சினிமா
Published:Updated:

2021 - டாப் 10 மனிதர்கள்

2021 - டாப் 10 மனிதர்கள்
News
2021 - டாப் 10 மனிதர்கள்

போட்டித்தேர்வுப் பயிற்சி பெருவணிகமாகிப்போன காலம். பணமற்ற எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அரசுப்பணி நிகழாக் கனவாகவே முடிந்துவிடுகிறது.

2021 - டாப் 10 மனிதர்கள்

பேராசிரியர் பிரபா கல்விமணி போராட்டத்தின் நாயகன்

தன் முழு வாழ்வையும் சமூகத்துக்காக ஒப்புக்கொடுத்த இந்தப் பேராசிரியர், 30 ஆண்டுக்காலம் பல்லாயிரம் மாணவர்களுக்கு அறிவியலோடு சேர்த்து சமூகத்தையும் புகட்டியவர். புரட்சிப் பண்பாட்டு அமைப்புகளைத் தமிழகத்தில் கட்டியெழுப்பி அரசாங்கங்களை அதிரவைத்த இளவயது வேகமும் கோபமும், இன்று பழங்குடிகள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகவும் தகிக்கிறது. தான் பேராசிரியராகப் பணிபுரிந்த திண்டிவனத்துக்கு அரசுப் பெண்கள் பள்ளியைக் கொண்டுவருவதற்காகவே ஒரு அமைப்பைக் கட்டியெழுப்பிய கல்விமணி, கல்விநிறுவனங்களை எளிய மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் நன்கொடை, தனிப்பயிற்சி அவலங்களுக்கு எதிராக மிகப்பெரும் இயக்கத்தை நடத்தியவர். ஊட்டி, தர்மபுரி, ராமநாதபுரம் எனப் பணிமாற்றிப் பந்தாடப்பட்டபோதெல்லாம் மக்களும் மாணவர்களும் அரணாக நின்று காத்தார்கள். விருப்ப ஓய்வு பெற்று, 25 ஆண்டுகளாக இருளர் பழங்குடிகள் மீதான வன்முறைக்கும் சமூகப்புறக்கணிப்புக்கும் எதிராகக் களமாடிவருகிறார். அத்தியூர் விஜயா தொடங்கி டி.கே.மண்டபம் லெட்சுமி வரை வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்காகக் கால்தேய நடந்து நீதிபெற்றுத்தந்த கல்விமணி, இதுவரை 900 வன்கொடுமை வழக்குகளைக் கையாண்டிருக்கிறார். மதிய உணவையும் உள்ளடக்கி தாய்த்தமிழ்ப் பள்ளி ஒன்றை வெற்றிகரமாக நடத்தும் கல்விமணி, கொரோனா இரண்டாம் அலை காலத்தில் ‘நுண்வகுப்பறை’ மூலம் கல்வியை மட்டுமன்றி உணவையும் மாணவர்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கி அரசுக்கு வழிகாட்டினார். தங்கள் துயர் நீக்கவந்த கல்விமணியை மதிப்புக்குரிய வழிகாட்டியாகப் பார்க்கிறார்கள் பழங்குடிகள். இந்த நொடியும் குரலற்ற எவரோ ஒருவருக்காகப் புகார்ப்படிவம் எழுதிக்கொண்டிருக்கும் கல்விமணியை, டாப்-10 மனிதர்களில் ஒருவராக கௌரவித்துப் பெருமிதம் கொள்கிறது ஆனந்தவிகடன்.

