மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 35 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

நெல்
பிரீமியம் ஸ்டோரி
News
நெல்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 35 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் , கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் , கனவு தமிழ்நாடு

மாப்பிள்ளை சம்பா அரிசி... மகசூல் 30,000 டன்!

திருவாரூர் மாவட்டம், ஆளுமைகள் நிறைந்த மாவட்டம். அரசியலில் எவரும் எட்டிவிட முடியாத இலக்கை விட்டுச் சென்றுள்ள மு.கருணாநிதி, திரையில் சிகரம் தொட்ட கே.பாலசந்தர் ஆகியோர் பிறந்த மண் இது. இந்தப் பட்டியலில் இனி இன்னொருவரையும் சேர்த்துக் கொண்டு அவர் புகழ்பாட வேண்டும். அவர்தான் நெல் ஜெயராமன்!

ஒரு நெல்லில் தொடங்கி 170 வகையான பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்த விவசாயி. கறுப்பு கவுனி, பூம்பாறை, கைவிரசம்பா, காட்டுயாணம், சீரகச்சம்பா, மாப்பிள்ளை சம்பா, இலுப்பைப்பூ சம்பா எனப் பல நெல் ரகங்களை அவர் சேகரித்ததோடு மட்டும் நிற்காமல், அவற்றைத் தன் நிலத்தில் பயிரிட்டு, அவற்றின் தரத்தைச் சோதித்தவர். அதைப் பிற விவசாயிகளும் பயிரிடும் வகையில், இத்தகைய ரகங்களில் ஒன்றை 2 கிலோ கொடுத்து அடுத்து வரும் ஆண்டில் 4 கிலோவாகத் திருப்பி வாங்கி, பாதுகாத்து வைத்தவர். ஆண்டுதோறும் பாரம்பர்ய நெல் திருவிழாவை நடத்தி, அதை மக்கள் இயக்கமாக மாற்றியவர். இப்போது அவர் நம்மிடையே இல்லையென்றாலும், அவர் பாதுகாத்த நெல் ரகங்கள் நம்மிடம் பொக்கிஷமாக இருக்கின்றன. அந்த ரகங்களில் பல, சுமார் 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளால் பயிரிடப்பட்டும், தொடர்ந்து பாதுகாக்கப்பட்டும்வருகின்றன. நெல் ஜெயராமன் பாதுகாத்த மாப்பிள்ளை சம்பா தற்போது பல கோடி வருமானம் பெறும் அளவுக்கு மதிப்பு வாய்ந்த ஒன்றாகச் சந்தையில் மாறியிருக்கிறது.

செக்கச் செவேர் என்று காட்சியளிக்கும் மாப்பிள்ளை சம்பா புரதம், நார்ச்சத்து, உப்பு, இரும்பு உள்ளிட்ட சத்துகளைக் கொண்டிருப்பதால் உடல்நலனைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் பெயரே வசீகரிக்கும் ஒன்றாக இருப்பதற்குப் பின்னால் சுவாரஸ்யமான காரணம் உண்டு. ஆண்களுக்கு வீரியம் அதிகரிக்க உதவுவதில் இந்த அரிசி முக்கியப் பங்காற்றுவதாக நம்பிக்கை இருப்பதால், புது மாப்பிள்ளைகள் இத்தகைய அரிசி சாதத்தை விரும்பி உண்பார்களாம். அதனாலேயே இதற்கு அத்தகைய பெயர் வந்தது என்கிறார்கள்.

கனவு - 35 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

இந்திய அளவில் பாசுமதி அரிசி மற்றும் பிற அரிசி விற்பனையிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் மட்டும் பல லட்சம் கோடி. இதில் `டாவட் ஃபுட்ஸ்’ (Daawat Foods Ltd) என்கிற நிறுவனம் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 500 கோடி அளவுக்கு வருமானம் பெறுகிறது. டாவட் ஃபுட்ஸ் தயாரிப்பைப் போன்றதொரு பிராண்டை ‘மாப்பிள்ளை சம்பா’ என்கிற பெயரிலேயே திருவாரூர் மாவட்டத்தில் உருவாக்க வேண்டும். பாரம்பர்யமிக்க, தனித்துவமான ஒரு பொருளுக்கு அளிக்கப்படும் மதிப்புமிக்க அடையாளம்தான் புவிசார் குறியீடு (Geographical Indication). இது அந்தப் பொருளின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. சேலம் மாம்பழம், பழநி பஞ்சாமிர்தம், திருநெல்வேலி அல்வா, வில்லிப்புத்தூர் பால்கோவா உள்ளிட்ட பல பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் மாப்பிள்ளை சம்பா பிராண்டடு அரிசிக்கு, புவிசார் குறியீடு பெறுவது அவசியம்.

இந்தக் குறியீட்டை பெறுவதால், நம்மைத் தவிர வேறு யாரும் மாப்பிள்ளை சம்பா பெயரைப் பயன்படுத்த முடியாது. மேலும், அந்தப் பெயரைக் கூறி விற்பனையும் செய்ய முடியாது. நம்மூர் விவசாயிகள் விளைவிக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு உலக அளவில் கிராக்கி உருவாகி, ஏற்றுமதி அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இதே பெயரில் சந்தைக்கு வரக்கூடிய போலிகளும் ஒழிக்கப்பட்டுவிடும்.

