அலசல்
Published:Updated:

குடைந்தெடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை... வெங்கடாசலம் தற்கொலை பின்னணி!

வெங்கடாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
வெங்கடாசலம்

ரூ.30 கோடி சுருட்டிய அமைச்சர்... கைவிரித்த வி.வி.ஐ.பி...

மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த ஏ.வி.வெங்கடாசலம், திடீரென தற்கொலை செய்துகொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், ‘விசாரணை அழுத்தம் தாளாமல்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார்’ எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தச் சூழலில், ‘வெங்கடாசலத்திடமிருந்து உண்மைக்கு மாறாகச் சாட்சியம் பெறுவதே லஞ்ச ஒழிப்புத்துறையின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவரது மர்ம மரணத்தில் உண்மை வெளிவர, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனு அளிக்க அ.தி.மு.க-வைச் சேர்ந்த தம்பிதுரை, இன்பதுரை இருவரும் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள். வெங்கடாசலத்தின் தற்கொலை விவகாரம் பெரும் விவாதப்பொருளாக உருவாகியிருக்கும் நிலையில், இதில் மறைந்துள்ள மர்மங்களை விசாரிக்க ஆரம்பித்தோம். கிடைத்த தகவலெல்லாம் பகீர் ரகம்!

“மாநில வனப்பணி அதிகாரி, இந்திய வனப்பணி அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் ஏ.வி.வெங்கடாசலம். மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர், மாநிலச் சுற்றுச்சுழல் மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் என முக்கியப் பதவிகளை வகித்த இவர், 2018-ல் பணி ஓய்வுபெற்றார். இதைத் தொடர்ந்து, அன்று ஆட்சிப் பொறுப்பிலிருந்த அ.தி.மு.க வி.வி.ஐ.பி ஒருவர் மூலமாக மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 2019-ல் வந்தார். இதற்காக, அந்த வி.வி.ஐ.பி-க்கு வெங்கடாசலம் தரப்பு பெருந்தொகை கொடுத்ததாகச் சொல்கிறார்கள். இந்தச் சூழலில், கடந்த மே மாதம் தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், ஒவ்வொரு துறையிலும் நடந்துள்ள முறைகேடுகளை லஞ்ச ஒழிப்புத்துறை தோண்ட ஆரம்பித்தது. மாசு கட்டுப்பாடு வாரியத்தில், நிறுவனங்களுக்குத் தடையில்லா சான்று (என்.ஓ.சி) அளிக்கப்பட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கண்டுபிடித்தது லஞ்ச ஒழிப்புத்துறை. இதில்தான் வெங்கடாசலம் வசமாகச் சிக்கிக்கொண்டார்” என்கிறார்கள் விவரமறிந்த மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்.

குடைந்தெடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை... வெங்கடாசலம் தற்கொலை பின்னணி!

60 நிறுவனங்களுக்கு என்.ஓ.சி... சிக்கலிலிருந்த வெங்கடாசலம்!

டீடெய்லாகத் தொடர்ந்து நம்மிடம் பேசிய மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சிலர், “தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் மண்டலவாரியாக ஏழு இணை தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர்களும், 38 மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர்களும் பணிபுரிகின்றனர். புதிதாக எந்த நிறுவனத்தைத் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தடையில்லாச் சான்று அவசியம். 5 கோடி ரூபாய்க்குக் கீழுள்ள திட்டமாக இருந்தால், இணைப் பொறியாளர் அலுவலகத்திலேயே அதற்குரிய என்.ஓ.சி-யைப் பெறலாம். 5 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கு சென்னை தலைமை அலுவலகத்தில்தான் அனுமதி பெற வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, திட்டத்தின் முதலீட்டைப் பொறுத்து பர்சன்டேஜ் கணக்கு ‘கட்டிங்’காகப் பெறப்பட்டது. ‘கட்டிங்’ வந்து சேராதவரை அனுமதி தரப்படாது. இதற்கு அஞ்சியே தொழில் தொடங்குபவர்கள் லஞ்சத்தைக் கொண்டுவந்து கொட்டினர்.

ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு வசூல் ரேட் கார்டு. சென்னை, கோவை மண்டலங்களில் மட்டும் மாதத்துக்கு 60 முதல் 80 லட்ச ரூபாய் வரை லஞ்சம் கரைபுரண்டு ஓடியது. இதில் குறிப்பிட்ட சதவிகிதம், மேல்மட்டம் வரை கப்பமாகச் சென்றதால் அதிகாரிகளின் கொட்டத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. வெங்கடாசலத்துக்கு நெருக்கமாக அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு என்.ஜி.ஓ செயல்பட்டது. புதிதாக என்.ஓ.சி-க்கு யார் விண்ணப்பம் செய்தாலும், அவர்களின் முதலீடு, பின்புலத்தை அந்த என்.ஜி.ஓ-வைச் சேர்ந்தவர்கள் ஆராய்வார்கள். பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் புகாரளிப்பார்கள். வெங்கடாசலம் தரப்பு அந்தப் புகாரை மேற்கோள்காட்டி, என்.ஓ.சி வழங்குவதற்குத் தடைபோடும். பதறிப்போகும் அந்த நிறுவனத்தினர் உடனடியாக அந்த என்.ஜி.ஓ-வைச் சமாதானம் செய்து, புகாரை வாபஸ் பெறச் செய்வார்கள். இதில் பல கோடி ரூபாய் கைமாறியதாகக் கூறப்படுகிறது. இப்படி வாரிச்சுருட்டிய விவகாரத்தில்தான், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் 60 நிறுவனங்களுக்கு முறைகேடாக என்.ஓ.சி வழங்கப்பட்டிருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்தது.

30 கோடி ரூபாய் சுருட்டிய அமைச்சர்!

மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் பதவிக்கு மூன்றாண்டுகள் பதவிக்காலம். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, இந்தப் பணிக்காலம் ஓராண்டு என்றானது. இதனால், செப்டம்பர் 2020-ல் இரண்டாம் ஆண்டுக்கான பணி நீட்டிப்பைப் பெற்றுக் கொண்டார் வெங்கடாசலம். மூன்றாம் ஆண்டு பணி நீட்டிப்பை அவர் கோர முற்படும்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் பதவியில் வெங்கடாசலம் தொடர, தி.மு.க அரசுக்கு விருப்பமில்லை. கடந்த ஜூலை 22-ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த வனத்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு அவர் அழைக்கப்படவில்லை. ‘பணி நீட்டிப்புக்கு இனி வாய்ப்பில்லை’ என்பதை உணர்ந்த வெங்கடாசலம், வனத்துறையின் உயர் பொறுப்பிலிருந்த ஒரு முன்னாள் உயரதிகாரி மூலமாக, அரசுத் தரப்புடன் நட்பு பாராட்ட முயன்றார். அந்த உயரதிகாரியின் உறவினர் டெல்லியில் கோலோச்சியதால், அவர் மூலமாக மத்திய அரசின் உதவியையும் நாடினார் வெங்கடாசலம். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

இந்தச் சூழலில்தான், கடந்த செப்டம்பர் 23-ம் தேதி, வெங்கடாசலம் தொடர்புடைய 11 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை. கணக்கில் காட்டாத பத்து லட்சம் ரூபாய் பணம், 11 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி பொருள்களையும் கைப்பற்றியது. சுமார் 10 கிலோ சந்தன மரக்கட்டைகளும் இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்டதால், தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, வெங்கடாசலத்தின் மீது விசாரணை சூடுபிடித்தது. தலைக்கு மேல் வெள்ளம் செல்வதை உணர்ந்த வெங்கடாசலம் தரப்பு, லஞ்ச ஒழிப்புத்துறையின் சூட்டிலிருந்து தப்பிப்பதற்காக, அமைச்சர் ஒருவரை நாடியிருக்கிறது. அந்த அமைச்சர், ‘30 கோடி ரூபாய் தாருங்கள். முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் நம் தொடர்பில்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் சேர்த்துவிடுகிறேன். இதற்கு மேல் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது’ என்றிருக்கிறார். இதை நம்பிய வெங்கடாசலம் தரப்பு, கேட்ட தொகையைக் கொடுத்திருக்கிறது. இனி பிரச்னை இருக்காது என்றும் நம்பியிருக்கிறார்கள். ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில், நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து நோட்டீஸ் வந்தவுடன் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டது வெங்கடாசலம் தரப்பு.

