கட்டுரைகள்
Published:Updated:

காடு, மலை, அருவி... ஆள்கள்தான் இல்லை!

குற்றாலம்
பிரீமியம் ஸ்டோரி
News
குற்றாலம்

மலையை வருடிவரும் `ஜில்’ காற்று, உடலுக்குள் நுழைந்து சிலிர்ப்பூட்டும் மெல்லிய குளிர் என ரசனையான அனுபவம் தரும் சுருளி அருவி அப்படியேதான் உள்ளது.

குற்றாலத்தில் அருவி வெள்ளமாகக் கொட்டுகிறது. ஊட்டியில் இதுதான் சீசன்... கொடைக்கானல் செல்ல இதுவே தகுந்த நேரம்... இந்நேரத்துக்கு வாகனங்களாலும் மனிதர்களாலும் இந்தச் சுற்றுலா நகரங்களெல்லாம் நிரம்பி வழிந்திருக்கும்.

காடு, மலை, அருவி... ஆள்கள்தான் இல்லை!

ஆனால், கொரோனா எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கிவிட்டது. இப்போது இந்தச் சுற்றுலாத்தலங்கள் எப்படியிருக்கின்றன...? அதை நம்பி வாழ்ந்தவர்களின் நிலை என்ன?

கொடைக்கானல்

சுற்றுலாவை மட்டுமே நம்பிய மலைவாசஸ்தலம் கொடைக்கானல். வி.ஐ.பி-க்கள் ஒருபுறம், மக்கள் கூட்டம் ஒருபுறமென எப்போதும் நிரம்பியிருக்கும் இந்தச் சுற்றுலாத்தலம், கடந்த 5 மாதங்களாக வெறிச்சோடிக்கிடக்கிறது. ‘`வெயில் காலங்களிலும் சரி, குளிர் காலங்களிலும் சரி, மக்கள் நடமாட்டம் நெறைஞ்சிருக்கும். சுற்றுலாவை நம்பித்தான் எல்லாத் தொழிலும். இப்போ எல்லாம் முடங்கிப்போச்சு. வளமா இருந்த பலபேரு சாப்பாட்டுக்கே வழியில்லாமத் தவிக்கிறாங்க. அரசாங்கம், சில நிபந்தனைகளோட டூரிஸ்ட்களை அனுமதிக்கணும்...’’ என்கிறார் கார் டிரைவர் ராஜேஷ்மணி.

கொடைக்கானல்
கொடைக்கானல்
சுருளி அருவி
சுருளி அருவி

சுருளி அருவி

மலையை வருடிவரும் `ஜில்’ காற்று, உடலுக்குள் நுழைந்து சிலிர்ப்பூட்டும் மெல்லிய குளிர் என ரசனையான அனுபவம் தரும் சுருளி அருவி அப்படியேதான் உள்ளது. ஆனால், அந்த இதத்தை அனுபவிக்கத்தான் ஆட்கள் இல்லை. அதனால் விலங்குகள் சுதந்திரமாக உலவுகின்றன.

தஞ்சைப் பெரியகோயில்
தஞ்சைப் பெரியகோயில்

தஞ்சைப் பெரியகோயில்

வெளிநாட்டினர், வெளிமாநிலத்தார் என, கோயில் மட்டுமன்றிக் கோயில் வளாகத்திலும் எப்போதும் மனிதத் தலைகள் நிரம்பியிருக்கும். அதிலும் பிரதோஷ நாள்களென்றால் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நிற்பார்கள். இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. மனிதர்களே இல்லாமல் பிரதோஷ வழிபாடுகள் நடக்கின்றன. தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் கலைத்தட்டு எனத் தஞ்சையின் அடையாளமாக இருக்கும் பொருள்களை வாங்க கோயிலை ஒட்டிய கடைகளில் மக்கள் திரண்டு நிற்பார்கள். இப்போது பல கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. திறந்திருக்கும் கடைகளிலும் வாங்க ஆளில்லை.

குற்றாலம்
குற்றாலம்

குற்றாலம்

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அகத்திய மலையைத் தழுவியபடி ஓடிவந்து ஆர்ப்பரிப்புடன் கொட்டும் அருவிகளும், மூலிகை வாசத்துடன் வீசும் தென்றல் காற்றும், சில்லென்ற சாரலும் கிறங்கச்செய்யும். தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துவிடுவார்கள். மூன்று மாதங்களில் சுமார் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவதாகக் கணக்கு உண்டு. 100 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடக்குமாம். இப்போது நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது குற்றாலம். விடுதிகள் முடங்கிக் கிடக்கின்றன. சில உணவகங்கள் மட்டும் செயல்படுகின்றன.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

கன்னியாகுமரி

எல்லா மாநில பதிவெண் கொண்ட வாகனங்களும் சாலைகளில் சரசரவெனப் போகும், வரும். எல்லா மொழிகளும் கலந்துகட்டி ஒலிக்கும். டீ மாஸ்டர் தொடங்கி டீ ஷர்ட் விற்பவர் வரை எல்லா மொழியும் பேசுவர். இப்போது கடல் அலையின் ஓசை தவிர வேறெந்த சத்தமும் இல்லை. விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் பாறைக்கும் ஓய்வில்லாமல் பயணித்த படகுகள், நான்கு மாதங்களாக கடற்கரையில் கட்டிப்போட்ட இடத்திலேயே கிடக்கின்றன. லாட்ஜ்கள், வெளியூரிலிருந்து வருபவர்களின் க்வாரன்டீன் மையங்களாகிவிட்டன. எப்போதும் மனிதர்களால் நிறைந்திருந்த கன்னியாகுமரி வெறிச்சோடிக் கிடக்கிறது.

