அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

“தலைவர் நாற்காலியில் உட்காரக் கூடாது...” - பரிதவிக்கும் பழங்குடியின பஞ்சாயத்து தலைவர்!

மனோகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
மனோகரன்

ஊரிலுள்ள இருளர் சமூகத்தைச் சேர்ந்த 26 குடும்பத்தினரும் சொந்த வீடு இல்லாமல் பாம்பு, பூச்சிகளுக்கு மத்தியில் பல வருடங்களாகக் குடிசைகளில் வாழ்ந்து வருகிறோம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் அமைந்திருக்கும் கடைக்கோடி ஊராட்சி ‘உத்திரம்பட்டு.’ கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது உத்திரம்பட்டு ஊராட்சிமன்றத் தலைவர் பதவி, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவற்றையெல்லாம் எதிர்கொண்டு ‘இருளர்’ வகுப்பைச் சேர்ந்த மனோகரன் என்பவர் தலைவர் பதவியைக் கைப்பற்றினார். இந்த நிலையில், ‘உத்திரம்பட்டு ஊராட்சியில் சாதிக் கொடுமை’ புகார் வரவே... ஊராட்சித் தலைவர் மனோகரனைச் சந்தித்தோம்.

“தலைவர் நாற்காலியில் உட்காரக் கூடாது...” - பரிதவிக்கும் பழங்குடியின பஞ்சாயத்து தலைவர்!

‘‘மாற்றுச்சமூக மக்களும் எனக்கு வாக்களித்ததால்தான் என்னால் ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றிபெற முடிந்தது. ஆனால், ஊராட்சி நிர்வாகத்தில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திவரும் நபர்கள், நான் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே தலைவர் இருக்கையில் என்னை இதுவரை அமரவிடவில்லை. பெயருக்குத்தான் தலைவர் பொறுப்பில் இருக்கிறேன்.

ஊராட்சிமன்ற அலுவலக சாவியைக்கூட கிளார்க் வெங்கடேசன்தான் வைத்திருக்கிறார். அவர் சொல்வதுதான் இங்கு சட்டம். துணைத் தலைவர், ஆறு உறுப்பினர்களும்கூட அவரின் ஆட்கள்தான். என்னை அலுவலகத்துக்குள்ளேயே விடுவதில்லை. கிராமசபைக் கூட்டத்துக்கும் என்னை அழைப்பதில்லை. நான் அங்கு சென்றாலும், மரியாதைக் குறைவாக பேசுகிறார்கள். மக்கள் முன்பு என் கருத்தை வெளிப்படுத்திவிடலாம் என்றாலும் பேசவிடாமல் தடுத்து வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள்.

“தலைவர் நாற்காலியில் உட்காரக் கூடாது...” - பரிதவிக்கும் பழங்குடியின பஞ்சாயத்து தலைவர்!

கிளார்க் வெங்கடேசன்தான் அடிக்கடி என்னை போனில் அழைத்து அலுவலகத்துக்கு வரச் சொல்வார். அங்கே சென்றால், உட்காரச் சொல்லாமல், வாசலில் நிற்கவைத்தே சில கோப்புகளிலும், பில்களிலும் கையெழுத்து போடச் சொல்வார். நானும் அவர் காட்டும் இடத்தில் கையெழுத்து போடுவேன். பின்னர், என்னைக் கிளம்பச் சொல்லிவிடுவார். ஊராட்சியில் என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது... என்பதைக்கூட என்னிடம் சொல்வது கிடையாது. இந்த மன உளைச்சலால் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.

“தலைவர் நாற்காலியில் உட்காரக் கூடாது...” - பரிதவிக்கும் பழங்குடியின பஞ்சாயத்து தலைவர்!

ஊரிலுள்ள இருளர் சமூகத்தைச் சேர்ந்த 26 குடும்பத்தினரும் சொந்த வீடு இல்லாமல் பாம்பு, பூச்சிகளுக்கு மத்தியில் பல வருடங்களாகக் குடிசைகளில் வாழ்ந்து வருகிறோம். எனக்குத் தலைவர் பதவிகூட வேண்டாம். எங்கள் மக்கள் பாதுகாப்பாகவும், நிரந்தரமாகவும் தங்குவதற்கு வீடு கட்டிக்கொடுங்கள்... அது போதும்’’ என்கிறார் துயர் மிகுந்த வார்த்தைகளில்.

இதையடுத்து உத்திரம்பட்டு ஊராட்சி பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘அங்கு வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வீடு கட்டித்தர விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். உத்திரம்பட்டு ஊராட்சி கிளார்க் வெங்கடேசனைப் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். ஊராட்சித் தலைவர் மனோகரன், இனி அவரது பணியைச் செய்யலாம். வரும் காலங்களில் அவருக்கு ஏதேனும் இடையூறுகள் இருந்தால் என்னிடம் நேரிடையாகப் புகார் செய்யலாம். கட்டாயம் நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார் நம்பிக்கை தரும்விதமாக!

பணியிட மாற்றம் மட்டும் போதுமா... சக மனிதருக்குத் தீண்டாமைக் கொடுமை செய்யும் கிளார்க்குக்கு அரசு ஊதியம் பெற என்ன தகுதியிருக்கிறது?!