
உற்பத்திச் செலவு அதிகரிக்கும்போது கட்டணத்தை நிச்சயம் உயர்த்துவார்கள். ஆனால், உற்பத்திச் செலவு குறைந்தால், கட்டணத்தைக் குறைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
‘தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதிச்சுமையில் இருக்கிறது’ என்று சொல்லி தி.மு.க அரசு கடந்த செப்டம்பர் மாதம் மின்கட்டணத்தை உயர்த்தியது. வீடுகளுக்கான மின்கட்டணம் 12 முதல் 52 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது. அதேநேரம், `வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்’ என்றும் அரசு கூறியது. ஆனாலும், மின்கட்டண உயர்வுக்குப் பிறகு, வழக்கத்தைக் காட்டிலும் இரு மடங்குக்கு மேல் பில் வருவதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அது தொடர்பான புகார்கள் இன்றுவரை ஓயவில்லை.
இந்த நிலையில்தான், மின்சாரத் திருத்தச் சட்டவிதிகளை மத்திய அரசு தற்போது மாற்றியிருக்கிறது. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு மற்றும் கொள்முதல் விலை ஆகியவற்றுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதமும் மின்கட்டணத்தை மாற்றியமைக்க இந்தத் திருத்தம் வழிவகை செய்கிறது. மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி, டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்தால், மின் உற்பத்திக்கான செலவு அதிகரிக்கும். அந்தச் செலவை நுகர்வோர் தலையில் கட்டிவிடுவதற்கான ஏற்பாடுதான் இது.

“உற்பத்திச் செலவு அதிகரிக்கும்போது கட்டணத்தை நிச்சயம் உயர்த்துவார்கள். ஆனால், உற்பத்திச் செலவு குறைந்தால், கட்டணத்தைக் குறைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வே சிறந்த உதாரணம்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். “சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல், டீசல் விலை தானாகவே அதிகரிக்கும். ஆனால், கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. அது பற்றிய கேள்விகளுக்கு, பிரதமர் தொடங்கி ஆட்சியாளர்கள் யாரும் பதிலே சொல்வதில்லை. இனிமேல், மின்கட்டணத்திலும் அதுதான் நடக்கும்” என்கிறார்கள் அவர்கள்.
“மாதம்தோறும் மின்கட்டணத்தை மாற்றலாம் என்று கொண்டுவந்திருக்கும் திருத்தம் மிகவும் ஆபத்தானது. இது பொதுமக்களைக் கடுமையாக பாதிக்கும்” என்று எச்சரிக்கிறார் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரான நாகல்சாமி. அவரிடம் பேசினோம்.

“குறுகியகால, நீண்டகால அடிப்படையில் ‘பவர் பர்ச்சேஸ்’ ஒப்பந்தங்கள் மூலம் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. ஒப்பந்தத்தில் என்ன விலை குறிப்பிடப்படுகிறதோ, அதில் கடைசிவரை எந்த மாற்றமும் இருக்காது என்பதுதான் இன்றுவரையிலான நடைமுறை. அதில்தான் மத்திய அரசு இப்போது மாற்றம் கொண்டுவந்திருக்கிறது. மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி, டீசல், எரிவாயு போன்றவற்றின் விலை உயர்ந்தாலோ, குறைந்தாலோ, அதற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் மின்கட்டணத்தை மாற்றலாம் என்று விதியைத் திருத்தியிருக்கிறார்கள்.
தற்போதைய நடைமுறைப்படி, மின்கட்டணத்தை உயர்த்த வேண்டு மென்றால், ‘மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்’ ஒப்புதலைப் பெற வேண்டும். பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி, ஆணையம் ஒப்புதல் வழங்கும். இனிமேல், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலேயே, ஒவ்வொரு மாதமும் மின்கட்டணத்தை மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் திருத்தம். மின்சார உற்பத்திக்கான செலவு மற்றும் கொள்முதல் விலை ஆகியவற்றின் அடிப்படையில் ‘ஆட்டோமேட்டிக்’-ஆக ஒவ்வொரு மாதமும் மின்கட்டணம் மாறும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பொதுமக்களை அது கடுமையாக பாதிக்கும். ஆனால், இதைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டும் சூழல் உருவாகும்” என்கிறார் நாகல்சாமி.

இதற்கு கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் இதை எதிர்ப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பிரச்னை குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணனிடம் கேட்டோம். “மின்சாரத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதே, அதை தி.மு.க கடுமையாக எதிர்த்தது. தற்போதும், விதிகள் திருத்தத்தை தமிழ்நாடு அரசு ஏற்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியாகச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே மின்கட்டணம் உயர்ந்ததற்கு மத்திய அரசுதான் காரணம்” என்கிறார் அவர்.

‘மின்சாரத் திருத்தச் சட்ட விதிகள் 2022’-ஐ அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுவிட்டதால், மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும்கூட இது நடைமுறைக்கு வந்துவிடும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால், இரண்டு ‘ஆட்டோமேட்டிக் மின்கட்டண உயர்வு’ மூலம் தமிழ்நாடு மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஒன்று, மத்திய அரசின் சட்டத் திருத்தம் மூலமாக ஏற்படும் ஆட்டோ மேட்டிக் மின்கட்டண உயர்வு. மற்றொன்று, தமிழ்நாடு அரசின் மூலம் ஏற்படப்போகும் ஆட்டோமேட்டிக் மின்கட்டண உயர்வு. அதாவது, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மின்கட்டண உயர்வுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, ‘ஒவ்வோர் ஆண்டும் ஆறு சதவிகித மின்கட்டணம் ஆட்டோமேட்டிக்- ஆக உயரும்’ என்ற அம்சம் அந்த உத்தரவில் சேர்க்கப்பட்டது. அதன்படி, எந்த உத்தரவும் இல்லாமல் தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஆறு சதவிகிதம் மின் கட்டணம் உயரும் என்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.
இரண்டு பேரும் சேர்ந்து அடித்தால் தமிழ்நாட்டு மக்கள் தாங்குவார்களா?