அரசியல்
Published:Updated:

அண்ணாமலை பேசியதை நான் இன்னும் கேட்கவில்லை!

கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
கரு.நாகராஜன்

நம்பச் சொல்கிறார் கரு.நாகராஜன்

2021 சட்டமன்றத் தேர்தலில், ‘வெற்றி நடைபோடும்’ அ.தி.மு.க-வுக்கும் ‘விடியலைத் தரப்போகும்’ தி.மு.க-வுக்கும்தான் நேரடிப் போட்டி. என்றாலும்கூட, ‘லிப் சர்வீஸ்’, ‘பல்லு கில்ல பேத்துருவேன்’ போன்ற அதிரடி பிரசாரத்தில் ஆரம்பித்து, நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, ஸ்மிரிதி இரானி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட கலர் கலரான வி.வி.ஐ.பி-கள் பிரசாரம் என சென்சேஷனல் ஆனது பா.ஜ.க. இந்தநிலையில், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனைச் சந்தித்தோம்...

‘‘தேர்தல் கருத்துக்கணிப்புகளில் எதுவும் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக இல்லையே?’’

‘‘பீகார் சட்டமன்றத் தேர்தலில்கூட பா.ஜ.க - நிதிஷ்குமார் கூட்டணிக்கு எதிராகத்தான் கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன. ஆனால், முடிவு எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. இந்தக் கருத்துக்கணிப்பாளர்கள் யாரும் மக்களின் மனதுக்குள் புகுந்து பார்த்தவர் களில்லை. தேர்தலுக்குப் பிறகு, ‘அ.தி.மு.க கூட்டணி மெஜாரிட்டியாக வந்துவிடும்’ என்ப தாகவே பேச்சுகள் கேட்கின்றன. ஒருவேளை தி.மு.க-வே வெற்றிபெற்றாலும்கூட அதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.’’

‘‘அதனால்தான் பல்கலைக்கழகங் களுக்கு அவசரம் அவசரமாகத் துணைவேந்தர்களை நியமித்து வருகிறாரா ஆளுநர்?’’

‘‘தி.மு.க ஜெயிக்கிறதோ, அ.தி.மு.க ஜெயிக்கிறதோ... கவர்னர் தன் பணியைச் செய்துவருகிறார். சட்டப்படி இதில் தவறேதும் கிடையாது. துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற சூழல், ஒரு மாதத்துக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டதால், நியமனத்தை பெண்டிங் வைத்திருந்தார்கள். அவ்வளவுதான். அதையும் இதையும் முடிச்சுப்போட்டுப் பார்க்க வேண்டாம்.’’

‘‘அ.தி.மு.க கூட்டணியைத் தோற்கடிப்பதில், தி.மு.க-வைவிடவும் பா.ஜ.க மும்முரமாகச் செயல்பட்டது என்ற விமர்சனம் இருக்கிறதே?’’

‘‘இதெல்லாம் அப்பட்டமான பொய். முற்றிலுமாக நான் இதை மறுக்கிறேன். கூட்டணிக் கட்சியினர் அனைவரும் இணைந்து நல்ல முறையில் பணியாற்றியிருக்கிறோம். எனவே, மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.’’

‘‘ஆனால், அ.தி.மு.க வேட்பாளர்களே தங்கள் தொகுதியில் பா.ஜ.க தலைவர்கள் வந்து பிரசாரம் செய்வதை விரும்பாத சூழல்தானே நிலவியது?’’

‘‘இருக்கலாம்... ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு சூழ்நிலை இருக்கும். ஆனால், எல்லா வேட்பாளர்களும் தங்கள் தொகுதியிலுள்ள பா.ஜ.க நிர்வாகிகளோடு இணைந்தே பணியாற்றியிருக்கிறார்கள். பா.ஜ.க-வின் வளர்ச்சி அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. எனவே, ‘அ.தி.மு.க வேட்பாளரை பா.ஜ.க ஆதரிக்கவில்லை, பா.ஜ.க தலைவர்களை அ.தி.மு.க-வினர் அழைக்கவில்லை’ என்பதெல்லாம் சுத்தப் பொய். பிரசாரத்துக்கு பிரதமர் வந்திருந்தபோதுகூட, பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அவரோடு கலந்துகொண்டார்களே... அதை இல்லையென்று சொல்ல முடியுமா?’’

