மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 33 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

திருவாரூர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவாரூர்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 33 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் , கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் , கனவு தமிழ்நாடு

ஏக்கருக்கு ரூ.25 லட்சம்... ஏற்றம் தரும் விரால் மீன் பண்ணை!

வில்லேஜ் குக்கிங் சேனல், உலகம் முழுக்க பிரபலமான நம்மூர் யூடியூப் சேனல். அதில், Snakehead Murrel Fish (விரால் மீன்) என்று Search செய்து பாருங்கள். பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத, நாவில் சுவையுணர்வைச் சுண்டியிழுக்கும் வகையில் விரால் மீன் வறுவலைச் சமைத்துக் காட்டியிருக்கிறார்கள். கர்ப்பிணிகளுக்கும், இளம் தாய்மார்களுக்கும் மட்டுமல்லாமல், உடல் நலிவுற்றோரின் பிணி போக்கும் மருத்துவக் குணம்கொண்ட விரால் மீன், வஞ்சிரத்துக்கு அடுத்தபடியாக நல்ல விற்பனை வாய்ப்புள்ள ஒன்று. கட்லா, கெண்டை, ரோகு, சிலேப்பி, மிர்கால் வகை மீன்களை வளர்த்தால் கிடைக்கும் வருமானத்தைவிட அதிகமாக இதில் பெறலாம்!

விரால் மீனில் 30 வகைகள் உண்டு என்றாலும், 10 வகையான மீன்களே பண்ணைகளுக்கு ஏற்றவை. வருடம் முழுவதும் வருமானம் ஈட்டித்தரும் விரால் மீன் பண்ணை அமைக்க, தோராயமாக ரூ.50,000 செலவாகும். ஒரு ஏக்கர் அளவில் குளம் வெட்டி, நீர் நிரப்பி சுமார் 7,000 மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்தால், அதில் 5,000 மீன்கள் மட்டுமே மிஞ்சும். பத்து மாதங்களில் ஒவ்வொன்றும் முக்கால் கிலோவிலிருந்து ஒரு கிலோ அளவுக்கு வளர்ந்துவிடும். பின்னர் அவற்றை விற்பனைக்குக் கொண்டுசெல்லலாம். சந்தையில் ஒரு கிலோ மீன் சுமார் 500 ரூபாய் வரை விலை போகிறது. அந்தவகையில், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 லட்சம் வருமானம் பெற முடியும். திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவுக்கு நிலப்பரப்பு உள்ளது. இதிலிருந்து ஒரு சதவிகிதம் அளவுக்கு எடுத்துக்கொண்டாலே ஏறக்குறைய 4,000 ஏக்கர் அளவுக்கு மீன் பண்ணைகளை ஆங்காங்கே அமைக்க முடியும். இதிலிருந்து ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம். இதனால், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.

கனவு - 33 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

பொதுவாக விவசாயிகள் ஒரு ஏக்கரில் நடவு நட்டால், ஆண்டு ஒன்றுக்கு நெல் விளைச்சலில் இருந்து தோராயமாக ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே வருமானம் ஈட்ட முடியும். ஆனால், விரால் மீன் பண்ணை அமைத்தால், ஆண்டுக்கு 25 லட்ச ரூபாய் வருமானம் பெறலாம். இதைக் கருத்தில்கொண்டு, தேவையான இடங்களில் மீன் பண்ணைகளை அமைத்து வருமானத்தைப் பெருக்கலாம். பொதுவாக, விரால் மீன்கள் ஒன்றையொன்று தின்று உயிர்வாழும். எனவே, ஒரே வயதுடைய மீன்களை வளர்ப்பது அவசியம். விரால் மீன்கள் உயிரோடு இருந்தால்தான் உரிய விலை கிடைக்கும். அதேபோல இவை எளிதில் அழுகிவிடக்கூடியவை என்பதால் இவற்றை உரியமுறையில் பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டியது அவசியம். இதற்கான பதப்படுத்துதல் தொழிற்சாலையை, திருவாரூர் பகுதியில் நிறுவ வேண்டும்.

கனவு - 33 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

திருவாரூர் மாவட்டத்தில் நிறைய மீன் பண்ணைகள் இருந்தாலும், அவற்றில் விரால் மீன்களை வளர்ப்பதில்லை. விரால் மீன்கள் வளர்ப்பு குறித்த பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் மீன் வளத்துறையுடன் இணைந்து, இந்த மாவட்டத்தில் நீர்வாழ் உயிரின மற்றும் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை ஆரம்பிக்க வேண்டும். அங்கே விரால் மீன்கள் வளர்ப்பு, பாதுகாப்பு, இனப்பெருக்கம், தொழில்நுட்ப ஆலோசனைகள், உணவுகள் உள்ளிட்டவற்றை அளிப்பதன் வாயிலாக விரால் மீன்கள் உற்பத்தியைப் பெருக்க முடியும். இதனால், பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றம் காண்பதோடு நிறைய பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

திருவாரூரில் தென்னை ஃபர்னிச்சர் தொழிற்சாலை!

