சினிமா
Published:Updated:

2021 - டாப் 10 இளைஞர்கள்

2021 - டாப் 10 இளைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
2021 - டாப் 10 இளைஞர்கள்

தஞ்சை, படிப்படியாகத் தன் பச்சையத்தை இழந்துவரும் தருணத்தில் நம்பிக்கை விதையாகத் துளிர்க்கிறது கைஃபா.

2021 - டாப் 10 இளைஞர்கள்

வியாசைத் தோழர்கள் - துயர் துடைக்கும் தோழர்கள்

காலங்காலமாக குற்றங்களின் தலைநகராகத் தமிழ் சினிமா அடையாளப்படுத்தும் வடசென்னையின் நவீன முகங்கள், வியாசைத் தோழர்கள். புறக்கணிப்பையும் அவமதிப்புகளையும் கடந்து கல்லூரியைத் தொட்ட இந்த முதல் தலைமுறை எடுக்கும் அத்தனை முன்னெடுப்புகளும் அடுத்த தலைமுறைக்கானவை. பெரும் நூலகத்தையும் உள்ளடக்கி இவர்கள் நடத்தும் அம்பேத்கர் பகுத்தறிவுப் பாடசாலை, எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கல்வியோடு சேர்த்து விடுதலைக்கான அரசியலையும் போதிக்கிறது. கொரோனாவால் தேசம் நிலைகுலைந்து நின்ற நேரத்தில், தோழர்கள் தங்கள் பள்ளியை உதவி முகாமாக மாற்றிச் சுழலத் தொடங்கினார்கள். சமூக ஊடகம் வழியே உதவிகள் குவிய, நான்காயிரத்துக்கும் மேற்பட்ட எளிய மக்களுக்கு உதவிகளைக் கொண்டு சேர்த்தார்கள். இரண்டாம் அலை சுழற்றியடித்த நேரத்தில் ஆட்டோக்களில் ஆக்சிஜன் பொருத்தி 200க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிர் மீட்டார்கள். வியாசர்பாடி பிளாட்பாரத்தில் டெண்ட் கட்டி கொரோனாவுக்காக இவர்கள் உருவாக்கிய அவசரகால வார் ரூம், ஆறு மாத காலம் இரவு பகலாக இயங்கியது. தொற்றுக்குள்ளாகி இறந்தோர் உடலை அடக்கம் செய்யவெனத் தனிக்குழுவையும் களமிறக்கி, தவித்தோருக்குத் தோள் கொடுத்தார்கள். வியாசர்பாடி என்றாலே புறக்கணிப்பின் முறைப்புடன் எதிர்கொண்ட காவல்துறையை மரியாதையோடு புன்னகைக்க வைத்ததில் இருக்கிறது, வியாசைத் தோழர்களின் வெற்றி.

2021 - டாப் 10 இளைஞர்கள்

வினோத் ராஜ் - சிகரத்துக்கான முதல் கல்

எளிய மனிதர்கள் தொடக்கம் தொட்டே மிரட்சியோடு அணுகிய கனவுத் தொழிற்சாலைக்குள், உப்புப்படிந்த ஈரத்திற்கும், வெக்கையின் காய்ந்த வாசனைக்கும் இடமிருக்கிறது எனக் காட்டிய அசல் படைப்பாளி. நிலத்தைத் தோண்டிப் பாயும் வேர்களைப் போல இறுகிப்போன மனித மனங்களை இந்த மதுரைக்காரர் அகழ்ந்து தேட, கிடைத்தது `கூழாங்கல்.' வெள்ளித்திரையில் பிரதிநிதித்துவம் சுலபமாகக் கிடைத்திடாத வெள்ளந்தி மனிதர்களை, வரைமுறைக்குள் அடங்காத முயற்சிகளுக்குத் தோள் கொடுத்து நின்ற நண்பர்களைக் கொண்டு வினோத் உணர்த்திய பேருண்மை - `ஆஸ்கர் தூரமில்லை.' `சினிமாவில் எல்லாருக்கும் இடமிருக்கிறது' என்பதையும் `நிலத்தில் காலூன்றி மண்ணைப் பேசுவதுதான் உலக சினிமா' என்பதையும் அழுத்தந்திருத்தமாய்த் தன் முத்திரைபட எழுதி வினோத் போட்டுக் காட்டியிருப்பது நம்பிக்கைப் பாதை. `சொல்வதற்கு ஆயிரங்கதைகள் இருக்கின்றன, கேட்பதற்குத் தேவை ஒரு திறந்த மனம் மட்டுமே' எனத் தன் முதல் படத்திலேயே மண்ணுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஓர் உரையாடலைத் தொடங்கிவைத்திருக்கும் இயக்குநர் வினோத் ராஜ், தமிழ்சினிமாவின் வெளிச்சக்கீற்று.

