சினிமா
தொடர்கள்
Published:Updated:

தலைமுறை தொடரும் கலைமுறை!

களியலடி
பிரீமியம் ஸ்டோரி
News
களியலடி

இந்த விளையாட்டுக்க பேரு களியலடி. நான் பத்து வயசு பருவத்திலேயே இந்தக் கலையைப் படிச்சிட்டேன். இது சிலம்படி கலை என்றுதான் ஆரம்பத்தில இருந்திருக்கு

கன்னியாகுமரி மாவட்டம் வழுதலம்பள்ளம் சத்தியநாராயண சுவாமி கோயில் வளாகத்தில் 90 வயது முதியவர் முதல் 9 வயதுச் சிறுவர்கள் வரை வட்டமாக நின்று களியலடி என்ற விளையாட்டை தினமும் விளையாடுகிறார்கள். கோலாட்டம், தாண்டியா ஆட்டம் போன்று கையில் சிறிய குச்சியை வைத்து வட்டமாக நின்று விளையாடுகிறார்கள். கையில் சியான் என்ற பெரிய சைஸ் ஜால்ரா ஒன்றை வைத்து ஆசான் என அழைக்கப்படுபவர் அடித்துப் பாடுவார். அவருடன் சுற்றி நின்று சீனியர் மாணவர்களும் பாட்டுப் பாடுகிறார்கள். அந்தப் பாட்டுக்கு ஏற்ப சிறுவர்கள் வட்டமாக இரண்டு கைகளிலும் குச்சியை வைத்து விளையாடுகிறார்கள். பாடல் வேகம் அதிகரிக்க அதிகரிக்க விளையாடுபவர்களின் வேகமும் அதிகரிக்கிறது. விளையாட்டின் வேகத்தைப் பார்க்கும்போது அவர்கள் மாறி மாறி அடிமுறைப் பயிற்சி செய்வதுபோன்று இருக்கும். அந்தக் கலை குறித்து அறிந்துகொள்ள, கையில் சியான் வைத்துப் பாடிக்கொண்டிருந்த 90 வயது ராமலிங்கம் ஆசானிடம் பேச்சு கொடுத்தேன்.

“இந்த விளையாட்டுக்க பேரு களியலடி. நான் பத்து வயசு பருவத்திலேயே இந்தக் கலையைப் படிச்சிட்டேன். இது சிலம்படி கலை என்றுதான் ஆரம்பத்தில இருந்திருக்கு. பையமாரு கூடிக் களிக்கிறதனால அது களியலடின்னு பெயர் வந்தது. விளையாட்ட மலையாளத்தில ‘களி’ன்னு சொல்லுவாங்க. பாரம்பர்யமா முன்னாடி உள்ள ஆட்கள் எங்களுக்குச் சொல்லித் தந்தினும். அதன் பிரகாரம் நாங்க அத இப்ப உள்ள பையம்மாருக்கு எடுத்துக் கூறுறோம். அழகி நாயகன் ஆசானுக்க சிஷ்யன் செறியபிள்ள ஆசான். செறியபிள்ள ஆசானுக்க சிஷ்யன் நிறையபேரு உண்டு. நானும் அவருக்க சிஷ்யன்தான். இந்த ஊரு இளைஞர்கள் நிறைய பேரு இந்தக் கலையைப் படிக்கத் தொடங்கிட்டாங்க. இன்னும் நல்லா வரணும்கிற எண்ணத்தில நாங்க ஒத்தாச செய்துகிட்டிருக்கிறோம்” என்றவரிடம், களியலடியின்போது பாடிய பாடல்களைப் பற்றி விவரமாகக் கேட்டோம்.

ராமலிங்கம்
ராமலிங்கம்

“களியலடிக்கு 18 பாட்டுகள்தான் உண்டு. அதை 18 அடவுகள்னு சொல்லுவோம். அதில் சேர்க்கையா இன்னும் சில பாட்டுகளை எடுத்திருக்கோம். ஒரு பாட்டு முடிஞ்சுதுன்ன ஒரு அடவு முடிஞ்சுதுன்னு அர்த்தம். ஒவ்வொரு பாட்டுலயும் செவுடு மாறி மாறி வரும். செவுடுன்னா திரும்புறது, குனியுறது, கைகால்களைத் தூக்கி வைக்கும் முறை.

பாட்டு தொடங்கும்போது சாமியைப் பற்றி ‘கும்பிடுகிறோம்... நாங்கள் கும்பிடுகிறோம்...’னு பாட்டுபாடித் தொடங்குவோம். அடுத்து எங்களுக்குக் களியலடி சொல்லித் தந்த செறியபிள்ளை ஆசானைப் பற்றிப் பாடுவோம். அப்புறம் நம் பாரம்பரியத்தைப் பற்றிப் பாடுவோம்.

