நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. திசையன்விளை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் நம்பியாறு அணை நிரம்பியதால் அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு நம்பியாறு கால்வாய் மூலம் குளங்களுக்குச் செல்கின்றன.

திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் கிராமத்தின் குளம் நிரம்பிய நிலையில் அந்தக் குளத்தின் படுகையில் இருக்கும் தனியாருக்குச் சொந்தமான கிணற்றுக்குள் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. சுமார் 40 கன அடி தண்ணீர் அந்தக் கிணற்றுக்குள் சென்ற போதிலும், இதுவரை கிணறு நிறையாமல் இருப்பதால் அந்த அதிசய கிணறு உள்ள இடத்துக்கு சுற்றுப்புறப் பகுதி மக்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.
சுமார் 15 அடி சுற்றளவும் 40 அடி ஆழமும் கொண்டதாக இருக்கும் கிணற்றில் வறட்சியான காலங்களில் துளியளவுக்குக்கூட தண்ணீர் இருப்பதில்லை. அதனால் அந்தக் கிணறு பயன்படுத்தப்படாமலே கிடந்தது. ஆனால், மழைக்காலத்தில் அந்தக் கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் மாயமாகிவிடுவதுடன் அருகில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அந்த அதிசய கிணற்றின் உள்ளே கடந்த நான்கு தினங்களாக தண்ணீர் சென்றபோதிலும் இதுவரை கிணறு நிறையவில்லை. இது குறித்து அறிந்த அதிகாரிகளும் அதிசயத்துடன் அந்தக் கிணற்றைப் பார்வையிடுகிறார்கள். சபாநாயகர் அப்பாவு தலைமையில் நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளச் சேதத்தைத் தடுக்க அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியான அபூர்வா, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் அந்தக் கிணற்றை ஆய்வு செய்தனர்.
கால்வாய் மூலம் கிணற்றுக்குள் தண்ணீர் சென்றபோதிலும் நிறைந்து வழியாமல் இருப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் கேட்டதற்கு, ``மழை வெள்ள நிலவரம் பற்றி ஆய்வு செய்வதற்காகத் திசையன்விளை பகுதிக்குச் சென்றிருந்தோம். அப்போது இந்த அதிசய கிணறு பற்றி விவசாயிகள் சொன்னார்கள். அதனால் நேரில் சென்று பார்வையிட்டோம்.

அந்தக் கிணற்றின் அடிப்பகுதியில் நீர் உறிஞ்சப்படுவதால் எவ்வளவு தண்ணீர் சென்றாலும் கிணறு நிறைவதில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு 45 நாள்கள் வரை இதுபோல தண்ணீர் சென்றதாக அங்குள்ள விவசாயிகள் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.
அந்தக் கிணற்றில் தண்ணீர் சென்றால் சுற்றிலும் இருக்கும் 10 கி.மீ தூரத்துக்கு உள்ள விவசாய கிணறுகள் நீராதாரம் பெறுவதாகச் சொல்கிறார்கள். இது குறித்து அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்து அவர்களை ஆய்வு நடத்தச் சொல்லியிருக்கிறேன். அதன் முடிவுகள் கிடைத்த பின்னர், அங்கு நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்துப் பரிசீலிக்க முடியும்” என்றார்.
கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் காணாமல் போவது குறித்த தகவல் கிடைத்ததும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து அதை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றார்கள். இந்த கிணற்றுக்குள் தண்ணீர் செல்வதால் தங்களது விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுயிருப்புவிளை கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான வி.பி.அருள்ராஜ் நம்மிடம் பேசுகையில், ``எனக்கு 63 வயசாகுது. சின்ன வயசுலருந்தே இந்தக் கிணத்தைப் பார்த்திருக்கேன். நான் சின்னப் பையனா இருந்தப்ப எங்கப்பாவும் இந்த அதிசய கிணற்றில் தண்ணீர் விட்டு நிரப்பவே முடியாதுன்னு சொல்லியிருக்கார்.

