
- கடைக்கோடி கிராமம்
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை நெடிதுயர்ந்த மலைகளால் இணைக்கிறது ஜவ்வாது மலைத்தொடர். அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரில், பார்வைக்கே அகப்படாத நூற்றுக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு பெரிய மலையின் பெயர்தான் அல்லேரி. இந்த மலை உச்சியின் இடுக்குகளில் அமைந்திருக்கும் கரப்பனான்கொல்லை, ஜடியன்கொல்லை, நெல்லிமரத்துக்கொல்லை, அவுசேரி ஓடை, பலாமரத்துக்கொல்லை, ஆட்டுக்கொந்தாரை, கூனம்பட்டி, மாம்பாலம், சுருண்டிக்கொல்லை உள்ளிட்ட சிறு சிறு கிராமங்களில், சுமார் இரண்டாயிரம் பேர் வசிக்கிறார்கள்!
இவர்களின் வாழ்க்கை, பெருமளவு வெளிச்சத்துக்கு வராமலேயே புதைந்துகிடக்கிறது. ‘பாதை வரும்... வாழ்க்கை மாறும்‘ என்று காத்திருந்தே பல உயிர்களை இழந்துவிட்டார்கள் அல்லேரி மலைவாழ் மக்கள். டிசம்பர் 14-ம் தேதி அதிகாலை, ஜடையன்கொல்லை கிராமத்தில் 24 வயதாகும் அனிதா என்ற நிறைமாத கர்ப்பிணிக்குப் பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது. மலையிலிருந்து கீழே இறங்குவதற்குச் சாலை வசதியில்லை என்பதால், அந்தப் பெண்ணை டோலி கட்டித் தூக்கிக்கொண்டு, தீப்பந்த வெளிச்சத்திலேயே மலையடிவாரத் திலுள்ள அத்தியூர் களங்கமேடு கிராமத்தை வந்தடைந்தார்கள். அங்கிருந்து, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டுசென்றார்கள். கொஞ்ச நேரத்திலேயே அனிதாவுக்குப் பனிக்குடம் உடைந்து குழந்தை பிறந்தது. கொஞ்சம் தாமதப்படுத்தியிருந்தாலும், இருவரின் உயிருக்குமே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றார்கள் மருத்துவர்கள். பிறந்த குழந்தை ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு மலையுச்சியிலிருக்கும் தனது கிராமத்தில் தஞ்சமடைந்தது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்டவுடன் அல்லேரி மக்கள் பிரச்னைகளைக் கவனப்படுத்துவதற்காக அங்கு கிளம்பிச் சென்றோம்...

வேலூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலிருக்கும் அரியூர் வழியாக அத்தியூர் கிராமத்துக்குச் சென்றோம். அத்தியூர் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை, நமக்கு வழிகாட்டுவதற்காக பார்த்திபன் என்ற மலைக்கிராம இளைஞரை வரவழைத்து, உடன் அனுப்பிவைத்தார். மலையடிவாரத்தில் அடர்ந்திருக்கும் காட்டுவழிப் பாதையில் பயணித்தோம். பெரிய நீரோடை இடைமறிக்கிறது. நீரோடையில் தண்ணீர் குறைவாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. அதைக் கடந்து காட்டுக்குள் பயணித்தபோது, விண்ணைத் தொடும் உயரத்தில் செங்குத்தான மலை தென்பட்டது. உடன் வந்த இளைஞர், ‘இதுக்கு மேலதான் சார் எங்க ஊர் இருக்கு’ என்றார்.
அண்ணாந்து பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. கீழிருந்து மேலே செல்ல 6 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். இரு சக்கர வாகனம் செல்லும் அளவுக்கு மலைவாழ் மக்களே பாதையை வெட்டி வைத்திருந்தார்கள். ஒரு வழியாகத் தட்டுத்தடுமாறி மலையுச்சியை அடைந்தோம். பனி போர்த்திய மேகக்கூட்டத்துக்கு நடுவில் குக்கிராமங்கள் பளிச்சிட்டன. பெரும்பாலும் கூரை வீடுகள். அதிலும் சில, மழைக்குத் தாங்காத பொத்தல்களோடு இருந்தன. ஆங்காங்கே நிலங்களைச் சமன்படுத்தி சாமை, கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களையும் பயிரிட்டிருந்தார்கள்.
