மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 5 - திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

திருவண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்மையாக ஒரு வளத்தைச் சொல்ல வேண்டுமென்றால், அது பால்தான்.

கனவு - 5 - திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

ராமநாதபுரம் எனக்கு அறிமுகமில்லாத மாவட்டம். அடுத்ததாக நான் எழுதவிருக்கும் கடலூர் எனக்கு அறிமுகமான மாவட்டம். ஆனால், திருவண்ணாமலை இரண்டுக்கும் இடையே வந்து நின்றது. ஏற்கெனவே, என் நண்பர்கள் சிலர் வழியே திருவண்ணாமலையின் சிறப்பம்சங்கள் குறித்துக் கேட்டிருக்கிறேன். திருவண்ணாமலையார் ஆலயம், ஜவ்வாது மலை, பட்டுக்குப் பெயர்பெற்ற ஆரணி, சாத்தனூர் அணை போன்ற பகுதிகளும் எனக்கு அறிமுகம். தமிழ்நாடு முழுக்க கல்லூரி மாணவர் களிடம் உரையாடுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் களிடமும் உரையாடியிருக்கிறேன். அவர்களின் வழியாகவும் எனக்கு திருவண்ணாமலையின் தொழில் மற்றும் இளைஞர்களின் மனப்போக்கு குறித்துத் தெரியும்.

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் 
கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

எனவே திருவண்ணாமலையை, நண்பன் வீட்டுத் திருமணத்துக்குப் பணிகள் செய்யப் புறப்படும் இளைஞனின் உத்வேகத்தோடும் பொறுப்போடும் அணுகினேன். எல்லாவற்றிலும் கொஞ்சம் கூடுதல் அக்கறை எனச் சொல்லலாம். திருவண்ணாமலையார் ஆலயம் என்றால், அதில் மக்களின் பக்திச் சூழலை பாதிக்காமல் எப்படி வருமான வாய்ப்பை ஏற்படுத்த முடியும், ஜவ்வாது மலை என்றால் பழங்குடியினரின் வாழ்க்கைக்குச் சீர்கேடு இல்லாமல் எப்படி வளர்ச்சியைக் கொண்டுவர முடியும், ஆரணி என்றால் கசங்கிய துணியோடு வலம்வரும் நெசவாளர்களை எப்படி மதிப்பான பணிச்சூழலுக்கு நகர்த்த முடியும் என்று விரிவாகத் திட்டமிட்டேன். அதன் விளைவாக, நிறைய தொலைநோக்கான திட்டங்கள் என் மனதில் தோன்றின. அவற்றை அணியினருடன் கலந்தாலோசித்து, திரும்பத் திரும்பத் துல்லியப்படுத்தி முடிவுகளைக் கொண்டுவந்தேன்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்மையாக ஒரு வளத்தைச் சொல்ல வேண்டுமென்றால், அது பால்தான். தமிழ்நாட்டில் சேலத்துக்கு அடுத்தபடியாக அதிகமான கறவை மாடுகள் இங்குதான் இருக்கின்றன. மொத்தம் 1,78,195 கறவை மாடுகள். இதன் மூலம் நாளொன்றுக்குச் சராசரியாக 2,40,529 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தற்போது இந்தப் பால் வளத்தை நேரடியாக பாக்கெட் பாலாகவும், பால் பவுடர் போன்ற சாதாரண மதிப்புக்கூட்டுப் பொருளாகவும் ஆவின் நிறுவனம் நுகர்வோருக்குக் கொண்டுசெல்கிறது. இதற்காக திருவண்ணாமலை, அனக்காவூர் ஆகிய பகுதிகளில் இரண்டு பால் பதப்படுத்தும் நிலையங்களை ஆவின் நிறுவனம் நடத்திவருகிறது. ஆனால், கனவு திருவண்ணாமலையை உருவாக்குவதற்கு இவை மட்டும் போதாது. இதையும் கடந்து ஒரு மந்திர மதிப்புக்கூட்டுப் பொருள் நமக்குத் தேவையாகிறது. அதுதான் ‘A2 நெய்!’

கனவு - 5 - திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்
கனவு - 5 - திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

திசையெங்கும் திருவண்ணாமலை A2 நெய்!

