Published:Updated:

`பிள்ளைகளை என் வகுப்புக்கு விரும்பி அனுப்புறாங்க!’ - பரதத்தில் சாதிக்கும் திருநங்கை #SheInspires

திருநங்கை முத்து மீனாட்சி
News
திருநங்கை முத்து மீனாட்சி

இரண்டாம் தர நகரங்களிலும் கிராமங்களிலும், தங்கள் அளவில் ஒரு வெற்றியை, சேவையை, சாதனையை, நெகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பெண்கள் பலர். அந்த தேவதைகளை அங்கீகரிக்கும் தொடர் இது. #SheInspires

Published:Updated:

`பிள்ளைகளை என் வகுப்புக்கு விரும்பி அனுப்புறாங்க!’ - பரதத்தில் சாதிக்கும் திருநங்கை #SheInspires

இரண்டாம் தர நகரங்களிலும் கிராமங்களிலும், தங்கள் அளவில் ஒரு வெற்றியை, சேவையை, சாதனையை, நெகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பெண்கள் பலர். அந்த தேவதைகளை அங்கீகரிக்கும் தொடர் இது. #SheInspires

திருநங்கை முத்து மீனாட்சி
News
திருநங்கை முத்து மீனாட்சி

நெல்லையைச் சேர்ந்தவர் திருநங்கை முத்து மீனாட்சி. நடன ஆசிரியையான இவர், நெல்லை பாலபாக்கியா நகரில் ஸ்ரீராம் நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். திருநங்கை சமூகத்திலிருந்து பொறியியல் பட்டதாரி, செவிலியர், ஓட்டுநர் என்று பணி வாய்ப்புகளை வசப்படுத்தியுள்ள பலரை பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். அந்த வரிசையில், முத்து மீனாட்சியும் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ள வெற்றியாளர்.

முத்து மீனாட்சியின் நடனப்பள்ளியில் நாம் அவரை சந்திக்கச் சென்றிருந்தபோது, தன் மாணவிகளுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.

நாட்டியப் பயிற்சி அளிக்கும் முத்து மீனாட்சி
நாட்டியப் பயிற்சி அளிக்கும் முத்து மீனாட்சி

``எனக்குப் பெற்றோர் வெச்ச பேரு மாரியப்பன். எனக்கு நான் வெச்சுக்கிட்ட பேரு முத்து மீனாட்சி. எனக்கு 14 வயசு இருக்கும்போது உடல்ல ஏதோ மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தேன். மற்ற மாணவர்களோடு இயல்பா இருக்கக் கூச்சமா இருந்துச்சு. வழக்கமா நண்பர்களோடு தாமிரபரணி ஆத்துக்கோ, குற்றாலம் அருவிக்கோ போகும்போது இருக்குற உற்சாகமெல்லாம் காணாமல் போய், அசௌகர்யத்துல தவிச்சேன்.

கொஞ்ச நாள்ல, எனக்குள்ள பெண் உணர்வு மேலோங்குது என்பதைப் புரிஞ்சுக்கிட்டேன். அதை என் நண்பர்கள்கிட்ட சொன்னப்போ, அவங்க என்னை கேலி செய்யாமல் என்னை புரிஞ்சுக்கிட்டு எனக்கு உதவினாங்க. அவங்க ஆதரவு இல்லைன்னா நான் என்னவாகியிருப்பேன்னு நினைச்சுப் பார்க்கவே முடியல.

எனக்குள்ள மாற்றங்களை உணர ஆரம்பிச்ச நேரம், நிறைய புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். ஆன்மிகம், தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள் அதிகம் படிச்சேன். அதெல்லாம் என் மனக் குழப்பத்துக்கு நல்ல தீர்வா இருந்துச்சு.

எனக்குள் சக்தியும் சிவனும் இருப்பதைப் புரிந்துகொண்டதும், நிதானத்தோட என் வாழ்க்கை பற்றி யோசிச்சேன். அதைச் சரியா அமைச்சுக்கணும்னு முடிவெடுத்தேன். அதனால அரசு நடனப் பள்ளியில சேர்ந்து யோகா டிப்ளோமா படிச்சேன். பரத நாட்டியமும் கத்துக்கிட்டேன். எனக்கு குருவாக ஸ்ரீராஜேஸ்வரி சுந்தர்ராமனும், ஸ்ரீ செல்லமுத்துக் குமாரியும் கிடைச்சாங்க. அவங்களோட வழிகாட்டுதலோடு நடனத்தை என் வாழ்க்கையின் திசையா தேர்ந்தெடுத்தேன்'' என்ற முத்து மீனாட்சி, தன் வெள்ளை குர்தா தேர்வு பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

நாட்டியப் பயிற்சி
நாட்டியப் பயிற்சி

``நான் திருநங்கை என்பதைப் புரிஞ்சுக்கிட்ட நேரம் அது. என்னை பெண்ணாக வெளிப்படுத்துறதுல உடலுக்கான அலங்காரங்களைவிட, என் திறமையை உலகுக்கு உணர்த்தி வெற்றி பெறுவதிலேயே என் ஆர்வம் குவிந்தது. அதனாலதான், என் உடையில பெண்ணைப்போல நான் எந்த மாற்றத்தையும் செய்யலை. குர்தாவை உடுத்த ஆரம்பிச்சேன்.

என் பெயரைக்கூட முத்து மீனாட்சினு இருபால் பெயரா வெச்சுக்கிட்டேன். பெண்கள் அவங்களுக்கான ஆடை அடக்குமுறைகள்ல இருந்து வெளிய வந்து தங்களுக்கு வசதியான உடைகளை அணிய ஆரம்பிச்சிருக்காங்க. அப்படித்தான், நானும் என் வேலைக்கு வசதியான இந்த ஆடையைத் தேர்ந்தெடுத்திருக்கேன்'' என்கிறார்.

