சினிமா
Published:Updated:

“விளை நிலங்களை விட்டுத்தர மாட்டோம்!”

திருவண்ணாமலை விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவண்ணாமலை விவசாயிகள்

நம்ம மாவட்டத்துல தரிசு நிலம் எவ்வளவோ இருக்கு. சிப்காட் திட்டத்தை அங்க நிறைவேத்துங்க. எதுக்கு எங்க வயித்துல அடிக்க நினைக்கிறீங்க.

‘‘எங்கள் ஊரில், உண்ண சோறுண்டு. ஊத்தெடுக்கும் நீருண்டு. வளர்ச்சிங்கிற பெயரில் வயலை வளைக்காதீங்க. வெள்ளாமைக் காடுகளை அழிச்சி, உருவாக்கப்படுகிற சிப்காட் திட்டம் எங்களுக்கு வேண்டாம்’’ என்று 110 நாள்களைக் கடந்தும் வாழ்வாதாரப் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள், திருவண்ணாமலையைச் சேர்ந்த விவசாயிகள்.

திருவண்ணாமலை நகரிலிருந்து 10 கி.மீ தொலைவிலிருக்கின்ற 15-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும் பசுமை படர்ந்த ஆயிரம் ஏக்கர் வயல்வெளிகளையும் கையகப்படுத்தி ‘சிப்காட்’ தொழிற்பேட்டை கொண்டுவரும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது தமிழக அரசு. தொழிற்பேட்டைக்காகப் பாலியப்பட்டு, ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம், அஸ்வநாகசுரணை உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளின் மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்ற அதிகாரிகள் அளவீடு செய்கின்றனர்.

“விளை நிலங்களை விட்டுத்தர மாட்டோம்!”
“விளை நிலங்களை விட்டுத்தர மாட்டோம்!”

தங்களது விளைநிலங்களை அழிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் கலப்பையுடன் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மாவட்டத்தைச் சார்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘யார் தடுத்தாலும், சிப்காட் கொண்டு வரப்படும்’ என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். அமைச்சரை மீறி, விவசாயிகளின் குமுறலைக் காது கொடுத்துக் கேட்கவும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் முன்வராததால், போராட்டம் 110 நாள்களைக் கடந்து செல்கிறது. வேளாண் மக்களின் சூழ்நிலையை அறிய அங்கு பயணித்தோம்.

‘‘போன வருஷம் டிசம்பர் மாசத்துல எங்க போராட்டத்தைத் தொடங்கினோம். இப்ப வரைக்கும் எங்க போராட்டம் ஓய்ந்தபாடில்லை. சிப்காட் கொண்டுவந்து படிச்ச புள்ளைங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுங்க. நாங்க தப்பு சொல்லல. அதுக்கு ஏன் நல்லா விளைகிற பூமியை அழிக்கணும்?

“விளை நிலங்களை விட்டுத்தர மாட்டோம்!”
“விளை நிலங்களை விட்டுத்தர மாட்டோம்!”

நம்ம மாவட்டத்துல தரிசு நிலம் எவ்வளவோ இருக்கு. சிப்காட் திட்டத்தை அங்க நிறைவேத்துங்க. எதுக்கு எங்க வயித்துல அடிக்க நினைக்கிறீங்க. அதிகாரிங்க 1,200 ஏக்கர் நிலம் அளவீடு செஞ்சிருக்காங்க. அதுல, ஆயிரம் ஏக்கர் விளை நிலம், 500-க்கும் அதிகமா வீடுகள் இருக்கு. இதையெல்லாம் மொத்தமா புதைச்சிட்டு அதுக்குமேல கார்ப்பரேட் நிறுவனங்களைக் கொண்டுவந்து கொள்ளையடிக்கப்போறீங்களா? அப்புறம் என்னத்தய்யா சாப்பிடப்போறீங்க. எங்க மண்ணு இது. நாங்க ஏன் வெளிய போகணும். நிலக்கடலை, காய்கறி, மலர் வகைன்னு இந்த மண்ணு நல்ல விளைச்சல் தருது.

விவசாயத்தைத் தவிர வேற எதுவும் எங்களுக்குத் தெரியாது. பொறந்து வளர்ந்த ஊரையும், சோறு போட்டு வளர்க்கிற மண்ணையும் விட்டுவிட்டு எங்களை அகதிகளா வேற ஊருக்கு அனுப்பி வைக்கப் போறீங்களா? நீங்க கொடுக்கிற பணம் எத்தனை நாளைக்கு எங்க வயித்தை நிரப்பும். பணம் எங்களுக்கு வேண்டாம்.

ஆளும்தரப்புடைய நோக்கம், சிப்காட் கொண்டு வர்றது மட்டும் கிடையாது. எங்களையெல்லாம் துரத்திவிட்டுட்டு பிற்காலத்துல இங்கு இருக்கிற கவுத்தி மலை, வேடியப்பன் மலையிலிருந்து இரும்புத் தாது எடுக்கிறதுதான். 2008-ல இந்த ரெண்டு மலைகளிலிருந்தும் இரும்புத் தாது வெட்டியெடுத்துக்கிட்டுப் போற திட்டத்துக்கு உரிமம் கேட்டிருந்துச்சி ஜிண்டால் குழுமம். அந்த நிறுவனம் வெளியிட்டிருந்த சுற்றுச்சூழல் அறிக்கையிலேயே, ‘தாதுவை வெட்டியெடுக்கும்போது வர்ற சத்தம் கேட்புத் திறன் இழப்பைக்கூட ஏற்படுத்தும். அதன் துகள்களால நுரையீரல் நோய் பாதிப்பும் வரும்’னு சொல்லியிருந்தாங்க.

