அரசியல்
Published:Updated:

வன்முறையைப் பார்த்த அதிர்ச்சியிலருந்து பொம்பளைங்களும் குழந்தைகளும் மீளலைங்க!

வீரளூர்
பிரீமியம் ஸ்டோரி
News
வீரளூர்

- வீரளூர் சாதிய வன்முறை!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் கடைக்கோடி கிராமம் வீரளூர். இந்தப் பகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். யாதவர், ஆதிதிராவிடர், அருந்தியர் சமூக மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள். இவர்களுக்குள் மயானப் பாதையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கடந்த ஆண்டு முதல் தகராறு நீடித்துவருகிறது.

வன்முறையைப் பார்த்த அதிர்ச்சியிலருந்து பொம்பளைங்களும் குழந்தைகளும் மீளலைங்க!

வன்னியர், யாதவர் உட்பட இடைநிலைச் சமூக மக்கள், போளூரிலிருந்து மேல்சோழங்குப்பம் செல்லும் பொதுப்போக்குவரத்துச் சாலையைச் சுடுகாட்டுக்காகப் பயன்படுத்துகிறார்கள். பட்டியலினச் சமூக மக்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தின் வழியாகச் சடலங்களை எடுத்துச் செல்கிறார்கள். அந்தப் பாதையை முன்வைத்து பட்டியலினச் சமூகத்தினருக்குள்ளேயே ஏற்பட்ட பிரச்னையால், அருந்ததியர் சமூக மக்கள் பொதுப்போக்குவரத்துச் சாலை வழியாகச் சடலத்தை எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது, ஆதிக்க சமூக மக்கள் வழிவிட மறுத்துவிட்டனர். இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய அமைதிக் கூட்டத்தில், அருந்ததியர் சமூக மக்களுக்கு நியாயம் கிடைத்தது. ஜனவரி 12-ம் தேதி, உடல்நலக் குறைவால் உயிரிழந்த நாட்டான் என்பவரின் உடலைக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அருந்ததியர் சமூக மக்கள் பொதுவழியில் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

ஜனவரி 15-ம் தேதி அமுதா எனும் பெண் இறந்துவிட, அவரின் உடலையும் அதே பொதுவழியில் கொண்டு செல்ல ஏற்பாடுகளைச் செய்தனர். அதனால், ஆத்திரமடைந்த ஆதிக்க சமூக மக்கள், 16-ம் தேதி மாலை, கூட்டமாகத் திரண்டு சென்று அருந்ததியர் குடியிருப்புக்குள் தாக்குதல் நடத்தினர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராமன் உட்பட சிலரது வீடுகள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. செங்கற்கள் வீசப்பட்டதில், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து நொறுங்கின. வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டது என்கிறார்கள்.

வன்முறையைப் பார்த்த அதிர்ச்சியிலருந்து பொம்பளைங்களும் குழந்தைகளும் மீளலைங்க!
வன்முறையைப் பார்த்த அதிர்ச்சியிலருந்து பொம்பளைங்களும் குழந்தைகளும் மீளலைங்க!

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த 21 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர். கைது நடவடிக்கை தொடர்வதால், ஆண்கள் மொத்தமாக வெளியூர் சென்று தலைமறைவாகிவிட்டனர். ஒரு வாரத்துக்கு மேலாகியும் பதற்றம் நீடிப்பதால், வீதிக்கு வீதி தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