முதலில் ஏன் ‘நெய்’ என்பதைச் சொல்லிவிடுகிறேன். முதல் காரணம், திருவண்ணாமலையில் நாளொன்றுக்குக் கிடைக்கும் 2,40,529 லிட்டர் பாலிலிருந்து, கிட்டத்தட்ட 14,793 கிலோ பாலாடையை நாம் உருவாக்க முடியும். ஏனென்றால், 100 லிட்டர் பாலிலிருந்து 6.15 கிலோ பாலாடை கிடைக்கும். இப்போது இந்தப் பாலாடைகள் எல்லாமே பயன்படுத்தப்படாமல் வீணாகத்தான் போகின்றன. இரண்டாவது காரணம், பால் சார்ந்து பால்கோவா, ஐஸ்க்ரீம் போன்ற உணவுப்பொருள்கள் மட்டுமே திருவண்ணாமலை முழுவதும் விற்பனைக்கு இருக்கின்றன. இதற்கு Shelf Life மிகக்குறைவு. ஆனால், நெய்க்கு Shelf Life மிக அதிகம். மூன்றாவது காரணம், நெய் Good Fat அதிகம்கொண்ட உணவுப்பொருள். Good Fat எந்தவிதத்திலும் உடலுக்குத் தீங்கிழைக்காத தன்மைகொண்டது.

இப்போது ஏன் ‘A2 நெய்’ என்பதைச் சொல்கிறேன். Simple! A2 என்பது நாட்டு மாடு. பொதுவாக, நாட்டு மாடுகளுக்கு A1 எனப்படும் கலப்பின மாடுகளைப்போல அதீத பராமரிப்பெல்லாம் தேவையில்லை. மருத்துவச் செலவுகளும் குறைவு. அதேபோல, A2 பால் சார்ந்த உணவுப்பொருள்கள் அனைத்துமே Premium வகைக்குள் வருபவை. எனவே, இவற்றுக்கென்று பெரிய சந்தை உள்ளது. இதில், அதிகமான பெரிய சந்தை A2 நெய்க்கே உள்ளது. இன்றைய தேதியில், ஒரு லிட்டர் A2 நெய்யின் விலை 4,000 ரூபாய். A1 பாலைவிட A2 பால் உடல்நலத்துக்கு உகந்தது என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அந்த விவாதத்துக்குள் செல்ல நான் விரும்பவில்லை.

சரி, இனி ஆவின் என்ன செய்ய வேண்டும்? திருவண்ணாமலை மக்களிடம் மாடு வளர்க்கும் திறன் இருக்கிறது. மாடு வளர்ப்பதற்கான கட்டமைப்பு வசதிகளும் இருக்கின்றன. இதைப் பயன்படுத்தி, மாவட்டம் முழுவதும் நாட்டுமாடு வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். பின்பு, திருவண்ணாமலை மற்றும் அனக்காவூர் நிலையங்களில் A2 வகை நெய்யை உருவாக்கும் இயந்திர வசதிகளை அமைக்க வேண்டும். இங்கே தயாரிக்கப்படும் A2 நெய்யை ஒரு Sub Brand பெயரில் பேக்கிங் செய்து, நுகர்வோருக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ‘ஆவின் A2 நெய்’ என்றேகூட சந்தைப்படுத்தலாம். ஆனால், இந்த A2 நெய், தமிழ்நாடு அளவில் வெற்றிகரமான Product-ஆக உருமாறிய பிறகு, அடுத்தகட்டமாக தேசிய சந்தைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அதற்கும் அடுத்து, வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் கொண்டுசெல்ல முயல வேண்டும். இப்படிச் செய்தால், `ஆலிவ் ஆயில்’ என்றாலே இத்தாலி ஞாபகத்துக்கு வருவதைப்போல, `A2 நெய்’ என்றாலே தமிழ்நாடு பெயர்தான் உலகத்துக்கு ஞாபகத்துக்கு வரும்!

கனவு - 5 - திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

பெருவணிகம்கொண்ட சிறுதானிய தோசை மாவு!

