Published:Updated:

அம்மா கொடுத்த வாக்கு என்னாச்சு? என் மருத்துவப் படிப்பு நின்னுபோச்சு!

அம்மா கொடுத்த வாக்கு என்னாச்சு?
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மா கொடுத்த வாக்கு என்னாச்சு?

‘‘படிப்பை முடிக்க இன்னும் ஒரு லட்ச ரூபாய் ஆகும். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை.’’

அம்மா கொடுத்த வாக்கு என்னாச்சு? என் மருத்துவப் படிப்பு நின்னுபோச்சு!

‘‘படிப்பை முடிக்க இன்னும் ஒரு லட்ச ரூபாய் ஆகும். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை.’’

Published:Updated:
அம்மா கொடுத்த வாக்கு என்னாச்சு?
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மா கொடுத்த வாக்கு என்னாச்சு?

‘சொன்ன சொல் தவறாமலிருப்பதுதான் கற்பு’ என்று இலக்கணம் சொல்கிறார் ஔவை. இந்தக் கற்பு எல்லோர்க்கும் பொதுவானது. தனி மனிதர்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் அரசுகளும்கூட பழக வேண்டிய அடிப்படைப் பண்பு என்கின்றன நீதி நூல்கள். மூச்சுக்கு முந்நூறு முறை ‘இது அம்மாவின் ஆட்சி’ என்று சொல்லிக்கொள்ளும் அ.தி.மு.க அரசு, ஓர் ஏழை மாணவிக்கு ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை மறந்துவிட்டது. அதுவும், சட்டமன்றத்திலேயே வழங்கப்பட்ட வாக்குறுதி! எப்படி... ஏன் மறந்தது... என்ன நடந்தது?

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செங்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தினி. வறுமை மிகுந்த குடும்பப் பின்னணி. ஆனால், சாந்தினிக்கு மருத்துவராக வேண்டும் என்பது கனவு, லட்சியம். குடும்பத்தின் வறுமையைப் பொருட்படுத்தாமல் தன் லட்சியத்தை நோக்கி இரவு பகலாகப் படித்து, பத்தாம் வகுப்பில் 491 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 1,165 மதிப்பெண்களும் எடுத்தார். மருத்துவம் படிப்பதற்கான மதிப்பெண் கிடைத்துவிட்டது. ஆனால், பணம்..?

2016-ம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘சாந்தினியின் மருத்துவப் படிப்புக்கான செலவுகளை நான் ஏற்கிறேன்!’ என்று சட்டமன்றத்திலேயே அறிவித்து, முதல் ஆண்டுக்கான கட்டணத்தையும் வழங்கினார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சாந்தினிக்கு ஜெயலலிதா வழங்குவதாக அறிவித்த உதவித்தொகை வழங்கப்படவே இல்லை. பணத்துக்கும் படிப்புக்கும் இடையே அல்லாடிக்கொண்டிருக்கிறார் ஓர் ஏழை மாணவி!

‘‘படிப்பை முடிக்க இன்னும் ஒரு லட்ச ரூபாய் ஆகும். 
எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை.’’
‘‘படிப்பை முடிக்க இன்னும் ஒரு லட்ச ரூபாய் ஆகும். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை.’’

