
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

அனிமேஷன்... விஷுவல் எஃபெக்ட்ஸ்... கேமிங்... காமிக்ஸ்!
உலக அளவில் கொண்டாடப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களான `ஜுராசிக் பார்க்’, `அவதார்’, `ஸ்பைடர்மேன்’, `அயர்ன்மேன்’, `ஆன்ட்மேன்’, `தி ஹல்க்’, `தி அவென்ஜர்ஸ் எண்ட் கேம்’ போன்றவற்றில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றின் உச்சத்தைத் தொட்டிருப்பார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இப்படங்களின் உருவாக்கத்துக்குப் பல ஆயிரம் பேர் பணியாற்றினார்கள். அதேபோல இந்திய அளவில் கொண்டாடப்பட்ட `எந்திரன்’, `பாகுபலி’ போன்ற படங்களின் முதல், இரண்டாம் பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இத்தகைய படங்கள் பிரமாண்ட வெற்றியும் வசூல் வேட்டையும் நடத்தின. எல்லோராலும் வியந்து பார்க்கப்பட்ட அப்படியான காட்சிகளை, படக்குழு எப்படி உருவாக்கியது என்பதை வீடியோக்களாக வெளியிட்டபோது அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து அதுவரை அறிந்திராத பலரும் அதன் மகத்துவம் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
அதே போன்று, பல பெற்றோர்களை அச்சமடைய வைத்த ஓர் வீடியோ கேம் `பப்ஜி.’ இளையோர் மத்தியில் படுவேகமாகப் பரவிய `பப்ஜி கேம்’ மோகம், நாளடைவில் சிலரின் உயிரைப் பறித்தது; பலரைப் பல்வேறு உடல் உபாதைகளுக்குள் தள்ளியது. ஒன்றிய அரசு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீடியோ கேமை தடைசெய்த பிறகுதான் பல குடும்பங்களில் ‘அப்பாடா...’ எனப் பெருமூச்சு எழுந்தது. இது ஒரு சாம்பிள்தான். உடலுக்கும் உள்ளத்துக்கும் கேடு விளைவிக்கும் பொருள்களைத் தவிர்ப்பதுபோல, சில கேம்ஸ்களையும் இளைஞர்கள் தவிர்ப்பது நல்லதுதான். ஆனால், உடலுக்கும் மனதுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தாத, சிந்தனைத்திறனைத் தூண்டக்கூடிய விளையாட்டுகளை இணையத்தில் விளையாடுவது தவறில்லை. அளவுக்கு மீறினால் எதுவும் ஆபத்துதான். அது விளையாட்டுக்கும் பொருந்தும்.

