மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 8 -திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

திருவண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
திருவண்ணாமலை

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 8 -திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

பட்டுப் பூங்காவைப்போலவே இன்னொரு வாய்ப்பும் திருவண்ணாமலையில் உள்ளது. அது ஜவுளிப் பூங்கா!

சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

இன்றைய தேதிக்கு திருவண்ணாமலையிலிருந்து திருப்பூருக்கு ஜவுளித் தயாரிப்புப் பணிகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை மட்டும் பல்லாயிரத்துக்கும் மேல். இவர்களில், பெண்கள் மட்டும் 50%-க்கும் மேல் இருப்பார்கள். இது தோராயமான எண்ணிக்கைதான். உண்மையில் இதைவிடவும் அதிகமாக இருக்கலாம். இப்படிப் பணிக்குச் செல்வோர் எல்லோருமே ஜவுளி உற்பத்தியைப் பற்றி A to Z அறிந்த தொழிலாளர்கள். இவர்களின் இந்த அறிவை நாம் திருவண்ணாமலைக்குப் பயனளிப்பதாக மாற்ற முடியும். அதற்கு, Fiber-ஐ Yarn-ஆகப் பரிமாற்றம் செய்வது, Yarn-ஐ Fabric-ஆக மாற்றுவது,

Fabric-ஐ கட்செய்வது, கட் செய்த துணிகளைத் தைப்பது, தைத்த துணிகளுக்குச் சாயமிடுவது ஆகிய பணிகளை உள்ளடக்கிய Textile Value Chain-ஐ நாம் திருவண்ணாமலைக்குள்ளேயே உருவாக்க வேண்டும். ஒரு ஜவுளி தொழில்முனைவோர், Final Output எடுப்பதற்கு வேறு எந்த இடத்துக்கும் போகவேண்டிய நிலையே இருக்கக் கூடாது. அவருக்கு எல்லாமே மிக அருகில் கிடைக்க வேண்டும்.

கனவு - 8 -திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

டெக்ஸ்டைல் பார்க்!

எப்படி இந்த ஜவுளிப் பூங்காவுக்கு வடிவம் கொடுக்கலாம் என்று யோசித்தபோது, ஒன்றிய அரசின் சமீபத்திய அறிவிப்பு ஒன்று என் கண்ணுக்குப்பட்டது. அதன்படி, இந்தியாவெங்கும் ஏழு ஜவுளிப் பூங்காக்கள் அடுத்த சில வருடங்களுக்குள் உருவாக்கப்படவிருக்கின்றன. அந்த ஏழு ஜவுளிப் பூங்காக்களும் சில குறிப்பிட்ட மாநிலங்களில் அமைக்கப்படாமல், இந்தியாவெங்கும் Inclusive-ஆக மொத்தம் ஏழு மாநிலங்களில் அமைக்கப்படவிருக்கின்றன. அதாவது, மாநிலத்துக்கு ஒரு ஜவுளிப் பூங்கா!

இதுவரை ஆந்திரா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், ஒன்றிய ஜவுளித்துறைக்கு விருப்பக் கடிதங்களை அனுப்பியிருக்கின்றன. அவற்றில், தமிழ்நாடும் ஒன்று. இந்த ஜவுளிப் பூங்கா மட்டும் நமக்கு ஒதுக்கப்பட்டால் பிரச்னையே இல்லை. அதை அப்படியே திருவண்ணாமலைக்குத் திருப்பி விட்டுவிடலாம். செங்கம் சிப்காட் பகுதியில் அதற்கென தயாராக 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் நமக்கு உள்ளது. தற்போது சாலை வசதிகளும் அங்கே வந்துவிட்டதால், அதையே ஒன்றிய அரசிடம் எடுத்துச்சொல்லி எளிதாக அனுமதி வாங்கிவிடலாம்.

ஒன்றிய அரசின் ஜவுளிப் பூங்கா செயல்திட்டத்தில், மொத்தம் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, Greenfield. இன்னொன்று Brownfield. இவற்றில், செங்கம் பகுதியில் ஏற்கெனவே சில அடிப்படை வசதிகள் நமக்கு இருப்பதால், Brownfield வகை நமக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு அதிகம். அப்படி Brownfield ஒதுக்கப்பட்டால், நமக்கு உள்கட்டமைப்பு நிதியாக 200 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கும். கூடவே, ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மீதி நாம் செலவழிக்கவேண்டிய தொகையை PPP (Public Private Partnership) மூலமாகத் திரட்டித் தரவும் ஒன்றிய அரசு தயாராக இருக்கிறது. பிறகென்ன… இந்த வாய்ப்பை அப்படியே கெட்டியாகப் பிடித்து, திருவண்ணாமலையை இரண்டாம் திருப்பூராக உருவாக்குவோம்!

