
‘நீங்கள் அழகிரியிடம் பேசுங்கள்’ என நான் கேட்டும் எந்தப் பதிலும் இல்லை. கடைசிவரை நாங்கள் ஏற்பாடு செய்த படத்திறப்பு நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நடக்கவே இல்லை
சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா-வின் படத்திறப்பு நிகழ்ச்சியையொட்டி, சத்தியமூர்த்தி பவனில் அடுத்த சர்ச்சை வெடித்திருக்கிறது. “மீனவர் அணி சார்பில் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தும், அதற்கு சத்தியமூர்த்தி பவனில் அனுமதி வழங்கப்படவில்லை. சாவிலும் அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்” எனக் கச்சையைக் கட்டுகிறார்கள் சீனியர் கதர்கள். என்னதான் நடக்கிறது பவனில்?
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் காண்டீபனிடம் பேசினோம். “நானும் திருமகன் ஈ.வெ.ரா-வும் 20 ஆண்டுக்கால நண்பர்கள். திடீரென அவர் மறைந்ததைத் தொடர்ந்து, அவரின் படத்திறப்பு நிகழ்வுக்கு அகில இந்திய மீனவர் பிரிவு செயற்குழு உறுப்பினர் பாலச்சந்தரும் நானும் சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடுகளைச் செய்தோம். அதற்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியும் அனுமதியளித்தார். ‘மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தேவையான உதவிகளைச் செய்வார். அவரிடம் பேசுங்கள்’ என்றார் கே.எஸ்.அழகிரி. கிருஷ்ணமூர்த்தியும் அதை ஏற்றுக்கொண்டார். படத்திறப்பு விழாவுக்கு ஜனவரி 7-ம் தேதி என நாளும் குறிக்கப்பட்டது. ஆனால், அன்று மாலை 5 மணியாகியும் நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதியை அலுவலக நிர்வாகிகள் தரவில்லை.

‘ஏன் காக்க வைக்கிறீர்கள்?’ என நான் கேள்வி எழுப்பியபோது, ‘படத்திறப்பை எம்.எல்.ஏ-க்களை வைத்துத் திறக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை வருகிறாரா என்று பார்க்க வேண்டும்’ என்றார் கிருஷ்ணமூர்த்தி. செல்வப்பெருந்தகைக்கும் இவர்களுக்கும் இடையில் நடக்கும் உள் அரசியலை, திருமகன் ஈ.வெ.ரா படத்திறப்பு நிகழ்ச்சியில்தான் காட்ட வேண்டுமா என்று நான் கோபப்பட்டேன்.
பிறகு, ‘நீங்கள் ஊடகத்துறைத் தலைவர் கோபண்ணாவைப் பாருங்கள்’ என்று கைவிரித்தார் கிருஷ்ணமூர்த்தி. கோபண்ணாவிடம் இது குறித்துப் புகார் செய்தேன். அவர், ‘தலைவர் கே.எஸ்.அழகிரி என்னிடம் எதுவும் சொல்லவில்லை’ என்று கூறிவிட்டார். ‘நீங்கள் அழகிரியிடம் பேசுங்கள்’ என நான் கேட்டும் எந்தப் பதிலும் இல்லை. கடைசிவரை நாங்கள் ஏற்பாடு செய்த படத்திறப்பு நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நடக்கவே இல்லை. திருவல்லிக்கேணியிலுள்ள எங்கள் கட்சி நண்பரின் அலுவலகத்தில் வைத்து திருமகனின் படத்திறப்பு நிகழ்ச்சியை நடத்தினோம்.

பெரியாரின் கொள்ளுப் பேரனான மறைந்த திருமகன் ஈ.வெ.ரா-வின் படத்திறப்பு நிகழ்வில்கூட கீழ்த்தரமாக அரசியல் செய்கிறார்கள். சத்தியமூர்த்தி பவனில் திருமகனின் படத்தைத் திறந்து அஞ்சலி செலுத்துவதற்கு ஒவ்வொரு காங்கிரஸ்காரனுக்கும் உரிமை இருக்கிறது. பவன் இவர்கள் சொத்தல்ல. அது காங்கிரஸ்காரனின் சொத்து. கோபண்ணாவுக்கு ஊடகத்துறை தலைவர் பதவி வாங்கிக்கொடுத்ததே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான். நன்றி, விசுவாசம் இல்லாமல், இளங்கோவனின் மகன் படத்திறப்பு நிகழ்ச்சியிலேயே அரசியல் செய்துவிட்டார்கள். இது குறித்து காங்கிரஸ் மேலிடத்துக்கும் புகார் அனுப்பியிருக்கிறேன்” என்றார் சூடாக.
படத்திறப்பு விழா சச்சரவு தொடர்பாக, ஜனவரி 11-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. காண்டீபன், தன் ஆதரவாளர்களுடன் வந்தபோது அவருக்கும், கோபண்ணாவின் ஆதரவாளரான வடசென்னை மாவட்டத் தலைவர் திரவியத்துக்கும் இடையே வாக்குவாதமானது. வார்த்தைகள் தடித்து இரு தரப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளுவானது. கைகலப்பாவதற்குள் சீனியர் நிர்வாகிகள் தலையிட்டு, இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்திருக்கிறார்கள்.
இது குறித்து கோபண்ணாவிடம் பேசினோம். “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருமகன் ஈ.வெ.ரா படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டோம். தனிநபர் ஒருவர், ‘நான் படத்தைத் திறக்கிறேன்’ என்று தகவல் பரப்பியிருக்கிறார். தனிப்பட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனில் இதைச் செய்ய முடியாது. இது ஒரு தவறான நடவடிக்கை. யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.

சில சீனியர் நிர்வாகிகள் நம்மிடம், “மகனின் படத்திறப்பு நிகழ்ச்சியிலும் அரசியல் கலந்துவிட்டதால், கடும் அப்செட்டில் இருக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்து, அழைப்பிதழையும் அச்சடித்திருந்தது சத்தியமூர்த்தி பவன். இந்த நிலையில், ‘நம் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் இறந்திருக்கிறார். எப்படிக் கொண்டாட்டமாகப் பொங்கல் விழா நடத்துவீர்கள்?’ என இளங்கோவனின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்க, தற்போது பொங்கல் விழா ரத்தாகியிருக் கிறது” என்றனர் கவலையோடு.
ஜனவரி 11-ம் தேதி திருவல்லிக்கேணியில் நடந்த திருமகன் ஈ.வெ.ரா படத்திறப்பு நிகழ்வில், ஐந்து எம்.எல்.ஏ-க்கள், இரண்டு எம்.பி-க்கள் மட்டுமே கலந்துகொண்டிருக்கிறார்கள். தங்கபாலு, கிருஷ்ணசாமி, ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட சீனியர்கள் யாரும் வரவில்லை. காங்கிரஸ் கோஷ்டி அரசியல், எம்.எல்.ஏ மரணத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. ‘கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டாமா... இந்தப் போக்கு எந்த அடிப்படையிலும் சரியில்லை’ என்பதுதான் காங்கிரஸ் தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது.
எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்!