மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 6 - திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 6 - திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

சென்ற அத்தியாயத்தில் பால், சிறுதானியம் எனும் இரண்டு வளங்களைப் பார்த்தோம். இப்போது, கடலை!

சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

கடலையைப் பொறுத்தவரை, மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளில் கடலை விளைச்சல் அதிகமாக இருக்கிறது. ஆண்டுக்கு 1,80,000 டன் விளைச்சல். இந்தக் கடலையைப் பெரும்பாலும் மூட்டை மூட்டையாக இடைத்தரகர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள் விவசாயிகள். அவற்றை இடைத்தரகர்கள், சில்லறை வியாபாரிகளுக்கும் தனியார் ஆயில் கம்பெனிகளுக்கும் விற்று விடுகிறார்கள். எஞ்சும் கடலை, நொறுக்குத் தீனியாகச் சந்தைகளுக்கும் கடைகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த Process-ல் குவின்டாலுக்கு 5,000 ரூபாய் ஒரு விவசாயிக்கு நின்றாலே அதிகம்தான். ஒரு குவின்டால் என்பது 100 கிலோ. ஆக, கடலைக்கும், முந்தைய அத்தியாயத்தில் சொன்னதுபோல ஒரு மந்திர மதிப்புக்கூட்டுப் பொருளைக் கண்டடைய வேண்டும். அது, நமது பாரம்பர்ய செக்கு கடலை எண்ணெய்தான்!

இங்கே ஆவின் நிறுவனத்தின் செயல்பாட்டு மாடலை எடுத்துக் கொள்வோம். ஆவின் நிறுவனம் ஒரு கூட்டுறவு நிறுவனம். அதில் பால் உற்பத்தியாளர்களே முதலாளிகள். அதாவது, Production By Mass, Not Mass Production!

இனி, மீசை முறுக்கலாம் கடலை விவசாயிகள்!

இதே வடிவத்தை இப்போது செக்கு கடலை எண்ணெய்க்குப் பொருத்துவோம். ஆவின்போல கடலை எண்ணெய்க்கும் ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்க வேண்டும். அந்தக் கூட்டுறவு அமைப்பின் சார்பாக ஒவ்வொரு கடலை விவசாயிக்கும் எண்ணெய் ஆட்டும் செக்குகளை மானிய விலையில் விநியோகிக்க வேண்டும். பின்பு, அந்தச் செக்கைக் கொண்டு ஒவ்வொரு கடலை விவசாயியும் அவரது இல்லம் அல்லது நிலத்திலேயே செக்கு எண்ணெயைத் தயாரிப்பார்கள். பிறகு, ஆவின் பாலைக் கொள்முதல் செய்வதுபோல, செக்கு கடலை எண்ணெய் கூட்டுறவு நிறுவனமும் கடலை எண்ணெயைக் கொள்முதல் செய்ய வேண்டும். அந்தக் கொள்முதல் செய்யப்பட்ட எண்ணெயை ‘செக்கு கடலை எண்ணெய்’ பாக்கெட்டுகளாக நுகர்வோருக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

இன்றைய தேதியில் ஒரு லிட்டர் கடலை எண்ணெயின் விலை 150 ரூபாய். அதே செக்கு எண்ணெய் 350 ரூபாய். ஆக, ஆவினில் பால் உற்பத்தியாளருக்குத் தகுந்த பங்கீடு கிடைப்பதுபோலவே, கடலை விவசாயிகளுக்கும் கிடைக்கும். எல்லாம் சரியாக நடந்தால், ஒவ்வொரு கடலை விவசாயியும் குவின்டாலுக்கு 15,000 - 20,000 ரூபாய் லாபம் பெறுவார். பிறகு, எந்தக் கடலை விவசாயியும் தலையில் துண்டுபோட்டு அமரும் நிலை எக்காலத்திலும் ஏற்படாது. கூடவே, ‘நான் ஒரு முதலாளி’ என்ற தன்னம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்படும். கன்னட நடிகர் தர்ஷன் நடித்த திரைப்படத்தில், இந்தக் கருத்தை அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதன் இறுதிக் காட்சியில் ஒவ்வொரு கடலை விவசாயியும் ஒன்றாக நின்று ‘எஜமானாடா…’ என்று மீசை முறுக்கும்போது உடல் சிலிர்க்கும். அந்த மீசை முறுக்கும் வாய்ப்பைத் திருவண்ணாமலை கடலை விவசாயிகளுக்கும் நாம் அளிப்போமே!

