அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

எத்தனை நாளைக்கு கிழங்கை தின்னே உசுரு வாழ முடியும்? - பழங்குடி மக்களின் துயர் துடைக்குமா அரசு?

பழங்குடி மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பழங்குடி மக்கள்

தமிழ்நாட்டில் சுமார் 7.94 லட்சம் பழங்குடி மக்கள் வசித்துவருகிறார்கள். இவர்களில் 6.6 லட்சம் மக்கள் வனத்திலும், வனத்தையொட்டிய பகுதிகளிலும் வாழ்பவர்கள்.

கொரோனா வைரஸைவிடக் கொடியது, பசி. ஊரடங்கு காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கொரோனா நிவாரணத் தொகையாக 4,000 ரூபாய், பலசரக்குப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது. அரசு ஊழியர்கள் தொடங்கி ஆதரவற்ற முதியோர் வரை இதனால் பயனடைந்துவருகின்றனர். ஆனால், குடும்ப அட்டை கிடைக்காததால், தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் பழங்குடிக் குடும்பங்கள் அரசின் உதவியைப் பெற முடியாமல் தவித்துவருகின்றன.

எத்தனை நாளைக்கு கிழங்கை தின்னே உசுரு வாழ முடியும்? - பழங்குடி மக்களின் துயர் துடைக்குமா அரசு?

தமிழ்நாட்டில் சுமார் 7.94 லட்சம் பழங்குடி மக்கள் வசித்துவருகிறார்கள். இவர்களில் 6.6 லட்சம் மக்கள் வனத்திலும், வனத்தையொட்டிய பகுதிகளிலும் வாழ்பவர்கள். இவர்களுக்கும், அரசு நிர்வாகத்துக்கும் இடைவெளி மிக அதிகம். குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் வெளியுலகத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட மலை மற்றும் வன கிராமங்கள் ஏராளம். தமிழ்நாடு முழுவதும் இது போன்ற கிராமங்களில் சுமார் 40,000 பழங்குடிக் குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை கிடைக்காததால், அரசின் உதவிகள் எதுவும் சென்று சேரவில்லை. இப்படி பாதிக்கப்பட்டுள்ள பழங்குடி மக்கள் சிலரிடம் பேசினோம்...

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட காட்டுப்பட்டி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ்வரி, ‘‘நாங்க மூணு தலைமுறைக்கு மேல இங்கதான் இருக்கோம். என் வீட்டுக்காரர் காட்டு வேலைக்குப் போறாரு. எங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு. நாலு வருஷமா ரேஷன் அட்டைக்கு அலைஞ்சுட்டு இருக்கேன். அதிகாரிங்ககிட்ட எப்ப போய் கேட்டாலும், ‘இந்தா வந்துரும், அந்தா வந்துரும்’னுதான் சொல்றாங்க. இப்ப வரைக்கும் அட்டை கிடைக்கலை. காட்டுல விளையறதைக் கீழே வந்து கொடுத்தாதான் எங்களுக்குக் காசு. ஊரடங்கால எங்கயும் போக முடியலை. ரேஷன் அட்டை இருந்திருந்தா, அதுல கிடைக்குற காசு, அரிசி, பருப்பைவெச்சு சமாளிச்சுருப்போம். அதுவும் இல்லாததால சாப்பாட்டுக்கே கஷ்டமாகிடுச்சு... ஏதோ மண்ணைத் தோண்டி கிடைக்குற கிழங்குகளைவெச்சு கஞ்சி காய்ச்சுறோம். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கிழங்கைத் தின்னே உசுரு வாழ முடியும்?’’ என்றார் ஆதங்கத்துடன்.

எத்தனை நாளைக்கு கிழங்கை தின்னே உசுரு வாழ முடியும்? - பழங்குடி மக்களின் துயர் துடைக்குமா அரசு?

