
வரலாற்று அதிசயமாகத் தொடர்ந்து இரண்டு தேர்தல்களாகப் பாட்டாளிகள் ஒரே கூட்டணியில் இருக்க, `தெய்வக்குத்தம் ஆயிடுமே' என சலிப்போடே வேலை பார்த்தார்கள் நிர்வாகிகள்.
அறிக்கை வருது அறிக்கை வருது... டும்டும்டும்!
மாற்றம், முன்னேற்றத்தில் அன்புமணி அறிக்கைமணியான மாற்றம் மட்டுமே இந்த ஆண்டு நடக்க, ‘முன்னேற்றம்' வழக்கம்போல திண்டிவனம் பஸ் ஏறிக் காணாமல்போனது. `ப்பா... ஐ நீடு திஸ்ப்பா' என வாரணம் ஆயிரம் தாக்கத்தில் அவர் போனில் கண்ணீர் சிந்த, `மொபைல் கேமராவுக்கே இப்படிப் பின்றாரே... பெரிய கேமரா வச்சா நமக்கே டஃப் கொடுப்பாரோ' என விஜய் ஆதிராஜ், வேணு அரவிந்த் போன்ற மூத்த சீரியல் நடிகர்கள் எல்லாம் தெறித்து ஓடினார்கள். `சூர்யாவை எச்சரிக்கிறேன்' என இவர் உக்கிரமாகக் கண்ணை உருட்ட, `இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணலாம்.

சரி, எதுக்கும் ஆடிஷன் வந்துருங்க' எனக் கூலாக டீல் செய்தார் சிவக்குமார் மைந்தன். `நான் வந்தா தாங்கமாட்டீங்க' என இவர் பிளிற, `கண்டா வரச்சொல்லுங்க' என ராஜ்யசபா அட்டெண்டென்ஸ் ரிஜிஸ்டரைத் தூக்கி முன்னால் போட்டன ஊடகங்கள். மறுபக்கம், `சின்னய்யாவின் ராஜ்யசபா சாதனைகள்' எனப் பளீர் வெள்ளைப் பேப்பரை ரவுண்ட்ஸுக்கு விட்டார்கள் சினிமா ரசிகர்கள். ஒருகட்டத்தில் மொத்தத் திரையுலகமும் கூடிக் கொக்கரிக்க, `ஓவியா, சூர்யான்னு எல்லாருக்கும் கூடுறாங்க. நமக்கு மட்டும் வர்றதில்லையே... ஒய் டாடி?' எனக் கண்ணைக் கசக்கியபடி வீடுபுகுந்தார் சின்னய்யா.

40 கதையும் நல்லா இருந்த சினிமாவும்!
படத்திலிருந்து மீம் டெம்ப்ளேட் எடுத்த காலம் போய் படம் பற்றிய பிரஸ்மீட்டெல்லாம் மீம் டெம்ப்ளேட் ஆனது இந்த ஆண்டுதான். படத்துக்குப் படம் கம்பேக் கொடுக்கும் யுவன், சீசனுக்கொரு முறை கம்பேக் கொடுக்கும் சந்தானம் ஆகியோரை விலக்கிவிட்டு நிஜமாகவே கம்பேக் கொடுத்தார் வைகைப்புயல். `தலைவனின் மாநாடு... எல்லாரும் வழிய விடு' என `என் பேரு சூசை, நான் திங்குறது தோசை' மாடுலேஷனில் கேப்பே விடாமல் பாடாய்ப் படுத்திய கூல் சுரேஷின் காமெடிக்கு மத்தியில் கம்பேக் கொடுத்தார் எஸ்.டி.ஆர். `என் படத்தை நான் பார்த்துக்குறேன், என்னை நீங்க பார்த்துக்கோங்க' என அவர் கண்ணீர் சிந்த, `நீங்க உங்க படத்தை நல்லா பார்த்திருந்தாதான் இவ்ளோ பிரச்னையே வந்திருக்காதே' என எதிர்க்கேள்வி கேட்டான் சினிமா ரசிகன். ஏரியாவுக்குள் பொடிசுகள், `நான்தான் அண்டர்டேக்கர், நீதான் கிரேட் காளி' எனப் பெயர் வைத்துக்கொண்டு `ஹே...' என இரைந்து திரிவார்களே... அப்படி `அவரு ஒரு சூப்பர்ஸ்டார், நான் சூப்பர் ஸ்டாரை இயக்கிய டைரக்டர்' என இரண்டு பேர் இயர் எண்டில் வந்து கை குலுக்க, கையைத் தட்டிவிட்டு கைகொட்டிச் சிரித்தது தமிழகம். `க்ரஷு க்ரஷுன்னு மொத்தமா க்ரஷ் பண்ணிட்டீங்களேய்யா' என அஸ்வின் பதறிப் போய் மன்னிப்புக் கேட்க, வெந்து தணிந்தது கோலிவுட் காடு.

கிளப்ஹவுஸ் பரிதாபங்கள்!
புதிதாக ஒரு செயலி வந்தால் அங்கே குத்த வைத்து, அடிமட்டம் வரை அலசி ஆராய்ந்து அதன் ஓனருக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் புட்டுப் புட்டு வைப்பதுதானே தமிழர் மரபு. போக, பேரும் கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்க, மொத்தமாய்ப் போய் இறங்கினார்கள் கிளப்ஹவுஸில். முதல் இரு நாள்கள், `ஹலோ யாருன்னா இருக்கீங்களா?' எனப் ‘புதுப்பேட்டை’ தனுஷ்போலத் தனியாகக் கத்தி, அடுத்த சில தினங்கள் `யாரடி நீ மோகினி' தனுஷ்போல `திஸ் இஸ் பாரீன் அண்டர்வேர்' என பீட்டர் முகம் காட்டி, கடைசியாக `வா அசுரா வா அசுரா' எனச் சண்டை பிடித்து டார்வினே குழம்பிப்போகும் வேகத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்தார்கள் கிளப்ஹவுஸ் குடிமக்கள். `ஏழேழு ஸ்வரங்கள்' என உச்சஸ்தாயியில் பாடி வீட்டுக்கு வீடு உருவான வெள்ளைச்சாமி தாத்தாக்கள், `பழனி மலையடிவாரத்தையே பஸ்ல போறப்போதான் பார்த்திருக்கேன். ஆனா மலையேறுதல் பத்தி உங்களுக்குச் சொல்லித் தர்றேன் வாங்க' எனப் பையிலிருந்து பொய்யை அவிழ்க்கும் வாண்டர்லஸ்ட் ட்ராவலர்கள், `உங்களுக்கு பிசினஸ் எப்படி பண்றதுன்னு சொல்லித் தர்றதுதான் என் புல்டைம் பிசினஸ்' எனக் கல்லா கட்டிய செல்லப்பாக்கள் என கலவையான கும்பலால் அதிர்ந்தது ஆப். மறுபக்கம், `நாங்கெல்லாம் மேட்ரிமோனியவே டேட்டிங் சைட்டா யூஸ் பண்றோம், இதை விட்ருவோமா?’ என தனி ட்ராக் ஓட்டினார்கள் இளசுகள்.

