சினிமா
Published:Updated:

“தைரியத்தை தமிழ்நாடு கொடுத்தது!”

திருநங்கை தனுஜா
பிரீமியம் ஸ்டோரி
News
திருநங்கை தனுஜா

படம்: சுரேஷ்குமார்

‘`இளம் திருநங்கைகள் முடிந்த அளவுக்கு எல்லா கஷ்டத்தையும் பொறுத்துக்கிட்டு வீட்டிலேயே இருங்க.. படிப்புங்கிறது மிகப் பெரிய கேடயம். குடும்ப வன்முறையைப் பொறுத்துக்கொள்ளாம வீட்டை விட்டு வெளியேறிட்டா, இங்க யார் யாரோ தொந்தரவு கொடுப்பாங்க. இப்ப இருக்கிற பல திருநங்கைகள் அழகை நோக்கிப் போறாங்க. திருநங்கைகள் அழகானவங்கதான் என்கிற பெயரெல்லாம் எப்பவோ நாம வாங்கிட்டோம். இனி, இந்தத் துறையில் இந்தத் திருநங்கை சாதிச்சிட்டு இருக்காங்க என்கிற பெயரதான் நாம வாங்கணும். ஆளுமையா மாறினா மட்டும்தான் நம்முடைய தலையெழுத்தை நாம மாத்த முடியும்’’ என்ற அறிவுரையுடன் பேசத் தொடங்கினார், திருநங்கை தனுஜா. இவர், இலங்கையில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, தற்போது ஜெர்மனியில் பல் சுகாதார மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். இவர் ஒரு எழுத்தாளரும்கூட!

‘‘சொந்த மண்ணை விட்டு அகதிகளாக வாழ்வாதாரத்தைத் தேடி அலைய வேண்டியிருந்தது. இது புலம்பெயர் தமிழர்களுக்குக் கிடைத்த வரம்னு சொல்லலாம். இல்லன்னா வரமாகக் கிடைத்த சாபம்னு சொல்லலாம்’' என அவர் கடந்து வந்த பாதையை நம் கண் முன் நிறுத்தினார்.

‘‘என் 3 வயதில் அகதிகளாக குடும்பத்தோட மதுரை வந்தோம். சம்பாதிக்கறதுக்காக அப்பா மட்டும் ஜெர்மனிக்குப் போயிட்டார். என்றைக்காவது ஒரு நாள் போர் முடியும். எல்லாரும் குடும்பமா சேர்ந்து வாழலாம்னு நினைச்சோம். ஆனா, போர் இழுத்துக்கொண்டே போனதால, எல்லா கஷ்டத்தையும் தாண்டி ஜெர்மனியிலேயே செட்டில் ஆகிட்டோம்.

எல்லாரும் திருநங்கை என்றால் சட்டென மாறிடுறாங்கன்னு நினைக்கிறாங்க. ஆனா, அப்படியில்லை. நாங்க உடல்ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுவே எங்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும். அந்தச் சிக்கல்களை எதிர்கொள்ள முடியாம தற்கொலை முயற்சி செய்து அதிலிருந்து மீண்டு வந்தேன். ஈழ மக்கள் மூன்றாம் பாலினத்தவர்களை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் இன்னும் பிற்போக்காகத்தான் இருக்காங்க. தமிழகம் நிறையவே மாறியிருக்கு. புலம்பெயர் தேசத்தில், எங்கள் சமூகத்தில் நான்தான் முதல் திருநங்கை. அப்படி யாரும் அதுவரையில் வெளிவந்ததில்லை. அந்த தைரியத்தைத் தமிழ்நாடுதான் எனக்குக் கொடுத்தது. நான் ரெண்டு பேருடன் போராட வேண்டியிருந்தது. ஒன்று, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள். இன்னொன்று, அவர்கள் பெற்று வெளிநாட்டிலேயே வளர்ந்த பிள்ளைகள். அந்தச் சிக்கலையும், படிப்பையும் பேலன்ஸ் பண்ண முடியாததால படிப்பை என்னால தொடர முடியல.