“விளை நிலங்களை விட்டுத்தர மாட்டோம்!”
“விளை நிலங்களை விட்டுத்தர மாட்டோம்!”

பெரிய அளவுல போராட்டம் நடத்தி ஜிண்டால் நிறுவனத்தைத் துரத்தியடிச்சோம். அப்போ, நடந்துகிட்டிருந்ததும் தி.மு.க ஆட்சிதான். இப்பவும் கவுத்தி மலையிலேருந்து இரும்புத்தாது எடுக்கிற திட்டத்தோடுதான் தி.மு.க அரசாங்கம் உள்ள வருதுன்னு சந்தேகப்படுறோம். சிப்காட் அமையும்னு அவங்க நினைக்கிற இந்த இடத்துலதான் ரெண்டு மலைகளும் இருக்குது.

எங்க போராட்டத்தை என்னென்னுகூடக் காதுகொடுத்துக் கேட்க மாவட்ட ஆட்சியரும், மாவட்ட அமைச்சர் எ.வ.வேலுவும் தயாராக இல்ல. அவங்களுக்குத் தேவை நாங்க வேர்வை சிந்தி உழைச்சி உருவாக்குன எங்க நிலம் மட்டும்தான். அது, எங்க உயிர் இருக்கிற வரைக்கும் எடுக்க விடமாட்டோம். வாழ்வாதாரத்தைக் காப்பாத்திக்கப் போராடும் எங்களைப் பார்த்து, ‘போலி விவசாயிகள்’னு கொச்சைப்படுத்துறாரு அமைச்சர் வேலு.

வேளாண் பகுதியில சிப்காட் கொண்டு வரக்கூடாது. லட்சக்கணக்கான பேர் வந்து செல்லும் ஆன்மிக பூமியான திருவண்ணாமலையின் சுற்றுச்சூழலும் பாதிக்கும். எங்க நிலத்தையும் அந்த ரெண்டு மலைகளையும் நம்பித்தான் நாங்க வாழறோம். பஞ்ச காலத்துலகூட மலையில விறகு பொறுக்கி வாழ்ந்திருக்கோம். நிலத்தைப் பிடுங்கி, அப்புறம் மலையைக் குடையும் திட்டம், நாங்க உயிரோடு இருக்கிற வரைக்கும் நடக்கவே நடக்காது. எங்களைக் கொன்னு உரமாக்கினாலும் மண்ணை விட்டுப் போக மாட்டோம்’’ என்றனர் அந்த ஊர் மக்கள் உணர்ச்சி பொங்க.

குற்றச்சாட்டு்கள் குறித்து அமைச்சர் எ.வ.வேலுவிடம் விளக்கம் கேட்டோம். ‘‘பொதுவாகவே சாலை போடணும்னாலும், தொழில்துறை வளர்ச்சிக்கும் நிலத்தைக் கையகப்படுத்திதான் எதுவுமே செய்ய முடியும். இதையெல்லாம் ஆகாயத்திலா பண்ண முடியும். விழுப்புரத்துக்கும் திருவண்ணாமலைக்கும் ரோடு ஆகாயத்திலா போட்டாங்க. நிலத்துக்கு மேலதான போட்டிருக்காங்க. கள்ளக்குறிச்சிக்கும் திருவண்ணாமலைக்கும் ரோடு எப்படிப் போட்டாங்க? வளரும் மாநிலத்தில் தொழில்களைப் பெருக்க வேண்டாமா? அங்க இருக்கிற கவுத்தி மலையிலிருந்து இரும்புத்தாது எடுக்கப் போறோம்னு சொல்றதெல்லாம் தவறான தகவல்.

“விளை நிலங்களை விட்டுத்தர மாட்டோம்!”

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக சட்டசபையில வெளிப்படையாக சிப்காட் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்குது. உதாரணமா, கலைஞர் ஆட்சியில் செய்யாறு பகுதியில இரண்டாயிரம் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் கொண்டு வந்தேன். அங்க பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தோம். அதேபோல, திருவண்ணாமலை தெற்குப் பகுதியிலும் சிப்காட் கொண்டு வந்தால்தான் வேலைவாய்ப்பைப் பெருக்க முடியும். இதில், எங்களுக்கு எந்த சுயநலமும் கிடையாது. மக்களின் கோபம் தணிந்தவுடன் நானே நேரில் சென்று பேசி சமாதானம் செய்வேன். சிப்காட் கொண்டுவந்தால், குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் பேருக்காவது வேலை கிடைக்கும்’’ என்றார்.

வளர்ச்சித்திட்டங்கள் விளைநிலங்களை அழிக்கக்கூடாது என்பதை மீறுகிறதா தமிழக அரசு?