
நம்ம ஊர் கோபி சுதாகரின் ‘பரிதாபங்கள்’ சேனல் போன்ற கண்டெண்ட்டை சிங்கிள் ஆளாகப் பண்ணுவது இவர் ப்ளஸ்.
இன்றைய 2k கிட்ஸ்களின் நம்பர்1 சர்ச் என்ஜின் யூடியூப் தான்!
கேமிங், காமெடி, ரோஸ்ட், ஸ்பூஃப், ரியாக்ஷன் வீடியோக்கள் என இன்றைய இந்திய இளசுகளால் அதிகம் பார்க்கப்படுகிற ஹிட் யூடியூப் பிரபலங்களைப் பார்த்தபோது லைட்டாய் தலைசுற்றியது.
‘2070-ல் இந்த அஞ்சு பேரோட வீடியோக்களை நீங்கள் பார்த்திருந்தால் உங்கள் குழந்தைப் பருவம் ஆசீர்வதிக்கப்பட்டது!’ என்று அட்வான்ஸாய் டைம் மெஷினில் ஏறிப்போய் இவர்களைப் பாராட்டித் தள்ளுகிறார்கள்.
கோடிகளில் வியூஸ் அள்ளும் ஐவரைப் பற்றி யாம் பெற்ற வயிற்றெரிச்சல் பெறுக இவ்வையகம்...


கேரிமினாட்டி என்னும் இலுமினாட்டி
நம்ம ஊர் பப்ஜி மதன் போல வடக்குல அவுங்க ஊர் சேட்ஜிதான் இந்த ‘கேரிமினாட்டி’ சேனல் ஓனர் அஜய் நாகர். கொஞ்சம் கெட்ட வார்த்தைகள், நிறைய காமெடி என கேம் விளையாடுறதையே லைவ் வீடியோவாக இந்தச் சேனலில் இறக்கி ஹிட்டடிக்கிறார் இந்த ஹரியானா இலுமினாட்டி கேரிமினாட்டி! பாலிவுட் ஆட்களை ரோஸ்ட் செய்வதையும், காமெடி ஸ்பூஃப் செய்வதையும் ஓவர் டைம் வேலையாகச் செய்கிறார் இந்த கேரிமினாட்டி. இவருடைய சேனலுக்கு பாகிஸ்தான் வரை ஃபாலோயர்ஸ் கொட்டிக்கிடக்கிறார்கள்.
அன்னோன் பேட்டில் கிரவுண்ட், மைன் கிராஃப்ட், ஃப்ரீ பயர் என இவர் விடும் உதார்களுக்கு ஃபயர் விட 3.52 கோடி சப்ஸ்கிரைபர்கள் இந்தியா தாண்டியும் கொலவெறியோட காத்திருக்கிறார்கள். சொல்லப் போனால் இந்தியாவின் நம்பர்1 யூடியூபர் இந்த கேரிமினாட்டி தான். ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸை பேட்டி கண்டது இவரது மைல்கல் சாதனை.


ஆஹா ஆஷிஷ் சஞ்ச்லானி
ஸ்பூஃப் வீடியோக்களின் ராஜா இந்த 28 வயது இளைஞன். 2.8 கோடி சப்ஸ்கிரைபர்களோடு ‘வேற லெவலில் இறங்கி அடிக்கும் ஆள்!’ என டீன் டிக்கெட்டுகள் கொண்டாடுகிறார்கள். எல்லா வீடியோக்களும் கோடி பார்வைகளைக் கடப்பதெல்லாம் பார்க்கவே கொலவெறியாக இருக்கிறது. எதெல்லாம் ட்ரெண்டாக இருக்கிறதோ அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வதில் கில்லாடி. லேட்டஸ்ட்டாய் கே.ஜி.எஃப் ஹீரோ யஷ் வரை பேட்டி எடுத்து மைலேஜ் தேத்தியிருக்கிறார்.
நம்ம ஊர் கோபி சுதாகரின் ‘பரிதாபங்கள்’ சேனல் போன்ற கண்டெண்ட்டை சிங்கிள் ஆளாகப் பண்ணுவது இவர் ப்ளஸ். மாச வருமானம் யூடியூப் மூலமே புரொமோஷன் எல்லாம் சேர்த்து 30 லட்சம் என்கிறார்கள். ஹாலிவுட்டின் அவெஞ்சர்ஸ் டீமோடு வீடியோ பண்ணியதெல்லாம் தெய்வ லெவல்.