பீமன் பாரிஜாத மலரை எடுக்கப் போறதப் பற்றி ஒரு பாட்டு வரும். அந்தச் சமயத்தில வயோதிகக் குரங்கைப்போல வாழைத் தோட்டத்தில அனுமன் படுத்திருப்பார். தான் ரொம்ப பலசாலிங்கிற கர்வத்தில வரும் பீமன், குரங்குகிட்ட வழிவிடச் சொல்லுவார். அதுக்கு அந்தக் குரங்கு ‘எனக்கு ரொம்ப வயசாயாச்சு. எழுந்திருக்கிறதுக்குள்ள கெதி (சக்தி) கிடையாது. அதனால் நீ எனக்க வால பைய நகட்டிகிட்டுப் போ’ன்னு சொல்லும். பீமன் அவருக்க கதாயுதத்த எடுத்து வால பைய எளக்குவதுக்குப் பாப்பாரு, முடியல. இதென்னடா இவ்வளவு இது இருக்கேன்னு, ரெண்டு கையால வாலைத் தூக்கித் தரையில அடிக்கணும்னு முயன்றார் பீமன். அதுவும் முடியல. அப்பதான் கர்வம் அழிஞ்ச பீமன் குரங்குகிட்ட ‘நீ கந்தனா, கடவுளா, நீ யாரு இப்பிடி சோதிச்சிதியே’ன்னு கேட்பார். அப்பத்தான் தான் பீமனுக்க அண்ணன் வாயுபுத்திரன் எனச் சொல்லி வழிகாட்டி, வரம் கொடுப்பார் அனுமர். இந்தப் புராணக் கதைகள் எல்லாம் அந்தப் பாட்டுகளில வரும்” என்றவரிடம் களியல் விளையாட்டின் முறை பற்றிக் கேட்டோம்.

“முன்னாடி நெறய ஊருகளில இந்தக் கலை இருந்தது. எல்லா எடத்திலயும் அழிஞ்சுபோச்சு. இந்த ஊருல மட்டும்தான் பாரம்பர்யமா இருக்கு. இது ஞானமான கலை. இப்ப நெறைய பிள்ளைகள் வந்து படிக்குது. இதுக்கு தனியா ஃபீஸ் வாங்கமாட்டோம். தட்சிணை மாதிரி பிள்ளைங்க கொடுக்கிறத வாங்கிப்போம்” என்கிறார்.

களியலடி விளையாடத் தொடங்கும் முன்பு ராமலிங்கம் ஆசானிடம் சிறுவர்கள் தங்கள் கையில் இருக்கும் குச்சியைக் கொடுத்து அவரது காலில் விழுந்து வணங்கி குச்சியை வாங்கிக்கொள்கிறார்கள். ஆசானுக்கு மரியாதை செய்த பிறகுதான் விளையாடத் தொடங்குகிறார்கள்.

ராமலிங்கம் ஆசானின் சீடரான இன்ஜினீயரிங் படித்து முடித்த சஜூ ராகுல் என்பவர் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்குக் களியலடிப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார்.

“நான் பி.இ மெக்கானிக்கல் படிச்சிருக்கிறேன். எனக்கு 24 வயசு ஆகுது. 15 வயசு இருக்கும்போதே களியலடி படிக்க ஆரம்பிச்சேன். ராமலிங்கம் ஆசானுகிட்ட தட்சிணை கொடுத்து கம்பை வாங்கின எட்டு மாசத்திலேயே படிச்சி முடிச்சிட்டேன். எங்களுக்கு ராமலிங்கம் ஆசானின் சீடர் ஜோதிங்கிறவர் இதைப் படிச்சுத் தந்தார். நான் அடுத்த தலைமுறைக்குப் படிச்சுக் கொடுக்கிறேன். மாஸ்டர் சொல்லுற டைமிற்கு வந்து படிக்கணும். பெரும்பாலும் ராத்திரி நேரத்துலதான் கத்துத்தருவாங்க.

தலைமுறை தொடரும் கலைமுறை!

வேற சில இடங்களில இதுபோல கம்பு வச்சிகிட்டு விளையாடுறத பார்த்திருக்கோம். ஆனா, இந்தக் களியலடியிலதான் வட்டக்காலில பதிஞ்சு இருந்து விளையாடும் முறை இருக்கு. வட்டக்கால்ங்கிறது பரதநாட்டியத்துக்கு நிற்கிறதுபோல காலை விரிச்சு பேலன்ஸ் பண்ணி நிற்கிறது. வட்டக்கால்ல நிற்கிறதுக்கு ஒன்றரை மாதம் வரைக்கும் பயிற்சி கொடுப்பாங்க. வட்டக்கால்ல நிற்கிறவங்களுக்கு வாதம் வராதுன்னு சொல்லுவாங்க.

