மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 38 - திருநெல்வேலி - வளமும் வாய்ப்பும்

கனவு
பிரீமியம் ஸ்டோரி
News
கனவு

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

ஸ்மார்ட் குக்வேர் உற்பத்தி நிறுவனம்!

உலகம் இப்போது ஸ்மார்ட்டாக மாறிக்கொண்டு வருகிறது. அலுவலகங்களில் அடிக்கடி ஒலிக்கக்கூடிய “ஸ்மார்ட்டா வொர்க் பண்ணு...” என்கிற வார்த்தை, இப்போது எல்லா தரப்பினரும் பேசும் விஷயமாகிவிட்டது. ஏன், அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களும்கூட ஸ்மார்ட்டாகிக்

கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் வெய்க்கிள், ஸ்மார்ட் ஃப்ரிட்ஜ், ஸ்மார்ட் மைக்ரோவேவ்அவன், ஸ்மார்ட் வாஷிங் மெஷின் என இப்போது எட்டுத் திக்கும் ஸ்மார்ட்தான். எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் அதிக தொழில்நுட்ப வசதிகளுடனும் கூடியதே ஸ்மார்ட். சுருக்கமாக, `மாற்றி யோசி’ என்பதன் மறு வடிவமே ஸ்மார்ட்!

நவீன வாழ்க்கை, பெண்களில் பெரும்பாலானோரைப் பணிச்சூழலுக்குள் தள்ளியிருக்கிறது. வீடு, அலுவலகம் என இரு இடங்களிலும் அவர்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கிறது. வீடு என்று வரும்போது கிச்சன்தான் பெண்களின் பிரதான இடமாக இருக்கிறது. அங்கே இருக்கிற பொருள்கள் எந்த அளவுக்குப் பயன்படுத்த எளிதாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவர்களின் பணிச்சுமை குறைந்து நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அந்த நேரத்தைப் பயனுள்ள விஷயங்களுக்கு ஒதுக்க முடியும். அதனால்தான் ஸ்மார்ட் கிச்சன் இன்று பெண்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெறத் தொடங்கியிருக்கிறது. பெரும்பாலான பொருள்கள் ஸ்மார்ட்டாக மாறிவிட்டாலும், ஒருசில பொருள்கள் அந்த இடத்தை நோக்கி, இப்போதுதான் நகர்ந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது ஸ்மார்ட் குக்வேர் புராடக்ட்டுகள்!

கனவு - 38 - திருநெல்வேலி - வளமும் வாய்ப்பும்

திருநெல்வேலி மாவட்டத்தில் Cookware Products தயாரிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. சிறியதும் பெரியதுமான நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கே உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் முழுக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், அத்தகைய பிராண்டுகள் புகழ்பெற்ற பிராண்டாக மாறவில்லை. அதை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல புராடக்ட்டுகளைத் தற்போதைய சூழலுக்கு ஏற்ப ஸ்மார்ட்டாகக் கையாளும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை அதில் சேர்த்து, அதன் தரத்தைக் கூட்ட வேண்டும். அப்படிச் செய்யும்போது விலையும் சற்றுக் கூடுதலாக வைக்கலாம். ஸ்மார்ட் பொருள்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதும் கிராக்கி உண்டு. அப்படி Cookware Product-களை மாற்றியமைக்கும்போது விற்பனை அதிகரித்து, பெரும் வருமானம் ஈட்ட முடியும்.

உலகளவில் Cookware Products தயாரிப்பில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. இந்திய அளவில் ஆண்டுதோறும் சுமார் 21,500 கோடி அளவுக்குப் பொருள்கள் விற்பனையாகின்றன. இதிலிருந்து ஒரு சதவிகிதம் அளவுக்கு மார்க்கெட்டைக் கைப்பற்றினாலே ஆண்டுக்குத் தோராயமாக 200 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களது வாழ்க்கைத்தரமும் மேம்படும். திருநெல்வேலியும் பொருளாதார மேம்பாட்டை அடையும்.

கனவு - 38 - திருநெல்வேலி - வளமும் வாய்ப்பும்

சுற்றுலா

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு. `உவரி கப்பல் மாதா ஆலயம்’, `மாஞ்சோலை’, `மணிமுத்தாறு தலைவாய்க்கால்’, `தாமிரபரணி ஆறு’, `களக்காடு நீர்வீழ்ச்சி’ என ஒவ்வொன்றும் சுற்றுலாப்பயணிகள் தவறவிடக் கூடாத இடங்கள். அதேபோல ஆன்மிகச் சுற்றுலா செல்வோர்களுக்கு ஏற்றாற்போல இங்கே `நவ கயிலாயங்கள்’ உண்டு. `நவ திருப்பதி’ என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்களைத்தான் `நவகிரகங்கள்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஒன்பது கிரகங்களையும் சுற்றிவந்தால் அளப்பரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நவ திருப்பதி ஸ்தலங்கள்

ஸ்ரீவைகுண்டம் - வைகுண்டநாதர் (சூரியன்), நத்தம் - விஜயாசனப் பெருமாள் (சந்திரன்), திருக்கோளூர் - வைத்தமாநிதிப் பெருமாள் (அங்காரகன்), திருப்புளியங்குடி - காய்சின வேந்தப்பெருமாள் (புதன்), ஆழ்வார்திருநகரி - ஆதிநாதப் பெருமாள் (குரு), தென் திருப்பேரை - மகரநெடுங் குழைக்காதர் (சுக்ரன்), பெருங்குளம் - வேங்கடவாணப்பெருமாள் (சனி), தொலைவில்லிமங்கலம் - தேவபிரான் (ராகு), இரட்டைத் திருப்பதி - அரவிந்த லோசனர் (கேது) உள்ளிட்டவையே நவ திருப்பதிகள். இந்தக் கோயில்கள் ஒவ்வொன்றும் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவு இடைவெளியில் அமைந்திருந்தாலும், அண்டை மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் பாதிகூட நவ திருப்பதிக்கு வருவதில்லை.