2021 - டாப் 10 மனிதர்கள்

ரோமுலஸ் விட்டேக்கர்- ஜானகி லெனின் - விலங்குகளின் நேசர்கள்

சென்னையில் பாம்புப் பண்ணை, முதலைப் பண்ணை என எங்கு நாம் சென்றாலும், அந்தக் காற்றில் நிச்சயம் ரோமுலஸ் விட்டேக்கரின் பெயர் இருக்கும். ஆசியாவிலேயே முதல்முறையாக முதலைகளின் இனப்பெருக்கச் செயல்முறைகளையும் அவற்றின் மனநிலையையும் புரிந்துகொண்டவர் ரோமுலஸ்தான். பாம்புகளோடு இருளர் மக்களுக்கு இருக்கும் உறவையே, பாம்புகள் பாதுகாப்புக்கும் பாம்புக்கடி பிரச்னைக்கான தீர்வுகளில் ஒன்றாகவும் மாற்றியவர். அவருடைய அந்த முயற்சி இருளர் மக்களுக்கு முக்கியமான

தொரு தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது. படத்தொகுப்பாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய ரோமுலஸின் மனைவி ஜானகி லெனின், தற்போது பல சர்வதேச ஊடகங்களுக்கு மிருகங்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதிவருகிறார். மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் பிரச்னையின் அடிப்படையைப் புரிந்துகொள்வதில் மிகவும் பிரயத்தனப்பட்டார் ஜானகி. யானை, புலி போன்ற பேருயிர்களையும் கடந்து, இந்தச் சுழலுக்குள் சிக்கும் மற்ற உயிரினங்கள்மீதும் கவனம் செலுத்துகிறார். செங்கல்பட்டுக்கு அருகே தங்களின் நிலத்தை முழுவதுமாகக் காடாக மாற்ற, இருவருக்கும் 20 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதன்மூலம் பல விலங்குகளை, மீண்டும் அந்தக் காடுகளுக்குள் வர வைத்திருக்கும் இவர்கள் இருவரும் சூழலியலுக்கான நம்பிக்கை வெளிச்சம்.

2021 - டாப் 10 மனிதர்கள்

ஆரோக்கிய ராஜீவ் - தடைகள் வென்ற தடகள வீரர்

லால்குடித் தெருக்களில் கற்களுக்கும் முட்களுக்கும் நடுவே ஓடிப்பழகிய கால்கள், உலகம் கொண்டாடும் ஒலிம்பிக் அரங்கில் தடம் பதித்ததற்குப் பின்னால் இருக்கிறது, ஓரு குடும்பத்தின் பசியும் பட்டினியுமான போராட்டம். வறுமை பிடுங்கித் தின்னும் வாழ்க்கை; உடலை வருத்தும் மூச்சுத்திணறல் பாதிப்பு... வாழ்க்கை விரக்தியின் பக்கம் துரத்த, அதைக்கடந்து ராஜீவ் வெற்றிக்கோட்டை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தார். 2014-ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலத்துக்கான போடியம் ஏறிய இவர், அடுத்த 4 ஆண்டுகளில் கலப்பு தொடர் ஓட்டத்தில் வென்று தங்கத்துக்காக ஏறினார். ஆசியப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்று வந்த ராஜீவுக்கு அர்ஜுனா விருது தந்து கொண்டாடியது தேசம். ராஜீவ் போட்டுத்தந்த தடத்தில் இன்று பலநூறு பேர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தன் 18 வயதில் சிப்பாயாக இந்திய ராணுவத்தில் இணைந்தவர், இப்போது மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் சுபேதாராக இருக்கிறார்! உழைப்பும் இலக்கும் ஒற்றைப்புள்ளியில் இணைந்தால் வறுமையையும் நோயையும்கூட ஜெயிக்கலாம் என்ற வார்த்தைகளுக்கு உதாரணமாக இருக்கிற ஆரோக்கிய ராஜீவின் கதை, இளந்தலைமுறைக்கான பாடம்!