கனவு - 6 - திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

திருவண்ணாமலையில் அடுத்ததாக நான் சொல்லப்போகும் வளம், ஒரு நிலம்! அதாவது, மேல் செங்கம் பகுதியில் ஒன்றிய அரசின் வனத்துறைக்குச் சொந்தமான 3,924 ஹெக்டேர் நிலப்பகுதி உள்ளது. இதில் 1,200 ஹெக்டேர் பகுதியைத் தேர்ந்தெடுத்து 1972-ம் ஆண்டுக் காலத்தில், ஒன்றிய அரசு ஒரு விதைப்பண்ணையை அமைத்திருந்தது. ஆனால், சரியான நிர்வாக மின்மை காரணமாக இந்த விதைப்பண்ணை 2002-ம் ஆண்டு மூடப்பட்டது. திரும்பவும் அதைத் திறக்க ஒன்றிய அரசின் சார்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. 2014-ல் அமைந்த ஒன்றிய அரசில், உறுப்பினராக அங்கம்வகித்த அ.தி.மு.க-வின் வனரோஜா, அந்த விதைப்பண்ணையை மீண்டும் திறக்கக் கோரி மனு அளித்தார். ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து எந்தச் சாதகமான பதிலும் இல்லை. இன்று அந்த விதைப்பண்ணை பாழடைந்த பேய் பங்களாபோலக் காட்சியளிக்கிறது. அந்த இடத்திலும், அதைச் சுற்றியும் யூகலிப்டஸ் மரங்களை நட்டு தற்போது வளர்த்துவருகிறது, ஒன்றிய வனத்துறை. இதன் நிலப்பரப்பு 1,736 ஹெக்டேர். இதற்கு அருகில் 20 ஹெக்டேர் நிலத்தில் தேக்கு மரம் நட்டும் பராமரித்துவருகிறார்கள். இதுபோக எஞ்சியிருக்கும் 2,168 ஹெக்டேர் நிலம் பயன்படுத்தப்படாமல் காலியாகப் போட்டுவைக்கப்பட்டிருக்கிறது.

விதைப்பண்ணையும் புதிர்ப் பூங்காவும்!

என்னிடம் இரண்டு பரிந்துரைகள் இருக்கின்றன. ஒன்று, 1,736 ஹெக்டேர் நிலத்தில் வளர்க்கப்பட்டுவரும் யூகலிப்டஸ் மரங்களை அகற்றிவிட்டு, மீண்டும் விதைப்பண்ணையைத் திறக்க நாம் முயற்சியெடுக்க வேண்டும். அதற்கு, வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும். இல்லையென்றால், ஒன்றிய அரசிடமிருந்து அந்த நிலத்தைத் தமிழ்நாடு அரசே கைப்பற்ற வழிவகைகள் உண்டா என்று ஆலோசிக்க வேண்டும். அப்படி தமிழ்நாடு அரசே கைப்பற்ற முடிந்தால் பிரச்னையே இல்லை. பள்ளிக்கல்வித்துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்த உதயச்சந்திரன், TANTEA-யைப் பெரிய Brand-ஆக வளர்த்தெடுத்த சுப்ரியா சாகு போன்ற தொலைநோக்கும், லட்சியவாதமும் நிறைந்த ஆட்சிப்பணி அதிகாரி களை நியமித்து பணிகளைத் தொடங்கிவிடலாம். ஆனால் பந்து, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கூடாரத்தில் இருக்கிறது. அவர்கள் அதை எத்தனை வேகத்தில் அடிக்கிறார்களோ, அத்தனை வேகத்தில் ஆட்டம் முன்னகரும்!