தமிழகத்தில் திருநங்கைகள் கூட்டமா வாழுவாங்க. ஆனா, வெளிநாடுகளில் தனித்து தான் வாழ வேண்டியிருக்கும். நடைமுறை வாழ்க்கையில் வருகிற பிரச்னைகளையும் தனியாகத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். அங்க சட்டரீதியான சுதந்திரம் இருக்கு. ஆனா, வாழ்வது சிக்கல். அமெரிக்கா போன்ற நாடுகளில் எத்தனையோ திருநங்கைகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்னுருக்காங்க. தனிமைதான் அங்கு மிகப்பெரிய போராட்டம்’’ என்றவரிடம் மருத்துவர் ஆனது குறித்துக் கேட்டோம்.

“தைரியத்தை தமிழ்நாடு கொடுத்தது!”

‘‘காதல்தான் நாம் வாழ்வதற்கான அர்த்தத்தைக் கொடுக்கும். குடும்பம் தூக்கிப் போட்டுடுச்சு. சமூகம் தூக்கிப் போட்டுடுச்சு. அப்ப யாரோ ஒருத்தர் நம்மை நேசித்து நமக்கு ஆறுதலாக இருக்கும்போது, நிச்சயம் அவர்தான் நமக்குக் கடவுள்! அப்படியாகத்தான் எனக்கும் ஒருத்தருடன் காதல் மலர்ந்தது. அவருடன்தான் மீதி வாழ்க்கையை வாழப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் மிதந்தேன். ஆனா, ஒரு கட்டத்தில் அவன் என்னைத் தூக்கிப் போட்டுட்டுப் போனான். இரண்டாவது முறையாகத் தற்கொலை முயற்சி பண்ணி, காப்பாற்றப்பட்டேன்.

திருமணம் செய்து வாழ ஆசைப்பட்ட என்னைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போன அவன்கிட்ட ‘உன்னைவிட அதிகமா சம்பாதிச்சுக் காட்டுறேன்’னு சவால் விட்டேன். பிறகு, பாலியல் தொழில் செய்ய முடிவு பண்ணினேன். அதை எனக்கு நானே கொடுத்துக்கிற தண்டனையா நினைச்சேன். உண்மையைச் சொல்லணும்னா காதலன்கிட்டகூட நோ சொல்ல முடியாது. ஆனா, வாடிக்கையாளர்கள்கிட்ட உரிமையா நோ சொல்ல முடியும். அப்படியே வாழ்க்கை போய்ட்டு இருந்தது. வசதி வந்தது. காலையில் எட்டு மணிக்கெல்லாம் பஸ்ல அடிச்சுப் பிடிச்சு வேலைக்குப் போறவங்கள பார்த்தா எனக்குப் பொறாமையா இருக்கும். அவங்க எல்லாருக்கும் ஏதோ ஒரு இலக்கு இருக்கு... கடமை இருக்குன்னு தோணுச்சு! நாமளும் ஏதாவது ஒரு இலக்கை நோக்கிப் பயணப்படணும்னு நினைச்சேன். அந்த வாழ்க்கையை விட்டு வெளியே வந்து மீண்டும் படிக்க முடிவெடுத்தேன்.

கல்லூரிக்குள் நுழையும்போது எனக்கு 27 வயது. ஆனாலும், தைரியத்துடன் படிச்சேன். நான் ஆசைப்பட்ட மாதிரியே இன்னைக்கு நல்ல இடத்தில் இருக்கிறேன்’’ எனப் புன்னகைக்கும் தனுஜா ‘ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

‘‘சமுதாயம் கொடுத்த கஷ்டங்களையும், அதனால என் மனசுல எழுந்த கேள்விகளையும் எழுத்து வடிவில் பதிவிட நினைச்சேன். 29 வயதில் சுயசரிதையை வெளியிட்டேன். வெளிப்படையாக இந்தச் சமூகத்தில் திருநங்கைகளுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்னு சொல்ல நினைச்சேன். அந்தப் புத்தகம் வெளியான சமயத்தில்கூட ஈழத் தமிழ் சொந்தங்கள், என் குடும்பம்னு யாரும் என்னை மதிக்கலை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் தாத்தா என் புத்தகத்தை கமல்ஹாசனிடம் பரிந்துரைத்தார். அந்த எபிசோடு பார்த்துட்டு பலரும் என்னைத் தேடி வந்து, ‘உன்னை நினைச்சா எங்களுக்குப் பெருமையா இருக்கு’ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க... அதெல்லாம் ரொம்ப நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. இப்ப சொந்தமா கிளினிக் வைக்கணும் என்பதுதான் என் ஆசை, கனவு, லட்சியம் எல்லாம்’' என்றார்.

உயரப் பறக்க வாழ்த்துகள் தனுஜா!