80-ஸ் கிட்ஸ்களிடையே தமிழில் வெளியான `ராணி காமிக்ஸ்’, `லயன் முத்து காமிக்ஸ்’ நன்கு பிரபலமாக இருந்தவை. இன்று ஆங்கிலத்தில் ஏராளமான காமிக்ஸ் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. 2கே கிட்ஸ்களால் விரும்பி வாசிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகும் காமிக்ஸ் புத்தகங்களே அதற்கு ஓர் உதாரணம். மேற்கண்ட அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் போன்ற ஒவ்வொன்றும் இப்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துவரும் துறைகளாக மாறியிருக்கின்றன. இந்தத் துறைகளை ஒன்றாகச் சேர்த்து `AVGC’ (Animation, Visual effects, Gaming and Comics) என்று அழைக்கிறார்கள். அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் ஆகியவற்றின் சுருக்கமே `ஏவிஜிசி’ (AVGC).
உலக அளவில், ஆண்டொன்றுக்கு 21 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏவிஜிசி துறையில் தற்போது வர்த்தகம் நடந்துவருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் இன்னும் வர்த்தகம் அதிகரிக்கும். அப்போது நடக்கும் வர்த்தகத்திலிருந்து சுமார் ஐந்து சதவிகித அளவுக்கு வாய்ப்புகளைக் கைப்பற்றினால், 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். அதேபோல, சுமார் 1,60,000 புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என இந்தத் துறை வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமக்கு முன்னால் தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ஏவிஜிசி துறையை மேம்படுத்த முன்னரே களமிறங்கிவிட்டன. தெலங்கானா மாநிலம் ஏவிஜிசி துறையை வளர்த்தெடுக்க 16 லட்சம் சதுர அடிக்கு இடத்தை ஒதுக்கி, அனைத்து வசதிகளுடன்கூடிய ஏவிஜிசி டவரை (AVGC Tower) உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தோராயமாக 1,200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டுடன் 30,000-க்கும் மேற்பட்டோருக்கு இதன் வழியே வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் `ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி’, சென்னையில் `பிரசாத் ஸ்டூடியோ’, இன்னும் சில தனியார் நிறுவனங்களும் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பல சேவைகளை அளித்தாலும் இதற்கென தனியாகப் பெரிய அளவில் சென்டர்களை உருவாக்கவில்லை. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் 50,000 சதுர அடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைந்துள்ளது. ஆனால், இது தற்போது பெரிய அளவில் செயல்பாடின்றி இருக்கிறது. இந்த ஐடி பார்க்கில் சில திருத்தங்களைச் செய்து, அனைத்து வசதிகளுடன்கூடிய `திருநெல்வேலி ஏவிஜிசி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ (TNveli AVGC Centre of Excellence) உருவாக்க வேண்டும். கற்பித்தல், ஆராய்ச்சி, சேவை என மூன்று பிரிவுகளின் கீழ் அவை செயல்பட வேண்டும். இந்த ஏவிஜிசி மையத்தில் Mastering Suite, Body Scanner, Performance Capture Studio, Computer Graphics Studio போன்ற அந்தந்தத் துறைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். கர்நாடக மாநிலம், பெங்களுரிலுள்ள `அபாய் ஏவிஜிசி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ (Abai AVGC Centre of Excellence)-ஐ மாதிரியாகக்கொண்டு அமைப்பது அவசியம்.

இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரும் பெயர்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். டிராட்ஸ்கி மருது, கமலக்கண்ணன், சீனிவாசன் ஆகியோர் அத்தகைய கலைஞர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்களை ஏவிஜிசி மையத்தின் தலைவர்களாகக்கொண்டு பாடத்தொகுப்புகளை உருவாக்குவதுடன், அவர்கள் தலைமையில் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளையும் வழங்குவது அவசியம். குறிப்பாக, டிராட்ஸ்கி மருது உலகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஓவியர். அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸில் நிபுணத்துவம் பெற்றவர். கமலக்கண்ணன் `பாகுபலி’ படத்தின் உருவாக்கத்தில் முக்கியமானவர். `எந்திரன்’, `சிவாஜி’ போன்ற படங்களில் விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வை இவருடையதே. இத்தகைய கலைஞர்களிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் இந்தத் துறையில் சிறந்து விளங்குவார்கள். அங்கேயே அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் தந்து, ஹாலிவுட், பாலிவுட் படங்கள் மட்டுமின்றி, அனைத்து மாநில மொழிப் படங்களின் தொழில்நுட்பங்களைக் கையாளும் வாய்ப்பை வழங்கலாம்.
2021-ம் ஆண்டு பட்ஜெட்டின்போது, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் `ஏவிஜிசி’ குறித்த ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, ஒன்றிய அரசு, இந்தத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அங்கீகாரம் உள்ளிட்ட பலவற்றை மாநில அரசுகளுக்கு வழங்கும் என அந்த அறிவிப்பில் கூறியிருக்கிறார். இதனால், ஏவிஜிசி சென்டரை உருவாக்கும்போது, ஒன்றிய அரசின் பல்வேறு உதவிகள் எளிதில் கிடைப்பதை உறுதிசெய்யும். அதைப் பயன்படுத்திக்கொண்டு `ஏவிஜிசி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸை’ திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்க சுமார் 50 கோடி ரூபாய் தேவைப்படும். இந்த சென்டரை அமைப்பதால், நேரடியாக 1,000 பேருக்கும், மறைமுகமாக 5,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் அந்த மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படுவதோடு, அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும்!
(இன்னும் காண்போம்)