2021 - டாப் 10 மனிதர்கள்

பொ.வேல்சாமி - அறிவு வெளிச்சம் பாய்ச்சும் ஆளுமை

பொ.வேல்சாமி தமிழ் இலக்கிய வரலாறு குறித்த புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சிய அறிவு ஆளுமை. தமிழ் இலக்கிய வரலாறு, ஓலைச்சுவடிகள் அச்சு நூல்களாக வடிவம் பெற்ற தமிழ்ப் பதிப்பு வரலாறு, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தமிழின் வளர்ச்சிக்கு உழைத்த வெளிநாட்டவர்கள், தமிழர்களின் சடங்குகள், பண்பாடுகள் குறித்த ஏராளமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய `பொற்காலங்களும் இருண்டகாலங்களும்', `கோவில் நிலம் சாதி', `பொய்யும் வழுவும்', `வரலாறு என்னும் கற்பிதம்' நூல்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. களப்பிரர் காலம் இருண்டகாலம் என்று பல தமிழறிஞர்களால் குறிப்பிடப்பட்டபோது, அவை தவறான தகவல்கள் என்று ஆதாரபூர்வமாக நிறுவியவர். `19ஆம் நூற்றாண்டுவரை தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டியது காடுவெட்டிச்சோழன் என்று தமிழர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அதைக் கட்டியது ராஜராஜ சோழன் என்ற உண்மையை வெளிக்கொணர்ந்தவரே ஹீல்ஸ் என்ற ஆங்கிலேய கல்வெட்டு அறிஞர்தான்' என்பது போன்ற பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இவர் ஆய்வின் அடித்தளங்கள். கால்டுவெல்லின் `திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலின் விடுபட்ட பகுதியைத் தேடிப்பிடித்து அதை முழுமையான பதிப்பாகக் கொண்டுவரக் காரணமாக இருந்த பொ.வேல்சாமி, கால்டுவெல்லின் `பரதகண்ட புராதனம்' நூலை அச்சிட்டார். தனிச் சேகரிப்பிலிருந்த 3,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்னூலாக்கத் திட்டத்துக்குக் கொடையாக வழங்கியிருக்கிறார். கற்பிதங்களையும் பொய்யான நம்பிக்கைகளையும் தகர்க்கும் விதத்தில் தொடர்ச்சியாக சமூகவலைதளத்தில் எழுதிவருவதுடன், பழந்தமிழ் நூல்களின் மின்னூல், கல்வெட்டுகள் குறித்த இணையத்தொடர்புகளையும் கொடுப்பதுமூலம் வாசகர்களையும் ஆய்வாளர்களாக மாற்றும் முயற்சியில் முன்னிற்கிறார்.