ஆனால், திருவண்ணாமலை டெக்ஸ்டைல் பார்க்கைப் பெண்களுக்கான உள்ளாடைகள் தயாரிக்கும் டெக்ஸ்டைல் பார்க்காக நாம் உருவாக்க வேண்டும். ஏனென்றால், பெண்களுக்கான உள்ளாடைகளின் உலகச் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய். இதில், குறைந்தது 1% சந்தையைப் பிடிக்க முடிந்தாலே, நாம் வருடத்துக்கு 3,000 கோடி ரூபாய் பார்க்கலாம். கூடவே, 60,000 வேலைவாய்ப்புகளையும் புதிதாக உருவாக்கலாம்.

கனவு - 8 -திருவண்ணாமலை - வளமும் வாய்ப்பும்

பக்தி... ஆன்மிகம்... சுற்றுலா!

திருவண்ணாமலையில் கடைசியாக நான் பட்டியலிடப்போகும் வளம், சுற்றுலா. இதை பக்தி, ஆன்மிகம், இயற்கை என மூன்று வகையான சுற்றுலாக்களாகப் பிரித்திருக்கிறேன்… முதலில், பக்தி!

திருவண்ணாமலை மாவட்டத்தின் பெயர்க் காரணமே அண்ணாமலையார் ஆலயத்திலிருந்துதான் தொடங்குகிறது. சிவபெருமானின் அக்னி தலமாகக் கருதப்படும் இக்கோயிலின் கிரிவல நிகழ்வில், ஆண்டுதோறும் 25 லட்சம் மக்கள் பங்கேற்கிறார்கள். இதுபோக, மாதம்தோறும் பெளர்ணமி நாளன்று கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் திரள்கிறார்கள். இத்தகைய சிறப்புமிக்க திருவண்ணாமலையார் கோயிலை, தென்னிந்தியாவின் மிகமுக்கிய சைவத்தலமாக மாற்ற வேண்டும். வைணவத்தினருக்கு எப்படி ஒரு திருப்பதியோ அதுபோல சைவத்துக்கு திருவண்ணாமலையார் கோயிலை நிலைநிறுத்த வேண்டும். இதற்குப் பங்களிக்கும் வகையில், சைவம் சார்ந்த நவீன வணிகப் பொருள்களை விற்பதற்காக பீனிக்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூபோல ஒரு மால் திறக்கலாம். இங்கே, சிவன் படம் பொறித்த டி-ஷர்ட்கள், ஸ்படிக Pendant மற்றும் Bracelet ஆகிய வடிவங்களில் பொருள்கள் விற்கலாம். முக்கியமாக, திருவண்ணாமலை சிவனுக்கு நெய் விளக்கு ஏற்றுவார்கள். இதை மையப்படுத்தி அறநிலையத்துறை சார்பில் நெய் விளக்கு எண்ணெய் மற்றும் திரி பாக்கெட்களை நல்ல தரத்தில் விற்பனைக்குக் கொண்டுவரலாம்.

அண்ணாமலையார் ஆலயத்தைக் கடந்து, செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில், படவேடு ரேணுகாம்பாள் கோயில், தென்னாங்கூர் பாண்டுரங்கர் கோயில், தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில், கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோயில் ஆகிய பக்தித் தலங்கள் திருவண்ணாமலையில் உள்ளன. கூடவே, வந்தவாசி தர்கா, கணிக்கிலுப்பை புத்தர் கோயில், திருமலையில் சமணர் கோயில், சீயமங்கலம் மற்றும் மாமண்டூரில் இருக்கும் குடைவரைக் கோயில் ஆகியவையும் புகழ்பெற்ற தலங்களே. ஆனால், இங்கு இதுவரை மக்களின் வருகை குறைவாகவே இருக்கிறது. திருவண்ணாமலைக்கு வருவோரும்கூட இந்தக் கோயில்களைப் பற்றி தெரியாததால், அப்படியே இல்லங்களுக்குத் திரும்பிவிடுகின்றனர். எனவே, தமிழ்நாடு சுற்றுலாத்துறை Circuit Tourism போன்றதொரு திட்டத்தை இங்கே அமல்படுத்த வேண்டும்.