2021 - டாப் 10 இளைஞர்கள்

ரஞ்சித்குமார் - சவால் வென்ற சாதனையாளர்

சின்னச் சின்ன சங்கடங்களுக்கெல்லாம் நொந்துபோகும் மனிதர்களுக்கு ரஞ்சித்தின் வெற்றிக்கதை ஒரு பாடம். காது கேட்காது. நினைத்ததைப் பேசவும் முடியாது. தங்கள் பிள்ளையின் பிரச்னையை, பிறந்து ஏழாவது மாதமே அறிந்துகொண்ட பெற்றோர், நம்பிக்கையோடு இந்தச் சமூகத்தில் வாழப்பழக்கினார்கள். ஸ்பீச் தெரபி, லிப் ரீடிங் எனத் தன்னைத் தகவமைத்துக்கொண்ட ரஞ்சித் படிப்பில் பல முதலிடங்களைத் தொட்டார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் வரை எட்டிப்பிடித்தும் நேர்காணல்களில் குறைகளே பிரதானமாகப் பேசப்பட்டன. இதுவல்ல என் இலக்கென ஆட்சிப்பணித் தேர்வுக்குத் தயாரானார் ரஞ்சித். முதல் முயற்சியே அவருக்கு வெற்றி மகுடத்தைச் சூட்டியது. `ஏன் இவனுக்காக இவ்வளவு கஷ்டப்படுறீங்க... படிச்சு கலெக்டரா ஆகப்போறான்' என்று தன் பெற்றோரைக் கேட்ட உறவுக்காரர்களின் கேள்விக்கு கலெக்டராகவே வந்து பதில்சொல்லப் போகிறார் ரஞ்சித். `அவமானங்களும் புறக்கணிப்புகளுமே எனக்கான படிக்கட்டுகள்' என்று கலைந்தமொழியில் சொல்லி விரலுயர்த்தும் ரஞ்சித், டேராடூனில் ஆட்சிப்பணிப் பயிற்சியிலிருக்கிறாரர். தமிழ் இலக்கியத்தை முதன்மைப்பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றதற்காகவும் இந்தக் கோவைத்தம்பியை நாம் கொண்டாடவேண்டும்.

2021 - டாப் 10 இளைஞர்கள்

ஷாரூக்கான் - ஆட்ட நாயகன்

இந்திய கிரிக்கெட்டின் இன்றைய சென்சேஷன் ஷாரூக். சையது முஷ்தாக் அலி டி-20 தொடரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்துத் தமிழ்நாட்டின் கையில் வெற்றிக்கோப்பையைப் பரிசளித்திருக்கிறார் இந்தச் சென்னை இளைஞர். 24 வயது வரை பிரதிபலன் பாராமல் உழைத்தவருக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஃப்ரீ ஹிட்களாகப் பரிசளித்துக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. அதையெல்லாம் ஒன்று விடாமல் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் அடித்துக்கொண்டிருக்கிறார் ஷாரூக். இவர் களத்தில் நின்றாலே, கேலரியில் ஃபீல்டரை நிறுத்தலாமா என்று யோசிக்கின்றன எதிரணிகள். ஆனால், தான் ஹிட்டர் மட்டுமல்ல, நல்ல ஃபினிஷர் என்பதையும் இந்த ஆண்டு நிரூபித்துவிட்டார். இந்திய அணியின் மிடில் ஆர்டரை ஆட்சி செய்யும் வல்லமை கொண்ட இந்த நம்பிக்கைத்தம்பிக்கு, புதிய ஆண்டு சர்வதேச வாய்ப்புகளைக் கொடுக்கலாம். அடுத்து, ‘ஐ.பி.எல் ஏலத்தில், மிக அதிக தொகைக்குப் போனவர்’ என்ற சாதனையும் சாத்தியமாகலாம்.