உனக்கு 20 எனக்கு 18!
எல்லாப் படங்களுக்கும் முன்பு தவறாமல் வரும் அரசு விளம்பரம் போல எல்லாப் படங்களிலும் தவறாமல் விஜய் சேதுபதியும் வர, `என்னதான் ஆச்சு நம்ம மக்கள் செல்வனுக்கு?' எனக் குழம்பித் தவித்தார்கள் கோலிவுட் ரசிகர்கள். தியேட்டரில், ஓடிடியில், சின்னத்திரையில் என எங்கெங்கு காணினும் அவர் முகம் தட்டுப்பட, `யய்யா... இன்னும் நீங்க வராதது கிண்டில் ஸ்க்ரீன்லயும் பழைய 9999 இன் 1 வீடியோ கேம் ஸ்க்ரீன்லயும் மட்டும்தான். ஆளை விடுங்கய்யா' என அலறினார்கள் 90'ஸ் கிட்ஸ். மறுபக்கம் தான் பேசிய வசனம் போலவே, `பாஸு... இப்ப நான் உங்களை கெஸ்ட் ரோல்ல வந்து கொல்லவா, இல்ல ஹீரோவா வந்து வெல்லவா, காமெடியனா நடிச்சு காலி பண்ணவா, இல்ல கேரக்டர் ரோல்ல நடிச்சு குட்மார்க் வாங்கவா’ என சளைக்காமல் நடித்துத் தள்ளிக்கொண்டிருந்தார் சமுத்திரக்கனி. மட்டன் பிரியாணியை மூக்கு முட்டத் தின்றுவிட்டு பீடாவுக்கு பதில் கீரைக் கரைசலைக் குடிப்பதுபோல ஒருபக்கம் நவரசா, மறுபக்கம் ருத்ர தாண்டவம் என மூன்றாவது முனையில் சம்பந்தமே இல்லாமல் கெளதம் மேனன் செய்ததெல்லாம் ஹை லெவல் காமெடி.

ரிட்டயர்டு ரவுடி!
`அ.தி.மு.க சீக்கிரம் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கணும். இது வேண்டுகோள் அல்ல, எச்சரிக்கை' என முதல் ஆளாக கர்ஜித்தார் ராஜமாதா அண்ணியார். `ஓஹோ... சைடு கேப்ல சின்னம்மாவுக்கு சல்யூட் போட்டமாதிரி இருந்ததே?' என இரட்டைத் தலைமைப் புருவம் உயர்த்த, `இதென்ன இன்னிக்கு நேத்தா நாங்க பண்றோம்?' எனக் கூலாக தோள் குலுக்கினார் சுதீஷ். `41-ல ஒண்ணு கொறஞ்சாலும் நாங்க வேற மாதிரி பேசுவோம்' என லேடி கேப்டன் முஷ்டி முறுக்க, `சரி, போய் தனியா பேசிட்டிருங்க' என வெளியே தள்ளிக் கதவைச் சாத்தியது ராயப்பேட்டை அலுவலகம். `நான் யாருன்னு அவங்களுக்குக் காட்டுங்க மக்களே' என பிரேமலதா விருத்தாசலத்தில் வீறுகொண்டெழ, `மொத நீங்க யாருன்னு எங்களுக்கே தெரியாது' என டெபாசிட்டைக் காலி செய்தார்கள் வாக்காளர்கள். சட்டசபைத் தேர்தலில் மொத்தமாய் குக்கரில் வெந்த கட்சியை உள்ளாட்சித் தேர்தலில் எடுத்து ஆறப்போட்டு நிர்வாகிகள் புது ரத்தம் பாய்ச்சப் பார்க்க, `பிம்பிலிக்கா பிலாப்பி' என தலைமை, காலி பாக்கெட்டைக் காட்டியதில் டரியலாகிப் போனதுதான் மிச்சம்.

உயர்திணை... அஃறிணை... காலித் திண்ணை!
வரலாற்று அதிசயமாகத் தொடர்ந்து இரண்டு தேர்தல்களாகப் பாட்டாளிகள் ஒரே கூட்டணியில் இருக்க, `தெய்வக்குத்தம் ஆயிடுமே' என சலிப்போடே வேலை பார்த்தார்கள் நிர்வாகிகள். சரியாகத் தேர்தல் முடியவும் வழக்கம்போல பெரியய்யா, `நாம இனிமே எக்காரணம் கொண்டும் கூட்டணி வைக்கக் கூடாது' என முண்டாசு கட்ட, `போறாரு, கூட்டணி வைக்கிறாரு, தோக்குறாரு. இப்படிச் சொல்றாரு... ரிப்பீட்டு' எனத் தலையிலடித்துக்கொண்டார்கள் தமிழ் மக்கள். `60 சீட்ல ஜெயிச்சா என் பையன் முதல்வர். அதெல்லாம் சப்ப மேட்டர், சால்ட் வாட்டர்' என அவர் குதூகலிக்க, `ஐயா, நாம இதுநாள்வரை மொத்தமா ஜெயிச்சதே 51 தொகுதிங்கதான்' என பர்னிச்சரை உடைத்தார்கள் தொண்டர்கள். `பஞ்சாயத்துத் தேர்தலில் நிற்கக்கூட கட்சியில் ஆளில்லை' என்றெல்லாம் அவர் புலம்ப, `நீங்களே உங்களைக் கலாய்ச்சுகிட்டா அப்புறம் நாங்க என்னத்துக்கு?' எனத் தலையைச் சொறிந்தார்கள் மீம் மேக்கர்ஸ்.

இப்ப மட்டும் தப்பிச்சுட்டேன், நான் ஜெயிச்சுட்டேன்!
காலி ரெய்டு போய்விட்டு அதைச் சமாளிக்க கோட்டுக்குப் பக்கத்தில் போய் `விஸ்க்கு... விஸ்க்கு' எனப் போக்குக் காட்டும் கபடி பிளேயர் மோடிலேயே சுற்றிவந்தார் ஓ.பி.எஸ். போதாக்குறைக்கு சின்னம்மாவும் களத்திற்குள் வர, `மாஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்' என சிலிர்த்துப் போய் சில்லறை விட்டெறியும் குட்டிப்பையன் பூவையாறு போல குதூகலித்து நின்றார். ஆனால் சின்னம்மாவோ, `ஐயோ கபடின்னா அடிபடும். சாட் பூத் த்ரீ மாதிரி ஏதாவது சாப்ட்டா விளையாடினா சொல்லுங்க வர்றேன்' என நடையைக் கட்ட, `நின்னைச் சரணடைந்தேன் கண்ணய்யா' எனக் கொங்கு மண்டலத்தில் அடைக்கலம் புகுந்தார். `சாவு பயத்தக் காட்டிட்டாங்க பரமா' எனப் பதறிபோய்தான் போட்டியே இல்லாத தேர்தலுக்கு ஓகே சொன்னார். அடுத்தடுத்து ரெய்டுகளால் எம்.ஜி.ஆர் மாளிகை வெலவெலத்துப் போன நேரத்தில் `திருந்தி வந்தா ஏத்துக்கணும்' என இவர் பாடமெடுக்க, `இது கட்சியா, வி.சேகர் படமா' எனக் கடுப்படித்தார் எடப்பாடி. `மம்மி ப்ராமிஸா உங்ககூடத்தான் இருக்கேன்' என இவர் கையைக் கிள்ளி சத்தியம் செய்தாலும், பேய் பயத்தில் நடுநிசியில் பின்னாலிருக்கும் ஆள் இன்னும் உட்கார்ந்திருக்கிறாரா என திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொள்ளும் பைக் ஆசாமியைப் போலவேதான் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார் மற்றவர்.