அடுத்து, ஆன்மிகம்! பக்தி, இறை வழிபாடு சார்ந்தது என்றால், ஆன்மிகம் தத்துவம் சார்ந்தது. இத்தகைய ஆன்மிகத்துக்கு திருவண்ணாமலையில் நிறைய சந்தை வாய்ப்புகள் உள்ளன. யோசித்துப் பார்த்தால், கோவையின் ஈஷா மையத்தைப் போன்றதொரு பிரமாண்ட ஆன்மிக மையத்தை நாம் திருவண்ணாமலையில் தொடங்கலாம். ஈஷா, ஈசனையே பிரதான முகமாக முன்னிறுத்துகிறது. திருவண்ணாமலை என்றாலே ஈசன்தான். எனவே, சரியாகப் பொருந்தும். என்னைக் கேட்டால், இந்து சமய அறநிலையத்துறையே இந்த ஆன்மிக மையத்தை முன்னின்று தொடங்க வேண்டும். இதன் வழிநடத்துனர்களாக சித்தர் பெருமக்களை நியமிக்கலாம். மையத்தில் அமைதியான சூழலுடன்கூடிய தியான மண்டபம், மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற புத்துணர்ச்சி மையம், யோகா Workshop ஆகிய அம்சங்கள் இடம்பெற வேண்டும். இதோடு, Overstress என்று ஓடிவரும் Elite மக்களை ஈர்ப்பதற்காக Spa, Meditation Centre ஆகிய வசதிகளையும் தனியார்களைக் கொண்டு தொடங்கலாம்.

மூன்றாவதாக, இயற்கை! திருவண்ணாமலை இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். முக்கியமாக, அழகிய, பசுமையான மலைகளைக்கொண்ட மாவட்டம். அதில் முக்கியமானது, ஜவ்வாது மலை. இங்கே அரசு சார்பாகத் தங்கும் குடில்கள், மலையேற்றம் (Trekking) உள்ளிட்ட கமர்ஷியல் சுற்றுலாவுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படவிருக்கின்றன. கிட்டத்தட்ட கேரளாவின் தேக்கடிபோல மேம்படுத்தும் செயல்திட்டங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனால், எனக்கு இதில் அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஏனென்றால், ஜவ்வாது மலையைச் சுற்றிலும் 80,000 பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஜவ்வாது மலை முழுக்க முழுக்க அவர்களுக்கு உரிமையானது. அந்த நிலத்தில், எந்தவிதமான கமர்ஷியல் சுற்றுலாச் செயல்பாடுகளையும் அவர்கள் விரும்பவில்லை என என்னுடைய ஆய்வில் திட்டவட்டமாகத் தெரியவந்துள்ளது. ஒருவேளை அந்த மக்களுக்கு விருப்பமென்றால், ஜவ்வாது மலையை கமர்ஷியல் சுற்றுலாத்தலமாக மாற்றலாம். இல்லையெனும் பட்சத்தில், அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாற்றுப் பொருளாதாரத் திட்டங்களை நாம் பரிசீலிக்கலாம்.

சாத்தனூர் அணைக்கட்டு மற்றும் பூங்காவையும் திருவண்ணாமலையின் முக்கியமான இயற்கை சார்ந்த சுற்றுலாத்தலமாகச் சொல்லலாம். ஆனால், இங்கே புதிதாக எந்த அம்சமும் இல்லாததால், சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இந்தப் பகுதியில் ரோப் கார், தீவுத்திடல் பூங்காவில் இருப்பது போன்ற குட்டி ரயில் உள்ளிட்ட வசதிகளை மட்டுமாவது ஏற்படுத்தலாம். இவை சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க உதவும். 4,500 அடி உயரம் கொண்ட பர்வத மலை இன்னுமோர் இயற்கை சார்ந்த சுற்றுலாத்தலம். இந்த மலைமீது மல்லிகார்ஜூனர் ஆலயம் உள்ளது. இதற்காக பக்தர்கள் Trekking போல மலையேறிச் சென்று தரிசனம் செய்வார்கள். இங்கே கழிப்பறை, உணவகங்கள் ஆகிய வசதிகளை ஏற்படுத்தினால், மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

இத்துடன் கனவு திருவண்ணாமலையை நிறைவுசெய்கிறேன் நண்பர்களே! ராமநாதபுரத்தைப்போல திருவண்ணாமலையும் எனக்கு முதலில் பின்தங்கிய மாவட்டமாகவே தெரிந்தது. ராமநாதபுரத்திலாவது கடல் உண்டு. ஆனால், திருவண்ணாமலையில் அதுவும் இல்லை. ஆனால், உள்ளே சென்று பார்க்கையில் திருவண்ணாமலையின் ஒவ்வொரு வட்டத்திலும் நிறைய புதிய வளங்களும் வாய்ப்புகளும் எனக்குத் தெரிந்தன. அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டியே நான் உங்கள் முன்னால் பட்டியலிட்டேன். இந்த வளங்களையும் வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தினால், தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் டாலர் கனவுக்கு திருவண்ணாமலை பெரிய பங்கை நிச்சயம் அளிக்கும். அது நடக்கக்கடவதாக!

(இன்னும் காண்போம்)

நம் அடுத்த கனவு கடலூர்!