வீரளூர் மக்களிடையே ஓராண்டாகவே நிலவிவந்த இந்த மோதலை, அதிகாரிகள் தடுக்கத் தவறியதுதான் இவ்வளவு பெரிய கலவரத்துக்குக் காரணம் என்கிறார்கள். கள நிலவரம் அறிய வீரளூர் கிராமத்துக்குச் சென்றோம். நம்மிடம் பேசிய அருந்ததியர் சமூக மக்கள், ‘‘வீதிக்கொரு சாதி... சாதிக்கொரு சுடுகாடுன்னு... கடைசியா எரியறப்போற பாதையிலகூட ஏற்றத்தாழ்வு இருக்குங்கறது வேதனையா இருக்குங்க. செத்து சுடுகாட்டுக்குப் போகும்போதுகூட அசிங்கப்பட்டு போகணும்கிறதை நினைக்கும்போது, உண்மையிலேயே வேதனையா இருக்கு. எல்லாரும் நடக்கிற பாதையில நாங்களும் நடந்துட்டா என்னங்க குறைஞ்சுபோயிடும்? அந்தக் கும்பல் பண்ணின வன்முறையைப் பார்த்த அதிர்ச்சியிலருந்து இன்னும் எங்க வீட்டுப் பொம்பளைங்களும் குழந்தைகளும் மீளலைங்க. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க-னு கட்சி வேறுபாடு இல்லாம, சாதிக்காக ஒண்ணு சேர்ந்து அவங்க வெறியாட்டம் போட்டாங்க. அந்தக் கலவரத்துல போலீஸ் அவங்க மேல நடவடிக்கை எடுத்ததுனால, அவங்க வயல்கள்ல எங்களுக்கு வேலை தர்றதில்லை. அவங்க நடத்துற ஹோட்டல்ல சாப்பிட அனுமதிக்கறதில்லை. குழந்தைக என்ன பாவம் பண்ணுச்சுங்க... அதுங்களுக்குப் பால்கூட கொடுக்க மறுக்கறாங்க. கதவை உள்ளாரப் பூட்டிட்டு, கதறி அழுறதைத் தவிர எங்களுக்கு வேற வழி தெரியலை’’ என்றனர் ஆதங்கமும் கண்ணீருமாக.

வன்முறையைப் பார்த்த அதிர்ச்சியிலருந்து பொம்பளைங்களும் குழந்தைகளும் மீளலைங்க!

ஆதிக்க சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குச் சென்றோம். நமது கண்களில் ஆண்கள் தென்படாததால், அங்கிருந்த பெண்களிடம் பேசினோம். ‘‘காலனி மக்கள் சொல்றதெல்லாம் பொய்ங்க. தகராறு நடக்கலைன்னு சொல்லலை. ஆனா, கலவரம்னு சொல்ற அளவுக்கெல்லாம் நடக்கலை. எங்க ஆளுககூட எப்பவுமே சண்டையிழுக்கற முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராமன் உட்பட, ஒரு சிலரோட வீடுகளை எங்க ஆட்கள் தாக்கினாங்கன்னு கேள்விப்பட்டோம். ஆனா, எங்க ஆளுக திரும்பி வந்த பிறகு, அவங்களாவே பொருள்களை வீதியில போட்டு உடைச்சு வீடியோ எடுத்து பரப்பறாங்க. அதைக் காமிச்சு, எங்க கிராமத்து ஆண்களை அரெஸ்ட் பண்ணவெச்சுருக்காங்க. ஸ்கூல், காலேஜுக்குப் போற பசங்களைக் கூட அரெஸ்ட் பண்ணவெச்சுட்டாங்க. பட்டியலினச் சமூகத்தினர் எது சொன்னாலும், அதுதான் உண்மைன்னு எல்லாரும் நம்பறாங்க. எங்க வீதி வழியா சவ ஊர்வலம் போனா, பட்டாசு கொளுத்தி எங்க வீடுகள் மேல வீசறாங்க. குடிச்சுட்டு தகராறு பண்றாங்க. அதனாலதான் வர வேண்டாங்கறோம். பொய் வழக்குல அரெஸ்ட் ஆனவங்களை போலீஸ் விடுதலை பண்ணணும்’’ என்றனர்.

முத்துராமன்
முத்துராமன்

வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயாவிடம் பேசினோம். ‘‘மனிதர்களில் அனைவருமே சமம். வேறுபாடுகள் பார்க்கக் கூடாது என்று இரு சமூக மக்களையும் அழைத்து அறிவுறுத்தியிருக்கிறோம். நீண்டநாள்களாக அவர்களுக்குள் பிரச்னை இருக்கிறது. பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார்.

சுடுகாட்டுப் பாதையிலும் சாதி குறுக்கே நின்றுகொண்டிருக்கும் அவலத்துக்காக நாம் வெட்கப்பட வேண்டும்!