அரசியல்
Published:Updated:

கிட்னி கல் கரையுது... கொரோனா கிருமி ஓடுது..! - திருவண்ணாமலையில் குவியும் போலிச் சாமியார்கள்!

திருவண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
திருவண்ணாமலை

“கிரிவலப் பாதையின் பாதுகாப்பு முறைகள் குறித்து ஏற்கெனவே வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. குற்றச்செயல்களைத் தடுக்க கண்காணிப்பு கோபுரங்களை அதிகப்படுத்தவிருக்கிறோம்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், மனவளர்ச்சி குன்றியவர்களை சாமியார்கள் என்று அமரவைத்து கல்லாகட்டும் வேலையை, சில மோசடிக் கும்பல்கள் செய்துவருவதாகவும், போலிச் சாமியார்களின் நடமாட்டம் அதிகமிருப்பதாகவும் புகார்கள் குவிய, நேரடி விசாரணையில் இறங்கினோம்...

‘மாடர்ன்’ சந்நியாசிகள்!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் சிலர் நம்மிடம் பேசும்போது, “14 கி.மீ கொண்ட இந்த கிரிவலப் பாதையில் நூற்றுக்கணக்கான ‘மாடர்ன்’ சந்நியாசிகள் தடியும் பீடியுமாகத் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இவர்களில் பலரின் செய்கைகள் சந்தேகத்துக்குரியவையாக இருக்கின்றன. மனவளர்ச்சி குன்றியவர்களைப் பிடித்துவந்து, சில மோசடிக் கும்பல்கள் அவர்களைச் சாமியார்கள் என்று பக்தர்களை நம்பவைத்து கல்லாகட்டுகின்றன. சமீபத்தில் ‘தொப்பி’ அம்மா என்று புதிய ஒரு கேரக்டரை உலவவிட்டிருக்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இவர், சாலையில் கிடந்த தொப்பி ஒன்றை எடுத்து அணிந்துகொண்டார். கிரிவலப் பாதையிலுள்ள மரத்தடி நிழலிலும், ஆசிரம வாசலிலும் படுத்துக்கிடந்த இவரை, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ‘வாழும் பெண் சித்தர்’ என்று டிரெண்டாக்கிவிட்டனர். தன் பின்னால் யாரும் வராதீர்கள் என்று அவர் சத்தம்போட்டு, திட்டிய வீடியோகூட சமீபத்தில் வெளிவந்து பரபரப்பானது. மனநலம் பாதிக்கப்பட்டவரை, பணத்துக்காக இப்படித் துன்புறுத்துகிறார்கள்” என்றனர்.

கிட்னி கல் கரையுது... கொரோனா கிருமி ஓடுது..! - திருவண்ணாமலையில் குவியும் போலிச் சாமியார்கள்!

கிட்னி கல் கரையுது... கொரோனா கிருமி சாகுது!

‘தொப்பி அம்மா’ என்ற பெண்மணியின் பின்னணி குறித்து விசாரித்தோம். `தொப்பி அம்மாவின் சிஷ்யர்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்ட மணிமாறன் என்பவர், “தொப்பி அம்மா, ஆரம்பத்தில் யாசகம் பெற்றுத்தான் சாப்பிட்டுவந்தார். இப்போது, இங்குள்ள ஒவ்வொரு ஹோட்டல் உரிமையாளரும் அவருக்கு உணவளிக்கத் தவம்கிடக்கிறார்கள். ‘அவர் தங்கள் உணவகத்துக்கு வருவாரா?’ என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். யூடியூபில் வெளியான வீடியோக்களை வைத்து, அவரின் குடும்பத்தினர் தேடிவந்தனர். அதன் பிறகே தருமபுரி அருகேயுள்ள பாலக்கோடுதான் தொப்பி அம்மாவின் சொந்த ஊர் என்று தெரியவந்தது. அவருக்கு மகள், பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். யாருடனும் பழைய உறவைப் பேண மறுத்துவிட்டார். ‘தொப்பி’ அம்மாவிடம் அரிய சக்தி இருக்கிறது. அவரை வணங்கினாலே போதும், உடம்பிலுள்ள நோய்கள் நீங்கிவிடும். எனக்கு கிட்னியில் கல் இருந்தது. அம்மாவை ஒருமுறை வணங்கினேன். இப்போது கிட்னியிலிருந்த கல் கரைந்துபோய்விட்டது. அதேபோல, கொரோனா வந்தபோது ‘தொப்பி’ அம்மாவின் கை என்மீது பட்டதும் கொரோனா கிருமிகள் இறந்து, என் உடலைவிட்டு ஓடிப் போய்விட்டன. பார்வையாலேயே சக்தியைக் கடத்தும் தொப்பி அம்மா தற்போது ‘நயன தீட்சை’ வழங்குகிறார். நயன தீட்சை என்பது தன்னையே சிவமாக பாவித்து, கண்பார்வையால் பக்தர்களின் உடலில் சக்தியைக் கடத்துவதே!” என்று `குபீர்’ கிளப்பினார்.

