Published:Updated:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பொக்கிஷங்கள் எங்கே? மறைக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல்!

நேதாஜி
News
நேதாஜி

"ஜப்பான் சரணடைந்தாலும், பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிரான நமது போர் தொடரும்" என்று அறிவித்தார் நேதாஜி. ரஷ்யாவின் உதவியுடன் அந்தப் போரை நடத்த முடியும் என்று நம்பினார் அவர். எனவே, ரஷ்யா போக முடிவு செய்தார்.

Published:Updated:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பொக்கிஷங்கள் எங்கே? மறைக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல்!

"ஜப்பான் சரணடைந்தாலும், பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிரான நமது போர் தொடரும்" என்று அறிவித்தார் நேதாஜி. ரஷ்யாவின் உதவியுடன் அந்தப் போரை நடத்த முடியும் என்று நம்பினார் அவர். எனவே, ரஷ்யா போக முடிவு செய்தார்.

நேதாஜி
News
நேதாஜி

சாகாவரம் பெற்ற சாகசங்களுக்கு சொந்தக்காரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் நடத்தி சுதந்திரம் பெறலாம் என்று காந்திஜி கருதிய காலத்தில், துப்பாக்கி முனையில் நம் தேசத்தின் விடுதலையைப் பெற முயன்றவர் நேதாஜி. 40 ஆயிரம் வீரர்களைத் திரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர். நாடு கடந்த இந்திய அரசாங்கத்தை அமைத்து, பிரிட்டிஷார் மீது போர் தொடுத்தவர்.

நேதாஜியின் வாழ்க்கை பல மர்மங்கள் நிறைந்தது. அவரது மறைவும் யாருக்கும் புரியாத புதிர். விமான விபத்தில் அவர் இறந்துவிட்டதாக ஜப்பான் ராணுவம் சொன்னது. ஆனால், அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவே கோடிக்கணக்கான இந்தியர்கள் நம்புகிறார்கள். அவர் குடும்பத்தினருக்குள் கூட இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டு.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நேதாஜியின் இறுதிக்காலம் மர்மமாக இருப்பது போலவே, இந்திய தேசிய ராணுவத்துக்காக அவர் சேர்த்து வைத்த பொக்கிஷங்கள் என்ன ஆகின என்பதும் மர்மமாக இருக்கிறது. இன்றைய மதிப்பில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தப் பொக்கிஷங்களை, நேதாஜிக்கு நெருக்கமாக இருந்த சிலரே பதுக்கிவிட்டார்கள். இதைக் கைப்பற்றி இந்தியாவுக்குக் கொண்டுவர நேரு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டெல்லியிலுள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் 'நேதாஜி ஃபைல்கள்' என்ற பெயரில் 37 ரகசியக் கோப்புகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு ஃபைல், நேதாஜி பொக்கிஷங்கள் பற்றிய ரகசியங்களைச் சொல்கிறது. பணம், தங்கக்கட்டிகள், நகைகள், வைரங்கள் போன்ற விலை உயர்ந்த கற்கள் என தேசத்துக்காக நேதாஜி கஷ்டப்பட்டு சேகரித்தவை யார் யார் கையிலோ போய்ச் சேர்ந்திருக்கின்றன.

ஒரு போர் நடத்தி நாட்டை வெல்வதற்குப் பணம் தேவை. ஜப்பான் உதவியுடன் போர் நடத்தினாலும், தங்கள் ராணுவத்தின் செலவுகளுக்காக ஜப்பானை அவர் நம்பவில்லை. நேதாஜியின் வேண்டுகோளை ஏற்று மலேசியா, பர்மா, தாய்லாந்து என்று பல நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் ஏராளமாக நிதி கொடுத்தார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில், நினைத்த நிமிடத்தில் நிதி திரட்டும் செல்வாக்கு மிக்கவராக நேதாஜி இருந்தார். எந்த நகரத்தில் இந்தியர்களைத் திரட்டி அவர் கூட்டம் நடத்தினாலும், பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து தாங்கள் அணிந்திருந்த நகைகளை அவரிடம் மொத்தமாகக் கொடுத்தார்கள். பலர் தங்கள் சொத்துகளை இந்திய தேசிய ராணுவத்துக்கு எழுதி வைத்தார்கள்.

