Published:Updated:

`உலகம் முழுக்க போகுது எங்க புல்லாங்குழல்!' - பெனிட்டாவின் கலக்கல் பிசினஸ் கதை #SheInspires

புல்லாங்குழல் தயாரிக்கும் பெனிட்டா
News
புல்லாங்குழல் தயாரிக்கும் பெனிட்டா

``அரிதான, வித்தியாசமான தொழில்ல ஒரு பெண்ணா கலக்குறீங்களேனு பலரும் சொல்வாங்க. பெண்களால முடியாத வேலைனு எதுவுமே இல்ல. அதை நிரூபிக்க வேண்டியது மட்டும்தான் இப்போ நம்ம பொறுப்பு” என்கிறார் பெனிட்டா.

Published:Updated:

`உலகம் முழுக்க போகுது எங்க புல்லாங்குழல்!' - பெனிட்டாவின் கலக்கல் பிசினஸ் கதை #SheInspires

``அரிதான, வித்தியாசமான தொழில்ல ஒரு பெண்ணா கலக்குறீங்களேனு பலரும் சொல்வாங்க. பெண்களால முடியாத வேலைனு எதுவுமே இல்ல. அதை நிரூபிக்க வேண்டியது மட்டும்தான் இப்போ நம்ம பொறுப்பு” என்கிறார் பெனிட்டா.

புல்லாங்குழல் தயாரிக்கும் பெனிட்டா
News
புல்லாங்குழல் தயாரிக்கும் பெனிட்டா

ஒவ்வொருவரையும் மயக்கும் இசை, புல்லாங்குழல் இசை. அந்த புல்லாங்குழல் இசைக்கருவிகளை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் அவற்றை ஏற்றுமதி செய்து அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார் நெல்லையைச் சேர்ந்த பெனிட்டா.

புல்லாங்குழல்
புல்லாங்குழல்

நெல்லை-கன்னியாகுமரி புறவழிச் சாலையில் பெனிட்டாவின் புல்லாங்குழல் செய்யும் தொழிற்கூடம் அமைந்துள்ளது. காலையில் 9 மணிக்கு வேலையைத் தொடங்கும் பெனிட்டா, ஓய்வின்றி மாலை வரை அர்ப்பணிப்புடன் புல்லாங்குழல் தயாரிக்கிறார்.

மூங்கில்களை வெயிலில் உலர வைப்பது, அவற்றை அடிக்கடி பரிசோதிப்பது, நன்கு காய்ந்ததும் சரியான வடிவத்துக்கு மூங்கில்களை வெட்டுவது என அனைத்து வேலைகளிலும் தன் பங்களிப்பைச் செய்கிறார். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தொழிற்கூடத்துக்குச் சென்று பணியைத் தொடங்கிவிடுகிறார்.

தொழிற்கூடத்தில் பெனிட்டா
தொழிற்கூடத்தில் பெனிட்டா

இசைக்கருவியை உருவாக்கும் தொழில் செய்யும் பெனிட்டாவை அவரது தொழில்கூடத்தில் சந்தித்தோம். ``எனக்கும் இந்தத் தொழிலுக்கும் ஆரம்பத்துல எந்தத் தொடர்பும் கிடையாது. திருமணத்துக்கு அப்புறம்தான் இந்த வேலையைக் கத்துக்கிட்டேன்.

என் கணவர் பிரேம்குமாரின் அப்பா, என் மாமனார் கடந்த 55 வருடங்களுக்கும் மேலாக இந்தத் தொழிலைச் செய்துகிட்டு வந்தார். அவர் மறைந்ததும் என் கணவர் இந்தத் தொழிலைச் செய்து வந்தார். ஆரம்பத்துல அவருக்கு சின்னச் சின்ன உதவிகளைச் செய்றதுக்காகத் தொழிற்கூடத்துக்கு வருவேன். சீக்கிரமே புல்லாங்குழல் செய்யக் கத்துக்கிட்டேன்.

புல்லாங்குழலுடன் பெனிட்டா
புல்லாங்குழலுடன் பெனிட்டா

என்னோட ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்த்து என் கணவரே ஆச்சர்யப்பட்டார். கூடவே இருந்து எனக்கு கற்றுக் கொடுத்ததோடு, ஊக்கப்படுத்தினார். ஒரு கட்டத்துல என்னை நம்பி தொழிற்கூடத்தை விட்டுவிட்டு விற்பனையில கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன் பிறகு நான் இந்தத் தொழில்ல முழு நேரமா ஈடுபடத் தொடங்கிட்டேன்” என்று புன்னகையோடு பேசுகிறார் பெனிட்டா.

காடுகளில் வளரும் மூங்கில்கள், புல்லாங்குழல் இசைக்கருவியாக உருமாற்றம் பெறுவதற்கு 18 நிலைகளைக் கடக்க வேண்டியதிருக்கிறது. இந்த ஒவ்வொரு நிலையிலும் மிகவும் கவனத்துடனும் அக்கறையுடன் வேலைசெய்கிறார்கள். பாதுகாப்பாக மூங்கில்களை உலரவைப்பது, தீயில் வாட்டுவது, துளையிடுவது எனப் பல்வேறு பணிகளைச் செய்கிறார்கள்.

புல்லாங்குழல்
புல்லாங்குழல்

``தென்காசி மாவட்டத்தின் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகள்ல கிடைச்ச மூங்கில்கள் இப்போ வனத்துறையோட விதிமுறைகளால கிடைக்கிறதில்ல. அதனால வனத்துறை அனுமதியோடு வெட்டப்படும் கேரளாவின் மூணாறு பகுதிக்குச் சென்று மூங்கில்களை வாங்கி வந்து புல்லாங்குழல் தயாரிக்கிறோம்.

கேரளாவின் மூணாறு பகுதியில இருந்து அதிக விலை கொடுத்து லாரியில கொண்டுவரும் பச்சை மூங்கிலை, முதல்ல வெயில்ல காய வைப்போம். எல்லா பகுதியும் சமமாகக் காயணும் என்பதால கவனத்தோடு இருந்து எல்லா இடங்களிலும் சூரிய ஒளி படுமாறு திருப்பி வைப்போம். நல்ல வெயில் அடிச்சா மூணே நாள்ல சரியான பக்குவத்துக்கு வந்துடும்.

பச்சை நிறம் மறைஞ்சு வெள்ளையா மாறினதும், மூங்கிலை தரம் பிரிப்போம். மூங்கிலோட தன்மை, பருமன் இதையெல்லாம் வெச்சு, எந்த வகையான புல்லாங்குழலுக்குப் பயன்படுத்தலாம்னு முடிவு செஞ்சு தனித்தனியா பிரிப்போம். அப்புறம், எங்களுக்குத் தேவையான அளவுக்கு மூங்கிலை வெட்டுவோம்.

மூங்கிலின் தரத்துக்கு ஏற்றபடி இந்துஸ்தானி, கர்னாடக இசைக்கான புல்லாங்குழல்களைத் தயாரிக்கிறோம். இந்துஸ்தானி இசைக்கான புல்லாங்குழல்ல 6 துளைகள் இருக்கும். கர்னாடக இசைக்கு 8 துளைகள் இருக்கும். மூங்கிலை தரம் பிரித்துத் தேர்வு செய்த பிறகு, அளவீடு செஞ்சு துளை போடும் பணி நடக்கும். கம்பியைக் காய வெச்சு துளைகளைப் போடுவோம்.

துளையிடும் பணி நடக்கிறது.
துளையிடும் பணி நடக்கிறது.

இதுல புல்லாங்குழலோட துளைகள்தான் ரொம்ப முக்கியமானது. அது குறிப்பிட்ட அளவைவிட சின்னதாகவோ, பெரிசாவோ போயிட்டா இசையோட தன்மையே மாறிடும். ஒரு மில்லி மீட்டர் அளவு மாறிப்போனாலும், இசையில தெளிவு இல்லாம போயிடும். அதனால ரொம்ப கவனமா இந்த வேலையைச் செய்வேன். அதையும் மீறி தவறு நேர்ந்துட்டா, அந்த மூங்கில் பயன்படாம போய்விடும். அதுவரையிலான நம்ம உழைப்பெல்லாம் வீணாகிவிடும்'' - உருவாக்கம் முதல் விற்பனை வரை இந்தத் தொழில் அவர் கற்றுத் தேர்ந்திருக்கும் அனுபவங்கள், பெனிட்டாவின் வார்த்தைகளில் வெளிப்படுகின்றன.

``எங்ககிட்ட ஆர்டர் கொடுக்கும்போதே சிலர், `பேஸ் வேண்டும்’னு கேட்பாங்க. இன்னும் சிலர் `மீடியம் வேண்டும்'னு சொல்லுவாங்க. அவங்க கேட்குறதை அவங்க மனசுக்குத் திருப்தி ஏற்படும் வகையில தயாரிச்சுக் கொடுக்குறோம். தயாரிப்பு முறைகள் முடிஞ்சு, ஒவ்வொரு புல்லாங்குழலையும் பரிசோதித்துப் பார்க்கக் கையில எடுக்கும்போது தாய்மை உணர்வு ஏற்படும்'' என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

தொழில் கூடத்தில் பெனிட்டா
தொழில் கூடத்தில் பெனிட்டா

``சிலர் புல்லாங்குழல வாட்டிக் கொடுக்கணும்னு கேட்பாங்க. அதனால வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய், விளக்கெண்ணெயைத் தடவி ஒரு நாள் மூடி வைப்போம். மூங்கிலின் உறிஞ்சும் தன்மை காரணமா எண்ணெய் உறிஞ்சப்பட்டுடும். அப்புறம் அதை தீயில வாட்டினா, நிறம் மாறி பொன்னிறமா மிளிரும். இதை விரும்பிக் கேட்கிறவங்களுக்கு அப்படிச் செய்து கொடுப்போம்.

நாங்க தயாரிக்கும் புல்லாங்குழல் தரமானதாவும் சுதி சுத்தமானதாவும் இருப்பதால இசைப் பிரியர்கள் பலரும் எங்ககிட்ட ஆர்டர் கொடுக்குறாங்க. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள்ல இருந்தும் எங்களுக்கு ஆர்டர்கள் வருது.

புல்லாங்குழல் தயாரிப்பு
புல்லாங்குழல் தயாரிப்பு

இணையம் மூலமாவும் ஆர்டர்கள் கிடைக்குது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, வளைகுடா நாடுகள்னு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் எங்க புல்லாங்குழல் போகுது. ஓவியம், சிற்பம் செய்பவர்களைப்போல நானும் படைப்புத் தொழிலைச் செய்றேன்.

``அரிதான, வித்தியாசமான தொழில்ல ஒரு பெண்ணா கலக்குறீங்களேனு பலரும் சொல்வாங்க. பெண்களால முடியாத வேலைனு எதுவுமே இல்ல. அதை நிரூபிக்க வேண்டியது மட்டும்தான் இப்போ நம்ம பொறுப்பு” என்கிறார் பெனிட்டா தன்னம்பிக்கை மிளிர.