2021 - டாப் 10 இளைஞர்கள்

மீனா சத்யமூர்த்தி - சேவையின் முகம்

சிறுவயதில் பெற்றோரை இழந்த மீனாவை வாழ்க்கை சுழற்றிச் சுழற்றியடித்தது. 15 வயதில் தொடங்கிய திருமண வாழ்க்கை, 18 வயதில் முடிவுக்கு வர, உறவுகளும் விரல் உதறிக்கொண்டன. எதிர்காலம் புரியாமல் நின்ற மீனா, துயரைத் துடைத்தெறிந்துவிட்டு ஐ.டி வேலை, சுயதொழில் என மெல்ல மெல்ல மேலெழுந்தார். தனக்கேற்பட்ட துயரும் வலியும் பிறருக்கு நேராக்கூடாதென்ற எண்ணம், அவரை சேவையின் பக்கம் திருப்பியது. உறவற்ற சடலங்களை முறையாக அடக்கம்செய்து பல முகமறியா மனிதர்களுக்கு மகளானார். கொரோனா தாக்கத் தொடங்கிய தருணத்தில், சென்னைக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தன்னார்வலராகத் தன்னை இணைத்துக்கொண்ட மீனா, தொற்றுக்குள்ளாகிப் பதற்றத்தோடு வருபவர்களை ஆற்றுப்படுத்தி அவர்கள் குணமாகிச் செல்லும்வரை ஆறுதலும் ஆதரவுமாக இருந்தார். தொற்று அவரையும் ஐ.சி.யூ-வுக்குள் தள்ள, ஆபத்தான கட்டம் கடந்து மீண்டார். இரண்டாம் அலைத் தாக்கத்தால் மரணங்கள் அதிகமாகி, அடக்கம் செய்யும்பணி முடங்கிய நேரத்திலும் அச்சமில்லாமல் அதிலும் தன்னை இணைத்துக்கொண்டார். அடுத்த நொடிக்கான எந்தப் பிடிப்பும் இல்லாமல் திசையற்று நின்ற மீனா, இன்று பல குடும்பங்கள் கொண்டாடும் சகோதரியும் மகளுமாகியிருக்கிறார். மீனாவின் வெள்ளந்திப் புன்னகைக்குள் இருக்கிறது, வாழ்தலுக்கான நம்பிக்கை!

2021 - டாப் 10 இளைஞர்கள்

கைஃபா - கிராமங்களின் மீட்பர்கள்

தஞ்சை, படிப்படியாகத் தன் பச்சையத்தை இழந்துவரும் தருணத்தில் நம்பிக்கை விதையாகத் துளிர்க்கிறது கைஃபா. ‘கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்’ என்ற பெயரில் கரம் கோத்திருக்கும் நானூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், காவிரிப்படுகை மக்களுக்குத் தந்திருப்பது, எதிர்காலத்துக்கான நம்பிக்கை. கஜா புயலால் தவித்து நின்ற தம் உறவுகளுக்கு உதவ, பார்த்த வேலையை உதறிவிட்டு தங்கள் ஊருக்கு வந்த இளைஞர்கள் சமூக ஊடகங்களில் கரமிணைந்து நிவாரணங்களும் தென்னங்கன்றுகளும் தந்து தொண்ணூறுக்கும் மேற்பட்ட கிராமங்களை மீட்டெடுத்த தருணத்தில், உயிர்பெற்றது கைஃபா. கைஃபா நிகழ்த்திய முதல் பணியே பெருமாற்றத்துக்கான நகர்வு. 564 ஏக்கரிலான ஒரு குளத்தைத் தூர்வாரி நீர் நிரப்பியதில் குளிர்ந்துபோனது ஊர். கடும் எதிர்ப்புகள், அச்சுறுத்தல்களைக் கடந்து காவிரிக் கடைமடையில் அடுத்தடுத்து 25 நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்தது இந்த இளைஞர் படை. இவர்களின் அர்ப்பணிப்பில் நெகிழ்ந்து ஒரு ஜேசிபி எந்திரத்தைச் சொந்தமாகவே வாங்கித்தந்தது தனியார் நிறுவனம் ஒன்று. அதேவேகத்தில் காவிரிப்படுகை கடந்து சிவகங்கை, தூத்துக்குடி வரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மீட்டு மேம்படுத்தியிருக்கிறது கைஃபா. தூர்வாரும் மண்ணால் கரையைப் பலப்படுத்துவது, நீர்நிலைக்கு நடுவில் குறுங்காடு அமைப்பதெனத் தொழில்நுட்பங்களோடு களத்தில் இறங்கியிருக்கும் கைஃபா, கால்வைத்த இடமெல்லாம் நீரூறுகிறது.