விரக்தியின் உச்சத்திலிருந்த சாந்தினி பேசத் தொடங்கினார். “என் அப்பா பேரு குமரேசன். அம்மா பேரு வெள்ளையம்மா. நான், தங்கச்சின்னு எங்க வீட்ல ரெண்டு பொண்ணுங்க. ரொம்ப ஏழ்மையான குடும்பம்னாலும் எங்க ரெண்டு பேரையும் நல்லா படிக்க வெச்சிரணும்னு எங்க அம்மா அப்பா நினைச்சாங்க. டாக்டராகணும்கிறது என் வாழ்நாள் லட்சியம். லாரி டிரைவரான என் அப்பா, ‘நம்ம தகுதிக்கு அதெல்லாம் சரிவருமானு?’ நெகட்டிவா பேசலை. ‘உசுரக் கொடுத்தாவது உன்னைப் படிக்கவெக்கிறேன்’னு சொன்னார்; என்னைப் படிக்கவும்வெச்சார். நானும் நம்பிக்கையோட படிச்சேன். திடீர்னு வாதநோய் வந்து என் அப்பாவை முடக்கிப் போட்டுருச்சு. ஒருபக்கம் அப்பாவோட மருத்துவச் செலவு... இன்னொரு பக்கம் படிப்பு... எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. எங்க அம்மா, வீடு வீடா பத்துப் பாத்திரம் கழுவுற வேலைக்குப் போய், என்னையும் தங்கச்சியையும் படிக்கவெச்சாங்க. இந்தக் கஷ்டத்துலருந்து நம்ம குடும்பத்தை எப்படியாவது மீட்கணும்னு மனசுக்குள்ள ஒரு வைராக்கியம் உருவாச்சு. பத்தாவதுலயும் பன்னிரண்டாவதுலயும் நல்ல மார்க் எடுத்தேன். ஆனா, அதுக்கு மேல படிக்கவெக்க அம்மாவால முடியலை. எனக்கு எல்லாமே இருண்டுபோன மாதிரி ஆகிருச்சு. அந்த நேரத்துலதான் என்னோட அத்தை பாக்யலெட்சுமி, ‘ஜெயலலிதா அம்மாவுக்கு உன்னோட நிலைமையை விளக்கி ஒரு லெட்டர் போடு; நிச்சயம் உதவுவாங்க’னு சொன்னாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனே, என் நிலைமையை விளக்கி அப்போதைய முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா அம்மாவுக்குக் கடிதம் எழுதினேன். என் நம்பிக்கை வீண் போகலை. ஹெல்த் மினிஸ்டர் விஜயபாஸ்கர் சார் மூலம் என்னைப் பத்தி விசாரிச்சாங்க. ‘என்னோட மருத்துவப் படிப்புக்கான முழுச் செலவையும் ‘அம்மா பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட்’ ஏற்கும்’னு அப்போ நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிவிச்சாங்க ஜெயலலிதா அம்மா. அந்த அறிவிப்பு வெளியானதும், எங்க மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்க கஷ்டமெல்லாம் தீர்ந்துருச்சுனு நினைச்சோம். அவங்க சொன்னபடியே முதல் ஆண்டுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் புத்தகக் கட்டணம் எல்லாத்துக்கும் சேர்த்து 75,000 ரூபாயை அவைத் தலைவர் மதுசூதனன் மூலம் கொடுத்தாங்க. ‘நீ எதுக்கும் கலங்காதம்மா... உன்னை டாக்டராக்கணும்னு அம்மா சொல்லிட்டாங்க. உன்னை டாக்டராக்குறது அ.தி.மு.க-வின் பொறுப்பு. நீ கொடுத்து வெச்ச பொண்ணு’னு மதுசூதனன் ஐயா வாழ்த்தினாங்க.

அம்மா கொடுத்த வாக்கு என்னாச்சு? என் மருத்துவப் படிப்பு நின்னுபோச்சு!

கனவாயிருந்த மருத்துவக் கல்லூரிப் படிப்பு நனவாச்சு. ஆனா, யாருமே எதிர்பார்க்காதவிதமா ஜெயலலிதா அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போய், திடீர்னு இறந்துட்டாங்க. அவங்க இறப்பு என்னை ரொம்ப பாதிச்சுது. இனிமே எனக்கு உதவி கிடைக்குமானு சந்தேகம் வந்துச்சு. ‘அ.தி.மு.க பெரிய கட்சிம்மா, நம்மை கைவிட்டுற மாட்டாங்க’னு என் அப்பா நம்பிக்கையாச் சொன்னார். ஆனா, அந்த நம்பிக்கை வீணாப் போச்சு!

