Published:Updated:

மெரினாவில் ஜொலிக்கும் தலைவர்களின் சமாதிகள்... கரன்ட் பில் பாக்கி பல கோடி ரூபாய்!

தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் சமாதிகள் இரவு நேரத்தில் அலங்கார மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன. ஆனால், அதற்கான மின் கட்டணம் பல ஆண்டுகளாகச் செலுத்தப்படவில்லை என்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.

அண்ணா சமாதி
அண்ணா சமாதி

தமிழகத்தில் அரசுத் துறைகள் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளன என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து `டான்ஜெட்கோ’ எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

அவர், ``சில மத்திய அரசுத் துறைகள், மாநில அரசுத்துறைகள் மின் கட்டணம் செலுத்துவதே இல்லை. இந்த வகையில், பல ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி உள்ளன. ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் சிரமப்பட்டுவரும் டான்ஜெட்கோ, இந்தப் பிரச்னையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய நம் மாநிலத்தை ஆட்சிபுரிந்த தலைவர்களின் சமாதிகள் மின்சார விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. அதற்கான மின்கட்டணத்தைச் செலுத்துவது, அந்தத் தலைவர்களுக்குச் செய்யப்படும் மரியாதையாக இருக்கும். ஆனால், அவற்றுக்கான மின் கட்டணம் பல ஆண்டுகளாகச் செலுத்தப்படவில்லை. அந்த வகையில் மட்டுமே பல கோடி ரூபாய் பாக்கி உள்ளது.

ஜெயலலிதா சமாதி
ஜெயலலிதா சமாதி

அரசுத் துறைகள் என்பதால் ஒரு `அண்டர்ஸ்டாண்டிங்’ அடிப்படையில் மின்சார வாரியத்தால் மின்சாரம் வழங்கப்பட்டுவந்தது. ஆனால், சேவை அடிப்படையில் செயல்பட்டுவந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை வரையறுக்கப்பட்ட கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாக 2010-ல் மாற்றிவிட்டனர். எனவே, ‘இந்த நிறுவனம் சேவைத்துறையாக இருக்க முடியாது. இனிமேல் இது லாபத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் சமாதி
எம்.ஜி.ஆர் சமாதி

லாப நட்டக் கணக்குகளை கறாராகப் பார்க்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார்கள். அப்படியென்றால், அரசுத்துறைகள் பயன்படுத்தும் மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்த வேண்டாமா? பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கியை ஏன் கறாராக வசூலிக்கவில்லை. பிற துறைகளிடமிருந்து கட்டணம் வசூலிப்பதற்கு முறையான ஓர் ஏற்பாடு வேண்டும்.

குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள், கல்வித்துறை, பொதுப்பணித்துறை ஆகியவை அதிகமாக மின்கட்டண பாக்கி வைத்துள்ளன. டான்ஜெட்கோ கடும் நிதிநெருக்கடியில் இருக்கும் சூழலில், அரசுத்துறைகள் அனைத்தும் கட்டண பாக்கியைச் செலுத்திவிட்டால் பெரும் உதவியாக இருக்கும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அந்தக் கட்டணத்தை அரசு அவ்வப்போது கட்டுவதில்லை பல ஆண்டுகளாக பாக்கி வைத்து பாக்கி வைத்துதான் அதைக் கட்டினார்கள். அதற்கான வட்டியை யார் கொடுப்பார்கள்? அந்தந்த ஆண்டுக்கான கட்டணங்களை அந்தந்த ஆண்டே வசூலித்துவிட வேண்டும். வட்டியாக மட்டுமே டான்ஜெட்கோ ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.800 கோடி வரை செலுத்திவருகிறது” என்று கொந்தளித்தார்.

கருணாநிதி சமாதி
கருணாநிதி சமாதி

இதுகுறித்து தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். அவர், “அரசுத்துறைகள் சுமார் ரூ.1,500 கோடி அளவுக்கு மின் கட்டணம் பாக்கிவைத்துள்ளன. அதைத் தாமதம் செய்யாமல் உடனடியாகக் கட்டுமாறு அரசு கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக நிதித்துறைச் செயலாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில், அரசுத்துறைகள் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை வசூலிப்பதற்கான நடவடிக்கையை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குநர் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்வார். அப்போது, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளைச் சந்தித்து மின்கட்டண பாக்கியைச் செலுத்துவதற்கான நடவடிக்கையை வேகப்படுத்துவார்” என்றார்.

பொதுமக்கள் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகை ஒரு பக்கம் பல மடங்கு உயர்த்த மின்வாரியம் ஆலோசித்து வருகிறது. ஒரு படுக்கையறை கொண்ட வீட்டுக்கு இப்போது 1,600 ரூபாயும், இரண்டு அல்லது மூன்று படுக்கையறை கொண்ட வீட்டுக்கு, 5 கிலோவாட் மும்முனை மின்சார இணைப்புக்கு இப்போது 7,450 ரூபாயும், அதே 10 கிலோ வாட் மின்சார இணைப்புக்கு 10,450 ரூபாயும் வைப்புத் தொகையாக இருந்து வருகிறது. இதை முறையே 26,200 ரூபாய், 49,060 ரூபாய், 94,060 ரூபாய் என மாற்றியமைக்க இருக்கிறார்கள். கிராமங்களில் உள்ள ஒற்றைப் படுக்கையறை வீட்டுக்கு இப்போது 1,600 ரூபாயாக இருக்கும் வைப்புத் தொகையை 6,600 ரூபாயாக உயர்த்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மின்துறையின் நட்டத்தை ஈடு கட்ட இந்த நடவடிக்கை என்று சொல்லப்பட்டாலும், ஒரு பக்கம் அரசுக்கு இலவசமாக மின்சாரத்தைத் தாரை வார்த்துவிட்டு ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளில் தவிக்கும் பொதுமக்களை மேலும் சோதனைக்குள்ளாவது ஷாக் அடிக்க வைப்பதாகத்தான் இருக்கிறது!