2021 - டாப் 10 மனிதர்கள்

தாரேஷ் அகமது - மக்கள் அதிகாரி

ஆக்சிஜனுக்கும் ஆம்புலன்ஸுக்கும் மக்கள் தவித்துநின்ற இரண்டாம் அலைக் காலத்தில் கட்டுப்பாட்டறையின் பொறுப்பாளராகக் களத்தில் இறங்கிச் சூழலை மாற்றியமைத்த தாரேஷ், கேரளாவில் மருத்துவராக அரசுப்பணிக்குள் நுழைந்தவர். கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சியராகி தாரேஷ் நிகழ்த்தியது வரலாற்று மாற்றம். முன்தகவல் தராமல் கல்விக்கூடங்களில் நுழைந்து குழந்தைகளோடு சப்பணம் போட்டு அமர்ந்து பாடம்சொல்லிக் கொடுத்த கலெக்டரைக் கண்டு வியந்துபோனது பொதுச்சமூகம். குழந்தைத் திருமணங்களைத் தடுத்து, 300க்கும் மேற்பட்ட பெண்களின் எதிர்காலத்தைக் காத்த தாரேஷ், `பெண் குழந்தைகளைக் காப்போம்' என்ற திட்டத்தை உருவாக்கி, கல்லூரிகளையும் விடுதிகளையும் கொண்டுவந்து பலநூறு பெண்களைப் பட்டதாரிகளாக்கியது போற்றத்தகுந்த பணி. அரசுப்பள்ளிகளைத் தனித்தனியாக வகைப்படுத்தி அவற்றின் மேம்பாட்டுக்காக தாரேஷ் உருவாக்கிய சூப்பர்-30 போன்ற திட்டங்கள் மாநிலம் முழுமைக்குமான வழிகாட்டுதலானது. மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்போடு புத்தகக்காட்சியை மக்கள் விழாவாக மாற்றி இளைஞர்களை வாசிப்பின் பக்கம் ஈர்த்த இந்த டாஸ்க் மாஸ்டரை, நம்பிக்கையோடு கொரோனா பேரிடர் கட்டளை மையத்துக்குப் பொறுப்பாக்கியது அரசு. 104 என்ற ஒற்றைத்தொலைபேசி எண், எல்லா நெருக்கடிகளையும் ஏற்று மாநிலம் பேரிடரிலிருந்து மீளப் பெரும்பங்காற்றியது. ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘நம்மைக்காக்கும் 48- இன்னுயிர் காப்போம் திட்டம்' என எளிய மக்களுக்கு நெருக்கமாக மருத்துவத்தைக் கொண்டுசெல்லும் திட்டங்களின் பொறுப்பாளரான தாரேஷ், தாய்சேய் நலத்திட்ட ஆணையராகவும் தேசிய நல்வாழ்வுத் திட்ட இயக்குநராகவும் இருக்கிறார். வரிசைகட்டும் நோய்களால் மக்கள் நிம்மதியிழந்துள்ள நேரத்தில், தாரேஷ் தேசத்தின் நம்பிக்கை!

2021 - டாப் 10 மனிதர்கள்

பேச்சிமுத்து - எல்லோருக்குமான ஏணி

போட்டித்தேர்வுப் பயிற்சி பெருவணிகமாகிப்போன காலம். பணமற்ற எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அரசுப்பணி நிகழாக் கனவாகவே முடிந்துவிடுகிறது. தூத்துக்குடி பேச்சிமுத்து, தன்பகுதி பிள்ளைகளின் கனவு அப்படித் தீர்ந்துபோய்விடக்கூடாது என்று எண்ணினார். தன் உப்பள வருமானத்தில் ஒரு தொகை ஒதுக்கி, கல்யாண மண்டபம் கட்ட வாங்கிப்போட்டிருந்த நிலத்தில் ஒரு போட்டித்தேர்வுப் பயிற்சி மையத்தைக் கட்டியெழுப்பினார். கடந்த 7 ஆண்டுகளாகப் பலநூறு பேருக்கு ஒற்றைப்பைசா கட்டணமில்லாமல் பயிற்சி அளித்துள்ள பேச்சிமுத்துவின் கின்ஸ் அகாடமி, 170 பேரை அரசுப்பணியில் அமர்த்தியிருக்கிறது. குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், அனுபவமிக்க ஆசிரியர்களென பெருநகரத் தரத்தில் இயங்குகிறது பயிற்சி மையம். தினமும் மையத்துக்கு வந்து பயிற்சி பெறுவோருக்குச் சிற்றுண்டியும் சுக்குக்காபியும் தந்து தம் பிள்ளைகளைப்போல அன்பு பாராட்டுகிறார் பேச்சிமுத்துவின் மனைவி. எந்த எதிர்பார்ப்புமின்றி எளிய குடும்பங்களின் தலையெழுத்தை மாற்றிவரும் பேச்சிமுத்து தூத்துக்குடியின் ஞானத்தந்தை.