2021 - டாப் 10 இளைஞர்கள்

அறிவு - இசையை ஆயுதமாய் ஏந்தியவர்

அறிவரசு என்ற எம்.பி.ஏ படித்த இந்த அரக்கோண இளைஞர், இன்று தமிழ் சமூகத்தின் அதிர்வுக்குரலாய் உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறார். பெண்களை வர்ணிப்பதும் கேலி செய்வதுமாகத் திரிந்துபோயிருந்த தமிழ்ச் சொல்லிசையின் முகத்தை மாற்றி அதில் அரசியல் பேசியதில் தனித்துவம் பெறுகிறார் அறிவு. மேடை, இசைக்கருவியென எதையும் தேடாமல் தெருக்களிலும் பூங்காக்களிலும் நின்று இவர் இசைக்கும் கானங்கள் தேசத்தின் மனச்சாட்சியை உலுக்குகின்றன. `தெருக்குறள்', `எஞ்சாயி எஞ்சாமி' எனப் புதிய பாதையில் தமிழிசையை நகர்த்திச் செல்லும் அறிவின் குரலில் தெறிக்கும் தகிப்பும் தாகமும் இளம் தலைமுறைத் தமிழர்களை ஈர்க்கிறது. பா.இரஞ்சித்தின் கரம்பற்றி திரையிசைக்குள் நுழைந்தவர், ‘மாஸ்டர்' வாத்தி ரெய்டு, ‘ஜிப்ஸி' தீவிர வியாதி, ‘சார்பட்டா பரம்பரை' நீயே ஒளி, ‘ஜெய்பீம்' பவர் என அதிர்வேட்டுகளைக் கொளுத்திப்போட்டு கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் பாடலாசிரியராகவும் பாடகராகவும் மாறியிருக்கிறார். பலநூறு குரல்கள் தோய்ந்த இசையுலகில் தனித்துவக் குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கிற அறிவு, சாதிக்க நினைக்கிற அத்தனை இளைஞர்களுக்கும் ஆற்றலின் நன்னம்பிக்கை முனை!

2021 - டாப் 10 இளைஞர்கள்

மணிகண்டன் - பன்முகக் கலைஞன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பென திரைக்கலையின் அகம்புறங்கள் அனைத்திலும் தடம்பதிக்கத் துடிக்கும் பன்முக இளைஞன். ‘ஜெய்பீம்' ராஜாக்கண்ணு, ‘காலா' லெனின் என ஒவ்வொரு பாத்திரத்தையும் தனக்குள் பொருத்தி வாழ்ந்துகாட்டுவதில் கவனம் பெறுகிறார். உதவி இயக்குநர், கதாசிரியர், நடிகரென அவர் உழைப்பைக் கொட்டிய ‘விக்ரம் வேதா' தனித்து இவரை அடையாளம் காட்டியது. அந்த இடத்தை எட்டிப்பிடிக்க மணிகண்டன் ஓடிய ஓட்டமும் ஏறிய படிகளும் கொஞ்சமல்ல. சினிமாவின் இரும்புக் கதவுகளைத் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தால் ஒரு நாள் அந்தக் கதவுகள் திறந்து தன்னை அரவணைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கைக் கனவோடு காத்திருந்த இந்த எதார்த்த கலைஞனைக் கைகுலுக்கி அங்கீகரித்திருக்கிறது சினிமா. ஆர்.ஜே, மிமிக்ரி, டப்பிங் எனக் கிடைத்த இடங்களிலெல்லாம் தன்னை நிரூபிக்கப் பேசிக்கொண்டிருந்த மணிகண்டனைப் பற்றி இப்போது தமிழகம் பேசுகிறது. சினிமாவே எதிர்காலமெனக் கருதி வாழ்க்கையை ஒப்புக்கொடுத்த அத்தனை இளைஞர்களுக்கும் மணிகண்டனின் வெற்றி தந்திருப்பது நம்பிக்கைப் பேரொளி!