மேலும், இது தொடர்பாகப் பெயர் வெளியிட விரும்பாத இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரி ஒருவர் பேசும்போது, “திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. அதேவேளையில் இங்கு போலிச் சாமியார்களின் எண்ணிக்கையும், போதை வஸ்துகளின் நடமாட்டமும் அதிகரித்திருக்கின்றன. இதற்குச் சில சம்பவங்களையும் உதாரணமாகச் சொல்லலாம்.

கிட்னி கல் கரையுது... கொரோனா கிருமி ஓடுது..! - திருவண்ணாமலையில் குவியும் போலிச் சாமியார்கள்!

மது, கஞ்சா, ஆசிட் வீச்சு!

கடந்த ஜனவரி 8-ம் தேதியன்று, கிரிவலப் பாதையில் போலிச் சாமியார் ஒருவர் கஞ்சா போதையில் இங்குள்ள கடைகள்மீது கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டார். அவரது கை கால்களைக் கடைக்காரர்களே கட்டிப்போட்டு படுக்கவைத்த காட்சிகள் வீடியோவாக வெளிவந்தது. கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் கற்பக விநாயகர் கோயிலில் அமர்ந்து போலிச் சாமியார் ஒருவர் மது குடித்ததும், கஞ்சா விற்ற போலிச் சாமியார் கைதுசெய்யப்பட்டதும், உண்டியல் திருட்டில் ஈடுபட்ட சாமியார் சிறைக்குச் சென்றதும் செய்தியாகின. அதுமட்டுமல்ல, பெங்களூரில் தன்னைக் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிவிட்டு, திருவண்ணாமலையில் சாமியார் வேடத்தில் பதுங்கியிருந்த நபர் ஒருவரை போலீஸார் கைது செய்தார்கள். இது போன்ற பல உதாரணங்களைச் சொல்ல முடியும். தற்போது யூடியூப், ஃபேஸ்புக் வீடியோக்கள் மூலம் போலிச் சாமியார்களையும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் சக்தி வாய்ந்தவர்களாகச் சித்திரிக்கிறார்கள். இது பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்தும். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும்தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கிட்னி கல் கரையுது... கொரோனா கிருமி ஓடுது..! - திருவண்ணாமலையில் குவியும் போலிச் சாமியார்கள்!

‘இப்படியான மோசடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கட்டுப்படுத்த, என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?’ என வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி முத்துசாமியிடம் கேள்வி எழுப்பினோம். “கிரிவலப் பாதையின் பாதுகாப்பு முறைகள் குறித்து ஏற்கெனவே வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. குற்றச்செயல்களைத் தடுக்க கண்காணிப்பு கோபுரங்களை அதிகப்படுத்தவிருக்கிறோம். போலிச் சாமியார்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் துன்புறுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மற்றும் அதிகாரிகள் துணையுடன் பக்தர்களுக்கு இடையூறுகள் நேராத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார் உறுதியாக!

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?