
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க மீது, மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், டாஸ்மாக் பார் டெண்டர் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்தியா, தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவே 2022-ம் ஆண்டில் நம்மைப் பரபரப்பாக்கிய, அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘டாப்-20’ சம்பவங்களை இங்கே ரீவைண்ட் செய்து பார்க்கலாம்!
ஆளுநர் Vs தி.மு.க அரசு!
தி.மு.க அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கும் இடையே போரே நடந்தது இந்த ஆண்டில். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி இந்த யுத்தத்தைத் தொடங்கிவைத்தார் ஆளுநர். அவரது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதாவைக் கொண்டுவந்தது தி.மு.க அரசு. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தியது ஆளுநர் மாளிகை. ஆளுநரை மாற்றக் கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய தி.மு.க எம்.பி-க்கள், அதற்காகத் தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

ஒற்றைத் தலைமையான எடப்பாடி!
அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாகும் கனவை இந்த ஆண்டில் நிறைவேற்றிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ்-ஸின் ஒருங்கிணைப்பாளர் பதவியைப் பறித்து, அவரைக் கட்சியைவிட்டே நீக்கி, கட்சி அலுவலகத்தையும் கைப்பற்றி, கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளரும் ஆனார் பழனிசாமி. உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் பொதுக்குழு தொடர்பான வழக்கு ஒன்றுதான், ஓ.பி.எஸ்-ஸுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை!
நிம்மதியா தூங்க விடுங்கய்யா!
தான் முதல்வரான பிறகு நடந்த தி.மு.க-வின் முதல் பொதுக்குழுவிலேயே, கட்சியினரிடம் கதறிவிட்டார் மு.க.ஸ்டாலின். அக்டோபர் 9-ம் தேதி நடந்த அந்தப் பொதுக்குழுவில் பேசிய அவர், “மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப்போல இருக்கிறது என்னுடைய நிலைமை. என்னை மேலும் துன்பப்படுத்துவதுபோல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன சொல்வது... நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கியிருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் கண்விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னைத் தூங்கவிடாமல்கூட ஆக்கிவிடுகிறது” எனப் புலம்பித் தள்ளிவிட்டார்.

இரு ஆணையங்களின் அறிக்கை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ‘தூத்துக்குடிச் சம்பவத்தில் விலங்குகளை வேட்டையாடுவதுபோல, காவல்துறை போராட்டக்காரர்களைச் சுட்டுத்தள்ளியிருக்கிறது’ என்ற வரியும், ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதிப் பகுதியில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ‘போர் வீரர்களைக் கோத்தெடுத்த கொம்பை உடைய யானையும்கூட கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்படும்போது நரிகள் கொன்றுவிடும்’ என்ற வரியும் பேசுபொருளாகின.
கோவை கார் குண்டு வெடிப்பு!
கடந்த அக்டோபர் 23-ம் தேதி, அதிகாலை 4:05 மணிக்கு, கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மாருதி 800 கார் ஒன்று வெடித்துச் சிதறியது. காரில் வந்த ஜமேஷா முபின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதற்கட்டமாக ‘காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் விபத்து நிகழ்ந்ததாக’ தகவல் வெளியானது. ஆனால், கார் வெடித்த இடத்தைச் சோதனை செய்த போலீஸார், அது கார் குண்டு வெடிப்பு என்பதை உறுதிசெய்தனர். பின்னர், அந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது. கர்நாடக குக்கர் குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு முபினோடு தொடர்பிருந்தது என்று முற்றுப்புள்ளியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது இந்த வழக்கு!
பா.ஜ.க-வின் ஆபாச வீடியோ, ஆடியோ...
தமிழக பா.ஜ.க-வினரின் ஆபாச வீடியோ, ஆடியோ மாதத்துக்கு ஒன்று வெளியாகிக்கொண்டே இருந்தது. இப்படியான வீடியோ ஒன்றால் பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் பதவியிலிருந்து விலகினார். அதேபோல, சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் டெய்சியை, ஓ.பி.சி பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் சூர்யா சிவா ஆபாசமாகத் திட்டும் ஆடியோ வெளியாகிக் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த விவகாரத்தில் டெய்சிக்காக குரல் கொடுத்த காயத்ரி ரகுராம் பதவிநீக்கம் செய்யப்பட, கடைசியில் சூர்யா சிவாவும் கட்சியிலிருந்து விலக வேண்டியதானது.
சர்ச்சை கிளப்பிய அரசுத் துறைகள்!
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க மீது, மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், டாஸ்மாக் பார் டெண்டர் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளானது. தமிழ்நாடு முழுக்க ‘கரூர் கம்பெனி’ என்ற பெயரில் சட்டவிரோத மது விற்பனையைப் பல்வேறு இடங்களில் ‘அதிகாரபூர்வமாக’ நடத்துவதாக வெளிப்படையாகவே குற்றம்சாட்டினர் பார் உரிமையாளர்கள். ஆனாலும் நடவடிக்கை இல்லை. இதேபோல பத்திரப்பதிவுத்துறை, பால்வளத்துறை, கனிம வளத்துறையிலும் முறைகேடுகள் வரிசை கட்டின. சேலம் எட்டுவழிச் சாலை, திருவாரூர் புறவழிச்சாலை போன்றவற்றில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் பேச்சும், செயல்பாடும் விமர்சனத்துக்குள்ளாகின.
உதயநிதி பட்டாபிஷேகம்!
`புலி வருது...’ கதையாக, ‘உதயநிதி இந்த மாத இறுதியில் அமைச்சராகவிருக்கிறார்... அடுத்த வாரம் பதவியேற்பு’ என்ற புகைச்சலுக்கு டிசம்பர் 14-ம் தேதி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தடபுடல் வரவேற்பு, போஸ்டர், பேனர்களுக்கு தி.மு.க தலைமை ‘தடை’ போட்டுவிட்டதால், பெரிய அளவில் ஆர்ப்பாட்டமில்லாமல் உதயநிதி பட்டாபிஷேகம் நடந்தது. உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை வழங்கப்பட்டதுடன், அமைச்சர் பெரியசாமி உள்ளிட்ட 10 அமைச்சர்களின் இலாகாவிலும் மாற்றங்கள் அரங்கேறின.
இந்தியா