ஏக்கம் நிறைந்த முகத்துடன் காணப்பட்ட மக்கள் நம்மிடம் மனம் திறந்து பேசத் தொடங்கினார்கள்... ‘‘இதுவரைக்கும் யாரும் எங்களை வந்து எட்டிப் பார்க்கலை. அரசாங்கம்கூட எந்த உதவியும் செய்யலை. தேர்தல் வர்றப்போ... ஒரு நாள் ஓட்டு கேட்கிறதுக்கும், இன்னொரு நாள் காசு கொடுக்குறதுக்கும்தான் வர்றாங்க. அதுக்கப்புறம் அடுத்த தேர்தலுக்குத்தான் எட்டிப் பார்க்குறாங்க. ஏதாவது செய்யலைன்னாலும் பரவாயில்லை... நாங்கல்லாம் உயிரோட இருக்கோமா, இல்லையான்னாவது வந்து பார்க்கலாமே! ‘மரத்தை வெட்டுனியா?’னு ஃபாரஸ்ட்டுகாரங்களும் ‘சாராயம் காய்ச்சுனியா?’னு போலீஸும்தான் அப்பப்போ வந்து விசாரணை பண்ணிட்டுப் போறாங்க.
விவசாயம் பார்ப்போம். தேன் எடுப்போம். மலைக்குக் கீழ போய் கட்டட வேலை செய்வோம். இதுதான் எங்க பொழைப்பு. எங்களுக்கு ஒரு ரோடும் கரன்ட்டு வசதியும் செஞ்சுதர மாட்டேங்குறாங்க. கரடுமுரடான பாதையில போயிட்டு வர்றதே பயமா இருக்கு. ரேஷன்ல போடுற பருப்பு, அரிசியை வாங்கணும்னாலும் மலைக்குக் கீழ இருக்குற அத்தியூருக்குத்தான் நடந்து போகணும்.
எங்க பசங்களுக்குப் படிக்க ஸ்கூலும் இல்லை. பாம்பு கடிச்சா வைத்தியம் பார்க்க மலைக்கு மேல ஆஸ்பத்திரியும் இல்லை. மாரடைப்பு, பிரசவவலி மாதிரியான அவசர நேரத்துல டோலி கட்டித் தூக்கிக்கிட்டுத்தான் ஓடுறோம். அடிவாரத்துக்கு நடந்துபோய் சேரவே நாலு மணி நேரம் ஆகுது. அங்கருந்து வண்டி புடிச்சு பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரிக்குப் போகறதுக்குள்ள உயிரே போயிடும். அப்படி நிறைய பேரைப் பறிகொடுத்துட்டோம். இனிமே ஒரு உயிர்கூட போகக் கூடாதுனு நெனைக்கிறோம். பீஞ்சமந்தை ஊராட்சியிலதான் எங்களைச் சேர்த்திருக்காங்க. ஆனா, ஊராட்சி நிதியிலிருந்து எங்க ஊருக்கு இதுவரை எதையுமே செஞ்சதில்லை.
அத்தியூர் அடிவாரம், வரதலம்பட்டு அடிவாரம்னு ரெண்டு மலைப்பாதை இருக்கு. மழை பெஞ்சா ரெண்டு பாதையிலும் அரிப்பு ஏற்பட்டு நடந்துகூடப் போக முடியாது. கரப்பனான்கொல்லை, ஜடியன்கொல்லை, நெல்லிமரத்துக்கொல்லைனு சில கிராமங்களுக்கு அத்தியூர் அடிவாரம்தான் பக்கத்துல இருக்கு. இவங்கல்லாம், நேரெதிரா இருக்கிற வரதலம்பட்டு மலையடிவாரத்துக்குப் போகணும்னா 15 கி.மீ அதிகமா நடக்கணும். அதேபோல, அங்க இருக்குறவங்களும் இந்தப் பக்கம் வரணும்னா சிரமப்படுறாங்க. அரசாங்கம் முதல்ல ஏதாவது ஒருபக்க மலைப்பாதையையாவது சீரமைச்சு தார்ச்சாலை போட்டுத் தரணும். நாங்களும் மனுஷங்கதான்... அகதிகளாக வந்தவங்களுக்குக்கூட நிறைய செய்யுறீங்க. காலங்காலமாக மலைக்கு மேலயே ஆதரவில்லாம கிடக்குற எங்களை ஏன் ஒதுக்கி வெக்குறீங்க? இந்த அரசாங்கம் எங்களுக்கு எதுவுமே செய்ய வேண்டாம். ஒரேயொரு ரோடு மட்டும் போட்டுக் கொடுங்க. போதும்’’ என்கிறார்கள் கண்ணீர் ததும்ப!
உயரத்தில் வாழ்கிறார்கள். ஆனால், மக்களின் வாழ்க்கையோ அதல பாதளத்தில். துயரம் தீர்க்குமா அரசு?