2021 - டாப் 10 மனிதர்கள்

நந்தினி முரளி - உயிர் காக்கும் உன்னத மனிதி

தெள்ளிய நதிபோல ஓடிக்கொண்டிருந்த நந்தினியின் வாழ்க்கையைத் தேக்கி நிறுத்திச் சுழலில் தள்ளியது கணவரின் தற்கொலை. இழப்பின் துயர் ஒரு பக்கம்; உறவுகளின் வசவுகள் தந்த வலி ஒரு பக்கமென நிலைகுலைந்து நின்றவர், அதிலிருந்து விடுபட்டு தன்னைப்போல தற்கொலைக்கு உறவுகளைப் பலிகொடுத்தவர்களை ஆற்றுப்படுத்துவதையே பிற்பகுதி வாழ்க்கையென வடிவமைத்துக்கொண்டார். தற்கொலை செய்துகொள்வோரின் உறவுகள் இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் துயரங்களை உள்ளடக்கி நந்தினி எழுதிய ‘லெஃப்ட் பிஹைண்டு - சர்வைவிங் சூசைடு லாஸ்’ புத்தகம், மன அழுத்தம் கொண்டோருக்கான உளவியல் மருந்து. தற்கொலைத் தடுப்புப் பிரசாரம், தற்கொலை செய்தோரின் குடும்பத்தாருக்கான மனநல ஆதரவு எனப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார் நந்தினி. அவர் தொடங்கியுள்ள ‘ஸ்பீக்’ அமைப்பு, பள்ளி, கல்லூரிகளில் தற்கொலையின் விளைவுகளைப் பேசிக்கொண்டிருக்கிறது. ஒரு நொடியில் முடிந்துபோகும் தற்கொலையின் இழப்பையும் குற்ற உணர்வையும் சுமப்பவர்களுக்காகக் களமாடுகிற நந்தினி கொண்டாடப்பட வேண்டிய சேவைக்காரர்!

2021 - டாப் 10 மனிதர்கள்

கிரிஷ் மாத்ருபூதம் - தொலைநோக்குச் செயற்பாட்டாளர்

11 ஆண்டுகளுக்கு முன் வங்கித் தவணைக்கும் குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சராசரி இளைஞர், இன்று, நான்கு கண்டங்களில் 50,000 வாடிக்கையாளர்களுக்கு வணிகம் செய்யும் 95,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். அரசு ஊழியரின் மகனாக திருச்சியில் பிறந்த கிரிஷ், தஞ்சையில் பொறியியலையும் சென்னையில் எம்.பி.ஏ-வையும் முடித்துவிட்டு சில மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றினார். காலத்தின் எதிர்கால நகர்வுகளைக் கணிக்கத்தெரிந்தவர்களே அதைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெறுகிறார்கள். கிரிஷ், இனி உலகம் 'SaaS' தொழில்நுட்பத்தின்மீதுதான் உருளப்போகிறது என்ற உண்மையைப் புரிந்துகொண்டு இரு நண்பர்களோடு சேர்ந்து தொடங்கிய Freshworks நிறுவனம், இன்று அமெரிக்கப் பங்குசந்தையில் கால்பதித்திருக்கிறது. நம்பர்-1 `SaaS' தொழில்நுட்பனாக உலகை வலம்வரும் கிரிஷ், பலநூறு இளைஞர்களின் ஸ்டார்ட் அப் கனவுகளுக்கு உயிர்தரும் ஏஞ்சலாகவும் மாறியிருக்கிறார். இந்த ரஜினி ரசிகனுக்குக் கால்பந்துமீது தீராக்காதல். இவர் தொடங்கியிருக்கும் `FC Madras’ வெளிச்சமற்றுக் கிடக்கும் கால்பந்து வீரர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. தெளிவான திட்டமிடலும் உறுதியான உழைப்பும் இருந்தால் மிடில்கிளாஸ் கனவும் உலக உருண்டையில் வேர் பரப்பும் என்பதே கிரிஷ் என்ற பெருமிதத் தமிழனின் வெற்றி!

2021 - டாப் 10 மனிதர்கள்

கே.ஆர்.ராஜா - சிறைவாசிக் குழந்தைகளின் ஆசான்!

