
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

காற்றாலைத் தொழில்நுட்பப் பூங்கா!
தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான அளவில் நடத்தப்படும் தொழில்நுட்பக் கண்காட்சிகளில், மாணவர்களிடமிருந்து தவறாமல் இடம்பெறும் புராஜெக்ட்களில் ஒன்று விண்ட்மில். ஒரு மோட்டார், மூன்று இறக்கைகள், டவர் என எளிமையாக அதை உருவாக்கிவிட முடியும். மேலும், “காற்று வேகமாக வீசும்போது டர்பன்கள் சுழன்று, ஜெனரேட்டரில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்” என அதை எளிதாக விளக்கவும் முடியும் என்பதால்தான் பல மாணவர்களின் தேர்வாகவும் அது இருக்கிறது. உண்மையில் காற்றாலைகளைத் தயாரிப்பதும், நிறுவுவதும் எளிமையானதுதான். மின் உற்பத்தியில் பெரும் பங்காற் றும் இவை, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதவை.
தற்போது, தமிழ்நாட்டின் ஒரு நாளைய மின்தேவை தோராயமாக 18,000 மெகாவாட்ஸ் அளவில் இருக்கிறது. பொதுவாக, தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலங்களில் (மே முதல் ஆகஸ்ட் வரை) காற்றின் வேகம் நொடிக்கு 12 கிலோமீட்டர் முதல் 17 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும். நடப்பாண்டில் ஏப்ரல் மாதமே காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதால், இந்த ஆண்டு காற்றாலை வழியே உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு நிலவும் இன்றைய சூழலில், காற்றாலை மின் உற்பத்தி அதை ஈடுகட்டும் வகையில் இருக்கும் என்றால் அது மிகையில்லை.
இனி வரும் காலங்களில், காற்றாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் வழியே மின்சாரத் தேவையையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இதற்கு அதிக அளவிலான காற்றாலைகள் நமக்குத் தேவை என்பதால், அதற்கான காற்றாலைப் பூங்காவை திருநெல்வேலி மாவட்டத்திலேயே அமைக்கலாம். இதற்கு, பல ஆண்டுகளாகக் கைவிடப்பட்டிருக்கும் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குப் புத்துயிர் அளித்து, அங்கே ஒரு ‘காற்றாலைத் தொழில்நுட்பப் பூங்கா’வை (Windmill Tech Park) அமைக்க வேண்டும்.

நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம்!
தென் மாவட்டங்களில் சாதி சார்ந்த மோதல்கள் அதிகரிப்பதற்கு அங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காததே காரணம் என ஆய்வின் வழியே தெரியவந்திருக்கிறது. சாதி மோதல்களைத் தடுக்கும் வகையிலும், பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்டதே நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம். மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் கனவுத் திட்டம் இது. இந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் தொழில் மேம்பாட்டுக் கழகமும், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏஎம்ஆர்எல் செஸ் (AMRL SEZ) கட்டுமானக் கழகமும் இணைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொழில் முதலீட்டை சுமார் 15,000 கோடி ரூபாய் அளவுக்கு ஈர்ப்பதற்காகவும், தோராயமாக 75,000 பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்காகவும் இந்தத் திட்டம் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், இந்த மண்டலத்தில் பொறியியல், வாகன உதிரி பாகங்கள், மின்னணு மற்றும் மென்பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்கப்படவுள்ளதாகவும் அரசு அறிவித்திருந்தது.
ஆனால், இந்தத் திட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு நாங்குநேரியில் காற்றாலைத் தொழில்நுட்பப் பூங்காவை நிறுவ வேண்டும். நெல்லை மாவட்டத்துக்கு அருகிலுள்ளது தூத்துக்குடி மாவட்டம். இங்கே துறைமுக வசதி உள்ளதால் காற்றாலைப் பொருள்களை ஏற்றுமதி செய்ய உதவியாக இருக்கும். அருகிலேயே விமான நிலைய வசதியும் இருப்பதால் காற்றாலைத் தொழில்நுட்பப் பூங்காவுக்கு வெளிநாட்டிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் வருவதற்கு எளிதாக இருக்கும்.