2021 - டாப் 10 இளைஞர்கள்

ஜெயக்குமார் - நெருப்பை வென்ற நெஞ்சுரம்

ஏசி எந்திரத்தில் கசிந்த சிறுபொறி, நெருப்பாக சென்னை கஸ்தூரிபா மருத்துமனையைச் சூழ்ந்தது. 3 செவிலியர்கள், 58 குழந்தைகள், 11 தாய்மார்கள் இருந்த பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு தகித்தெரியத் தொடங்கியது. எல்லோரும் பதறிக்கொண்டு வெளியில் ஓட, செவிலியர் ஜெயக்குமார் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து தீயோடு போராடினார். சுவாசத்தில் நுழைந்த புகை உடலில் இருந்த ஆஸ்துமாவைத் தூண்ட, அரைமணி நேரம் விடாப்பிடியாய்ப் போராடி, கடைசித்துளி நெருப்பு வரை அணைத்து முடித்துவிட்டு மயங்கி விழுந்தார் ஜெயக்குமார். ஐந்து நாள்கள் ஐசியூவில் இருந்து உயிர் மீண்ட இந்த மீட்பனைத் தன் இல்லம் அழைத்துக் கைகூப்பி வணங்கினார் தமிழக முதல்வர். கனன்றெரிந்த தீ, ஆக்சிஜன் செல்லும் காப்பர் குழாய்களைத் தொட்டிருந்தால் கும்பகோணத்தைவிடக் கொடூர விபத்தொன்று தமிழக வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும். குடியாத்தத்தில் ஒரு ஏழை நெசவாளியின் மகனாகப் பிறந்த ஜெயக்குமார், தட்டுத்தடுமாறி செவிலியர் படிப்பை எட்டிப்பிடித்தவர். கைவிளக்கேந்திய இந்தக் கருணைமிகு உயிர்மீட்பனைக் கரம்பற்றிப் போற்றுகிறது ஆனந்த விகடன்.

2021 - டாப் 10 இளைஞர்கள்

வினிஷா - இயற்கையின் மகள்

12 வயதில் எல்லோருக்குள்ளும் ஒரு கனவு இருக்கும். திருவண்ணாமலையைச் சேர்ந்த வினிஷா உமாஷங்கரின் கனவு அவரை 2021 ஐக்கிய நாடுகளின் கால நிலை மாநாட்டின் மேடைவரை அழைத்துச் சென்றிருக்கிறது. தன் தாயாருடன் இஸ்திரிக் கடைக்குச் செல்லும்போது, அந்தப் பெட்டியில் இருக்கும் கரியையும், அது வெளியிடும் வாயுக்கள் குறித்தும் சிந்தித்திருக்கிறார். ஆறு மாத கால உழைப்பில், சூரியத் தட்டுக்களால் இயங்கும் இஸ்திரிப் பெட்டியை உருவாக்கியிருக்கிறார். ஐந்து மணி நேர நேரடி சூரிய வெப்பத்தின் மூலம், இப்பெட்டியால் ஆறு மணி நேரம் தொடர்ச்சியாக இயங்க முடியும். அத்தோடு நில்லாமல், சூரிய சக்தியை மின்சாரமாகச் சேகரிக்கும் பேட்டரியைக் கொண்டு ஒரு மொபைல் சார்ஜிங் போர்ட் என நவீன ரக பசுமை இஸ்திரி வாகனத்தை வடிவமைக்கிறார் வினிஷா. தன்னை ஒரு சூழலியலாளர், தொழிலதிபர் என அழைத்துக்கொள்ளும் வினிஷாவைப் போல, புவி வெப்பமயமாதலிலிருந்து உலகத்தைக் காக்க நமக்குத் தேவை நிறைய வினிஷாக்கள்.