இருபதாம் நூற்றாண்டில், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மீதான கவனம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரித்தபோதிலும், அங்கே மாடித் தோட்டங்களும் முளைவிடத் தொடங்கிவிட்டன. சிறிய இடமாக இருந்தாலும், பெரிய நிலமாக இருந்தாலும் அதில் இயற்கை விவசாயம் செய்வதற்கு இன்றைய தலைமுறையினரில் பலர், பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். சுற்றுச்சூழலை பாதிக்காத பொருள்களைப் பயன்படுத்துவதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். மரங்களை அழித்து அதிலிருந்து பொருள்களை உருவாக்காமல், ஏராளமான மரங்களை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் மூலப்பொருள்களைக்கொண்டு பொருள்களைத் தயாரிக்கும் இடத்துக்கு நகர்ந்திருக்கின்றனர்.

கனவு - 33 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

குறிப்பாக, தென்னையிலிருந்து பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிப்பது அதிகரித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, தென்னையைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஃபர்னிச்சர்களுக்கு நுகர்வோர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தென்னையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படக்கூடியவையே என்றாலும், நன்கு வைரம் பாய்ந்த தென்னை மரங்களை முன்பெல்லாம் ரீப்பர்களாகச் செதுக்கி, வீட்டுக்கு மேற்கூரையைத் தாங்கும் கட்டுமானங்களுக்குப் பயன்படுத்திவந்தனர். இன்றைய தொழில்நுட்பச் சாத்தியங்களால் இப்போது அவற்றிலிருந்து பல்வேறு வகை ஃபர்னிச்சர்களைத் தயாரிக்கிறார்கள். குறிப்பாக நாற்காலி, கட்டில், டீபாய், டைனிங் டேபிள் எனப் பலவற்றைத் தயாரிக்கிறார்கள். எளிதில் தீப்பிடிக்காத, நீடித்து உழைக்கக்கூடிய, அதிக எடை தாங்கக்கூடியதாகவும் விலை குறைவாகவும் இருப்பதால் பலரின் கவனம் இப்போது தென்னை ஃபர்னிச்சர் பக்கம்தான்!

கனவு - 33 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

பொதுவாக, தென்னை மரங்களின் ஆயுட்காலம் என்பது சுமார் 80 ஆண்டுகள். தென்னை மரத்தில் வைரம் பாயத் தோராயமாக 20 ஆண்டுகள் வரை தேவைப்படும். இதுவரை ஃபர்னிச்சர் பயன்பாட்டுக்கான நோக்கில் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டதில்லை. இனிமேல் விவசாயிகள் இதை கவனத்தில்கொண்டு தென்னங்கன்றுகளை நடலாம். இவை உடனே மகசூல் தராது என்பதால், தென்னங்கன்றுகளை நடும்போது, அவற்றுக்கு இடையே போதுமான இடைவெளிவிட்டு ஊடுபயிர்களான மணிலா, கேழ்வரகு, உளுந்து, மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் போன்ற பயிர்களை விளைவிக்க வேண்டும். இதனால் விவசாயிகளுக்குத் தொடர்ச்சியாக வருமானம் கிடைக்கப்பெறும். 20 ஆண்டுகளைக் கடந்த பிறகு, ஃபர்னிச்சர் பயன்பாட்டுக்கான நோக்கில் பயிரிடப்பட்ட தென்னை மரங்களை மட்டும் அறுவடை செய்யலாம்.

தென்னை மகசூலானது ஏக்கர் ஒன்றுக்கு 100 மரங்கள் வீதம் கிடைக்கிறது. அந்தவகையில் திருவாரூருடன் தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட இடங்களிலுள்ள தென்னை மரங்களையும் சேர்த்தால் நமக்கு 30,000 ஏக்கர் அளவுக்கு மகசூல் கிடைக்கும். இதிலிருந்து 30 சதவிகித மரங்களை மட்டும் எடுத்துக்கொண்டாலே 9 லட்சம் மரங்கள் கிடைக்கும். பொதுவாக ஒரு மரத்திலிருந்து பல வகையான பொருள்களைத் தயாரிக்க முடியும். அவற்றைச் சந்தையில் 10,000 ரூபாய்க்கு விற்கலாம். அந்தவகையில் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை 900 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். இதற்கான தொழிற்சாலையை அமைக்கும்போது, நேரடியாகவும் மறை முகமாகவும் சுமார் 3,000 பேர் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். சுமார் 20,000 விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள்.

கனவு - 33 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

பொதுவாக, ஒரு வளம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கேதான் அதற்கான தொழிற்சாலையை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் தென்னை மரங்கள் அதிகம் விளைவது பொள்ளாச்சியிலும் கன்னியாகுமரியிலும்தான். அந்தவகையில், தென்னை ஃபர்னிச்சர் தொழிற்சாலை மேற்கண்ட இடங்களில் ஏதாவது ஒன்றில் இடம்பெறுவது நல்லது. ஆனால், இதிலிருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு மட்டும் விலக்கு அளிப்போம். திருவாரூரில் சுமார் 9,500 ஏக்கர் அளவுக்குத்தான் தென்னை மரங்கள் உள்ளன. ஆனால், இந்த மாவட்டத்தைப் பொருளாதாரரீதியாக முன்னெடுத்துச் செல்ல இங்கே தென்னை ஃபர்னிச்சர் தொழிற்சாலையை நிறுவவேண்டியது அவசியமாகிறது.

(இன்னும் காண்போம்)