எடைக்கு எடை தங்கம் வாங்கிய தலைவரும் அவர்தான். ஆமாம், 1945 ஜனவரியில் நேதாஜிக்கு 48வது பிறந்த நாள். பர்மா தலைநகர் ரங்கூனில் ஒரு விழா நடத்தி, அவருக்கு எடைக்கு எடை தங்கக்கட்டிகளைக் கொடுத்தார்கள் இந்தியர்கள். நேதாஜி கூச்சத்துடன் மறுத்தாலும், அவரை தராசில் உட்காரவைத்து தங்கம் கொடுத்தார்கள். இதில் பர்மா தமிழர்களின் பங்களிப்பு மிக அதிகம்.

நேதாஜி ஃபைல்கள்
நேதாஜி ஃபைல்கள்
The National Archives, New Delhi

நேதாஜி உருவாக்கிய நாடு கடந்த அரசாங்கத்தின் வருவாய்த் துறை அமைச்சர் கட்டுப்பாட்டில் இந்தப் பொக்கிஷங்கள் இருந்தன.

பர்மாவில்தான் நேதாஜியின் அலுவலகம் இருந்தது. ஜப்பான் வசமிருந்த பர்மாவை இரண்டாம் உலகப் போரின்போது முதலில் கைப்பற்றியது பிரிட்டன். நேதாஜி தன் படையினருடன் அங்கிருந்து பின்வாங்கி தாய்லாந்து சென்றார். நாடு கடந்த இந்திய அரசாங்கத்துக்கு, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அலுவலகம் ரெடியானது. 1945 ஆகஸ்ட் 16ம் தேதி ஜப்பான் ராணுவம் தோல்வியை ஒப்புக்கொண்டு பிரிட்டனிடம் சரணடைந்தது.

அப்போது சிங்கப்பூரில் இருந்த நேதாஜி, அவசரமாகக் கிளம்பி பாங்காக் வந்தார். பிரிட்டிஷ் ராணுவம் எந்த நேரத்திலும் தாய்லாந்தை வசப்படுத்தலாம் என்ற பரபரப்பான சூழல். நேராக அலுவலகம் சென்ற நேதாஜி, பொக்கிஷ அறையைத் திறந்தார். இந்தியப் படையினருக்கு மூன்று மாத சம்பளத்தை முன்பணமாகக் கொடுத்துவிட்டு, நிறைய பணத்தையும் தங்க நகைகளையும் அங்கிருந்த சிலரிடம் கொடுத்து வைத்தார்.

"ஜப்பான் சரணடைந்தாலும், பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிரான நமது போர் தொடரும்" என்று அறிவித்தார் நேதாஜி. ரஷ்யாவின் உதவியுடன் அந்தப் போரை நடத்த முடியும் என்று நம்பினார் அவர். எனவே, ரஷ்யா போக முடிவு செய்தார். நேதாஜியின் சொந்த விமானம் அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே பழுதாகிவிட்டதால் அதைப் பயன்படுத்த முடியவில்லை.

நேதாஜி ஃபைல்கள்
நேதாஜி ஃபைல்கள்
The National Archives, New Delhi

கர்னல் ஹபிபுர் ரஹ்மான், கர்னல் பிரீத்தம் சிங், மேஜர் அபித் ஹசன், கேப்டன் குல்சாரா சிங், எஸ்.ஏ. அய்யர், தேவநாத் தாஸ் ஆகிய தனக்கு நெருக்கமான ஆறு பேருடன் ஒரு பயணிகள் விமானத்தில் கிளம்பி வியட்நாம் நாட்டின் சைக்கோன் நகருக்குச் சென்றார். அப்போது நான்கு இரும்புப்பெட்டிகளில் சுமார் 70 கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் நகைகளை அவர்கள் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து விடுதலைப் போரை நடத்த இந்தப் பொக்கிஷம் தேவை என்று நேதாஜி நம்பினார்.

சைக்கோன் நகரிலிருந்து நேதாஜியும் நண்பர்களும் செல்வதற்கு வேறு விமானங்கள் கிடைக்கவில்லை. டோக்கியோ செல்லும் ஜப்பான் போர் விமானம் ஒன்று மட்டும் இருந்தது. அதில் அதிக இடமில்லை என்பதால், நேதாஜியை மட்டும் கூட்டிச் செல்ல ஜப்பான் ராணுவத்தினர் ஒப்புக்கொண்டனர். அவர் எடுத்துச் சென்ற பொக்கிஷங்களில் பாதியை மட்டுமே அந்த விமானத்தில் ஏற்ற முடிந்தது. சைக்கோன் நகரிலிருந்து தைவான் சென்றது அந்த விமானம். ஆகஸ்ட் 18ம் தேதி மதியம் அங்கிருந்து கிளம்பும்போது திடீரென வெடித்துச் சிதறியது.