அண்ணாமலை பேசியதை நான் இன்னும் கேட்கவில்லை!

‘‘அதேசமயம், ‘மோடி எங்கள் தொகுதியிலும் வந்து பிரசாரம் செய்ய வேண்டும்’ என்று தி.மு.க வேட்பாளர்கள் அழைத்திருப்பதை என்னவென்று புரிந்துகொள்வது?’’

‘‘இது தமிழக மக்களை ஏமாற்றுகிற செயல். ‘இந்தத் தேர்தல் பா.ஜ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் இடையேயான போட்டி’ என்றுதான் ஸ்டாலினே சொல்கிறார். அந்த அளவுக்கு பா.ஜ.க-வைக் கண்டு மிரண்டுபோய் நிற்கிறது தி.மு.க. ஆனால், இந்த பயத்தை மறைப்பதற்காக இன்னொரு பக்கம் இது போன்று வேடிக்கை நாடகம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி மீது மக்களுக்கு வெறுப்பு இருப்பதாக, இல்லாத ஒன்றைக் காட்டி நடிக்கிறார்கள் தி.மு.க-வினர்.’’

‘‘ `மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர்’ என்ற வாசகத்தை அழித்துவிட்டு, ‘அம்மாவின் ஆசிபெற்ற வேட்பாளர்’ என்று எழுதித்தானே பா.ஜ.க வேட்பாளர்களே ஓட்டுக் கேட்டனர்?’’

‘‘இதெல்லாம் கூலிக்கு ஆள்வைத்து மாரடிக்கிற கூட்டம் செய்கிற வேலை. தி.மு.க-வினரே 2,000 பேரை வேலைக்கு வைத்துக்கொண்டு, தாங்களே இது போன்று எழுதி, பின்னர் அதை அழித்து போட்டோவும் எடுத்துக்கொண்டு மீம்ஸ்களை க்ரியேட் செய்து மக்களிடையே பரப்பி வருகிறார்கள். ஏற்கெனவே கதை, வசனம் எழுதிப் பழக்கப்பட்டவர்களால் மட்டுமே இது போன்று ‘பொய்ப் பிரசாரம்’ செய்து மக்களைக் குழப்பியடிக்க முடியும்.’’

‘‘தி.மு.க வேட்பாளர் ‘செந்தில் பாலாஜியைத் தூக்கிப்போட்டு மிதிப்பேன், பல்லை உடைப்பேன்’ என்றெல்லாம், பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை பேசியிருக்கிறாரே... இது எந்தவகையான பிரசாரம்?’’

‘‘அவர் பேசியதை நான் இன்னும் கேட்கவில்லை. எப்படிப் பார்த்தாலும் பொது அரங்கத்தில் ஒருவர் இப்படிப் பேசியிருந்தால், அதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுவும் அண்ணாமலை படித்த ஓர் அதிகாரி. அவர் இப்படி உணர்ச்சிவசப்பட்டுப் பேசுமளவுக்குத் தி.மு.க-வினர் தூண்டியிருக்கிறார்கள். எனவே, எதிரணியினர் என்ன பேசினார்கள் என்பதையும் நாம் கவனித்துப் பார்த்தால்தான், அண்ணாமலையின் பேச்சில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.’’

‘‘தேர்தல் பிரசாரத்துக்காக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்தபோது நடைபெற்ற கலவரம், பா.ஜ.க-வுக்குச் சாதகமா... பாதகமா?’’

‘‘பல்வேறு இடங்களிலும் லோக்கல் பிரச்னைகள் இருக்கின்றன. கோவையில் அன்றைக்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது என்ற விவரங்களெல்லாம் யாருக்கும் தெரியாது. உ.பி முதல்வர் வருகையின்போது, பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கடைகளை அடைக்கச் சொல்லி காவலர்கள் சொன்னதையும் மீறி சிலர் செயல்படும்போது பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். இது கோவைக்கான உள் பிரச்னை மட்டுமேதான். அதை ஊதிப் பெரிதாக்க வேண்டாம்!’’