எல்லாப் பக்கமும் அணை கட்டுறாய்ங்களே!
புது வருஷம் பிறப்பதற்கு காலண்டர் கொடுப்பதுபோல போய் ஆளுநரிடம் ஊழல் புக் பார்ட் ஒன்னைக் கொடுத்துவிட்டு ஸ்டாலின் நடையைக் கட்ட, வாழ்த்து சொல்ல வேண்டிய வாயால் வசவுகளைக் கொட்டியபடியே புத்தாண்டைத் தொடங்கினார் எடப்பாடியார். சந்தையில் அடம்பிடித்து வாங்கி ஆளுக்கொருபக்கம் இழுத்து விளையாடும் சவ்வு மிட்டாயைப் போல கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் திசைக்கொரு பக்கம் தட்டிவிட, `ஒரு ஏழை விவசாயி என்றும் பாராமல்' எனக் கண்கலங்கினார். `கண்ணின் மணி கண்ணின் மணி ரிலீஸாயிட்டேன்ம்மா' எனச் சின்ன மம்மி சட்டென வெளியே வர, `ஊமைவிழிகள்' படத்தில் வரும் கிழவியைப் போல கறுப்புப் போர்வையைப் போர்த்திக்கொண்டு நைட் ரவுண்ட்ஸ் போகத் தொடங்கினார். வாய்ஸ் மெசேஜுக்கு ரிப்ளை போடப் போனவர்களை, `பொதுக்குழுவுக்கு வந்தவங்க பிடரிமுடியெல்லாம் கலெக்ட் பண்ணி வச்சிருக்கேன். போனா பில்லி சூனியம் வச்சிருவேன்' என மிரட்டியே யூ டர்ன் போட வைத்தார். இதற்கிடையில் வேளாண் சட்டங்கள் வாபஸ், ரெய்டுகள், கைதுகள் எகிறிக்குதிக்க எக்கச்சக்கமாய் முழி பிதுங்குகிறார் எடப்பாடி.

இருக்கு ஆனா இல்ல!
‘விஜய்யை வைத்து ரொமான்ஸ் படம் மட்டுமல்ல, காமெடிப் படமும் பண்ணுவேன்’ என இந்த ஆண்டும் அடம்பிடித்து வண்டியில் ஏறினார் எஸ்.ஏ.சி. `கட்சி ஆரம்பிச்சது நான்தான், அதனால அவருக்குத் தெரியாது. ஆனா அவர் சி.எம் ஆகலாம்னுதான் ஆரம்பிச்சேன்' என்றெல்லாம் அவர் போட்டுக் குழப்ப, `அதெப்படி கோப்ப்பால் அவருக்குத் தெரியாம ஆரம்பிச்ச கட்சியால அவரு சி.எம் ஆவாரு?' என முடியைப் பிய்த்துக்கொண்டார்கள் பார்ப்பவர்கள். உச்சக்கட்டமாக, `கட்சிக்குத் தடைவிதிக்கவேண்டும்' என விஜய் வழக்கு போட, `நீயா பேசியது, என் மகனே நீயா பேசியது?' எனக் கண்ணீர் சிந்திய புரட்சி இயக்குநர் ‘விஜய் மக்கள் இயக்கத்தைக் கலைச்சு ஆறு மாசமாச்சுய்யா' என கோர்ட்டில் கும்பிட்டார். `இது விஜய்யோட மக்கள் இயக்கமா. இல்ல இவரு ஆரம்பிச்ச விஜய் மக்கள் இயக்கமா?' என நாகபதனி - நாகப்பதனி சர்ச்சையிலேயே இரண்டு நாள்கள் பொழுது ஓடியது. ஒருவழியாக விஜய் அமைப்பினரே முன்வந்து `கலைச்சது டூப்பு. ஒரிஜினல் இன்னும் இருக்கு' என விளக்கம் கொடுக்க, எல்லாவற்றுக்கும் வந்தது முற்றுப்புள்ளி. இப்போது, `என்னை அரசியல் தலைவனா உருவாகவிடாத இந்தத் தமிழ்ச்சமூகத்தைப் படம் இயக்கி, நடிச்சுப் பழிவாங்குறேன் பாரு' எனக் கங்கணம் கட்டிச் சுற்றிக்கொண்டிருக்கிறார் தளபதி தந்தை.

நான்தான் சின்னம்மா பேசுகிறேன்!
நான்காண்டுகள் நாட்ரீச்சபிளில் இருந்தால் சிம்மே செயலிழந்துவிடும் என்கிற உண்மை புரியாமல் சின்னம்மா கார் ஊர்வலம் வந்த கூட்டத்தைப் பார்த்துக் கண்ணீர் சிந்தி லேட் என்ட்ரி கொடுத்தார். `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என ஓசூர் எல்லையிலிருந்தபடி அவர் குரலெழுப்ப, `நீங்களே சும்மாதானே இருக்கீங்க. அதனால நீங்களே போய் எல்லார்கிட்டயும் சொல்லுங்க' என டாட்டா காட்டியது தமிழகம். அதையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் கால் செய்து `ப்பா வணக்கம்ப்பா...' என நடிகர் திலகம் மாடுலேஷனில் அவர் நெக்குருக, `ஓ சன் மியூசிக்ல இருந்து கால் பண்றீங்களா ஆன்ட்டி, எங்களுக்கு `வாத்தி கம்மிங்' பாட்டு போடுங்க' என வீட்டு வாண்டுகளை விட்டு டீல் செய்து தப்பித்தார்கள் ர.ரக்கள். அவர் ரீடயல் செய்தபோது தவறிப்போய் எடுத்தவர்கள், `ஹ...' சொல்லுவதற்குள் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதாய் ப்ளாஷ் நியூஸ் ஓட, `மன்னார்குடி எங்கியோ மலேசியாப்பக்கம் இருக்கு' எனச் சிதறி ஓடினார்கள் நிர்வாகிகள். மே 2-ம் தேதி ரிப்பேரான குக்கருக்கு வாரன்டியே கிடையாது, விசில் சத்தம்கூட டி.டி.வி வெளியே இருந்து எழுப்பியதுதான் எனத் தெரியவர, `எங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்க பாத்தீயா' டெம்ப்ளேட்டுக்கு பக்காவாகப் பொருந்தினார்கள் இருவரும்.

அடக்குனா அடங்குற ஆளா நான்?
தேர்தல், ஐ.பி.எல் என தமிழர்கள் கிட்டத்தட்ட அழையா விருந்தாளியான கொரோனாவை மறந்தே போய்விட, `எனக்கா எண்ட் கார்டு போடுறீங்க?' எனச் சித்திரை வெயிலைக் காட்டிலும் உக்கிரமாக வாட்டியெடுத்தார் திருவாளர் கிருமி. பதவியேற்ற நான்கே நாள்களில் `இந்தாப் புடி லாக்டௌனை' என ஸ்டாலின் கேட்டைச் சாத்த, பழசெல்லாம் கண் முன் வந்து சென்றது தமிழ்க்குடிகளுக்கு. `கொரோனாவைவிட பஸ்ஸு வேகமா போகும். அதனால தப்பிச்சுடலாம்' என பலே ப்ளான் யோசித்து கூட்டம் கோயம்பேடில் கும்ம, கூடவே இலவச பஸ்பாஸில் பயணித்தது வெறிபிடித்த வைரஸ். `குடி கொரோனாவைக் கொடுக்கும்' என அரசு ஷட்டரை இழுத்து மூட, `எங்களைத்தான்யா ஈஸியா அடிச்சுப்புடுறீங்க' என மனம் நொந்தபடி பாண்டிச்சேரிப்பக்கம் பாதயாத்திரை போனார்கள் மதுப்பிரியர்கள். `கறிக்கடைல கை வச்சுடாதீங்க' என மறுபக்கம் அசைவக்காதலர்கள் கையெடுத்துக் கும்பிட, தப்பிப் பிழைத்தன மட்டன் ஸ்டால்கள். `கொரோனாவுக்குக் கோயிலெடுத்தா எல்லாம் சரியாகிடும்' எனக் கோவையில் ஒரு க்ரூப் கோக்குமாக்காக யோசிக்க, அதற்கும் சேர்த்து கொங்கு மண்டலத்தை வச்சு செய்தது கொரோனா. `ஆவி புடிச்சா கெட்டிச்சளியே போகுது, கொரோனா போகாதா' என வழக்கம்போல சிலர் வாட்ஸப்பில் வாந்தியெடுக்க, பாதிப்பேர் புகையில் புகுந்து இடியாப்பப் பரம்பரையாக வெளிவந்தார்கள். டெல்டா, ஒமைக்ரான் என இப்போது சூடுபிடிக்க, `ஆண்ட்ராய்டு அப்டேட்டே ரெண்டு மாசத்துக்கு ஒருக்காதான். நீ என்னவே கமல் மாதிரி கெட்டப் மாத்துற?' என விழிபிதுங்கி நிற்கிறது மாநிலம்.

ஒண்ணு பார்த்தா இன்னொண்ணு ப்ரீ!
`ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு கிலோ சக்கரை' என்பதுபோல இனி அரசாங்கமே ஒரு சிம்கார்டுக்கு ஒரு யூட்யூப் சேனல்தான்' என அரசாணை வெளியிடவேண்டும் போல. இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கில் சேனல்களை ஆரம்பித்து அலறவிட்டார்கள் செலிபிரிட்டிகள். ‘`வெல்கம் டு மை ஹாட் வாட்டர் சேனல். இதுல தண்ணி சூடாக்குறது பத்தி சொல்றேன். இதுக்கப்புறம் என் `டீத்தூள் போடு' சேனலுக்குப் போங்க. அங்க அடுத்த ஸ்டெப்பா சுடுதண்ணில எவ்வளவு டீத்தூள் போடுறதுன்னு வீடியோ இருக்கும்’' என இரண்டு நிமிட டீயையே தலைக்கறி, குடல்கறியைப் பிரித்துப் பிரித்து வைக்கும் சூரி போல பங்கு போட்டு டேட்டாவை காலி செய்தார்கள். `சமையல் போதுமா? சாப்பிட்டதுக்கு அப்புறம் வேலையாக வேணாமா?’ என அடுத்தகட்டமாய் பாத்ரூமையும் சிலர் சுத்திக்காட்ட, கண்ணைக் கட்டியது பாமரனுக்கு. `இது கார்ப்பரேட் யூடியூபர்ஸ் வெர்ஸஸ் தனிநபர் யூடியூபர்ஸுக்கு இடையிலான போர்' என ஒருதரப்பு நாக்குப்பூச்சியை வெளியே தள்ள, `யூடியூப்பே காப்பரேட்தானய்யா' எனத் தள்ளிப் போய் விளையாடச் சொன்னது தமிழகம். இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர்கள் வெர்சஸ் யூடியூப் கன்டென்ட் க்ரியேட்டர்கள் என அடுத்த கரகாட்ட கோஷ்டி கிளம்ப, `பேயிக்கும் பேயிக்கும் சண்ட' என ஊரே வேடிக்கை பார்த்தது. இதுபோதாதென ராகுல் காந்தி கிராமத்துவிருந்து சாப்பிட டெல்லியிலிருந்து கிளம்பி வர, `இனிமே ஒரு பிடி' என சலங்கை கட்டி ஆடினார்கள் யூடியூப் பெருமக்கள்.

ஆபரேஷன் சக்சஸ்... பேஷன்ட் டெட்!
ஓடிடி வழியே கொஞ்சமாக மூச்சுவிட ஆரம்பித்த தமிழ்சினிமாவின் ஆக்சிஜன் மாஸ்க்கை ரிலே ரேஸ் போல மாறி மாறிப் பிடுங்கிக்கொண்டு ஓடினார்கள் படைப்பாளிகள். முதல் ஆளாக வந்தார் பூமர் பூமி. `வெட்டவெளில நிக்கிறப்போ வெயில்பட்டு வேர்க்குது சரி. வீட்டுக்குள்ள வெயிலேபடாம உட்கார்ந்திருந்தாலும் எப்படி வேர்க்குது? எல்லாம் ஏசியை விக்க கார்ப்பரேட் பண்ற சதி' என கபீம்குபாம்களைச் சிதறவிட, சிரித்து உருண்டார்கள் படம் பார்த்தவர்கள். `நாங்க மட்டும் சளைச்சவங்களா' என இன்னொருபக்கம் புலிக்குத்தி பாண்டி ரிலீசாகி சேனலைக் கடந்து சென்றவர்களைக் கூட ஊமைக்குத்து குத்தியது. எக்கச்சக்க பில்டப்போடு வெளியாகி வெறியேற்றி வெளியேறியது `ஜகமே தந்திரம்'. `இதை நான்தான் எடுத்தேன்னு வெளியே சொல்லிடாதீங்க' என ராதாமோகனே ஒளிந்தோடிய `மலேசியா டு அம்னீசியா', `இது படமா, கேமராவுக்கான ப்ரொமோவா' எனக் கடைசிவரை புரியாத `வாழ்', மொத்த சமூகத்தையும் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளிய `அனபெல் சேதுபதி', காஜல் அகர்வால் பேயாக பயமுறுத்தாமல் நடித்து பயமுறுத்திய `லைவ் டெலிகாஸ்ட்', இமான் காதுக்குள் சென்றே கதகளி ஆடிய `உடன்பிறப்பே' என கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடிகள் டமாராகி ரத்தக்கண்ணீர் வரவழைத்தன. உச்சக்கட்டமாக `நவரசா'வைப் பார்த்து, தமிழ்நாட்டுக் குடியுரிமையை ரத்து செய்துவிட்டு ஓடினார்கள் வெகுஜன மக்கள். அப்படிச் சிதறி ஓடியவர்களைக் கைபிடித்து அழைத்து வந்து ஆசுவாசப்படுத்தினார்கள் ‘மண்டேலா’ யோகிபாபுவும் `சார்பட்டா பரம்பரை' ரங்கன் வாத்தியார் அண்ட் கோவும்!

நாங்களும் சளைச்சவங்க இல்ல!
தி.மு.க. அமைச்சர்களின் காமெடி திருவிழாவில் முதலிடம் சந்தேகமே இல்லாமல் நிதியமைச்சருக்குத்தான். ஜக்கியை ஜாலிக்காகப் போட்டு அடித்துக்கொண்டிருந்தவர், பதவியேற்ற பின்னர் ட்விட்டர் சந்தில் மானாவாரியாய் போவோர் வருவோரை எல்லாம் அடித்துத் தொங்கவிட்டார். `என்னங்க இது?' என வானதி கேட்க, அவருக்கும் விழுந்தது திட்டு. தட்டிக்கேட்க வந்த சுமந்த்தை இவர் எண்ணெயில் போட்டு வறுக்க, `ஒருகாலத்துல நான் லெஜெண்டு. கிட்ஸ் லைக் மீ தெரியுமா?' எனக் கண்ணைக் கசக்கியபடி காணாமல் போனார் அவர். சொந்தக் கட்சிக்குள்ளேயே சகட்டுமேனிக்குக் கடித்து வைக்க, ஸ்டாலினே இழுத்துக் கடிவாளம் போடவேண்டியதானது. மறுபக்கம் `கிணத்தக் காணோம்' கதையை `கரியைக் காணோம்' என மாற்றி பரபரப்பு கூட்டினார் செந்தில் பாலாஜி. அவர் அதைத் தேடும்போதே கரன்ட் கட்டாகி இருட்டாக, `விளையாட்டுப் புள்ளைங்க அணில் பார்த்த வேலை இது' என சால்ஜாப்பு சொல்லி கேலிப்பொருளானார். `உதயநிதி அமைச்சராகணும், ஸ்டாலின் பிரதமராகணும்' என மொத்தக் காவடியையும் இவரே தூக்க, அறுபடை வீடுகளிலும் காவடி ஸ்டாக் இல்லாமல் தடுமாறிப்போனார்கள் பக்தர்கள்.

தனியே தன்னந்தனியே...
ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் என சீமான் கூசாமல் கணக்கு சொல்ல, `இன்னா, ஜோக் காட்றீங்களா?' என முறைத்தது தேர்தல் ஆணையம். பதறிப்போய் அடுத்த நாளே லட்சங்களில் அபிடவிட்டை மாற்றினார் அஞ்சாநெஞ்சன். `சும்மா கூட்டம் கூட்டமா உக்காந்து கதை பேசிட்டு காசு வாங்கிட்டுப் போறாங்க' என முதலில் அண்ணன் சொன்னபோது `அவரைப் பத்தி அவரே விமர்சிச்சிக்கிற இந்த நல்லமனசுதான் சார் கடவுள்' என்று லேசில் விட்டார்கள் தமிழர்கள். ஆனால் அது நூறுநாள் வேலைத்திட்டம் பற்றி எனத் தெரிய, விடிய விடிய வெளுத்தார்கள். `தாய்மதம் திரும்புங்கள் மக்களே' என மேல் ஸ்கேலில் இவர் கோஷமிட்டு முடிப்பதற்குள் மேலே காவிப் பெயின்ட்டை ஊற்றிவிட்டுக் காணாமல்போனார்கள் நெட்டிசன்கள். `சின்னம்மை என்றால் உடல் கொப்புளம் போடும். சின்னம்மா என்றால் மனம் குத்தாட்டம் போடும்' என இவர் கண்களில் ஜலம் வைத்துக்கொள்ள, `ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு சளைச்சதில்ல' என இவரையும் டிடிவியையும் மாறி மாறிப் பார்த்தார் சசிகலா. `துண்டு நிலமில்லை தம்பிகளே' என இவர் கூக்குரலிட, `பட்டால பேரு தேடினா ரெண்டு நிமிஷத்துல கிடைக்கப்போகுது' என மொத்த எஸ்.டி.டியையும் எடுத்து வெளியே போட்டார்கள் யூடியூபர்கள். `நான் மோசமானவன், நான் மோசமானவங்கள்லயே முக்கியமானவன்' என இவரும் அண்ணாமலையும் மோதிக்கொள்ள, `இனிமே ஒருத்தர் ஸ்டேண்ட் அப் காமெடி பண்றப்போ இன்னொருத்தர் மிமிக்ரி பண்ணுங்க. அப்பத்தான் உங்களுக்குள்ள சண்டை வராது' எனப் பஞ்சாயத்தை ஊதி அணைத்தார்கள் பொதுமக்கள். லேட்டஸ்ட்டாய் செருப்பைத் தூக்கிக் காட்டி அது தேயத் தேய நடந்து வழக்குகளைச் சந்திக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார் அன்னார்.

மூன்றாம் தலைமுறை முதல்வரே!
தேர்தல் அறிவிப்பு வந்ததும் களத்தில் காமெடி, ஆக்ரோஷம் என்றெல்லாம் உதயநிதி பின்னிப் பெடலெடுக்க, ‘இதையெல்லாம் கொஞ்சம் ஸ்க்ரீன்லயும் பண்ணியிருந்தா ரெண்டு படமாவது ஹிட் ஆயிருக்கும்ல’ என ஆதங்கப்பட்டார்கள் சாமானியர்கள். பலகோடி செலவு செய்து காலூன்ற முயன்ற பா.ஜ.கவுக்கு ஒத்தைச் செங்கல்லைக் காட்டியே இவர் மூடுவிழா நடத்த டாடி ஹேப்பி அண்ணாச்சி! பதவியேற்றதும் பரபரப்பாய் சேப்பாக்கத்தை கேமராவோடு சுற்றிச் சுற்றிவந்ததைப் பார்த்து சி.எஸ்.கேவே துபாய்ப்பக்கம் கிரிக்கெட் விளையாட ஒதுங்கிவிட்டது. ‘அண்ணனுக்கு மேயர் பதவி கொடுங்க, இல்லல்ல அவர் தகுதிக்கு அமைச்சர் பதவிதான் கரெக்ட்டு, இல்ல தளபதி வழியில் இளையதலைவர்... நம்ம தகுதிக்கு நாமளே மினிஸ்டரா இருக்குறப்போ அவரெல்லாம் நேரா துணை முதல்வர்தான்’ என சீனியர் ஜூனியர் பாகுபாடில்லாமல் கும்பிடு போட்டதில் அன்பகம் தொடங்கி அண்ணா அறிவாலயம் வரை வழிந்தோடியது ஐஸ் ஆறு. உச்சக்கட்டமாய் ‘வெல்க அண்ணன் உதயநிதி’ என ராஜ்யசபாவில் ராஜேஷ் பதவியேற்க, ‘கூவல் திலகம்ய்யா இவரு’ என ஸ்பெஷலாய் கவனித்தார்கள் உடன்பிறப்புகள். ‘இதென்ன பிரமாதம், ஸ்பெஷல் ஐட்டமெல்லாம் இருக்கு’ என அமைச்சர் நாசர் ஒருபக்கம், ‘தளபதி நடித்த படம் உதயா, தளபதி பெற்றெடுத்த தமையா, உன் அறிவின் ஆழம் கண்மாயா?’ என பாணபத்திர ஓணாண்டியாகவே மாறி பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கிச்சுகிச்சு மூட்டினார்.

ஜூட்விட்டா பரம்பரை!
கமல் பறக்கவிட்ட கலர் பலூன்களை எல்லாம் படீர் படீர் எனக் குண்டூசி வைத்து சல்லடை போட்டார்கள் வாக்காளர்கள். `கோட்டை லட்சியம், கோவை தெற்கு நிச்சயம்' என ஆழ்வார்பேட்டை ஆண்டவர் கரகரத்த குரலில் கோஷமெழுப்ப, `ஓ இதான் அடுத்த பட டைட்டிலா? கொஞ்சம் சின்னதா வச்சிருக்கலாம்' எனச் சரியாக ஓட்டை மாற்றிக் குத்தினார்கள் மக்கள். 'யாரென்று புரிகிறதா?' என ஸ்லோமோஷனில் வெற்றிநடை போடலாம் என நினைத்தவர் ஊரே ஓய்ந்துபோன பின்னிரவு வேளையில் `தென்பாண்டிச் சீமையிலே' எனக் கால் பின்னி கடுகடுப்போடு நடந்துபோனதை ஸ்டேட் மொத்தமும் வாட்ஸப் ஸ்டோரியாக வைக்க, `வச்சதுல கால்வாசி ஓட்டு போட்ருந்தாலே ஜெயிச்சிருப்பேனேய்யா' என மூக்கு சிந்தினார். `இந்தக் கட்சி வெளங்காது' என வேலை பார்த்தவர்கள் சிட்டாய்ப் பறக்க, `இதுதான் உருமாறிய ம.நீ.ம' என மரு வைத்துக்கொண்டு வந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மண்ணைக் கவ்வ வைக்க, `புண்படுத்திட்டே இருக்கீங்களேய்யா' எனப் புலம்பித் தள்ளினார் உலக நாயகன். கொரோனாத் தொற்றில் தமிழகமே அவரை நலம் விசாரிக்க, நெக்குருகிப்போனார். பின்னாலேயே `ரூல்ஸை மீறீட்டீங்க' என சுகாதாரத்துறை துரத்த, `ரெண்டு நிமிஷம் லைம்லைட்டுல இருந்தா பொறுக்காது. அப்படித்தானே?' எனத் தலையிலடித்தபடி ஷூட்டிங் போனார் கமல்.