"படுகாயமடைந்த நேதாஜியும், ஜப்பான் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேரும் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அவர்கள் இறந்துவிட்டனர்."
என ஜப்பான் அறிவித்தது.

விமானம் எரிந்தபோது, அதிலிருந்த பொக்கிஷப் பெட்டிகளும் கருகின. அந்தப் பெட்டிகளிலிருந்து சிதறிய நகைகளையும் தங்கக் கட்டிகளையும் ஜப்பான் ராணுவத்தினர் சேகரித்தனர். பாதி கருகிய நிலையில் இருந்த அந்த நகைகளை ஒரு பழைய பெட்ரோல் கேனில் போட்டு வைத்தனர். அவை சுமார் 11 கிலோ இருக்கும். அவற்றையும் நேதாஜியின் உடைமைகளையும் டோக்கியோ கொண்டு வந்தார்கள். நாடு கடந்த இந்திய அரசின் தலைவராக இருந்த ராமமூர்த்தியிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.

ஆறு ஆண்டுகள் அவை ராமமூர்த்தியிடம் இருந்தன. அதன்பின் இந்தியத் தூதரகம் அவற்றைப் பெற்று டெல்லிக்கு அனுப்பி வைத்தது. டெல்லி நேஷனல் மியூசியத்தில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

சரி, அந்த 11 கிலோ தவிர மீதி பொக்கிஷங்கள் எங்கே? ஜப்பானில் இந்தியத் தூதராக இருந்தவர்கள் அதன்பின் பல கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பினர். நேதாஜியுடன் இருந்தவர்களில் ராமமூர்த்தி, எஸ்.ஏ.அய்யர் ஆகியோர் இவற்றை மறைத்து வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்தக் கடிதங்கள் எதையுமே பிரதமர் நேரு கண்டுகொள்ளவில்லை. அவர்கள் இருவரும் கடைசிவரை விசாரிக்கப்படவில்லை.

இவர்களில் ராமமூர்த்தி அதன்பின் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து வளமாக வாழ்வதாக ஜப்பானில் இருந்த இந்தியத் தூதர் கே.கே.சேட்டூர் குற்றம் சாட்டினார். சைகோனில் விமானம் ஏறும்போது நேதாஜி விட்டுவிட்டு வந்த இரண்டு பெட்டிகளுடன் டோக்கியோ வந்தார் எஸ்.ஏ.அய்யர். வெறும் 300 கிராம் தங்கத்தை மட்டுமே தன்னிடம் நேதாஜி கொடுத்து வைத்திருந்ததாகச் சொல்லி, அதை நேதாஜி பொக்கிஷத்தில் சேர்ப்பித்தார். இதில் முறைகேடு நடந்திருப்பதாக ஜப்பானில் இருக்கும் இந்தியத் தூதரகம் சந்தேகம் எழுப்பியது. ஆனால், நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு, அதன்பின் எஸ்.ஏ.அய்யரை டெல்லிக்கு வரவழைத்து முக்கியமான பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்தது.

நேதாஜி
நேதாஜி

இந்த இருவரைத் தாண்டி இன்னும் பலரிடமும் நேதாஜியின் பொக்கிஷங்கள் இருந்திருக்கின்றன. இதற்கு ஆதாரமாக ஒரு சம்பவம்... சிங்கப்பூரில் வசித்த இந்திய வியாபாரியான ஹர்தயாள் சிங் என்பவர், தன்னிடம் இந்திய தேசிய ராணுவத்தின் பொக்கிஷங்கள் இருப்பதாகச் சொன்னார். ஐந்து கிலோ 634 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகள் மற்றும் நகைகளை நேதாஜி தன்னிடம் கொடுத்து வைத்ததாகச் சொன்ன அவர், அதையெல்லாம் இந்திய அரசுக்குக் கொடுத்தார்.

அவர் நேர்மையாகக் கொடுத்தார். மற்றவர்கள் என்ன செய்தார்கள்?

நேதாஜியே நமக்கு ஒரு பொக்கிஷம்தான். ஆனால், அவர் சேர்த்து வைத்த பொக்கிஷங்களை யார் யாரோ அபகரித்துக் கொண்டதுதான் வேதனை.