காமெடி பாம் புவன் பாம்
‘பிபி கி வைன்ஸ்’ என்ற இந்த ஹிந்தி வாலாவின் சேனல் சென்னையிலும் ஃபேமஸ். 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைத் தொட்ட முதல் இந்தியர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராம். சினிமாவில் பாடகர் ஆக வேண்டுமென்ற கனவோடு மும்பை வந்த இந்த டெல்லிக்காரருக்கு ஆரம்பத்தில் என்ன பண்ணுவது எனத் தெரியாமல் சின்னக் குழப்பம் இருந்திருக்கிறது. டெல்லியில் இருக்கும் பார்களில் பாடகராக கரியரை ஆரம்பித்தவர் ஓய்வு நேரத்தில் சின்னச் சின்ன 5 நிமிட ஸ்கிட் வீடியோக்களை யூடியூப்பில் போட்டிருக்கிறார். அவை அத்தனையும் எக்குத்தப்பாய் ஹிட் ஆக இப்போது ஆங்ரி மாஸ்டர்ஜி-டிட்டு மாமா என ஆரம்பித்துப் பத்துக்கும் மேற்பட்ட அவதாரங்கள் எடுத்து காமெடிச் சரவெடி வெடிக்கிறார்.
‘யூடியூபில் கன்டென்ட்டுக்காக அலைய வேண்டாம். நீங்களே கன்டென்ட்டுதான். உங்களுக்குத் தெரிந்த காமெடி விஷயங்களைப் பேசுங்க... போதும்!’ என டிப்ஸ் சொல்லும் புவன், இப்போது மியூசிக்கல் ஆல்பம், வெப் ஷோ, சினிமா என அடுத்த கட்டப் பாய்ச்சலில் இருக்கிறார்.
இவரது பாய்ச்சலில் வேறு ரகம் என்றால், போர்னோகிராபி புகழ் ஜானி சின்ஸை காமெடியாக பேட்டி கண்டதுதான். ‘இந்தியர்கள்’ அவசியம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய வீடியோ இது!


அடடே அமித் படானா
இந்தப் பட்டியலில் இருக்கும் மிடில் க்ளாஸ் மாதவன் இந்த அமித் தான். உத்தரப்பிரதேசத்திலிருந்து படிக்கப் போகிறேன் என டெல்லி வந்தவர். ‘யூடியூப் சேனல் ஆரம்பிக்கப் போகிறேன்!’ என்றவரை துடைப்பக் கட்டையோடு விரட்டியிருக்கிறார் இவர் அம்மா. காரணம், சட்டம் படித்த இவர் ஒரு பெரிய வக்கீலாய் வருவார் என ஒட்டுமொத்தக் குடும்பமே காத்திருக்க, இவர் கேமராவும் கையுமாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆரம்பத்தில் ரொம்பவே அப்செட்டான இவரது கொள்ளுத்தாத்தா, இப்போது பல்செட்டைக் கழற்றி வைத்துவிட்டு இவர் வீடியோக்கள் பார்த்து அதிர்ந்து சிரிக்கிறார்.
‘சினிமாவில் பெரிய ஆளாக வந்து காட்டுகிறேன்!’ என வாக்கு கொடுக்கவும்தான் குடும்பம் துடைப்பக்கட்டையைக் கீழே போட்டு ஆசீர்வதித்திருக்கிறது. அப்புறமென்ன, வெறும் 91 வீடியோக்களிலேயே 2.39 கோடி சப்ஸ்கிரைபர்களைத் தொட்டுவிட்டு, ‘வீடியோவோடு நிப்பாட்டுவேன்னு நினைச்சீங்களா... அக்ஷய் குமார், ஆமிர்கான் போல் ஸ்டார் ஆகணும். காத்திருங்கள் மக்களே!’ என சினிமாவுக்கான டிரெயிலர் ஓட்டியிருக்கிறார் அமித்.


சூப்பர் பாய் ஹர்ஸ் பெனிவால்
இந்திய சோஷியல் மீடியாக்களில் ‘க்ரிஞ்ச்’ என்ற வார்த்தையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய 26 வயது யூடியூபர். டிக்டாக் வீடியோக்களில் ஆரம்பித்து அடல்ட் காமெடி வீடியோக்கள் வரை எல்லாமே டீனேஜ் ராக்கெட் ரகம். இன்ஸ்டா, ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லாவற்றிலும் பிஸியாக இருந்தவர், 2015-ல்தான் முதன்முதலில் யூடியூபில் வீடியோவை அப்லோடு செய்திருக்கிறார். தற்போது 1.44 கோடி சப்ஸ்கிரைபர்களோடு இருக்கும் இவர் சேனலில் காமெடி மட்டும் அல்லாமல் த்ரில்லர், இன்ஃபோடெய்மென்ட், ரியாக்ஷன் வீடியோஸ் எனக் கதம்பமாகக் கலந்துகட்டி அடிக்கிறார். எல்லா வீடியோக்களும் கோடி பார்வையாளர்களைத் தாண்டி ஹிட் அடிப்பதோடு சில சினிமா வாய்ப்புகளையும் பாலிவுட்டில் இவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது.
இவர்களைத் தவிர சிலரின் அநாமதேய வீடியோக்களும் ஹிட்டடிக்கின்றன. குடும்பமே சேர்ந்து பண்ணும் அடல்ட் சார்லி சாப்ளின் காமெடி, ‘மீம் சினிமா’ விமர்சனங்கள், ‘எளிமையாகப் பல்லு விளக்குவது எப்படி?’யில் ஆரம்பித்து ‘ஒண்ணாம் வாய்ப்பாடை மனப்பாடம் செய்வது எப்படி?’ வரை பல ‘உபயோகமான’ தகவல்களையும் ‘பார்த்து’ ஹிட்டடிக்க வைக்கின்றனர் 2k கிட்ஸ்.