அடுத்தடுத்த வருஷங்களுக்கான உதவித் தொகை எனக்கு வரவே இல்லை. இது சம்பந்தமா யாருகிட்டப் பேசறதுன்னும் தெரியலை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பிரிவுக்கு மனு போட்டேன், பதில் வரலை. அமைச்சர் விஜயபாஸ்கர் சாரையும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சாரையும் சந்திச்சு மனு கொடுத்தேன், எந்தப் பலனும் இல்லை. ஆரம்பத்துல என் வறுமையைப் பத்திக் கேள்விப்பட்டு, பலரும் என் படிப்புக்கு உதவ முன்வந்தாங்க. ஆனா, ‘ஜெயலலிதா அம்மா என் படிப்புக்கான முழுச் செலவையும் ஏத்துக்கிட்டாங்க. நீங்க கஷ்டப்படுற வேற யாருக்காவது உதவுங்க’னு சொல்லி அவங்க உதவியையெல்லாம் தவிர்த்துட்டேன். அதனால, மறுபடியும் யார்கிட்ட போயும் நிக்க முடியலை. எஜுகேஷன் லோன் டிரை பண்ணலாம்னு பேங்குக்கு அலைஞ்சேன். ‘அதெல்லாம் ஆரம்பத்துலயே வாங்கியிருக்கணும்!’னு கைவிரிச்சுட்டாங்க. என் கனவு கனவாவே கலைஞ்சுருச்சுனு வீட்டிலேயே முடங்கிட்டேன்.

அந்தச் சூழல்ல, என்னோட அத்தை பாக்யலெட்சுமி, பல இடங்கள்ல கடன் வாங்கி என் படிப்பைத் தொடர வெச்சாங்க. செலவைக் குறைக்கணும்னு என் சீனியர்கள்கிட்ட புத்தகத்தைக் கடன் வாங்கிப் படிச்சேன். மல்லுக்கட்டி மூணு வருஷப் படிப்பை எந்த அரியரும் இல்லாம முடிச்சேன். அப்போதான் கஜா புயல் வந்துச்சு, எனக்கு உதவிக்கிட்டிருந்த அத்தையின் தென்னந்தோப்பு நாசமாச்சு. மாமாவும் விபத்துல இறந்துபோனார். கஷ்டத்துக்கு மேல கஷ்டம்... என்னோட நான்காம் ஆண்டு படிப்பு இப்போ கேள்விக்குறியாகிப் போச்சு. படிப்பை முடிக்க இன்னும் ஒரு லட்ச ரூபாய் ஆகும். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. படிப்பை முடிச்சுடலாம், கனவை ஜெயிச்சிடலாம்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டே வருது” கண்ணீருடன் அமைதியானார் சாந்தினி.

இது தொடர்பாக அ.தி.மு.க தரப்பில் விசாரித்தோம், “அந்த மாணவிக்கு ‘புரட்சித்தலைவி அம்மா பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் செயல்பட்ட அறக்கட்டளை சார்பில்தான் உதவி செய்யப்பட்டது. இப்போது அந்த அறக்கட்டளை நிர்வாகம், சசிகலா குடும்பத்தின் வசம் உள்ளது” என்று ஒதுங்கிக் கொண்டனர்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்துக்கு இதைக் கொண்டுசெல்ல அவருக்கு போன் செய்தோம், அவர் அழைப்பை ஏற்கவில்லை. வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் இல்லை.

68 கோடி ரூபாய் அரசுப் பணத்தை இழப்பீடாகக் கொடுத்து, ஜெயலலிதாவின் இல்லத்தைக் கையகப்படுத்தியிருக்கிறது அ.தி.மு.க அரசு. இன்னும் பல கோடிகளில் ‘நினைவு இல்லம்’ அமைக்கவும் திட்டமிருக்கிறது. உயிரற்ற கட்டடங்களை மட்டும் எழுப்பி ஒருவரது நினைவை, புகழை நீட்டிக்க முடியாது அரசியல்வாதிகளே...

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுங்கள் ‘அம்மாவின்’ ஆட்சியிலிருப்பவர்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism