
ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக மெயின் மின் சப்ளை தரப்பட்டு இருக்கிறதா என்பதைப் பார்ப்பது அவசியம்!
பொதுவாக, அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்க வேண்டும் என்பது அனைவரின் மனதிலும் இருக்கும் ஓர் ஆசை. பாதுகாப்பான சூழல், கூட்டாகச் சேர்ந்து வாழ்வது எனப் பல செளகர்யங்கள் அதில் உண்டு. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது முக்கியமாக, பழைய வீடுகள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல. அவை...
1. அடுக்குமாடி வீடுகளின் அறைகளில் ஜன்னல் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். பொதுவாக, அடுக்குமாடிக் குடியிருப்பில் காற்றோட்டத்துக்காகப் பொதுவான திறவிடம் (open to sky - OTS) அமைக்கப்பட்டு, அங்கு மட்டுமே ஜன்னல், வென்டிலேட்டர் அமைக்கப்பட்டிருக்கும். நமது வீட்டு ஜன்னலும் பக்கத்து வீட்டு வென்டிலேட்டரும் ஒரே திறவிடத்தில் அமைந்துவிட்டால், பாத்ரூம் சத்தம் தொந்தரவாக அமைந்துவிடும்.

2. ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக மெயின் மின் சப்ளை வழங்கப்பட்டிருக்க வேண்டும். போதுமான பாதுகாப்புடன் எர்த் அமைக்கப்பட்டிருக்கிறதா, மின்வயர்களில் ஏதேனும் பாதிப்புள்ளதா, ஸ்விட்சுகள் மின் கசிவு இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது அவசியம்.
3. நமது படுக்கை அறைகள்மீது மேல்வீட்டின் வரவேற்பறை அமைந்தால், அது நம் தூக்கத்தைப் பாதிக்கும். மேற்கூரையை சரியான கனத்தில் அமைப்பதால், தேவையற்ற சின்னச் சின்ன சப்தங்கள் வருவதைத் தடுக்க முடியும்.
4. கழிவுநீர் குழாய்கள் அமைப்பு சரியாக இருக்கிறதா என பிளம்பரை வைத்து சரிபார்த்துக்கொள்ளவும். ஒவ்வொரு குழாயிலும் உள்ள வடிகட்டியைப் புதிதாக மாற்றிக்கொள்வது நலம். மேல்நிலைத் தொட்டி எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்பது அவசியம். அது பொதுவாக உள்ளதா அல்லது தனியாக உள்ளதா, பராமரிப்பு யாருடையது என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். அனைத்துக் குடிநீர் குழாய்களையும் ஒருமுறை சுத்தம் செய்துகொள்வது உடல்நலப் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும்.

5. அப்பார்ட்மென்ட்டில் உங்களுடைய வீட்டின் சதுர அடி எவ்வாறு அளக்கப் பட்டுள்ளது, பொதுவான பயன்பாட்டு இடம் எவ்வளவு சதவிகித சதுர அடி உங்களின் பயன்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது, கார் பார்க்கிங் வசதி உள்ளதா, இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம் போதுமான அளவில் உள்ளதா, விருந்தினர்களின் வாகனங்களை நிறுத்த வழி உள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.
6. காற்று வாங்கவும் நடைப்பயிற்சி செய்யவும் குழந்தைகள் விளையாடவும் விளையாட்டுப் பூங்காவும் பொதுவான பொழுதுபோக்கு பூங்காவும் அமைந்திருந்தால் கூடுதல் சிறப்பு. நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம் சிறிய வகையில் விழாக்கள் நடத்த ஒரு கூடம் பொதுவாக இருந்தால் நலம்.
யு.டி.எஸ் இடத்தைக் குறைவாக எழுதிவிட்டு மீதமுள்ள இடத்தைச் சில கட்டுமான நிறுவனங்கள்கள் தாங்களே வைத்துக்கொள்ளும். எனவே, இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை!
7. குடியிருப்புப் பகுதி தொழிற்சாலை பகுதிகளா, ஏதாவது குப்பைகள் சேகரிக்கும் பகுதிகளா அல்லது கம்போஸ்ட் யார்டு (compost yard) போன்றவை அமைந்துள்ளதா, அதன் காற்றோட்டம் எவ்வாறு உள்ளது, அது நம்மையோ, நம் குடும்பத்தையோ பாதிக்குமா என்பதில் கூடுதல் கவனம் தேவை.
8 . கட்டடப் பொறியாளரின் துணைகொண்டு கட்டடங்களில் ஓதம் (நீர் வழிவது) ஏதேனும் உள்ளதா, மேல்வீட்டு பாத்ரூம் ஈரக்கசிவு ஏதேனும் உள்ளதா என்பதையும் பார்த்து முன்கூட்டியே சரிசெய்துகொள்ள வேண்டும் அல்லது விற்பவரிடம் சரிசெய்யச் சொல்லி பின்னர் வாங்குவது நலம்.

9. பொதுவாக, அப்பார்ட்மென்ட்டில் மாதாந்தர பராமரிப்புச் செலவு என்று ஒரு தொகை வசூலிப்பார்கள். எவ்வளவு நாளைக்கு ஒருமுறை அதை உயர்த்துவார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும். குடியிருப்போர் நலச்சங்கம் உள்ளதா, அது திறம்படச் செயல்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும்.
10. லிஃப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளதா, கேபிள் டிவி இணைப்பு உள்ளதா, மொபைல் நெட்வொர்க் சரியாக உள்ளதா என்பதையும் பார்ப்பது அவசியம்.
11. கட்டடத் தொழில்நுட்ப வல்லுநர் துணை கொண்டு அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து கட்டடத்தின் ஸ்திரத்தன்மைச் சான்றிதழ் (stability report) பெற்றுக்கொள்வது நலம். பொதுவாக, கட்டடத்தின் ஆயுள்காலம் 50 - 60 வருடங்கள். எனவே, கட்டடத்தின் வயதையும் எதிர்காலத்தையும் கணக்கிட்டு மதிப்பீட்டாளர் மூலம் கட்டடத்தின் மதிப்பைச் சான்றிதழாகப் பெற்று பின்னர் வாங்க வேண்டும்.
12. எதிர்கால மறுவிற்பனை மதிப்பைக் கணக்கிட உதவும் யு.டி.எஸ் (UDS -undivided share) எனப்படும் பிரிக்கப்படாத இடத்தின் பங்கு சரியாகக் கணக்கிடப்பட்டு எழுதப்பட்டு உள்ளதா, அதைப் பத்திரத்தில் பதிந்துள்ளனரா என்பதைப் பொறியாளரைக் கொண்டு அளந்து கணக்கிட்டு சரிபார்த்துக் கொள்ளவும்.
உதாரணமாக, 50 சென்ட் இடத்தில் 50 குடியிருப்புகள் (நபருக்கு ஒரு சென்ட்) இருக்கிறது எனக்கொண்டால், பொதுப் பயன்பாடு போக மீதியிருக்கும் இடம் 50 பேருக்கும் அவரவர் குடியிருப்பு சதுரடி சதவிகித அடிப்படையில் யு.டி.எஸ் பிரித்து பதிவு செய்திருக்க வேண்டும். இதைக் குறைவாக எழுதிவிட்டு மீதமுள்ள இடத்தை சில கட்டுமான நிறுவனங்கள் வைத்துக்கொள்ளும். எனவே, கூடுதல் கவனம் தேவை.
தங்களது வீட்டின் நான்கு சுவர்களுக்கு உட்பட்ட கார்பெட் பகுதி மற்றும் சுவரையும் சேர்ந்த பிளின்த் ஏரியா (Plinth Area) உங்களுக்கானது. உங்கள் முன் உள்ள வாசல பொதுப்பயன்பாட்டு இடத்தில் (Common Area) சேரும். இதை உங்களின் பிளிந்த் ஏரியாவுடன் சேர்க்கப்படக் கூடாது. அது காமன் ஏரியாவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.