Published:Updated:

``15 வருஷமா துயரத்தை அனுபவிச்சிட்டு இருக்குறோம்!" - நிலம், பட்டாவுக்கு ஏங்கும் பழங்குடியின மக்கள்

பழங்குடியின மக்கள்
News
பழங்குடியின மக்கள்

ஆதார் அட்டை இருக்கிற ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும்தான் குடும்ப அட்டை இருக்கு. அவங்க மட்டும் ரேஷன்ல அரிசி, பருப்பு வாங்குறாங்க. ஆனா மீதி பேருக்கு அதுகூட இல்ல.

Published:Updated:

``15 வருஷமா துயரத்தை அனுபவிச்சிட்டு இருக்குறோம்!" - நிலம், பட்டாவுக்கு ஏங்கும் பழங்குடியின மக்கள்

ஆதார் அட்டை இருக்கிற ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும்தான் குடும்ப அட்டை இருக்கு. அவங்க மட்டும் ரேஷன்ல அரிசி, பருப்பு வாங்குறாங்க. ஆனா மீதி பேருக்கு அதுகூட இல்ல.

பழங்குடியின மக்கள்
News
பழங்குடியின மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, ஆறுபாதி கிராமத்தில், செம்பனார் கோயில் காவல் நிலையம் எதிரே 12 பழங்குடியின குடும்பங்கள் சுமார் 15 வருடங்களாக வசித்து வருகின்றன. அவர்களுள் சிலருக்கு மட்டுமே அடையாள அட்டை, குடும்ப அட்டை இருக்கின்றன. ஒருவருக்குக்கூட ஓட்டுரிமை இல்லை. நிரந்தரமாக தங்க இடம்கூட இல்லாமல் இந்த மக்கள் தவித்து வருகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய கலியமூர்த்தி என்பவர், ``நாங்க 15 வருஷமா இங்கதான் தங்கி இருக்கோம். கிட்டத்தட்ட 15 குடும்பங்கள் இருந்தோம், ஆனா இப்போ வருமானம் இல்லாம பொழப்ப தேடி 3 குடும்பங்கள் வெளியூர் போய்ட்டாங்க. நாங்க பிளாஸ்டிக் பொருள் விக்கிறது, மேளம் அடிக்கிறது, ஜோசியம் பாக்குறதுனு வெவ்வேறு வேல பாக்குறோம். எங்க யாருக்கும் ஆதார் அட்டை இல்லாம இருந்துச்சு. ஒரு வருஷம் முன்னாடி மயிலாடுதுறை கலெக்டர் அம்மா வந்து எங்க குறைகள கேட்டாங்க... எங்களுக்கு ஆதார் அட்டை இல்ல, எங்க புள்ளைங்க எல்லாம் பள்ளிக்கூடம் போகல, எங்களுக்குப் பட்டா இல்ல, எங்களுக்குன்னு பட்டா கொடுத்து ஒரு நிலம் ஒதுக்கி கொடுக்க சொல்லி கேட்டோம். நாங்க கேட்டு கொஞ்ச நாள்களிலேயே கலெக்டர் அம்மா உதவி மூலமா, எங்கள போட்டோ எடுத்து ஆதார் அட்டை கொடுத்தாங்க. ஆனா ஆதார் அட்டை பாதி பேருக்குக்கூட வரல. குழந்தைகள் எல்லாருக்கும் ஆதார் அட்டை வந்துச்சு, அவங்கள பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வைக்கிறோம் .

பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்கள்

ஆதார் அட்டை இருக்கிற ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும்தான் குடும்ப அட்டை இருக்கு. அவங்க மட்டும் ரேஷன்ல அரிசி, பருப்பு வாங்குறாங்க. ஆனா மீதி பேருக்கு அதுகூட இல்ல. ஒவ்வொரு நாள் பொழுத ஓட்டுறதும் போராட்டமா இருக்கு. எங்களுக்கு அரசாங்க சலுகை பெருசா கிடைக்கல, தங்க இடம் இல்ல. செய்யுற வேலையில லாபம் இல்ல, மழை பெஞ்சா தார்பாய் குடிச ஒழுகுது, தரையெல்லாம் தண்ணீ நிக்குது, அதுனால மழை பெஞ்சாலே எங்களுக்கு தூக்கம் இல்ல.

மழை வரப்போ பக்கத்துல இருக்க பேருந்து நிலையத்துல நிப்போம், மழை நின்ன பிறகுதான் திரும்ப வருவோம். எங்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை எல்லாம் கிடைக்கிற மாதிரி வழி செஞ்சி, எங்களுக்கு பட்டா கொடுத்து ஒரு நிலத்தை ஒதுக்கிவிட்டா போதும்” என்றார்.

நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள் சிலர், ``அடிக்கடி சிலர் குடிச்சிட்டு வந்து, `இங்க தங்கக்கூடாது, வேற எங்கையாது போங்க, உங்களை யாரு இங்க தங்க வச்சது'ன்னு கூரையெல்லாம் பிச்சிடுவாங்க, அப்போ எல்லாம் எதிர இருக்க போலீஸ்தான் வந்து எங்கள காப்பாத்துவாங்க, அவங்க இருக்க தைரியத்துலதான் நாங்க இங்க இருக்கோம், போலீஸ் யாரும் எங்கள திட்டினதுகூட இல்ல. எங்க சொந்தம் போல பாகுபாடு பாக்காம பழகுவாங்க... இங்க எங்க ஆளுங்க நிறைய பேர் வந்து கொஞ்ச நாள் தங்கி பொழப்ப பாத்துட்டு போவாங்க, வந்து ஒரு மாசம், ரெண்டு மாசம் தங்கிட்டு வேற ஊருக்கு போயிடுவாங்க. ஆனா நாங்க 15 வருஷமா நிரந்தரமா இங்கேயேதான் இருக்கோம்.

பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்கள்

எங்க 12 குடும்பங்களுக்கு பட்டா கொடுத்து ஒரு நிலத்த கொடுத்தா, அங்கேயே ஒரு குடிசை போட்டு எங்க காலத்த ஓட்டிப்போம். ஒவ்வொரு மழை அப்பவமும் எங்க புள்ளைங்க தூக்கம் இல்லாம ஒதுங்க இடம் இல்லாம, எங்களுக்கும் வருமானம் இல்லாம சோத்துக்கு கஷ்டப்படுறோம். எங்களுக்கு அரசு உதவனும்" என்றனர்.

இது குறித்து ஆறுபாதி ஊர்த்தலைவரிடம் கேட்டபோது, ``அவங்கள்ல கொஞ்ச பேருதான் அங்க நிரந்தரமா தங்கி இருக்காங்க. அவங்களும் அடிக்கடி வெளியூர் போயிடுறாங்க. அவங்க எல்லாருக்குமே ஆதார் அட்டை பதிவு பண்ணோம், ஆனா சிலர் ஏற்கெனவே வேற ஊருல ஆதார் அட்டை வச்சிருக்காங்கபோல, அவங்களுக்கு வரல. கலெக்டர் உத்தரவின் பேருல அவங்களுக்கு பட்டா வழங்க வேலைகள் போய்கிட்டு இருக்கு, கூடிய விரைவுல பட்டா கொடுத்துடுவோம்" என்றார்.

பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்கள்

இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜிடம் பேசினோம். ``அங்க 12 குடும்பங்கள் நிரந்தரமா வசிக்கிறாங்க, அவங்க எல்லாருக்கும் ஆதார் அட்டை பதிவு செஞ்சோம். வராதவங்களுக்கு வேற ஊருல ஆதார் இருக்கும். அவங்க அதையும் சொல்லல, அவங்க தங்கியிருக்கிறது கோயில் நிலம். அவங்க எல்லாரையும் ஒரே இடத்தில தங்கவைப்பது மாதிரி இங்க அரசு இடமில்லை, அதுதான் பிரச்னை. நாங்க முடிஞ்ச அளவு தேடிக்கிட்டிருக்கோம். சுற்றுவட்டாரத்துல எங்க இடம் இருந்தாலும், அவங்களுக்கு கூடிய விரைவுல பட்டா கொடுத்து இடத்த கொடுத்துடுவோம்” என்றார்.

எழுத்தர் சண்முக ராஜா பேசுகையில், ``முகாமின்போது வந்தவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கொடுத்துவிட்டோம். ஆதார் இல்லாதவர்கள் முகாம் நடந்தபோது, வந்திருக்க மாட்டார்கள். இந்த ஊரில், அவர்கள் தங்குவதற்கான இடம் கிடையாது. அதனால்தான் எங்களால் இன்னும் பட்டா வழங்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.

ஆனால் பழங்குடியின மக்கள், ``நாங்கள் அனைவரும் ஆதார் அட்டைக் கேட்டு பதிவுசெய்துவிட்டோம். பதிவுசெய்ததற்கான ரசீதுகூட எங்களிடம் இருக்கிறது. ஆனால், ஆதார் அட்டை மட்டும் எங்களுக்கு இன்னும் வரவில்லை" என்கின்றனர்.