முத்து மீனாட்சியின் நடனப் பள்ளியில் இப்போது 45 குழந்தைகள் பரதம் கற்றுவருகிறார்கள். பல பள்ளிகளில் நாட்டிய ஆசிரியராகவும் பணிபுரிகிறார். முத்து மீனாட்சியிடம் பரதம் கற்றுக்கொண்ட 300-க்கும் அதிகமானோர் பரத நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

முத்து மீனாட்சி
முத்து மீனாட்சி

``திருநங்கை அளிக்கும் நடனப் பயிற்சி எப்படி இருக்குமோனு ஆரம்பத்துல என்கிட்ட பிள்ளைகளை அனுப்பத் தயங்கினாங்க பல பெற்றோர்கள். ஆனா, என் திறமையை நான் நடனம் பயிற்றுவித்த மாணவர்களின் நடனம் மூலமா உணர்ந்து, பல பெற்றோர்கள் தாங்களாகவே இப்போ தங்கள் பிள்ளைகளை என்கிட்ட நடன வகுப்பில் சேர்க்க அழைச்சுட்டு வர்றாங்க.

இப்படி, ஒவ்வொரு திருநங்கைக்குள்ளும் ஒரு திறமை, வெற்றி புதைஞ்சுதான் கிடக்கு. ஆனா, சமூகத்தோட புறக்கணிப்புடன் ஆன போராட்டத்துலேயே அவங்க வாழ்க்கை சிக்கிக்குது. சுய முன்னேற்றத்துக்கான கற்றல், வழிகள் எல்லாம் அவங்களுக்கு அடைபட்டுடுது. ஆனாலும், அதையும் மீறி வந்த திருநங்கைகள் தான் நமக்கு இங்க நம்பிக்கை அளிக்கிறாங்க. நாமளும் ஒரு நாள் அப்படி வருவோம்னு நினைச்சு தளராம போராடுவோம்'' என்று சக திருநங்கைகளுக்கு நம்பிக்கை கொடுக்கிறார் முத்து மீனாட்சி.

ஆரம்பகாலத்தில் பால் மாற்றத்தால் தான் இன்னலுக்கு ஆளானபோது தன்னை தாங்கி, தட்டிக்கொடுத்து, தன்னம்பிக்கை செலுத்திய தன் குடும்பம், நண்பர்கள் இல்லையென்றால் இப்படி ஒரு மரியாதையான வாழ்வு தனக்குக் கிடைத்திருக்காது என்று நெகிழ்கிறார் முத்து மீனாட்சி. மேலும், தனக்கு நடன ஆசிரியராக அங்கீகாரம் கொடுத்த அரியகுளம் சாரதா பள்ளிக்கும் நன்றி கூறுகிறார்.

``ஆரம்பகாலத்தில் எல்லா திருநங்கைகளையும் போலவே நானும் என்னோட வாழ்க்கையே இருண்டு போயிட்டதா நினைச்சு அழுதிருக்கேன். வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு முடங்கிக் கிடந்திருக்கேன்.

முத்து மீனாட்சி
முத்து மீனாட்சி

ஆனா என் நண்பர்கள், குடும்பம் கொடுத்த ஊக்கம் மட்டுமே என்னை இந்த அளவுக்கு வளர வெச்சிருக்கு. என் சிறு வயதிலே என்னோட அம்மா இறந்துட்டாங்க. ரெண்டு அண்ணன்களும் அப்பாவும்தான் என்னை வளர்த்தாங்க.

நான் திருநங்கை என்று தெரிந்தும், அரியகுளம் சாரதா பள்ளியில என்னை நடன ஆசிரியரா பணியில சேர்த்துக்கிட்டாங்க. மேலும், குற்றாலம் சாரல் விழா, நெல்லை புத்தகத் திருவிழா, நெல்லையப்பர் கோயில் விழா, திருச்செந்தூர், தஞ்சாவூர் கோயில்களில் நடக்கும் விழாக்களில் எல்லாம் என் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு வாய்ப்பு கொடுக்கும் எல்லோருக்குமே நான் கடமைப்பட்டிருக்கேன்'' என்கிறார்.

திருநங்கையாக தான் உணரும் பெண்மையையும் நளினத்தையும் வெளிப்படுத்த பரதநாட்டியம் தனக்கு உணர்வுபூர்வமான தளமாக இருக்கிறது என்று சொல்லும் முத்து மீனாட்சிக்கு, வீணை வாசிக்கவும் தெரியும்.

``என் வாழ்நாளை பாடல், இசை, நடனம்னு அர்ப்பணிக்கவே விரும்புறேன்'' என்கிறார்.

அரசிடமோ தனி நபர்களிடமோ இதுவரை எந்தக் கோரிக்கையும் வைக்காத முத்து மீனாட்சி, தன் திறமை போதும் தனக்கு என்கிறார். மேலும், ``ஒருவேளை உதவி கிடைச்சாலும் அதை பிறரின் நலனுக்காகவே செயல்படுத்துவேன்'' என்கிறார் உளப்பூர்வமாக.

ஜதி சொல்லப்பட, பாதங்கள் ஆட ஆரம்பிக்க, முத்து மீனாட்சி தன் உலகுக்குள் செல்கிறார்!

#TNElection2021
#TNElection2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள், விரிவான அலசல்களுக்கான விகடனின் சிறப்பு தேர்தல் களத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்க..!