ஏற்காடு
ஏற்காடு

ஏற்காடு

வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை... மரங்கள் காய்ந்த செந்நிற இலைகளை உதிர்த்துவிட்டு புதிய இலைகள் தரித்து பூத்துக் குலுங்குகின்றன. மலைமுகடுகள் மாஸ்க் கட்டிக் கொண்டதைப் போல கருநிற மேகங்களால் மூடப்பட்டிருக்கின்றன. சாரல்மழை மனதை இதமாக்குகிறது. அற்புதமான க்ளைமேட். ஆனால் இதை அனுபவிக்கத்தான் பயணிகளுக்குக் கொடுத்துவைக்கவில்லை.

“ஏரி, படகு இல்லம், மான் பூங்கா, பக்கோடா பாயின்ட், ரோஸ் கார்டன், கரடியூர் வியூ என மக்கள் நிரம்பியிருக்கும் இடங்கள் எல்லாம் இப்போது நடமாட்டமின்றிக் கிடக்கின்றன. எங்களுக்கே இது புது அனுபவம். சுற்றுலாவை நம்பியிருந்த எல்லோருமே தவித்துக்கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் ஓவியர் மனோ

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

ஒகேனக்கல்

மசாஜ் செய்துகொண்டு நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காகப் பலநூறு கிலோ மீட்டர் கடந்தெல்லாம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இங்குள்ள கிராமத்து சமையல்காரர்கள் வைத்துத்தரும் மீன் குழம்பு வாழ்நாள் முழுவதும் ருசிக்கும். உள்ளூர் நபர்களைத் தவிர சுற்றுலாப் பயணிகள் எவரும் வருவதில்லை. ‘`இந்த ஊரை நம்பி பரிசல்காரர்கள், மசாஜ் செய்பவர்கள், சமையல்காரர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். வருடம் முழுக்க இங்கு சீசன் இருக்கும். கைநிறையக் காசு கிடைக்கும். ஆனால், கொரோனா மொத்த வாழ்வாதாரத்தையும் முடக்கிவிட்டது’’ என்கிறார் மசாஜ் தொழிலாளர் முருகேசன்.

ஊட்டி
ஊட்டி

ஊட்டி

ஆண்டுக்கு 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வதாகச் சொல்கிறது மாவட்ட நிர்வாகம். சுற்றுலா மட்டுமன்றி, தேயிலை உற்பத்தி மண்டலமாகவும் ஊட்டி விளங்குகிறது. இப்போது மொத்தமாக எல்லாமும் முடங்கிக்கிடக்கின்றன. மனிதத் தொந்தரவுகள் இல்லாததால் விலங்குகள் சர்வசாதாரணமாக சாலைகளில் நடமாடுகின்றன. குப்பைகள் இல்லாமல் ஊர் பளிச்சென்று இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை மட்டும் நம்பியே தொழில்செய்து வந்த டாக்ஸி டிரைவர்கள், கைடுகள், உணவக உரிமையாளர்கள், நீலகிரி தைல வியாபாரிகள், சாக்லெட் உற்பத்தியாளர்கள் தொழிலையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கிறார்கள். தற்போது கனமழை ஊரையே புரட்டிப் போட்டிருக்கும் சூழ்நிலையில், ஊரடங்கு எப்போது தளர்த்தப்பட்டாலும் புதிதாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என்கிறார்கள் வணிகர்கள்.

புதுச்சேரிக் கடற்கரை
புதுச்சேரிக் கடற்கரை

புதுச்சேரிக் கடற்கரை

கடலோரச் சாலை 24 மணி நேரமும் அயல்நாடு மற்றும் அயல் மாநிலச் சுற்றுலாவாசிகளால் பிஸியாக இருக்கும். அதையொட்டி பிரெஞ்ச் கட்டடக் கலையைக் கொண்டிருக்கும் கட்டடங்களின் மஞ்சள் சுவர்களின் பின்னணியில் இளைஞர்கள், இளம்பெண்கள், காதலர்கள் இடைவிடாமல் செல்ஃபி எடுத்துக்கொண்டிருப்பார்கள். அந்தக் கடற்கரை தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது. உள்ளூர்வாசிகள் மட்டுமே வாக்கிங் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டுமே இயங்கிவந்த `மதாம் சாந்தி’ என்ற ஹோட்டல், ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஆண்டனி, தன்னிடம் உள்ள 4 கார்களில் பிரியாணி விற்கத் தொடங்கிவிட்டார். புதுச்சேரி வீதிகளில் ‘கார் பிரியாணி’ என்ற பெயரில் விற்கப்படும் இதற்கு ஏக வரவேற்பு.