குயிலப் புடிச்சு கூண்டில் அடைச்சு...
பழைய ஐ.பி.எஸ் நினைப்பில் ‘செந்தில் பாலாஜியைப் போட்டுத் தள்ளிடுவேன்’ என தேர்தல் பிரசாரத்தில் மிரட்ட, சாந்தமான கனிமொழியே சாத்து சாத்தென சாத்தினார். தோற்றவர்களுக்கு ஆறுதல் பரிசு கோட்டாவில் ‘மத்திய அமைச்சர்’, ‘கவர்னர்’ பதவிகள் கிடைக்க, ஆடு அண்ணாமலைக்கு அடித்த அதிர்ஷ்டம் தமிழ்நாடு தலைவர் பதவி. ஸ்டாலினுக்கு எதிராக கம்பி சுத்த நினைத்தவருக்கு காவிக்கூட்டத்தார் சொந்தக் கட்சி ஆபீஸிலேயே குண்டு வைக்க, சந்தி சிரித்தது. பெட்ரோல் விலையைக் கண்டித்து அவர் தலைமையில் போராட்டம் நடக்க, ‘எங்களை பைத்தியங்காரங்கன்னா நினைக்கிறீங்க?’ என கொத்து பரோட்டா போட்டது தமிழகம். வெள்ளத்தில் போய் வேடிக்கை பார்த்த பாட்டியிடம் எல்லாம் உண்டக்கட்டி வாங்கியவரை ‘முடிஞ்சா அண்ணாமலையை அரெஸ்ட் பண்ணு பார்ப்போம்’ என இரட்டை இலை உசுப்பிவிட, ‘நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்?’ எனக் குமுறிக் குமுறி அழுதார். ‘ஆடியோ, வீடியோ, இன்ட்ராக்டிவ்னு எல்லா பார்மெட்லயும் அடிவாங்குன ஒரே ஆள் நீதான் தலைவா. அடுத்த வருஷமும் மறக்காம வாங்க சரியா’ என மொத்த மாநிலமும் சேர்ந்து இப்போது வழியனுப்பி வைத்திருக்கிறது.

நாங்க இருக்கோம்!
ஊரே விழாக்கோலம் போடும்போது சர்க்கஸ் கொட்டாரம் மட்டும் சத்தமில்லாமல் இருக்குமா என்ன? சலங்கை கட்டி ஆடினார்கள் அ.தி.மு.க மாஜி அமைச்சர்கள். அதில் முதல் பரிசு சி.வி.சண்முகத்திற்குத்தான். `கூவத்தூரில் எங்களுக்கு ஊத்திக்கொடுத்துக் கெடுத்ததே தினகரன்தான்' என அவர் வாக்குமூலம் அளிக்க, `அதென்ன உட்வர்ட்ஸ் க்ரேப்வாட்டரா உங்களை ஏமாத்திக் கொடுக்க, வேணாம்னு வரவேண்டியதுதானே' என ரிவீட் அடித்தார்கள் நெட்டிசன்கள். `பா.ஜ.க கூட கூட்டணி வச்சதாலதான் தோத்தோம்' எனத் தேர்தலுக்குப் பின் அவர் கண்டுபிடித்துச் சொல்ல, `இல்லன்னா நாம அறுத்துத் தள்ளியிருப்போமா பங்காளி?' எனக் கூட இருந்தவர்களே திரும்பத் திரும்ப டவுட் கேட்டார்கள். கடைசியாக நடந்த மா.செக்கள் கூட்டத்தில் டான்ஸிங் ரோஸாக மாறி அன்வர் ராஜாவோடு அவர் மல்லுக்கட்டியதாகச் சொல்லப்பட, வேறு வழியில்லாமல் மொத்தமாய் எக்ஸிட் ஆக்கப்பட்டார் அன்வர் ராஜா. மற்றொருபக்கம், `ச...' என சபா கச்சேரியில் யாராவது சாதகம் ஆரம்பித்தால்கூட `அதெல்லாம் அவங்களைச் சேர்க்க முடியாது, துரோகம்... துரோகம்' என முடிக்கவிடாமல் முந்திக்கொண்டு சொன்னார் ஜெயக்குமார். மானாவாரியாய் ஸ்டாலினைத் திட்டி `எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்' என்கிற மிதப்போடு சுற்றிவந்த ராஜேந்திர பாலாஜி, ‘கலகலப்பு’ இளவரசு கணக்காய் மாறுவேஷத்தில் எஸ்கேப் ஆகித் திரிந்ததெல்லம் கோலாகல காமெடி.

வாத்தி ரெய்டு... வாத்தி ரெய்டு!
`இவரு அதுக்கெல்லாம் சரிப்படமாட்டாரு' என அ.தி.மு.க-வினரே அசந்த வேளையில் லஞ்ச ஒழிப்புத்துறையை அலாரம் வைத்துக் கண் முழிக்கச் செய்து ஸ்டாலின் சுற்றலில் விட, பதறிப்போனார்கள் முன்னாள் அமைச்சர்கள். `நீங்கதான் நிறைய போக்கும்வரத்துமா இருந்தீங்க போலயே' என முதலில் போய் அதிகாரிகள் குந்தியது எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில்தான். `நான் அமைச்சரா இருந்தப்பவே ஒண்ணும் பேசமாட்டேன். இப்ப மட்டும் பேசிடவா போறேன்' என அடக்கியே வாசித்தார் அவர். அடுத்ததாக வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காலிங் பெல் அமுக்க, `வாங்க, வாங்க, நேத்தே நீங்க வர்றதா தகவல் சொன்னாங்க. அதான் எல்லாருக்குமா விருந்து ஏற்பாடு பண்ணிட்டேன்' என ஊருக்கே சோறு போட்டுக் கொண்டாடினார். `இவரு என்ன ரகம்னே தெரியலையே' என ஆடிட்டிங் வந்தவர்களே ஆடிப்போனார்கள். மூன்றாவதாக வந்த முத்து கே.சி.வீரமணி. ஆனால் இவர் வீட்டில் நடந்த ரெய்டுக்கு தி.மு.க-வைத் தாண்டி அ.தி.மு.க-வினரே சந்தோஷப்பட, `ச்சே, என்னா டிசைன்ய்யா இது?' என ரெய்டு போனவர்கள் அப்படியே வேலையை விட்டும் போனதாகத் தகவல். `என் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் கொடுப்பேன்' எனச் சொல்லிவந்த சி.விஜயபாஸ்கரிடம், `அதெல்லாம் வேணாம், சேர்த்து வச்சதை மட்டும் கொடுங்க போதும்' என ஒரு சுபயோக சுபதினத்தில் போய்க் கேட்டார்கள். மார்கழி மாத ஸ்பெஷல் ஆபராக இறுதியில் தங்கமணி வீட்டிற்குள் போய் லஞ்ச ஒழிப்புத்துறை நோண்ட, `நான் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்' என வெளியே வந்து பேட்டி தட்டினார் அவர். மைக் எடுக்கப்போனவர்கள் பின்னர் கவனித்து, `சார், கால் நடுங்குது பாருங்க' எனச் சொல்லவும் சட்டென வேட்டியை இறக்கிவிட்டு உள்ளே சென்று மறைந்தார். லிஸ்ட்டில் அடுத்தது யார் என்பதுதான் இப்போது மாஜிக்களைத் தூங்கவிடாமல் அலைக்கழிக்கிறது.