தொடர்ச்சியா அரை மணி நேரம் வட்டக்கால்ல நிக்கணும். வட்டக்கால் நிலையில அரைமணி நேரம் நின்னாத்தான், அதுக்கப்புறம் மொத பாட்டுல மொத லைனே சொல்லித் தருவாங்க. வட்டக்கால்ல நிக்க முடியாம, கால் வலியால பாதியிலயே விட்டுட்டுப் போனவங்களும் உண்டு. அதுபோல நிறைய பேருக்கு இடதுகையைத் தூக்கிக் கம்பை அடிக்க வராது. அதுக்கும் தனியா பயிற்சி கொடுப்பாங்க. முழுக் கவனமும் களியல் விளையாட்டுலதான் இருக்கணும். முதல்ல கும்பிடு செவுடு சொல்லித் தருவாங்க. கடவுளையும் ஆசானையும் வாழ்த்திட்டு அதுக்கப்புறம் செவுடு தொடங்குவோம். விளையாடும்போது நம்ம கையைப் பார்த்துதான் அடிக்கணும். கையைப் பாக்காம அடிச்சா பக்கத்தில உள்ளவங்க மேல அடிபடும். இதில் முன் அடவு பின் அடவுன்னு ரெண்டு ஸ்டெப் வரும். ஒரு அடவு அடிச்சு முடிக்க குறைஞ்சது மூணு நிமிஷம் ஆகும். ஒவ்வொரு அடவுலயும் கடைசி லைன ஸ்பீடா பாடி முடிப்போம்” என்றவர் அடவுகளின் வகைகளை விவரித்தார்.

தலைமுறை தொடரும் கலைமுறை!

“கோழிப்போர் அடவுன்னு ஒண்ணு இருக்கு. கோழி எப்பிடி சண்டை போடுமோ அதுமாதிரிதான் அதுல உள்ள பயிற்சி எல்லாமே வரும். கீழ உக்காந்திருந்திட்டு அடிக்கறது, துள்ளித்துள்ளி மேல வாறது எல்லாமே வரும். கோழி சிறகு அடிக்கிறது போல விளையாடுறவங்க கையால சிறகு அடிகிற அடவும் இதில் வரும். கோழிப்போர் எப்பிடி நடக்கும், அதில எப்பிடி எல்லாம் பந்தயம் கட்டுறாங்க அப்பிடீங்கிற வரிகள் அந்தப் பாட்டுல வரும். விளையாடுறவங்க கோழி சண்ட போடுறதுபோல சேர்ந்து, பிரிஞ்சு போவாங்க. கோழிப்போர் அடவு விளையாடுறது ரொம்ப கஷ்டம். அதிகமா நம் மண்ணின் வரலாறு பாடுறதுமாதிரிதான் பாட்டின் வரிகள் எல்லாமே வரும்.

இப்படி ‘செம்பவள’, ‘பஞ்சுவெட்டு’ன்னு பல பாடல்கள் இருக்கு. இதில கன்னிக்குத்துப் பாட்டு ரொம்ப ஸ்பெஷல். வயல்ல வரும் பட்சிகளைப் பிடிக்கிறதுக்கு வலை கட்டுவாங்க. வலை கட்ட எதில இருந்தெல்லாம் நூல் எடுக்கிறாங்க, எப்பிடி வலை கட்டுறங்கன்னு கன்னிக்குத்துப் பாட்டுல வரும். ஆன வாலெடுத்துக் கட்டுங்க, குதிர வாலெடுத்துக் கட்டுங்கன்னு அந்தப் பாட்டுல வரும்” என்றவர் ‘களியலடி பழைய அடிமுறையின் நீட்சி’ என்கிறார்.

சஜூ ராகுல்
சஜூ ராகுல்

“அடிமுறையில குறுந்தடி வச்சு அடிக்கிற ஒரு அடிமுறை உண்டு. அதில உள்ள ஒளிவு மறைவு எல்லாமே களியலடியிலயும் உண்டு. அது புதுசா படிக்கிறவங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் அடிமுறை படிச்சவங்களுக்குத் தெரியும். அடிமுறை அழிஞ்சு போகாமல் இருக்க அதைப் பாட்டோட இணைச்சு நடனக்கலைபோல உருவாக்கியிருக்கிறாங்கன்னு தோணுது” என்றார்.

பாரம்பர்ய களியலடிக் கலையைத் தலைமுறைகளாகக் கட்டிக் காப்பாற்றி வருகிறார்கள் வழுதலம்பள்ளம் கிராமத்தினர்.

கம்பும் சியானும்!

களியலடி விளையாடுபவர்கள் தேக்கில் கடைந்தெடுத்த கம்பு ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள். அந்தக் கம்பின் நடுவில் மணி போட்டிருக்கிறார்கள். களியலடி விளையாடும்போது அந்த மணிச் சத்தம் கேட்கும். சியான் தாளம் போடுவதற்கு நல்ல பயிற்சி வேண்டும். ஆசான்மார்கள்தான் சியானைக் கையில் வைத்துத் தாளம் போடுகிறார்கள். “தாளம் தப்பிச்சின்னா விளையாட முடியாது. தாளம் சரியா இருந்தாத்தான் அதுக்கு ஏத்தாப்பில விளையாட முடியும்” என்கிறார்கள் மாணவர்கள். முதலில் மரக்கிளைக் குச்சியை வைத்து சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். அரங்கேற்றத்தின்போதுதான் தேக்கில் கடைந்து மணி பொருத்தப்பட்ட கம்பைக் கொடுக்கிறார்கள்.