நான் சிறுவனா இருந்தப்ப எங்க கிணத்துல மாடு கட்டி கமலை வச்சு நீர் இறைப்போம். அந்தச் சமயத்துல இந்தக் கிணத்துக்குள் மழைக்காலத்தில் தண்ணீர் போச்சுனா ஏழு வருஷத்துக்கு இந்தப் பகுதியில் தண்ணீர் பஞ்சமே இருக்காது. அந்த அளவுக்கு சுற்றுப் பகுதிக்கு தண்ணீர் கிடைக்கும். இந்த அதிசய கிணத்துக்கு தண்ணீர் வந்துச்சுன்னா நாங்க கவலையில்லாம விவசாயம் செய்ய முடியும்.
இந்தக் கிணத்துக்குப் பக்கத்துல முருகானந்தம் என்பவரோட கிணறு இருக்கு. நாலு நாளைக்கு முன்னால வரைக்கும் அவரோட 50 அடி ஆழக் கிணத்துல ஒரு சொட்டுத் தண்ணீ இல்ல. அவரோட அண்ணன் கிணத்துலயும் சொட்டு தண்ணீ இல்லாமக் கிடந்துச்சு. இப்ப வந்து பாருங்க ரெண்டு கிணறும் நிரம்பியிருக்கு. அதுக்கு காரணம் அந்த அதிசய கிணறுதான்.
நாங்க 500 அடிக்கு போர் போட்டாலும் புகைதான் வரும். ஆனா இந்தக் கிணத்துக்கு தண்ணீர் வந்துச்சுன்னா போர்லயும் தண்ணீர் வந்திடுது. கடலுக்குப் பக்கத்துல இருக்குறதால, ஆழமா போர் போட்டா கடல்நீர் வந்து உப்புக் கரிக்கும். ஆனால், இந்த கிணத்துக்குள் தண்ணீர் பாய்ச்சினால் நிலத்தடி நீர் நல்லதா மாறிடுது. அதனால் வருஷத்துக்கு ஒரு தடவை இந்தக் கிணத்துக்கு தண்ணீர் விட்டால் எங்க விவசாயம் செழிக்கும். அதிகாரிகளை அதை செய்யச் சொல்லுங்க” என்று கோரிக்கை விடுத்தார்.
ஆயன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஜெயராஜனிடம் பேசினோம். ``இந்த அதிசய கிணறு நிரம்புச்சுன்னா 20 கி.மீ தொலைவில் இருக்குற விவசாய கிணறு, வீடுகளின் போர்வெல் எல்லாம் தட்டுப்பாடு இல்லாம தண்ணீர் கிடைச்சுடும். இந்தக் கிணத்துல தண்ணீர் மேலே வருமே தவிர நிறைஞ்சதாக சரித்திரம் கிடையாது.

எங்க பகுதியில் தண்ணீர் குறைவாக இருப்பதால் வாழை விவசாயம் செஞ்சவங்க எல்லாம் அதைக் கைவிட்டுட்டாங்க. நிலத்தடியில் கடல் நீர் வந்துட்டதால் தென்னை மரங்களில் தேங்காய்கூட சின்னதா மாறிடுச்சு. இப்போ கிணத்துக்கு தண்ணீர் வருவதால் எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு” என்றார் உற்சாகமாக.
நம்பியாறு கால்வாய் மூலம் குளங்களை நிறைப்பதற்கு வரும் தண்ணீர் சென்றபோதும் கிணறு நிறையாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் நிலத்தியல் தொழில்நுட்பத் துறையின் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர். என்.சந்திரசேகரிடம் கேட்டோம். ``நீங்கள் சொல்லும் கிணறு, ஒரு காலத்தில் ஆழமானதாக இருந்திருக்கும். இப்போது மணல் மூடி ஆழம் குறைந்திருக்கலாம்.

திசையன்விளை பகுதி என்பது தேரிக் காடுகள் மிகுந்த இடம். இயற்கையாகவே வறட்சியான அந்த பூமியில் பாறைகளை விடவும் மணல் பகுதி அதிகமாக இருக்கும். அதனால் ஆழமாக அமைக்கப்பட்ட அந்தக் கிணற்றில் தண்ணீர் விழுந்ததும் அது சுற்றிலும் இருக்கும் மணல் பகுதிக்குள் கடத்தப்படும்.
தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் மணல் பகுதிகளுக்கு நிலத்தின் அடிப்பகுதி வழியாக நீர் கடத்தப்படுவதால் கிணற்றில் தண்ணீர் தேங்குவதில்லை. தற்போது மழைக் காலத்தில் மேலிருந்து இறங்கும் மழைநீர் அடிப்பகுதிக்குச் செல்வதில்லை. ஆனால், கிணற்று நீர் அடிப்பகுதிக்குச் செல்கிறது. அனைத்துப் பகுதியும் நீர் சென்ற பிறகே கிணறு நிரம்பும் வாய்ப்பு இருக்கும்.
பொதுவாக, கோயில்களில் தெப்பக்குளம் இருப்பதே இதுபோன்ற நீர் நிலைகளைப் பாதுகாக்கும் அமைப்புதான். தெப்பக்குளத்தில் நீர் தேங்கினால் சுற்றுப்புறப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளின் கிணறு மற்றும் விவசாய கிணறுகள் நிரம்பும். அதற்காகவே ஊருணிகளையும் கோயில் தெப்பக்குளங்களையும் அந்தக் காலத்தில் வெட்டி வைத்திருக்கிறார்கள்.
இந்த அதிசய கிணறு கூட ஒரு காலத்தில் நிலத்தடி நீர் கேகரிப்புக்கான ஏற்பாடாக இருந்திருக்கலாம். பாறைகள் இல்லாத மணல் பாங்கான பகுதியில் நூறு அடிக்கும் மேல் தோண்டி இந்தக் கிணற்றை உருவாக்கி இருக்கவும் வாய்ப்பு உண்டு. கிணறு தூர்ந்துபோகாமல் தண்ணீர் மட்டும் செல்லும் வகையில் இந்த நீர் சேகரிப்பு உத்தியைச் செய்திருக்கக் கூடும்.

அதனால் இந்த இடத்தில் உடனடியாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும். ஒருவேளை இது நீர் சேகரிப்புக்கான சிறந்த இடமாக இருந்தால் இது போல பல இடங்களில் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்தால் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் வளம் மிகுந்த பகுதியாக மாறும். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று அக்கறையுடன் பேசினார்.