பதறிப்போய் அந்த அமைச்சரிடம் வெங்கடாசலம் தரப்பு விசாரித்தபோது, ‘என்னங்க, உங்க மேல இவ்ளோ புகார் சொல்றாங்க... தப்பிக்கவே முடியாதபடி பல சிக்கல்கள் இருக்கே... நீங்க கொடுத்த தொகை போதாது. மேலிடத்துல மேற்கொண்டு எதிர்பார்க்குறாங்க. கூடுதலா 20 சி கொடுங்க. எல்லாத்தையும் சுமுகமா முடிச்சுடலாம்’ என்றிருக்கிறார் அந்த அமைச்சர். சந்தேகமடைந்த வெங்கடாசலம் தரப்பினர், மேலிடத்துக்கு நெருக்கமான வட்டாரத்தில் இந்தப் பணப் பறிமாற்றம் குறித்து விசாரித்திருக்கிறார்கள். ‘பணமா, யார் கொடுத்தது?’ என்று அதிர்ச்சியளித்திருக்கிறார்கள். இந்தத் தகவல் வந்தவுடன்தான், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வெங்கடாசலம் தரப்புக்கு உரைக்க ஆரம்பித்திருக்கிறது. முதல்வர் குடும்ப உறுப்பினர்களின் பெயரைச் சொல்லி மொத்த பணத்தையும் ஏப்பம் விட்டிருக்கிறார் அந்த அமைச்சர்” என்றனர் நம்மிடம் பேசிய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்.

குடைந்தெடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை... வெங்கடாசலம் தற்கொலை பின்னணி!

கைவிரித்த அரசியல் வி.வி.ஐ.பி... தற்கொலை செய்துகொண்ட வெங்கடாசலம்!

இதற்கிடையே, மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு வந்திருக்கும் புதிய அதிகாரி ஒருவரும் வெங்கடாசலத்துக்கு எதிராகப் பல கோப்புகளை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியிருக்கிறார். தனக்கு நெருக்கடி முற்றுவதை உணர்ந்த வெங்கடாசலம், தான் தற்கொலை செய்துகொள்வதற்குச் சில நாள்கள் முன்னதாக, தனக்கு நெருக்கமான அந்த அரசியல் வி.வி.ஐ.பி-யை மிக நம்பிக்கையோடு தொடர்பு கொண்டிருக்கிறார். அமைச்சரால் தான் ஏமாற்றப்பட்ட விவரங்களையெல்லாம் அவரிடம் சொல்லிப் புலம்பி, உதவி கேட்டிருக்கிறார். அதற்கு அந்த வி.வி.ஐ.பி., ‘என் தலைக்கு மேலேயே கத்தி தொங்குதுங்க. என்னையவே எப்போ கைது பண்ணுவாங்கன்னு தெரியலை. இந்த நேரத்துல நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்... இனிமேல் என்னைத் தொடர்புகொள்ளாதீங்க’ என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாராம்.

நம்மிடம் பேசிய வெங்கடாசலத்துக்கு நெருக்கான நண்பர் ஒருவர், “விசாரணைக்கு ஆஜரானால், தான் கைதுசெய்யப்படுவோம் என்பது வெங்கடாசலத்துக்கு நன்றாகத் தெரியும். 2013-14 காலகட்டத்தில், மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலராக அவர் பணிபுரிந்தபோது நடந்த முறைகேடுகள் குறித்துத்தான் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்துவருகிறது. இந்தப் புகாரில் கைதுசெய்யப்பட்டால், இதுவரை தான் சம்பாதித்த மொத்தமும் முடக்கப்படும் என்பதும் வெங்கடாசலத்துக்குத் தெரியும். ‘மிச்சம் இருப்பதாவது குடும்பத்துக்குக் கிடைக்கட்டும்’ என்கிற முடிவெடுத்துத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். வெங்கடாசலம் மன உறுதியான நபர். தன் வாழ்நாளில் பல கடினமான சூழல்கள், சவால்களைச் சந்தித்துவந்தவர். இந்த முடிவை அவர் அவசரப்பட்டு உடனே எடுத்திருக்க வாய்ப்பில்லை. தான் ஏமாற்றப்பட்டோம், நம்பியவர்கள் கைவிட்டுவிட்டார்கள், இனி தப்பிக்க வழியே இல்லை என்கிற மனநிலையில்தான் தற்கொலை முடிவை அவர் எடுத்திருக்கிறார்” என்றார்.

அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையைத் தொடர்ந்து, இந்தத் தற்கொலை விவகாரம் அரசியல்ரீதியாகப் புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. வெங்கடாசலத்தின் தற்கொலையை சி.பி.ஐ விசாரிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அமைச்சர் சிக்குவார் என்பதே அ.தி.மு.க-வின் கணக்கு. தவிர, தங்களை லஞ்ச ஒழிப்புத்துறை குடைந்தெடுக்கும் நிலையில், வெங்கடாசலம் தற்கொலை விவகாரத்தைப் பெரிதுபடுத்துவதன் மூலமாக, துறையைச் சேர்ந்தவர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கவும் தீர்மானித்திருக்கிறதாம் அ.தி.மு.க. வெங்கடாசலம் தற்கொலை விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். வெங்கடாசலம் மீது வழக்கு பதியப்பட்டு, முறைப்படி சம்மனும் அனுப்பப்பட்டிருக்கிறது. பொய்யான வாக்குமூலம் தரச் சொல்லி அவருக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. அவர் தற்கொலை வழக்கை வேளச்சேரி போலீஸார் விசாரித்துவரும் நிலையில், விசாரணைக்கு நாங்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்கிறோம்” என்றனர்.

வெங்கடாசலத்தின் தற்கொலையைப் பயன்படுத்தி, மாசு கட்டுப்பாடு வாரியத்தில் நடந்த முறைகேடுகளை மறைப்பதற்குச் சில அதிகாரிகள் மும்முரமாகக் காய்நகர்த்துகிறார்கள். விவகாரத்தை அரசியலாக்கி, தங்களுக்குத் தரப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை நெருக்கடியிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது அ.தி.மு.க. ‘வந்தவரைக்கும் லாபம்’ என்று அந்த அமைச்சரும் கமுக்கமாக இருக்கிறார். இந்த விவகாரத்தை வெறும் தற்கொலை வழக்கோடே கடந்து செல்லப் பார்க்கிறது தி.மு.க அரசு. வெங்கடாசலம் தற்கொலை விவகாரம் ஒரு பக்கம் விசாரிக்கப்படுவதோடு, அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிந்த வழக்கும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். தவறிழைத்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதே நேர்மையான அதிகாரிகளின் விருப்பம்!

******

குடைந்தெடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை... வெங்கடாசலம் தற்கொலை பின்னணி!

“தற்கொலை செய்துகொண்டதாலேயே குற்றவாளி இல்லை என்றாகிவிடாது!” - இரா.இராஜீவ்காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“ஒருபோதும் சட்டத்துக்குப் புறம்பாகவோ, சட்டத்தை மீறியோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தி.மு.க அரசு அதிகாரிகளை நடத்தாது, விசாரணையும் மேற்கொள்ளாது. உரிய முறையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, விசாரணை மனு அனுப்பப்பட்டுத்தான் வெங்கடாசலம் விசாரிக்கப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அஞ்சி இறந்தாரா, சொந்த விவகாரத்தால் இறந்தாரா என்பது நமக்குத் தெரியாது. வெங்கடாசலத்தின் மீது வழக்கு பதிவுசெய்வதற்கும், விசாரணை நடத்துவதற்கும் முகாந்திரங்கள் இருந்ததன் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டிருக்கிறது. தற்கொலை செய்துகொண்டார் என்பதற்காகவே அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாது. ‘காவல்துறைமீது நம்பிக்கை இல்லாமல் சி.பி.ஐ விசாரணை கேட்கிறோம்’ என்று அ.தி.மு.க கூறுவது, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்றும் முயற்சியாகவே எனக்குத் தெரிகிறது.”

குடைந்தெடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை... வெங்கடாசலம் தற்கொலை பின்னணி!

“அரசுத் தரப்பிலிருந்து மிரட்டுகிறார்கள்!” - இன்பதுரை, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ

“மாசு கட்டுப்பாடு வாரிய விதிப்படி, வெங்கடாசலத்துக்கு இன்னும் ஓராண்டு பதவிக்காலம் இருக்கிறது. ஆனால், அவருக்கு அந்தப் பணி வாய்ப்பை தி.மு.க அரசு மறுத்திருக்கிறது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி அவருக்கு அழுத்தம் கொடுத்ததோடு, அந்த வழக்கிலிருந்து தப்ப வேண்டுமானால், குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கச் சொல்லி அரசுக்கு நெருக்கமானவர்கள் தரப்பிலிருந்து மிரட்டலும் விடுக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் வெங்கடாசலத்தின் மரணம் தற்கொலையா, பிறர் கொடுத்த அழுத்தத்தின்பேரில் நடந்ததா என்பதை சி.பி.ஐ விசாரணை மூலமே கண்டறிய முடியும். நீதிமன்றத்திடமோ, காவல்துறையிடமோ செல்லவிடாமல் அவருடைய குடும்பத்தினரை அரசுத் தரப்பிலிருந்து சிலர் மிரட்டுகிறார்கள். எனவேதான், அ.தி.மு.க சார்பில் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்கிறோம்.”