ஹிஜாப் போராட்டம்!
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையும், அதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமும் நாடு தாண்டியும் பேசுபொருளாகின. உடுப்பி கல்லூரி ஒன்றில், ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட, அதைக் கண்டித்து இஸ்லாமிய மாணவர்கள் போராடினர். அவர்களுக்கு எதிராக ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்தவர்கள் காவித்துண்டு அணிந்துகொண்டு கல்லூரிகளுக்கு வந்தார்கள். இந்தப் பதற்றமான சூழலைக் காரணம் காட்டி, `கல்வி நிலையங்களில் சீருடை மட்டுமே அணிய வேண்டும்’ என உத்தரவிட்டது கர்நாடக பா.ஜ.க அரசு. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது. வழக்கு இப்போது உச்ச நீதிமன்றத்தில்!
‘அக்னி’யால் வந்த ஆபத்து!
வட மாநிலங்களில் மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது `அக்னிபத்’ திட்டம். ‘இந்திய ராணுவத்தில் முப்படையிலும் நிரந்தரப் பணியிடத்தை ஒழித்து, வீரர்களை அவுட்சோர்ஸிங் ஆட்களைப்போல நடத்தும் திட்டம்’ என்று நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. வட இந்தியாவில் வன்முறையும் மூண்டது. சில பா.ஜ.க தலைவர்களின் வீடுகளும் தாக்கப்பட்டன. ராணுவத்துக்கான செலவைக் குறைக்கும் இந்தத் திட்டத்தை, அனைத்து எதிர்ப்புகளையும் மீறி வெற்றிகரமாக அமல்படுத்தியது மத்திய அரசு.
ஆட்சிக்கே ஆப்பு வைத்த எம்.எல்.ஏ-க்கள்!
மகாராஷ்டிராவில் ஆட்சியிலிருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இரண்டாக உடைந்தது. சுமார் 40 எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க பக்கம் சாய்ந்த ஏக்நாத் ஷிண்டே, ஜூன் மாதத்தில் மகாராஷ்டிராவின் முதலமைச்சரானர். மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆப்பு வைத்த பா.ஜ.க-வுக்கு, பீகாரில் ‘பாயசம்’ வைத்தார் நிதிஷ் குமார். பா.ஜ.க கூட்டணியை முறித்த கையோடு, லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியையும் தக்கவைத்துக்கொண்டார் அவர்.
முதல் பழங்குடியின ஜனாதிபதி!
ஜூலை 25-ம் தேதி இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார் திரெளபதி முர்மு. `இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதி’, `முதல் பழங்குடியின ஜனாதிபதி’ ஆகிய பெருமைகளும் இவரை வந்து சேர்ந்தன. மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கர், குடியரசு துணைத் தலைவராகத் தேர்வானார்.
நீதிப் போராட்டம்!
2002 குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரின் குழந்தை உட்பட ஏழு உறவினர்களைக் கொலையும் செய்த குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்தது மாநில அரசு. சிறையிலிருந்து வெளிவந்தவர்களை ஏதோ தியாகிகளைப்போல ஆரத்தி எடுத்து, மாலை போட்டு வரவேற்பும் கொடுத்தார்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள். இந்த விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

