நெல்லை மாவட்டம், பாபநாசம் அணையின் அருகே உள்ள மலைகளில் காணி இன மக்கள் வசித்து வருகிறார்கள். பொதிகை மலையில் வாழும் அவர்கள் கிழங்கு, திணை உள்ளிட்டவற்றை விவசாயம் செய்வது, மலையில் கிடைக்கும் தேன் எடுப்பது போன்ற தொழில்களைச் செய்கிறார்கள். அங்குள்ள இஞ்சிக்குழி வன கிராமத்தில் வசிக்கும் மாணவி அபிநயா, ஒரு விடிவெள்ளி.

பொதிகை மலையில் இருக்கும் இஞ்சிக்குழி கிராமத்தில் 24 பேர் மட்டுமே வாழ்கிறார்கள். அந்த கிராமத்துக்குச் செல்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. பாபநாசம் அணையில் இருந்து 5 கி.மீ தொலைவுக்கு அணைக்குள் படகில் செல்ல வேண்டும். அதன் பின்னர் 13 கி.மீ தூரத்துக்கு மலையின் மீது செங்குத்தான பாதையில் அடர்ந்த வனத்தின் ஊடாக ஏற வேண்டும்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் வசிப்பதற்கு உகந்த வகையில், அந்தப் பகுதியில் வெயில் நுழையாத அடர்ந்த காடுகள் இருக்கின்றன. அத்துடன் புலிகள், யானைகள் உலாவும் இடம் இஞ்சிக்குழி கிராமம். அங்கு வசிக்கும் ஐயப்பன்-மல்லிகா தம்பதியின் மகளான அபிநயா சிறுவயதிலிருந்தே விடுதியில் தஙிகி 12-ம் வகுப்பு வரை படித்தார். கடந்த ஆண்டும் பிளஸ் டூ தேர்வில் அவர் 447 மதிப்பெண்கள் பெற்றார்.

அவருக்கு வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவு இருந்ததால் கடந்த ஆண்டு சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்துவிட்டு மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் நுழைவுத் தேர்வுக்காகக் காத்திருந்துள்ளார். அபிநயா வசிக்கும் வனப்பகுதியில் செல்போன் சேவை கிடைப்பதில்லை. அதனால் அவரால் இணையத்தை இயக்க முடியாது என்பதால், அவருக்கு கவுன்சலிங் அழைப்பு வந்ததே தெரியவில்லை. அதனால் அவரால் கடந்த ஆண்டு சட்டக் கல்லூரியில் சேரமுடியவில்லை.
ஓராண்டு படிக்க முடியாமல் போய்விட்ட பின்னரும் கூட, உயர் கல்வியைக் கற்றே தீர வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்த மாணவி அபிநயா, இந்த ஆண்டு நெல்லையில் உள்ள அரசினர் ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் இளங்கலை வரலாறு படிக்க விண்ணப்பித்தார். இணைய சேவை கிடைக்காமல் இந்த ஆண்டுக்கான கல்லூரிச் சேர்க்கையில் பங்கேற்க முடியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக அணைக்கு அருகில் இருக்கும் சின்ன மயிலாறு கிராமத்தில் பெற்றோருடன் தங்கியிருந்துள்ளார்.
அந்த கிராமத்திலும் செல்போன் மற்றும் இணைய சேவை கிடைப்பதில்லை என்பதால் அங்கிருந்து சில கி.மீ தொலைவுக்கு மலையில் இருந்து கீழே இறங்கிச் சென்று இணைய சேவை கிடைக்கும் இடத்தில் இருந்து தனக்கு சேர்க்கை கிடைத்துள்ளதா என்பதைத் தினமும் பார்த்து வந்துள்ளார். அவருக்கு ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அதனால் இஞ்சிக்குழி கிராமத்தில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் முதல் மாணவி என்கிற பெருமையை அவர் பெற்றார்.

கல்லூரியில் இடம் கிடைத்த போதிலும், அவரால் தொடர்ந்து படிக்க முடியுமா என்கிற நிலை உருவானது. காரணம் அவருக்கு அந்த கல்லூரியில் உள்ள விடுதியில் இடம் கிடைக்கவில்லை. வெளியில் உள்ள விடுதிகளில் தங்கிப் படிக்கும் அளவுக்கு அவரது குடும்பத்தினரின் பொருளாதார நிலை இல்லை என்பதால் அவரின் உயர்கல்விக் கனவு கரைந்துகொண்டிருந்தது.
இந்த நிலையில், எதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவோம் என எண்ணிய அபிநயா, தன் பெற்றோருடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்து தனது நிலை குறித்து எடுத்துக் கூறியதுடன், மனுவாகவும் கொடுத்தார். ஆட்சியர் விஷ்ணு, உடனடியாக கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மாணவி அபிநயாவுக்கு விடுதியில் சீட் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.
கல்லூரியில் சேர்ந்து தற்போது அபிநயா படித்து வருகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. அங்கிருந்து தினமும் பள்ளிக்குச் செல்ல முடியாததால் விடுதியில் சேர்த்துப் படிக்க வைத்தார்கள். என்னைப் படிக்க வைக்க பெற்றோர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனக்காகப் பெற்றோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். நான் நன்றாகப் படித்து அவர்களுக்குப் பெருமை சேர்ப்பேன்” என்று தெரிவித்தார்.

மாணவி அபிநயா நிலைமை குறித்து நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மூலம், கட்சித் தலைவரான அண்ணாமலைக்குத் தெரிந்திருக்கிறது. அவர் கேட்டுக்கொண்டதன்படி, மாணவி அபிநயா, பெற்றோர் மற்றும் சகோதரனுடன் சென்னைக்குச் சென்று அண்ணாமலையை சந்தித்தார். அபிநயாவின் விடாமுயற்சியைப் பாராட்டி வாழ்த்திய அண்ணாமலை, அவரது கல்விக்கு உதவும் வகையில் 30,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கினார்.
காட்டுக்குள் கல்வி வெளிச்சம் பரவட்டும்!