கனவு - 6 - திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

என் பங்குக்குச் சந்தை சார்ந்த சில ஆலோசனைகளை மட்டும் சொல்கிறேன். கடந்த ஆண்டு மதிப்பீட்டின்படி சர்வதேச விதைச் சந்தையின் மதிப்பு 3,15,000 கோடி ரூபாய். இந்தத் துறையில் ஜெர்மனியைச் சேர்ந்த Bayer / Monsanto நிறுவனம் முன்னணி வகிக்கிறது. இந்த நிறுவனம் ஒட்டுமொத்த விவசாயத்துக்கும் தேவையான உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் சார்ந்த சேவைகள், உரங்கள் ஆகியவற்றையும் வழங்கிவருகிறது. ஆனால், விதைகள்தான் முதன்மையான விற்பனைப் பொருள். இந்த நிறுவனத்தை மாதிரியாகக்கொண்டு நாம் மேல் செங்கம் விதைப்பண்ணையை அமைக்கலாம். அவர்களைப்போலவே விதைகளை விற்ற பிறகு, அது விளைநிலத்தில் எப்படி வளர்ந்து மகசூல் தருகிறது என்பதை ஆராய ‘Seedsman’ சேவையை நாம் ஏற்படுத்தலாம். ஆனால், கண்டிப்பாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகளை நாம் உற்பத்தி செய்யக் கூடாது. அதில் கடும் கட்டுப்பாடும் பொறுப்புணர்வும் அவசியம்!

கனவு - 6 - திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்
கனவு - 6 - திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்
கனவு - 6 - திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

இரண்டு, 2,168 ஹெக்டேர் அளவுக்குக் காலியாக இருக்கும் மீதி நிலத்தில், Maze இயற்கைப் பூங்கா அமைக்கலாம். ஏற்கெனவே, அங்கு Biodiversity பூங்கா அமைக்க வேண்டும் என்று, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை சமீபத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். அதே கோரிக்கையைத்தான் நான் கொஞ்சம் மேம்படுத்தி Maze பூங்காவாகக் கூறுகிறேன். ஏனென்றால், சுற்றுலாப் பயணிகளையும், குழந்தைகளையும் ஈர்க்க ஒரு Fantasy Factor நமக்குத் தேவை. அதுதான் Maze பூங்கா! Maze பூங்கா என்பது ஒரு புதிர்த் தோட்டம்போல. அந்தப் புதிர் தோட்டத்தின் ஒரு முனையில் ஒருவர் நுழைந்தால், அறிவைப் பயன்படுத்தி வெவ்வேறு வளைவுகளைக் கண்டடைந்து, கடைசி வளைவு வழியே வெளியே வர வேண்டும். உலகில் இதுபோல 10-க்கும் மேற்பட்ட Maze பூங்காக்கள் இருக்கின்றன. அவற்றில், சீனாவில் இருக்கும் Yancheng Dafeng Dream Maze-தான் மிகப்பெரியது. இதன் ஆண்டு வருமானம் பல்லாயிரம் கோடி ரூபாய்! இதேபோல, நாமும் மேல் செங்கத்தின் 2,168 ஹெக்டேர் காலி நிலப்பகுதியில் Maze பூங்கா உருவாக்கலாம். தண்ணீருக்காகவும் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், செங்கத்தை ஒட்டி ஓடும் செய்யாறு-பொன்னையாறு இணைப்புத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. அந்தத் தண்ணீரே பூங்கா உருவாக்கத்துக்கும் பராமரிப்புக்கும் போதுமானது!

(இன்னும் காண்போம்)