ஒற்றுமைக்கான பயணம்!
அசைவே இல்லாமல் கிடந்த காங்கிரஸ் கட்சிக்குள் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது ராகுல் காந்தியின் `பாரத் ஜோடோ’ யாத்திரை. ‘150 நாள்கள் 3,500 கிலோமீட்டர்’ என்ற இமாலய இலக்குடன் செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி, இதுவரை ஒன்பது மாநிலங்களைக் கடந்து, பலரின் இதயங்களிலும் நுழைந்திருக்கிறார். 2023 பிப்ரவரியில் யாத்திரை காஷ்மீரில் நிறைவடையும்போது, ராகுலின் இமேஜ் மேலும் உயரும் என்று நம்புகிறது காங்கிரஸ் கட்சி.
ஏழில் ஐந்து தாமரைக்கே!
2022-ல் அதிகம் கவனிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலத் தேர்தல்களில் அமோக வெற்றிபெற்றது பா.ஜ.க. உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது பா.ஜ.க. டெல்லியைத் தாண்டி பஞ்சாப்பிலும் ஆட்சியமைத்த ஆம் ஆத்மி, தேசியக் கட்சி அந்தஸ்தையும் பெற்றது. இமாச்சலில் மட்டுமே காங்கிரஸுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது.
மீண்டும் எல்லை மீறிய சீனா!
தொடர்ந்து எல்லையில் கட்டுமானங்களை எழுப்பி இந்தியாவை அச்சுறுத்திவந்த சீன ராணுவம், டிசம்பர் 9-ம் தேதி அன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. இதனால், இரு நாட்டு வீரர்களுக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில், இந்திய ராணுவத்தினர் சிலர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை மறைப்பதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்த பின்னரே, இது பற்றி நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ஏற்கெனவே கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தின்போது வாய் திறக்காத பிரதமர் மோடி, இந்த விஷயத்திலும் மௌனம் காத்தார்.
உலகம்
உக்ரைன் - ரஷ்யப் போர்!
சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து உருவான உக்ரைன், ஜென்ம எதிரியான அமெரிக்காவின் நேட்டோ அமைப்புடன் சேர முடிவெடுத்தது. இதை எதிர்த்து ரஷ்யா, உக்ரைன் மீது பிப்ரவரி 24-ம் தேதி தொடுத்த போர், பத்து மாதங்களைக் கடந்து இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்களைக் கொடுத்து உதவிவருவதால் ரஷ்யாவால் உக்ரைனை வீழ்த்த முடியவில்லை. ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களை, மீட்டெடுத்துவிட்டதாக உக்ரைன் அறிவித்துவிட்டது. ஆனால், இந்தப் போர் காரணமாக, பல்லாயிரக்கணக்கான வீரர்களும், அப்பாவிப் பொதுமக்களும் உயிரிழந்திருப்பது பெரும் சோகம்.
நாட்டைவிட்டு ஓடிய ராஜபக்சே!
இலங்கையில் இனவெறியைத் தூண்டி ஆட்சிக்கு வந்த ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியை, சிங்கள-தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வீழ்த்தினார்கள். நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக வெடித்த மக்கள் புரட்சி காரணமாக, நாட்டைவிட்டே ஓடினார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. அவரும், பிரதமர் மகிந்த ராஜபக்சேயும் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலம் எடுக்கப்பட்ட ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க தேர்வுசெய்யப்பட்டார்.

ராணி எலிசபெத் மரணம்!
பிரிட்டனின் 70 ஆண்டுக்கால ராணியான இரண்டாம் எலிசபெத், தனது 96-வது வயதில் இயற்கை எய்தினார். எலிசபெத்தின் மறைவுக்குப் பின்னர், அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்து மன்னரானார். இங்கிலாந்தில் முடியாட்சி மாறியதைப்போலவே, குடியாட்சியும் மாறியது. நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலக, அடுத்த பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். 45 நாள்களில் அவரும் பதவி விலக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.
இரான் ஹிஜாப் போராட்டம்!
இரான் நாட்டில் ஹிஜாப் அணியவில்லை எனக் கைது செய்யப்பட்ட மாஷா அமினி (Mahsa Amini) என்ற 22 வயது இளம்பெண், போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிராகச் சாலைகளில் இறங்கிய பெண்கள், ஹிஜாப்பை எரித்தும், தலைமுடியை வெட்டியும் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களைக் கலைக்க, சர்வ சாதாரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது அரசு. மரண தண்டனை, மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 500 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டார்கள். இதுவரை 18,000-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்!