காரணம், முறையான நேர அட்டவணை, கோயில்களின் இருப்பிடத்தை எளிதில் அடையும் வகையிலான வரைபடம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவுக்கு இல்லை. பெரும் சிறப்புகள் வாய்ந்த இந்தக் கோயில்களுக்குச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்க, சுற்றுலாத்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் சேர்ந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், இந்தக் கோயில்களுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வழியாகப் பல கோடி வருமானம் ஈட்டலாம்.

கனவு - 38 - திருநெல்வேலி - வளமும் வாய்ப்பும்
கனவு - 38 - திருநெல்வேலி - வளமும் வாய்ப்பும்

நேர அட்டவணை மற்றும் Tourist Circuit Map!

`திருமலை திருப்பதி’ பற்றி அறிந்திருக்கும் அளவில் `நவ திருப்பதி’ பற்றிப் பலரும் அறிந்திருக்காததால், சுற்றுலாத்துறை இந்தக் கோயில்களைப் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளிடம் சென்று சேர்க்க விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வோரு கோயிலும் நடை திறந்திருக்கும் நேர அட்டவணையைப் பயணிகள் அறியும் வகையில் பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் காட்சிப்படுத்த வேண்டும். அதேபோல நவ திருப்பதிகளையும் எளிதாகச் சென்றடையவும், குறைந்த நேரத்தில் அதிக இடங்களைப் பார்வையிடும் வகையிலும் ஒரு `Tourist Circuit Map’ தயாரிப்பது அவசியம். இது, விரைவாகவும் எளிதாகவும் சுற்றுலாப்பயணிகள் தடையின்றி குறித்த நேரத்தில் தரிசனம் செய்வதற்கும் ஏற்றதாக இருக்கும்.

நவதிருப்பதி
நவதிருப்பதி

சிறப்புப் பேருந்துகள்

நவ திருப்பதிகளையும் தரிசிக்கப் போதுமான போக்குவரத்து வசதி இல்லை. அதேபோல, தனி வாகனங்களில் செல்லும் பயணிகளுக்கும் ஒவ்வொரு கோயிலின் நடை திறந்திருக்கும் நேரம் தெரியாததால், ஒரே நாளில் அனைத்து கோயில்களையும் தரிசித்துவருவதில் சிரமம் இருக்கிறது. நவ திருப்பதிகளையும் தரிசிக்கத் தனி யாக கார், வேன் எடுத்துக்கொண்டு சென்றால் அனைத்து கோயில்களையும் வழிபட்டு வரலாம் என்பதே இப்போதைய நிலைமையாக இருக்கிறது. இதை மாற்றி அமைக்கும்விதமாக, நவ திருப்பதிகளையும் தரிசனம் செய்ய சிறப்புப் பேருந்துகளை தனியே இயக்க வேண்டும்.

மின்சார டிராம் வண்டி

கொல்கத்தாவில் இப்போதும் மின்சார டிராம் வண்டிகள் இயக்கப்படுகின்றன. அதைக் கருத்தில்கொண்டு, நாம் கைவிட்டுவிட்ட மின்சார டிராம் வண்டிகள் வழியே நவ திருப்பதிகளை அடையும் வகையில் மீண்டும் அதன் சேவையைத் தொடங்கிவைக்கலாம். அதற்கான சிறப்புப் பாதைகள் அமைத்து இயக்கும்போது சுற்றுலாப் பயணிகள் இந்தப் பழம்பெருமை வாய்ந்த டிராம் வண்டியில் பயணிப்பதற்காகவே சிறப்பு பயணங்களைத் திட்டமிடுவார்கள். எப்படி, ஊட்டி ரயில் அதிக சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திருக்கிறதோ, அதேபோல இதுவும் வரவேற்பைப் பெறும். இதன் வழியாகச் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, கோயில்களும் புத்துயிர் பெறும். கோயில்களைச் சுற்றிப் பெரும் வர்த்தகம் நடக்க ஆரம்பிக்கும். அதேசமயத்தில், வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வரும்போது அந்நியச் செலாவணியையும் நாம் ஈர்க்க முடியும்.

கனவு - 38 - திருநெல்வேலி - வளமும் வாய்ப்பும்
கனவு - 38 - திருநெல்வேலி - வளமும் வாய்ப்பும்

பொருளாதாரத் தாக்கம்

உலக நாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து திருநெல்வேலிக்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏறக் குறைய 10 லட்சம் பேர். ஆனால், கன்னியாகுமரிக்குச் சுமார் 2 கோடி பேர் சுற்றுலா வருகின்றனர். இவர்களிலிருந்து 5 சதவிகிதத்தைக் கைப்பற்றினாலே மேலும் 10 லட்சம் பேர் வருவார்கள். இவர்கள் வழியே ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம். நேரடி, மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் திருநெல்வேலி மாவட்டம் பொருளாதார ஏற்றம் பெறும்!

(இன்னும் காண்போம்)