சிறை, தனிமனிதர்களை மட்டுமல்ல... குடும்பங்களையும் நிர்மூலமாக்கிவிடுகிறது. உணர்ச்சி வேகத்தில் குற்றமிழைத்து ஒருமுறை சிறைசென்று வந்தவர்கள் சமூகத்தின் பார்வையில் வாழ்நாள் குற்றவாளிகளாகி விடுகிறார்கள். அப்படி ஒதுக்கப்படும் மனிதர்களின் மறுவாழ்வுக்காகவும் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் நடந்துகொண்டிருக்கிறார் ராஜா. பிறப்பிலேயே முடக்கிப்போட்ட போலியோ அவரது சேவைப் பயணத்துக்குத் தடையாக இல்லை. முதுகலை படித்தபோது களப்பணிக்காகச் சிறைக்குச் சென்றவரை சிறைவாசிகளின் கண்ணீர் கலங்க வைத்திருக்கிறது. அந்தத் தருணம்தான் அவரது நீண்ட பயணத்துக்கான தொடக்கப்புள்ளி. ராஜா நடத்தும் ‘குளோபல் நெட்வொர்க் ஃபார் ஈக்வாலிட்டி’ இன்று 500க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறது. தன் உடல்நிலை கருதாது குமரிக்கும் சென்னைக்கும் அலைந்து சிறைவாசிகளின் குடும்பத்துக்கு நம்பிக்கையூட்டும் ராஜா, கிரிமினாலஜியும் சட்டமும் படித்தவர். இஸ்ரேலும் ஜெர்மனியும் ராஜாவை அழைத்து சிறைவாசி குழந்தைகளின் நல்வாழ்வுக்கென ஆலோசனை கேட்டது, அவர் சேவைக்கான அங்கீகாரம்!

2021 - டாப் 10 மனிதர்கள்
DIXITH

சிவக்குமார் - மானுட நேசன்

டீக்கடைதான் கிராமங்களின் கூடுதலம். டீக்கடையே உலகம்; டீயே உணவென்று கிடக்கிற மனிதர்கள் பலருண்டு கிராமங்களில். ஒருநாள் விடியலில் கஜா புயல் மொத்த வாழ்வாதாரத்தையும் நிர்மூலமாக்க, டீக்குக்கூட காசற்ற கையறுநிலைக்குப் போயின பல குடும்பங்கள். ஆலங்குடி வம்பன் நாற்சாலையில் டீக்கடை நடத்தும் சிவக்குமார், அந்த மக்களின் துயரில் தோள்கொடுத்தார். வீடுகளுக்குள் முடங்கிய தன் வாடிக்கையாளர்களுக்கு வீடுதேடிச் சென்று டீ கொடுத்ததோடு, தனக்குத் தரவேண்டிய கடன்பாக்கியைத் தரவேண்டாம் என்றார். அன்றாடம்காய்ச்சியான சிவக்குமார் அப்படி வேண்டாமென்று சொன்ன தொகை இருபத்தைந்தாயிரத்தைத் தாண்டும். தோட்டம் நிர்மூலமாகித் தவித்து நின்ற விவசாயிகளுக்குச் செம்மரம், சந்தன மரக்கன்றுகளை வரவழைத்து வழங்கினார். பேரிடர்க் காலங்களில் டீக்கடை முகப்பில் சுடச்சுட மூலிகைக் கஷாயங்கள் வைப்பது, முதியோருக்குப் பாலும் பிரெட்டும் வழங்குவது, பச்சிளம் குழந்தைகளுக்குப் பால் வழங்குவது என இவரது நேசக்கரம் நீண்டுகொண்டே போகிறது. தன் கடையில் மொய் விருந்து விழா நடத்தி அதன்மூலம் கிடைத்த 23,000 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிய இந்தப் பெருந்தன்மைக்காரர் ‘எனக்குச் சோறுபோட்ட மக்கள் தவிச்சு நிக்கும்போது பாத்துக்கிட்டு சும்மா இருக்கமுடியுமா?' என்று கேட்கும் கேள்வியில் தளும்ப நிரம்பியிருக்கிறது மனிதம்!