கனவு - 35 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

அதற்கு டெல்டா மாவட்டங்களில் இந்தப் பயிர் விளைவிக்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். உரிய விலை கிடைக்க வழி செய்யும்பட்சத்தில் பலரும் ஆர்வமாக முன்வருவார்கள். அந்தவகையில், நான்கு மாவட்டங்களிலிருந்து தோராயமாக 40,000 ஏக்கருக்கு மாப்பிள்ளை சம்பா பயிரிட்டால், ஏறக்குறைய 30,000 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் வைத்து விற்பனை செய்தால், ஆண்டுக்கு சுமார் 450 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.

கனவு - 35 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

மாப்பிள்ளை சம்பா அரிசியை நவீன தொழில்நுட்ப முறைகளைக் கொண்டும், சிறப்பான முறையில் பேக்கேஜிங், பிராண்டிங் செய்தும் உள்ளூர்களுக்கு அனுப்ப வேண்டும்; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும். அதற்கான ஒரு தொழிற்சாலையை இந்தப் பகுதியில் உருவாக்க வேண்டும். இதனால் நேரடியாக 1,000 பேருக்கும் மறைமுகமாக 5,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, பொருளாதாரரீதியான முன்னேற்றத்தையும் அடைவார்கள்.

திருவாரூர் மாவட்டத்தின் வளங்களையும் வாய்ப்புகளையும் பார்த்துவிட்டோம். இனி செயல்படவேண்டியது மட்டும்தான் பாக்கி!

(இன்னும் காண்போம்)

*****

கனவு நிஜமாகிறது!

ஜூனியர் விகடன் 16.2.2022 தேதியிட்ட இதழில் வெளியான ‘கனவு கடலூர்’ தொடரில், முந்திரிப் பழத்திலிருந்து 1,000 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் தரக்கூடிய ‘ஃபெனி’ மதுவகை குறித்து எழுதியிருந்தோம். பண்ருட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும், தொழில்முனைவோருமான சிவா என்பவர், இந்தக் கட்டுரையால் ஈர்க்கப்பட்டு, `கேஷ்விடா (Cashvita) முந்திரிப் பழச்சாறு’ எனும் புதிய புராடக்ட்டைத் தயாரித்துள்ளார்.

கனவு - 35 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

இது குறித்து அவரிடம் பேசினோம். “முந்திரியிலிருந்து என்னென்ன மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களையெல்லாம் உருவாக்கலாம் என்பது குறித்து சுரேஷ் சம்பந்தம் எழுதியிருந்த கட்டுரை எனக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. முந்திரிப் பழத்திலிருந்து முதலில் ஃபெனி மதுவகையைத் தயாரிக்கலாம் என முயன்றேன். ஆனால், அதற்காக, தமிழ்நாடு அரசு மதுக் கொள்கையை இன்னும் வகுக்காததால் மாற்றி யோசித்தேன். சுமார் மூன்று மாத ஆய்வுக்குப் பிறகு தோன்றியதுதான் ‘கேஷு ஆப்பிள் ஜூஸ்’ (Cashew Apple Juice). இது அறிவியில்ரீதியான பெயர். இதையே `கேஷ்விடா (Cashvita Cashew Juice) முந்திரிப் பழச்சாறு’ எனும் பெயரில் தயாரித்திருக்கிறேன்.

கனவு - 35 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்
கனவு - 35 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

இந்தச் பழச்சாறுக்கு, உலக அளவில் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அளவுக்குப் பெரும் சந்தை இருக்கிறது. இப்படியான ஒரு புராடக்ட் பண்ருட்டியிலிருந்து முதன்முறையாக வெளிவரவிருக்கிறது. இது முழுக்க முழுக்க இயற்கையாக விளையும் முந்திரிப் பழத்திலிருந்து உருவாக்கப்படும் பழச்சாறு. ஆரஞ்சு, அன்னாசிப்பழம், எலுமிச்சைப் பழங்களைக் காட்டிலும் அதிகமாக முந்திரிப் பழச்சாற்றில் ‘வைட்டமின் சி’ உண்டு. உடலுக்குக் கேடு விளைவிக்காதது. இந்தப் பழச்சாறு தயாரிப்பு நிறுவனத்துக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க என்னிடம் போதுமான நிதி இல்லை. சுமார் 5 லட்ச ரூபாயிருந்து 10 லட்ச ரூபாய் வரை அரசின் நிதி உதவி கிடைத்தால், நிச்சயம் பண்ருட்டியிலிருந்து ஒரு சர்வதேச தரத்திலான பிராண்டை உருவாக்குவேன்” என்றார். தமிழ் நாட்டின் ட்ரில்லியன் டாலர் கனவு இப்போது நிஜத்தை நோக்கிப் பயணப்படுவதில் மகிழ்ச்சி!

நம் அடுத்த கனவு திருநெல்வேலி