றின் தேவையை இன்னும் கூட்டியிருக்கின்றன. இதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகி, அவற்றுக்கான தரவு மையங்களையும் ஏராளமாக உருவாக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போதைய சூழலில் இணையப் பயன்பாடு என்பதும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதனால் தரவு மையங்களின் மின் நுகர்வு அதிகரித்து, நாம் புறக்கணிக்கவே முடியாத அளவுக்கு சூற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவருகிறோம். எப்படி?

இந்தியாவில் மின் தேவையை பூர்த்தி செய்ய, பெரும்பாலும் நிலக்கரி அனல்மின் நிலையத்தைச் சார்ந்தே இருக்கிறோம். இத்தகைய மையங்களிலிருந்து வெளியேறும் கார்பன், சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிப்பதாக இருக்கிறது. சூரிய மின்சக்தி, நீர் மின்சக்தி, காற்றாலைகளின் வழியே மின்சாரம் பெறப்பட்டாலும் அவை அதிகரித்துவரும் மின் தேவையை பூர்த்திசெய்யப் போதுமானதாக இல்லை. ஆனால், உலக அளவில் மின் தேவைக்கான எதிர்காலம் என்னவோ சூரிய மின்சக்தி, காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் மட்டுமே இருப்பதாகச் சுற்றுச்சூழலியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Green Data Centre (பசுமைத் தரவு மையம்)

2011-ம் ஆண்டு நிலவரப்படி, உலகில் கார்பன் வெளியேற்றத்தில் இரண்டு சதவிகிதம் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களால் நடக்கிறது என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கே தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் எனக் குறிப்பிடப்படுவது தரவு மையங்களைத்தான். அநேகமாக 2022 நிலவரப்படி அதன் சதவிகிதம் இன்னும் அதிகரித்திருக்கலாம். எனவேதான், புகழ்பெற்ற ஐடி நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், கூகுள், ஆரக்கிள் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் தங்களது தரவு மையங்களைப் பசுமைத் தரவு மையங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. மேலும், இதற்கான கொள்கைகள், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கிவருகின்றன.

கனவு - 36 - திருநெல்வேலி - வளமும் வாய்ப்பும்

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியால் செயல்படுவதே பசுமைத் தரவு மையம். உதாரணத்துக்கு, ஆட்டோமொபைல் துறையில் பிரபலமாக இருக்கும் வால்வோ கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தனது பசுமைத் தரவு மையத்தை ஏரிக்கு அடியில் நிறுவியுள்ளது. பொதுவாக தரவு மையங்கள் 24 x 7 மணி நேரமும் இயங்கிக்கொண்டே இருப்பவை. தடையில்லா மின்சாரம் அவற்றுக்குத் தேவை. இதனால், அத்தகைய மையங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களில் அதிக அளவில் வெப்பம் வெளியேறும் என்பதால், அவை வைக்கப்பட்டிருக்கும் அறைகள் அதிக குளிரூட்டப்பட்டிருக்கும். எனவே, தரவு மையங்களுக்கான மின் தேவை என்பது இன்னும் கூடுதலாகவே தேவைப்படும். இதைச் சரிசெய்ய அந்த கார் தயாரிப்பு நிறுவனம், தனது தரவுமையத்தில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியைக் கையாள்கிறது. ஏரியிலுள்ள நீரைப் பயன்படுத்தி, நீர் மின்சக்தியைக் கொண்டு பசுமைத் தரவு மையத்தைப் பராமரித்துவருகிறது. ஏரிக்கு அடியில் உள்ளதால் அந்த மையத்துக்கு அதிக குளிரூட்டல் தேவைப்படாது. இதனால், மின் தேவையும் குறைகிறது.

அதேபோல, பிரபல சோஷியல் மீடியா நிறுவனமான ஃபேஸ்புக், தனது தரவு மையத்தை ஸ்வீடனிலுள்ள பனிமலையில் நிறுவியிருப்பதும் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். இவை எல்லாமே அதிக குளிரூட்டல் அறைகளைத் தவிர்க்கும் பொருட்டே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இவையெல்லாம் வெவ்வேறு புதுப்பிக்கத்தக்க முறைகளின் சில உதாரணங்கள்தான். பசுமைத் தரவு மையங்களின் தேவை அதிகரித்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டவே, மேற்கண்ட சில உதாரணங்களைப் பார்த்தோம். உலக அளவில் பசுமைத் தரவு மையங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் முதற்கட்ட நடவடிக்கையாக, திருநெல்வேலி மாவட்டத்தில் குறைந்தது ஐந்து பசுமைத் தரவு மையங்களையாவது நிறுவ வேண்டும். இவற்றுக்கான மின் தேவையைக் காற்றாலைகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Wind Energy (காற்றாலை மின்சக்தி)

உலக அளவில் காற்றாலை மின் உற்பத்தியில், இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை மின் உற்பத்தி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில்தான் காற்றாலைகள் அதிகம் காணப்படுகின்றன. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி, கூடங்குளம், செட்டிக்குளம், கூத்தங்குழி, காவல்கிணறு, ஆரல்வாய்மொழி கணவாய் உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. காற்றாலைகளைப் பயன்படுத்தி (Wind Electricity) சுமார் 4,500 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆரல்வாய்மொழி கணவாய் பகுதியில் மட்டும் சுமார் 3,000 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தோராயமாக நாளொன்றுக்கு 1,000 மெகாவாட்டிலிருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது.

பொதுவாக, பசுமைத் தரவு மையங்களுக்கு 100-லிருந்து 150 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். திருநெல்வேலியில் சுமார் 10 லட்சம் சதுர அடியில் ஐந்திலிருந்து பத்து பசுமைத் தரவு மையங்களை அமைக்க வேண்டும். அதற்கு 1,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். இதைக் காற்றாலைகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்தப் பசுமைத் தரவு மையங்களால் ஆண்டுதோறும் தோராயமாக 10,000 கோடியிலிருந்து 25,000 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முடியும். இதனால், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, திருநெல்வேலி மாவட்ட மக்கள் பொருளாதார மேம்பாட்டையும் அடைந்து, அவர்களது வாழ்க்கைத்தரம் மேலும் உயரும்.

(இன்னும் காண்போம்)