சோதனை மேல் சோதனை!
'பல வருஷமா விலையே ஏறாதது பூமர் மிட்டாயும் தீப்பெட்டியும்தான்' என கொசுவத்திச் சுருள் ஏற்றிக் கொண்டாடிவந்த தமிழனின் நாஸ்டாலஜியாவில் லோடு லாரியை விட்டு ஏற்றியது விலைவாசி. `நல்லவேளை ஒரு ரூபாய் ஏறுனதோட போச்சு' எனப் பெருமூச்சு விடுவதற்குள் பக்கத்தில் இரண்டு ஜீரோவைப் போட்டுப் பல்லிளித்தது பெட்ரோல் விலை. `வறட்டியைத் தட்டி டேங்க்குள்ள போட்டா சூட்டுக்கு எரிஞ்சு அடுப்பு மாதிரியே எஞ்சின் ஓடாதா' என எட்டுத்திக்கும் யோசித்துப் பார்த்தது தமிழர் மூளை. `இதுக்குத்தான் கரன்ட்டுக்கு மாறணும்னு சொல்றது' எனப் பெருமை பேசியவர்களின் வண்டியில் முன் டயர் சார்ஜாகி பின் டயர் ஆவதற்குள் பவர் கட்டாக, நுங்கு வண்டி போல உருட்டித் திரிந்தார்கள். `வீட்டைக் கட்ட பயம், கட்டிய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன் எடுத்துச் சாப்பிட பயம், சாப்பிட்ட பின் செலவு செய்ததை யோசித்து அஜீரணக் கோளாறானால் ஹாஸ்பிட்டலில் செலவு செய்ய பயம்' என பாக்கெட்டைப் பிடித்தபடியே உலா போனார்கள் குடும்பஸ்தர்கள். சட்டி கழுவிய தண்ணீரில் துண்டுத் தக்காளியை நறுக்கிப்போட்டு நைட் சாப்பாட்டுக்கு ரசமாக்கிவிடும் உயரிய பண்பாடு தமிழர்களுடையது. விலைவாசி அதற்கும் ஆப்பு வைக்க `த்த்தக்காளி'னு திட்றப்போ எல்லாம் அதோட அருமை தெரியாமப் போச்சுப்பா' என மனமுவந்து மன்னிப்பு கேட்டார் ராஜ்கிரண். `ஸ்பெயின் திருவிழாவில் நசுக்கப்படுவது வெறும் தக்காளியல்ல, முன்னாள் நாசா விஞ்ஞானி, இந்நாள் இயற்கை விவசாயி பூமிநாதனின் இதயம், ஏ பெட்ரோ ஏகாதிபத்தியமே' என வழக்கம்போல வாட்ஸப்பில் பார்வேர்டு செய்யக்கூட விடாமல் டேட்டா பேக் விலையேற்றம் கழுத்தை நெரிக்க, `உங்களையா பழிச்சோம்' என பி.எஸ்.என்.எல் பக்கம் கரை ஒதுங்கினார்கள். `எஞ்சாயி எஞ்சாமி' என ஆண்டுத் தொடக்கத்தில் குதூகலமாய் இருந்தவர்கள், `எடுத்துக்கோ எல்லாத்தையும் எடுத்துக்கோ' என நாடோடிகள் சசிக்குமார் போல வாரிக்கொடுத்துவிட்டு நிற்கிறார்கள் இயர் எண்டில்.

ஒண்ணுமே புரியல உலகத்துல...
`நாங்கெல்லாம் அந்தக் காலத்துல' என 40+ பேசிக்கொண்டிருந்த வசனத்தை ஸ்கூல், காலேஜ் போகும் விடலைகளையெல்லாம் பேச வைத்ததுதான் பெருந்தொற்றின் பெருஞ்சாதனை. `இருக்கா இல்லையா... நம்பலாமா நம்பக்கூடாதா' என சந்திரமுகி வடிவேலு மோடிலேயே ஆண்டின் முதல் பாதியைக் கழித்தார்கள் மாணவர்கள். தட்டுத் தடுமாறி சுதாரித்த நேரம் இரண்டாம் அலை வந்து சுருட்ட, `ஆல்பாஸ்' அறிவிப்பு `உள்ளேன் ஐயா' என வருகைப் பதிவேட்டில் என்ட்ரி போட்டது. `ஸ்கூல் திறக்கலாமா வேணாமான்னு ஒரு மீட்டிங் போடணும். அந்த மீட்டிங்கை எப்ப நடத்தலாம்னு அதிகாரிங்க மீட் பண்ணிப் பேசுவாங்க. அதுக்கு யாரெல்லாம் மீட் பண்ணலாம்னு பேச இப்போ நாங்க ஒரு மீட்டிங் வச்சிருக்கோம்' என அரண்மனை சீரிஸ் போல எக்கச்சக்க மீட்டிங்குகளை நடத்தி கடைசியாக அன்பில் ஸ்கூல் திறக்க நாள் குறிக்க, `ஹையா எனக்கு ஜாலியா இருக்கு' என மாணவர்களைவிட உயரமாய் எகிறிக் குதித்தார் வருண பகவான். `சரி எல்லாம் முடிஞ்சதும் எழுப்புங்க' எனப் பனிக்கரடி போல ஹைபர்னேஷனுக்குப் போனார்கள் மாணவர்கள். இதற்கிடையே `ஆப்லைனில் எக்ஸாம்' என அறிவிப்பு வர, `ஒண்ணுமே தெரியாம ஒப்பேத்த இதென்ன மன் கி பாத்தா' என சண்டைக்கு வந்தார்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் ஒமைக்ரானும் வேலையைக் காட்ட, `இதெல்லாம் நல்லதுக்கா கெட்டதுக்கா' என முடியைப் பிய்த்துக்கொள்கிறார்கள் வருங்கால வரலாறுகள்.