திருவண்ணாமலையின் அடுத்த முக்கியமான வளம், சிறுதானியம்! உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. 2019-ம் ஆண்டு நிலவரப்படி, சர்வதேச Diet Food மார்க்கெட்டின் மதிப்பு 1,920,000,000,000 (1 லட்சத்து 92 ஆயிரம்) கோடி ரூபாய். ஆம், சரியாகத்தான் பூஜ்ஜியங்களைப் போட்டிருக்கிறேன்! இந்த மதிப்பு, 2027-ம் ஆண்டுக்குள் 2,950,000,000,000 (2 லட்சத்து 95 ஆயிரம்) கோடி ரூபாய் அளவுக்கு உயரும் வாய்ப்புள்ளது. இத்தகைய இமாலய மார்க்கெட்டிலிருந்து ஒரு கணிசமான பங்கை நாம் திருவண்ணாமலையில் விளையும் சிறுதானியங்களைக் கொண்டு கைப்பற்றலாம். திருவண்ணாமலையில் ஜவ்வாது மலையைச் சுற்றியிருக்கும் சமுனாமரத்தூர் பகுதியில், சாமை விளைச்சல் அதிகமாக இருக்கிறது. மொத்தம் 18,285 ஏக்கர் விளைச்சல். தற்போது இந்தச் சாமையை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார்கள் விவசாயிகள். ஏற்றுமதி போக மிஞ்சும், சிறிய அளவு சாமையை முறுக்கு, பிஸ்கெட் போன்ற தின்பண்டங்களாக பாக்கெட் செய்து பெட்டிக்கடைகளுக்கும், மளிகைக் கடைகளுக்கும் அனுப்பிவருகிறார்கள். ஆனால், இதை மட்டுமே வைத்து சர்வதேசச் சந்தைக்கு நம்மால் செல்ல முடியாது. எனவே, இங்கும் நமக்கு ஒரு மந்திர மதிப்புக்கூட்டுப் பொருள் தேவை. அது, சிறுதானிய தோசை மாவு!

பொதுவாக, சிறுதானிய உணவுப்பொருளை எடுத்துக்கொள்வதில் சாமானியருக்கு இருக்கும் பெரும் சிக்கலே, அதன் செய்முறை புரியாமைதான். ஏனென்றால், சிறுதானியத்தை நெல் அரிசியைப்போலச் சிறிது நேரம் மட்டுமே ஊறவைத்து உண்ணும்போது, கடும் செரிமானப் பிரச்னை ஏற்படும். காரணம், சிறுதானியத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனாலேயே, நிறைய பேர் சிறுதானிய உணவை ஆசை ஆசையாக உண்ணத் தொடங்கி, சில நாள்களிலேயே கைவிட்டுவிடுகிறார்கள். எனவே, இதற்கு ஒரு தீர்வு வேண்டுமென்றால், சிறுதானியத்தைத் தோசை மாவாக நாம் உருமாற்றம் செய்ய வேண்டும். இந்தத் தோசை மாவு வடிவத்தில், நீண்ட நேரம் ஊறவைப்பது, புளிக்கவைப்பது ஆகிய அம்சங்கள் வந்துவிடுகின்றன. நீண்ட நேரம் ஊறவைப்பதாலும், புளிக்கவைப்பதாலும் சிறுதானியம் அமுதமாக மாறிவிடும்!

ஏற்கெனவே சில தனியார் நிறுவனங்கள், இந்தச் சிறுதானியத் தோசை மாவு விற்பனையைச் செய்துவருகின்றன. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் முன்னுதாரணமாகத் திகழ்ந்துவருகிறது. இந்த நிறுவனத்தின் 180 கிராம் சிறுதானிய தோசை மாவு பாக்கெட்டின் விலை 100 ரூபாய் (Average). இதேபோல, சிறுதானிய தோசை மாவுக்கென Brand-களை உருவாக்க வேண்டும். இது மட்டும் நடந்தால், இப்போது ஒரு அறுவடைக்கு 10,000 ரூபாய், 20,000 ரூபாய் என லாபம் பெற்றுவரும் சிறுதானிய விவசாயிகள், இனி 1 லட்சம், 2 லட்சம் ரூபாய் என லாபம் பெறும் நிலைக்கு உயர்வார்கள்.

திருவண்ணாமலையின் முக்கியமான வேறு சில வளங்கள், வாய்ப்புகள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்!

(இன்னும் காண்போம்)

ஆலோசனைகள் மற்றும் உங்கள் மாவட்டம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை பதிவுசெய்ய... க்ளிக் செய்யவும்