மதுரை மாவட்டம், எழுமலை அருகேயுள்ள அழகம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்ற பழங்குடியோ, ‘‘ரெண்டு வருஷமா ரேஷன் அட்டை வாங்குறதுக்கு அலையா அலையுறேன். கிடைச்சபாடு இல்லை. என் கல்யாணத்துக்கப்புறம் பொஞ்சாதியோட பேரை அவங்க பழைய அட்டைல இருந்து நீக்கிட்டோம். என் அப்பா, அம்மாவோட இருக்குற பழைய அட்டைல இருந்து என் பெயரை நீக்க விண்ணப்பிச்சோம். ஆனா, அந்த அட்டையோட இணைக்கப்பட்ட போன் நம்பர் இப்ப எங்ககிட்ட இல்லைனு சொல்லி பெயரை நீக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. இப்ப வரைக்கும் அதுக்கு விடிவு கிடைக்கலை. இங்கிட்டு போக்குவரத்தும் இல்லை. அதனால, வேலைக்கும் போக முடியலை. வெளியில இருந்து வர்ற உதவிய வெச்சுதான் ஓட்டிட்டு இருக்கோம்’’ என்றார் வேதனையுடன்.

பழங்குடி மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் ஏக்தா பரிஷத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தனராஜ். அவர் நம்மிடம், ‘‘பழங்குடி கிராமங்களில் 10 சதவிகிதம் முதல் 40 சதவிகிதக் குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை இல்லை. உதாரணத்துக்கு, தேனி மாவட்டம், சோலையூர் கிராமத்தில் வசிக்கும் 70 பழங்குடியினக் குடும்பங்களில் 13 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை இல்லை. கொடைக்கானல் வாழகிரி கிராமத்தில் 42 குடும்பங்களில் 24 குடும்பங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டத்தில் ஊனை மாஞ்சேரி கிராமத்தில் 75 குடும்பங்களில் 22 குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை இல்லை. இப்படி, தமிழகம் முழுவதும் சுமார் 40,000 பழங்குடிக் குடும்பங்கள் ரேஷன் அட்டை இல்லாமல், அரசாங்கத்தின் எந்த உதவிகளையும் பெற முடியாமல் தவிக்கின்றன.

தனராஜ் - தங்கராஜ்
தனராஜ் - தங்கராஜ்

பழங்குடிகளைப் பொறுத்தவரை, 4,000 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. காடுகளில் ஏப்ரல், மே, ஜூன் எனக் கோடைக்காலத்தில் மட்டுமே தேன், மிளகு, மூலிகைகள், கிழங்கு உள்ளிட்ட காடுபடு பொருள்களையும், பிற விவசாய உற்பத்திப் பொருள்களையும் சேகரித்து, வெளியே கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும். பிறகு மழைக்காலம், பனிக்காலம் ஆகிய பருவங்களில் சிறுவன மகசூலைச் செய்ய இயலாது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் ஊரடங்கு காரணமாக அந்த வாழ்வாதாரமும் முடங்கிவிட்டது. குடும்ப அட்டை இல்லாததால், பழங்குடிகளுக்கு அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்திலும் வேலை கிடைப்பதில்லை. நாட்டின் எந்தவொரு சட்ட திட்டமும் சமூகத்தின் கடைக்கோடியில் இருப்பவனுக்கும் முழுமையாகச் சென்று சேர்கிறதோ, அப்போதுதான் அதன் நோக்கம் நிறைவடையும். எனவே, புதிய அரசு இவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க முன்வர வேண்டும்’’ என்றார்.

கயல்விழி - சக்கரபாணி
கயல்விழி - சக்கரபாணி

இவர்களின் துயரங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழியிடம் சொன்னோம். “பழங்குடி மக்களுக்குத் தடுப்பூசி போட ஆதார் கார்டு இல்லாதது பிரச்னையாக இருந்தது. ‘ஆதார் இல்லாவிட்டாலும் பரவாயில்லை... ஊசி போடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறோம். குடும்ப அட்டை பிரச்னை குறித்து இப்போதுதான் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இது சம்பந்தமாக பழங்குடி நலத்துறை ஆணையரிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.

எத்தனை நாளைக்கு கிழங்கை தின்னே உசுரு வாழ முடியும்? - பழங்குடி மக்களின் துயர் துடைக்குமா அரசு?

உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணியிடமும் இந்தப் பிரச்னையைக் கொண்டு சென்றோம். “நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 2,16,950 புது ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் கொரோனா நிதியும் வழங்கும்படி இணைத்துள்ளோம். நீங்கள் சொல்லும் விஷயத்தையும் விசாரித்து, ரேஷன் கார்டுகள் இல்லாத பழங்குடியினக் குடும்பங்களுக்கு அவற்றை வழங்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

சாமானிய மக்களும் பயன்பெற்றால்தான் அது உண்மையான விடியல்!