அது போனமாசம், இது இந்த மாசம்!
தேர்தல் வந்துவிட்டாலே ம.தி.மு.க சின்ராசைக் கையில் பிடிக்க முடியாது. அதுவும் சரியாக, சரியான நேரத்தில் தப்பான கூட்டணியில் சேர்ந்து சொதப்புவார். இந்தமுறையும் அப்படியாகிவிடுமோ என நிர்வாகிகள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, ‘ச்சே ச்சே நான் முன்ன மாதிரி இல்ல, மாறிட்டேன்’ என விடாப்பிடியாய் சீட்டும் வாங்கி பிரித்துக்கொடுத்தார். பிரசாரத்துக்குப் போனவரை வரவேற்க வைத்த பேனர்களில் மகன் படமும் பிரதானமாய் இடம்பெற, `இது அதுல்ல’ என 90களை நினைத்துப் பார்த்துக்கொண்டார்கள் கட்சிக்காரர்கள். ‘ச்சே ச்சே இதெல்லாம் மாறணும்’ என அப்போதும் சமாளிபிகேஷன் தட்டினார் புரட்சிப்புயல். ஒருகட்டத்தில் மகனே ஓப்பனாய், ‘என்னைக் கட்சிக்குள்ள வரச் சொல்லி ஆயிரக்கணக்கான பேர் வீட்டுக்கே வந்து அன்புத்தொல்லை தர்றாங்க’ எனக் கூடியிருந்த இருவர் சகிதம் பேட்டி தர, ‘ஸார் அப்போ உங்க கொள்கை?’ என வைகோ பக்கம் மைக்கைத் திருப்பினார்கள். ‘கொள்கை எல்லாம் ஆர்ம்ஸ் மாதிரி. வயசு ஆக ஆக அப்படியே கொழகொழன்னு ஆயிடும்’ என ஷோல்டரை இறக்கினார் அவர். ‘மாறிட்டேன், மாறணும்னு நீங்க சொன்னதெல்லாம் இதுதான்னு தெரியாமப்போச்சே’ எனப் புலம்பியபடி விருட் விருட்டென வெளியேறினார்கள் கட்சியில் எஞ்சியிருந்தவர்கள். ‘போனால் போகட்டும் மகனே...’ என டாடியும், ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா’ என மகனும் இப்போது லாலாலா பாடிக்கொண்டிருக்க, ‘தலைவராகணும்னா இனிமே நாமளும் தனியா கட்சி ஆரம்பிச்சு ஆனாத்தான் உண்டுபோல’ என பேத்தாஸ் பிஜிஎம் ஒலிக்கக் கலைந்து செல்கிறார்கள் தொண்டர்கள்.

வாராது வந்த மாமணியே!
`இந்தா வரும் அந்தா வரும்' என மோடிஜியின் 15 லட்சம் போலவே பல நாளாகப் போக்குக் காட்டிக்கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு நடந்தேவிட்டது. `சரி சரி சீட்டைப் பிரிங்க' என அறிவிப்பு வந்த சூட்டோடு கூட்டணிக் கட்சிகள் நெருக்க, `ஐயய்ய, இதெல்லாம் ஏரியா மேட்டர், நாங்க இறங்கினா கேங் வார் ஆயிடும்' என விலகிக்கொண்டன இரு பெரிய கட்சிகளின் தலைமைகளும். `பெருந்தலைங்ககிட்ட அசிங்கப்பட்டா அதுல ஒரு பெருமை இருக்கு. இப்போ லோக்கல் அரசியல்வாதிங்ககிட்ட எல்லாம் சீட்டுக்கு சண்டை போடணுமே' எனச் சலித்துக்கொண்டபடி பங்கு பிரித்தன பிற கட்சிகள். `நான் தலைகீழாகத்தான் குதிப்பேன்' என அடம்பிடித்துத் தவ்வி அந்தக் காமெடியைப் போலவே நிஜத்திலும் கட்டுப் போட்டுக்கொண்டது பா.ம.க. `இந்த நிலம் எனக்குச் சொந்தமானா நீ செத்த' எனக் களமாடிய அண்ணனுக்கு வார்டுகூட சொந்தமாகாதபடி பார்த்துக்கொண்டார்கள் மக்கள். தேர்தலுக்கு தேர்தல் பாட்டை மாற்றாமல் இந்தமுறையும், `தென்பாண்டிச் சீமையிலே' தான் பாடியது மய்யம். `வரமாட்டேன் வரமாட்டேன்' எனச் சொல்லியே விஜய்யின் மக்கள் இயக்கம் ஏகப்பட்ட இடங்களைப் பிடிக்க மற்றவர்களுக்குப் புளியைக் கரைத்தது. வென்றவர்கள், தோற்றவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி சர்வதேச அளவில் கவனம்பெற்றது பா.ஜ.க. காரணம் - விழுந்த ஒற்றை ஓட்டு. `அந்த ஒரு ஓட்டுக்கு நன்றி சொல்லப்போறேன்' என வெட்கமே இல்லாமல் அந்த வேட்பாளர் கிளம்ப, `பேசாமப் போறீகளா இல்ல அதையும் செல்லாதுன்னு சொல்லவா?' என ஏறக்கட்டியது தேர்தல் ஆணையம். இரண்டாம் அலையில் நொந்துபோயிருந்த மனங்களை ஆற்றுப்படுத்தியது இந்த உள்ளாட்சித் தேர்தல் காமெடிக் களேபரங்கள்தான்.

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்!
‘உன் ஆளுங்களைப் பார்த்தா ஊரே பயப்படும். ஆனா என் ஆளுங்களைப் பார்த்தா எனக்கே பயம்’ - காங்கிரஸ் தலைமையின் சுயவிவரக்குறிப்பு இப்படித்தான் இருக்கும். ‘கொஞ்சம் பொறுத்துக்குங்க மகராசன்களா, இந்தா இங்க வந்துடுச்சு தேர்தல்’ எனப் போக்கு காட்டியே இரண்டு ஆண்டுகளாய் தமிழக காங்கிரஸை மேய்த்துவரும் அழகிரி, தேர்தல் நேரத்தில் சீரியஸ் முகத்தோடே சிரிப்பு மூட்டினார். ‘நிறைய கொடுங்க. நாங்க காங்கிரஸ், தெரியும்ல’ என இவர்கள் உதார்விட, ‘அதனாலதான் இவ்வளவு கம்மியாக் கொடுக்கிறோம். வேலை பார்க்க ஆளிருக்கா?’ எனப் போட்டுப் பார்த்தது தி.மு.க தலைமை. ‘பா.ஜ.க எத்தனை சீட் நிக்குதோ அத்தனை சீட் வேணும்’ என இவர்கள் அடம்பிடிக்க, ‘சரி அப்ப அதை அங்கே போயே வாங்கிக்கோங்க’ என அ.தி.மு.க ஆபிஸுக்கு வழி காட்டியது தி.மு.க. ‘சரி கொடுக்குறதைக் கொடுங்க’ என வெம்பிப் போய் வாங்கி வெளியே வந்து, ‘இது போர்... ஆமா போர்’ எனச் சூளுரைத்தார் அழகிரி. தேர்தலுக்குப் பின் மொத்தமாகவே தி.மு.க கொ.ப.செவாகவே அவர் மாறிப்போக, ‘இதுக்கு பேசாம கட்சியை இணைச்சிடுங்க’ என்றது பா.ஜ.க. ‘ஆமால்ல, ஒவ்வொருமுறையும் சீட்டுக்கு சண்டை போட்டு லோல்படவேணாம்’ என ப்ளாஷ் மின்னி மறைந்தது கே.எஸ் கண்களில். ‘இதுதான் சாக்கு’ எனப் போட்டித் தலைவர்கள் காலி பண்ணப் பார்க்க, ‘போப்பா போ என்னைத் தாண்டிப்போ’ என எமோஷனல் பிளாக்மெயில் செய்து நாற்காலியைக் காப்பாற்றி வைத்திருக்கிறார். இதில் ‘உதயநிதி துணை முதல்வராகணும்’ என காங்கிரஸிலிருந்தே குரல் கிளம்ப, ‘ஆம் ஐ எ ஜோக் டூ யூ?’ என சோகமாக டெல்லியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பினார் ராகுல் காந்தி.