ஒரு காற்றாலையில் Shroud, Blade, Wind Rotor Axle, Gearbox, Generator, Wind Vane, Anemometer, Electrical Cabinet, Control Cabinet, Nacelle, Frame or Chassis, Tower, Yaw Motor, Hub எனச் சுமார் 13-க்கும் மேற்பட்ட பாகங்கள் உள்ளன. இவை அனைத் தையும் ஒரே நிறுவனமே உற்பத்தி செய்ய முடியாது என்பதால் பல சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு பாகங்களைப் பிரித்துக் கொடுத்து, அவற்றிடமிருந்து பெற்று காற்றாலை நிறுவப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான ஜெனரல் எலெக்ட்ரிக்கல் (GE), சீனாவைச் சேர்ந்த கோல்டுவிண்ட் (Goldwind), டென்மார்க்கைச் சேர்ந்த வெஸ்டாஸ் (Vestas), ஸ்பெயினைச் சேர்ந்த சீமென்ஸ் கமீஸா (Siemens Gamesa) உள்ளிட்ட நிறுவனங்களே உலக அளவில் காற்றாலைகளை உருவாக்குவதில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருக்கின்றன. இவற்றில் சில பல்வேறு நாடுகளில் தங்களது கிளைகளையும் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ஏற்கெனவே சீமென்ஸ் கமீஸா, வெஸ்டாஸ் காற்றாலைகளைத் தயாரித்து, விற்பனை செய்கின்றன. இந்த நிறுவனங்கள் உட்பட மேலும் பல நிறுவனங்கள் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.
நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 2,000 ஏக்கர் நிலத்திலிருந்து தோராயமாக 500 ஏக்கரைப் பெற்று, காற்றாலைப் பூங்கா அமைக்க வேண்டும். இந்தப் பூங்காவில் ஆண்டொன்றுக்கு 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவுக்கான காற்றாலைகளை உருவாக்கலாம். இதனால், சுமார் 6,000 பேருக்கு நேரடியாகவும், சுமார் 30,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். திருநெல்வேலி மாவட்டம் பொருளாதார மேம்பாடு அடைவதோடு, அங்கே நிலவிவரும் வேலைவாய்ப்பின்மை குறைக்கப்பட்டு, சாதி மோதல்களும் தவிர்க்கப்படும். அப்பகுதி இளைஞர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும்.
நெல்லை தாதுமணல் நிறுவனம்!
நெய்வேலியிலுள்ள NLC போல, நெல்லையில் ஒரு NMC-ஐ உருவாக்கலாம். அதாவது, Nellai Minerals Corporation!
இயற்கையின் பல கொடைகளில் ஒன்று தாதுமணல். மலைகளில் பதுங்கியிருக்கும் தாதுப்பொருள்கள் கால மாற்றத்தால் அரிக்கப்பட்டு, ஆற்றுப்படுகைகளில் கலந்து, இறுதியாகக் கடலை வந்து சேர்கின்றன. கடல் அலைகளால் அவை உந்தித் தள்ளப்பட்டு, கடற்கரையோரங்களில் இறுதியாக அவை குவிந்துவிடுகின்றன. இத்தகைய தாதுமணல் தமிழ்நாட்டில் கடலோரப் பகுதிகளான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட சுமார் 400 கிலோமீட்டர் தொலைவுக்கு இருக்கிறது. இது மட்டுமின்றி, சில ஆற்றுப்படுகைகளிலும் இந்தத் தாதுமணல் காணப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரை நீளம் தோராயமாக 48 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளது. இந்தக் கடற்கரையை ஒட்டியுள்ள மணலிலிருந்து `கார்னெட்’ (Garnet), `ரூடைல்’ (Rutile), `இல்மனைட்’ (Ilmenite), `ஜிர்கான்’ (Zircon), `சிலிமனைட்’ (Sillimanite) உள்ளிட்ட தாதுப்பொருள்கள் கிடைக்கின்றன. உலகிலுள்ள இல்மனைட் கலந்த மணலில், 14 சதவிகிதம் இந்தியாவில்தான் கிடைக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளில் அதிக அளவு உள்ளது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரை ஓரங்களிலும் அதிக அளவில் கிடைக்கிறது.
இந்த இல்மனைட் தாதுவைப் பிரித்தெடுத்தால் `ஜிர்கான்’, `டைட்டானியம்’, `தோரியம்’ உள்ளிட்ட கனிமங்கள் கிடைக்கும். இதில் `டைட்டானியம்’ என்கிற உலோகம் மருத்துவ அறுவைச் சிகிச்சைக் கருவிகள், விமானங்கள், ஏவுகணைகள், விண்வெளி சாதனங்கள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தக் கூடியது. லகுவானதும் உறுதித்தன்மை மிக்கதுமாக இருப்பதே இத்தகைய இடங்களில் பயன்படுத்துவதற்கான மிக முக்கியக் காரணம். இந்த டைட்டானியத்துடன் இயற்கையாக ஆக்சிஜனைக் கலக்கும்போது `டைட்டானியம் டை ஆக்ஸைடு’ என்கிற தனிமம் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி ரப்பர், பிளாஸ்டிக், பெயின்ட், அழகுசாதனப் பொருள்கள் உள்ளிட்டவற்றை உருவாக்க முடியும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தியா சிமென்ட்ஸ் தவிர, பெரிய தொழிற்சாலைகள் இல்லை. தாதுமணல், சுண்ணாம்புக்கல் தவிர்த்து அந்த மாவட்டத்தில் பெரிய வளங்கள் ஏதும் இல்லாததால் அங்கே அதிக அளவில் தொழிற் சாலைகள் உருவாகவில்லை. ஆனால், வளமாகத் தாதுமணல் கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தத் தாதுமணல் தனியாரால் நிர்வகிக்கப்பட்டு, பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானமும் ஈட்டித் தந்து கொண்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தற்போது அந்தத் தனியார் நிறுவனமும் செயல்படவில்லை.
திருநெல்வேலி கடற்கரையோர தாதுமணலி லிருந்து கிடைக்கும் இல்மனைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டைட்டானியம் உலோகத்தை மையப்படுத்தி, இதற்கான தொழிற்சாலையை அமைக்க 2007-ம் ஆண்டுவாக்கில் டாடா நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. சில காரணங்களால் இந்தத் தொழிற்சாலை அமைப்பதை டாடா கைவிட்டுவிட்டது. தமிழ் நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலர் கனவை அடைய தற்போதைய அரசு பல முன்னெடுப்புகளைச் செய்துவருகிறது. அந்த வகையில் கைவிடப்பட்ட டாடா டைட்டானியம் தொழிற்சாலையை மீண்டும் தொடங்குவது குறித்து அரசு பரிசீலித்து, அனுமதி வழங்கலாம். கூடவே, டிட்கோ (TIDCO - Tamilnadu Industrial Development Corporation Limited), டாமின் (TAMIN - Tamil Nadu Minerals Limited) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தாதுமணல் சார்ந்த பிற தொழிற்சாலைகளை அமைக்கப் பல நிறுவனங்களை ஊக்குவிக்கலாம்.

அதுமட்டுமின்றி, திருநெல்வேலி கடற்கரையோரப் பகுதிகளில் தாதுமணல் சுரங்கத்தை `நெல்லை தாதுமணல் நிறுவனம்’ (NMC - Nellai Minerals Corporation) என்கிற பெயரில் அரசே தொடங்க வேண்டும். அரசிடமிருந்து மட்டுமே தாதுமணலை தனியார் பெற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்கிற அடிப்படையில் ஒப்பந்தம் செய்வது அவசியம். இவ்வாறு செய்வதால், அந்தப் பகுதியின் வளங்கள் அளவுக்கதிகமாகச் சுரண்டப்படுவது தடுக்கப்படுவதோடு, திருநெல்வேலி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு வராது. அரசே சுரங்கம் அமைப்பதால், ஆண்டொன்றுக்குத் தோராயமாக 10,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானமும் சுமார் 30,000 பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படும்!
(இன்னும் காண்போம்)